இந்திய மத்திய அரசுக்கு மண்டியிடாத தமிழக முதல்வரின் துணிச்சலுக்கு துணை நிற்போம்!--சாவித்திரி கண்ணன்”யாரும் எதிர்க்க முடியாது. உண்மைகளை சொல்ல முடியாது. நடப்பது மாபெரும் சர்வாதிகார ஆட்சி, அடங்கிப் போவதே ஆட்சியை தக்க வைக்கும்’’ என்ற ரீதியில் சென்ற ஆட்சியாளர்கள் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோத சட்டங்களையும் ஆதரித்து வந்தது. இதை கண்டு சலிப்புற்று, வேதனையுற்று தமிழக மக்கள் புழுங்கிய நேரத்தில் தான் தேர்தல் வந்தது. கடந்த ஆட்சியாளர்களுக்கு மக்கள் கல்தா கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்கள். அதை சரி செய்வதற்கே புதிய ஆட்சியாளர்கள் என மக்கள் நம்பினர். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.

# நீட் தேர்வுக்கு எதிராக மசோதா கொண்டு வரும் முன்னெடுப்பு.

#  தமிழகத்திற்கு என்று தனி கல்வி கொள்கை உருவாக்க ஒரு குழு.

# இலங்கை தமிழ் அகதிகளுக்கான துயர் துடைப்பு.

# இந்திய அரசை ஒன்றிய அரசு என்று தான் அழைப்போம் என்பதில் உறுதி.

# அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வழிவகை செய்யும் சட்டம்!

# பொதுத் துறை நிறுவனங்களை விற்பதற்கு எதிர்ப்பு!

# வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம்!

# ஜி.எஸ்.டி வரி வசூலில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருவதை பகிரங்கப்படுத்தியது.

# வன்கொடுமை சட்டத்தை வலுப்படுத்தும் முனைப்பு.

என்ற வரிசையில் தற்போது குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிரான தீர்மானம் சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நாள் தமிழக வரலாற்றில் ஒரு பொன் நாளாகும். இந்தியா அனைத்து மக்களுக்குமானது என்பதை இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழகத்தின் அரசு உறுதிபட மக்களுக்கு உரைத்துள்ளது. ஆன்மீகத்தின் வழி வந்தவர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் பாஜக ஆட்சியாளர்கள் இரக்கமற்ற குரூரமானவர்களாக சட்டம் கொண்டு வருவதும், பகுத்தறிவாளர்கள் மரபில் வந்த ஒரு மாநில அரசு தன் சக்திக்கு உட்பட்ட வகையில் உறுதியோடு அதனை எதிர்த்து இந்திய அரசியல் சட்டத்தின் வழிமுறைப்படி செயல்பட வேண்டும் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்துவதும் சிறப்போ சிறப்பு!

இந்த தீர்மானத்தின் வாயிலாக ஜனநாயக ரீதியாக மத்திய அரசின் சாதிமத வேறுபாடுகளை வலுப்படுத்தும் சட்டங்களை மேற்கு வங்கம், கேரளம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகளின் நிலைபாட்டை தானும் எடுத்துள்ளது தமிழக அரசு!

அந்த தீர்மானத்தின் சாரம்சத்தை இங்கே பதிவிடுகிறோம்.

“ஒன்றிய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019, இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் வகுத்தளிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும், நம் நாட்டில் நிலவி வரும் மத நல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை என்று இப்பேரவை கருதுகிறது.

மக்களாட்சித் தத்துவத்தின்படி ஒரு நாட்டின் நிர்வாகம் என்பது அனைத்து மக்களின் கருத்தினையும் உணர்வுகளையும் உணர்ந்து அமைந்திருக்க வேண்டும். ஆனால், இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டமானது அகதிகளாக இந்நாட்டிற்கு வருபவர்களை அரவணைக்காமல், மத ரீதியாகவும், எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள் என்பதைப் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அகதிகளாக வருபவர்களை சக மனிதர்களாகப் பார்க்கவேண்டும், மத ரீதியிலோ, இன ரீதியிலோ, எந்த நாட்டிலிருந்து வருபவர்கள் என்ற ரீதியிலோ அவர்களைப் பிரித்துப் பார்க்கக்கூடாது. வாழ்க்கையை இழந்து, சொந்த நாட்டில் வாழ முடியாமல், வேறு நாட்டுக்கு வருபவர்களிடம் பாகுபாடு காட்டுவது அகதிகளுக்கு நன்மை செய்வது ஆகாது. இது ஏற்கெனவே துன்பப்பட்ட மக்களை மேலும் துன்பத்துக்கு ஆளாக்கிப் பார்ப்பதாகும். அரசியல்ரீதியான பாகுபாட்டை, சட்டரீதியான பாகுபாடாக உறுதிப்படுத்துவது மிகமிகத் தவறானது ஆகும்.

அதிலும் குறிப்பாக, இலங்கைத் தமிழர்கள் இந்தச் சட்டத்தின் மூலமாக வஞ்சிக்கப்படுகிறார்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசத்தை சேர்ந்தவர்களெல்லாம் வரலாம் என்றால், இலங்கையைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு தடை விதித்தது ஏன்? இதுதான் இலங்கைத் தமிழருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்.

இதனால்தான் இந்த சட்டத்தை எதிர்க்கிறோம்.

எனவே, இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், ஒன்றிய அரசின் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019ஐ ரத்து செய்திட ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது” என அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த கால தவறுகளில் இருந்து இன்னும் பாடம் பெற முடியாதவர்களாக இன்னும் கூட பாஜக அரசின் பாதம் தாங்கிகளாக தொடர்வதின் தொடர்ச்சியாக இன்றும் அதிமுக இந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் வெளி நடப்பு நாடகத்தை நடத்திக் காட்டியுள்ளது.

இந்தச் சூழலில் மத்திய அரசுக்கு மண்டியிடாமல் தலை நிமிர்ந்து தன் மானத்துடன் மக்கள் நலன் சார்ந்து செயல்படுவதில் உறுதிகாட்டும் தமிழக அரசுக்கு துணை நிற்பது நம் கடமையாகும்!

வாழ்க இந்திய ஜனநாயகம்!

வாழ்க சமூக நல்லிணக்கம்!

தொடரட்டும் ஆட்சியாளர்களின் துணிச்சல்!

Source: chakkram.com

No comments:

Post a Comment

President Chandrika and former Chief Justice Shirani Bandaranayke By Victor Ivan

  Former President Chandrika Kumaratunga and Former Chief Justice Shirani Bandaranayake    Publication of a biography by former Presid...