சீன எழுத்தாளர் லூ சுன் அவர்களின் 140வது பிறந்ததினம்


Lu Xun (25.09.1881-19.10.1936)

புகழ் பெற்ற சீனப் புரட்சி எழுத்தாளர் சீன எழுத்தாளர் லூ சுன் (Lu Xun) பற்றி மாவோ குறிப்பிட்டார்:

“சீனத்தின் பண்பாட்டுப்புரட்சியின் தலமைத் தளபதியான லூ சுன் ஒரு மாபெரும் இலக்கியவாதியாக மட்டுமல்ல, ஒரு மாபெரும் சிந்தனையாளராகவும் புரட்சியாளராகவும் திகழ்ந்தார். அவர் விட்டுக்கொடுக்காத நேர்மை கொண்டவராக இருந்தார். அண்டிப்பிழைப்பதும், அடிமை மனப்பாங்கும் அவரிடம் சிறிதும் இருக்கவில்லை. பகைவரின் கோட்டையில் விரிசலை உண்டாக்கி சூறாவலி போல் பண்பாட்டு துறையில் தாக்கினார். நம் வரலாற்றில் ஈடினையற்ற வீரர்கத் திகழ்ந்தவர். அவர் மேற்கொண்ட பாதை, சீனத்தின் புதிய தேசியப் பண்பாட்டின் பாதையாகும்.”

அவரது தாயின் பெயர் லூ. தாயின் பெயரானலுவிலிருந்தே லூ சுன் என்ற புனை பெயர் பிறந்தது, இளம்பருவத்திலேயே அசாதாரணமான அறிவுக் கூர்மையை வெளிப்படுத்திய லூ சுன், சீனச் செம்மை இலக்கியங்கள், வரலாறு ஆகியவற்றை ஆழ்ந்து கற்றதுடன், கிராமிய கலைகள், ஓவியங்கள், நாடோடிப் பாடல்கள் முதலியவற்றிலும் அளவற்ற ஆர்வம் காட்டினர். அவரே சித்திரங்களையும் வரைவதுண்டு. இளம் வயதில் அவருக்கு வாய்த்த நண்பர்கள் பேரும்பாலும் எளிய நேர்மையான உழவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இத் தகைய நட்பும்தொடர்புமே லூ சுன் தன் வாழ்நாள் முழுதும் பேணிப் பாதுகாத்த உழைப்பாளி மக்களுடன் உயிருள்ள தொடர்பு என்றின்றும் அமைந்தன. உலக இலக்கியங்கள் பலவற்றிையும் விஞ்ஞான நூல்களையும் படிக்க நிறைய வாய்ப்பு கிடைத்தது. 1901 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற இவருக்கு ஜப்பானில் படிப்பதற்கு அரசு உதவித் தொகை கிடைத்தது. அடுத்த ஆண்டு அவர் ஜப்பானுக்குப் புறப்பட்டார். ஜப்பானில் உள்ள சென்டாயில் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க நேர்ந்த போதுதான் அவர் பைரன், ஷெல்லி, ஹெய்ன், புஷ்கின், லெர்மென்டோவ், மீக் கீவிஸ், பெடோஃபி ஆகிய புரட்சிக் கவிஞர்களின் படைப்புகளைப் படித்தார். அங்கு ஜெர்மன் மொழியையும் கற்றுக் கொண்டார் , நலிவடைந்த தாயகத்துக்குத் தன் மருத்துவக் கல்வி உதவி புரியும் என்று எண்ணிய லூ சுன்னை எழுத்தாளனக மாற்றச் செய்தது ஒரு நிகழ்ச்சி. 1906ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்நிகழ்ச்சியை, லூ சுன் தனது முதல் சிறுகதைத் தொகுபடிக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார். மருத்துவக் கல்லூரியில் பர்க்கும் போது சீனர்கள் சம்பந்திப்ப்ட்ட படம் ஒன்றைப் பார்க்கும் வாய்ப்பு லூசுன்னுக்குக்கிட்டியது.

அதில் ஒரு சீனன் கயிற்றினுல் கட்டப் படிருக்க வேறு பலர் அவனைச் சுற்றி நின்று கொன்டிருக்கின்றர்.அவர்களெல்லாம் நல்ல பலசாலிகள், ஆனால் உண்ர்ச்சியற்றவர்களாய்த் காணப்பட்டனர். கைகள் கட்டப்பட்டுள்ள பேர்வழி ரஷ்யர்களுக்கு உதவிய ஒற்றன் எனவும் அவனை கொல்வதை வேடிக்கை பார்க்கும் கூட்டத்தை

அவர்கள் வேடிக்கைப் பொருள்களாக நிலவவும் அல்லது இத்தகைய உதவாக்கரைக் காட்சியைப் பார்த்து நிற்பவர்களாகவுமே உள்ள இவர்களுக்கு சேவை செய்யவா?: நோயினல் அவர்களில் எத்தனைபேர் மாண்டாலும் அது வருத்தத்துக்குரியதாக இருக்கத் தேவை இல்லை. ஆகவே எல்லாவற்றையும்விட முக்கியமானது அவர்களது மனப் பாங்கை மாற்றுவதே. அதுமுதல், இலக்கியமே அதற்கேற்ற சாதனம் என உணர்ந்தேன். இலக்கிய இயக்கத்தை வளர்க்க முடிவு செய்தேன்.

1909 இல் தாயகம் திரும்பிய லூ சுன், பள்ளியாசிரிய ராகப் பணியாற்றினர். 1911 ஆம் ஆண்டுப் புரட்சியை மனமார வரவேற்ற லூ சுன், புரட்சியில் பங்கேற்குமாறு மாணவர்களை ஊக்குவித்தார். 1912 ஆம் ஆண்டு எனக் குடியரசின் தற்காலிக அரசில் அவர் கல்வி அமைச்சில் ஓர் உறுப்பினராக்கப்பட்டார்.

ஆனல் சன் யாட்சன் தலைமையில் நடந்த 1911 ஆம் ஆண்டுப் புரட்சி மிகவிரைவில் தோல்வியடைந்தது. சீன முதலாளி வர்க்கத்தாலும் குட்டி முதலாளி வர்க்கத்தாலும் தலைமை தாங்கப்பட்ட இப்புரட்சி, சிங் வமிச ஆட்சியைத் தூக்கியெறிந்து 2000 ஆண்டுகளாக நிலவிய நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு முடிவு கட்டியது. “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற முழக்கத்தை உயர்த்திப்பிடித்த இப் புரட்சி விரைவில் தோல்வியில் முடிவடைந்தது. ஏனெனில் இப்புரட்சிக்குத் தகலமை தாங்கியவர்கள் சீன மக்கள் தொகையில் மிகப் பெரும்பாலோரான பரந்துபட்ட விவசாய மக்களைத் சார்ந்திருக்கவில்ல. உறுதியான திருத்தத்துக்கான திட்டம் இவரிகளிடம் இல்லை. ஏகாதிபதிதியச் சக்திகளை முற்றிலுமாகத் துடைத்தெறியும் வலிமைவும் இவர்களிடம் இல்லை. எனவே ஏகாதிபத்திய சக்திகளுக்குப் பணிபுரிந்த பல்வேறு புத்தப் பிரபுக்கள், அரசியல்வாதிகள் அவர்களின் கைக்கு அதிகாரம் சென்றடைந்தது. நில பிரபுக்கள் தனித்தனி குட்டி அரசுகள் உருவாக்கிக் கொண்டார்கள். ஒருவருக்கொருவர் போரிட்டனர். தமது செல்வாக்குப் பகுதிகளை விரிவுபடுத்திக் கொள்வதில் ஏகாதிபத்தியவாதிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டனர். இத்துடன் அரைக் காலனிய அரை நிலபிரப்புதுவ ஒடுக்குமுறைகள் பெருகின. பண்பாட்டுத் துறையில் கடந்த காலத்தை உயர்த்திப் பிடிக்கும் கெட்டக்கருத்துக்கள் பரவலாயின.

இச்சூழல் லூ சுன்னைக் கடுமையாக வாட்டியது. ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் அவர் மனதில் கொந்தளிப்புகள் நிறைந்திருந்தன. இதனல்தான் இலக்கியம் வகிக்கின்ற பங்கையே மறுதலிக்கக்கூடிய அளவுக்கு லூ சுன் சென்றார். 1917 ஆம் ஆண்டில் ராணுவக் கல்வி நிலயம் ஒன்றில் அவர் ஆற்றிய உரை ஒன்றில் கூறினர்: “நான் சலிப்புற்றிருக் கிறேன். இருந்தும் துப்பாக்கியை ஏந்தும் நீங்கள், இலக்கியம் பற்றி அறிய அவாக் கொண்டுள்ளீர்கள். ஆனல் நானே துப்பாக்கி வேட்டுகளின் சத்தத்தையே கேட்க ஆர்வங் கொண்டுள்ளேன். ஏனெனில் துப்பாக்கி வேட்டுகளின் சத்தம் இலக்கியத்தைவிட கேட்பதற்கு நன்றாக இருக்கும்.”

1919 ஆம் ஆண்டு மே 4-ஆம் நாள் இயக்கம் தொடங்கி, நாடுமுழுவதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் பேரலைகள் சுழன்றடித்த போதுதான், லூ சுன் தனக்கு வகுக்கப்பட்ட பாதையைத் தெளிவாகப் பார்க்கத் தொடங்கினர். ஏற்கனவே அவர்மீது 1917 ஆம் ஆண்டு மாபெரும் இரஷ்யப்புரட்சியின் தாக்கம் ஏற்பட்டிருந்தது.

1918 ஏப்ரவில்தான் அவர் தனது முதல் சிறுகதையான “பைத்தியக்காரனின் குறிப்புகள்” எழுதினர். இக்கதை “புதிய இளைஞர்’ என்ற ஏட்டில் வெளிவந்தது. சீனத்தில் மார்க்சியக் கருத்துகளே முதன்முதலில் அறிமுகப்படுத்திய ஏடு இதுதான். நவீன சீன இலக்கியத்தின் துவக்கமே இச் சிறுகதைதான் என்று கூறலாம். எண்ணற்ற சிறுகதைகளும், கட்டுரைகளும், கவிதைகளும், நினைவுக்குறிப்புகளும் எழுதிய லூ சுன், ஏராளமான பிறநாட்டு இலக்கியப் படைப்புகளை சீனத்தில் மொழிபெயர்த்தார். இலக்கியத்தின் வரலாற்றை எழுதினார். நுண்கலைகளை ஊக்குவித்தார். ஒவியங்களை மூலமும் செய்திகளை பரவலாக்க நேரடியான முயற்சிகள் மேற்கொண்டார். சீனச் செம்மை இலக்கியங்களில் அவர் பெற்றிருந்த புலமை,உலக இலக்கியங்களில் அவருக்கிருந்த ஆழ்ந்த ஈடுபாடு, உழைக்கும் மக்களுடன் அவருக்கிருந்த நெருக்கமான பிணைப்பு, புரட்சிகரக் கருத்துகளின் தாக்கம் ஆகியவை லூ சுன்னை ஈடினையற்ற கலைஞராக்கின.

1928 இல் அவர் ஓர் இலக்கிய ஏட்டை நிறுவி, மார்க்சிய லெனினியத்தைக் கற்கத் தொடங்கினர். மார்க்சிய இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய நூல்களை (பிளக்கனேவ், லூனசார்ஸ்கி ஆகியோர் எழுதியவை) யும் கார்க்கி, ஃபத யேல், ஃபர்மனேவ், கோகல், க்ளாட்கோவ், ஷோலக்கோவ் போன்ற இரஷ்ய எழுத்தாளர்களின் படைப்புகளையும் மொழி பெயர்த்தார்.

லூ சுன்னின் சாதனைகள் இலக்கியத்துடன் நின்று விட வில்லை. பொதுவுடமைக் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு லூ சுன், கட்சியால் துவக்கப்பட்ட மக்கள்திரள் இயக்கங்களில் பெரும் பங்காற்றினர். இடதுசாரி எழுத் தாளர் கழகத்தையும், சீனசுதந்திர கழகத்தையும் நிறுவுவதில் முதன்மைப் பங்கு வகித்த லூ சுன், சன் யாட்-சென்னின் மனைவியார் தலைமையேற்றிருந்த சீனமக்கள் உரிமைக் கழகத்திலும் முன்னணியில் பங்கு வகித்தார்.

பொதுவுடைமைக் கட்சியாளருக்கும் முற்போக்காளர்களுக்கும் எதிராக சியாங்கே ஷேக் அவிழ்த்துவிட்ட “வெள்ளைப் பயங்கரம்.தலைவிரித்தாடிய நாட்களில் மறைந்து வாழவேண்டிய “கட்டாயத்துக்குள்ளான லூ சுன் ஒருபோதும் உறுதியிழவில்

ஜப்பானுக்கு எதிராக தேசிய அளவில் ஏற்பட்ட ஐக்கிய முன்னணியைச் சீர்குலைக்க ட்ராட்ஸ்கியவாதிகள் ழேற் கொண்ட சதிகளே அம்பலப்படுத்தி, சீனப் பொதுவுடமைக் கட்சியின் கொள்கைகளே முன்னெடுத்துச் சென்றார். காச நோயால் அவதியுற்று 1936 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் நாள் காலமான லூ சுன் தனது ஆற்றல்கள் அனைத்தையும், விடுதலையும் மாண்பும் பெற்ற ஒரு புத்துலகை உருவாக்குவ திலேயே செலவிட்டார்.

லூ சுனின் காதற்கடிதங்கள்

எஸ். ராமகிருஷ்ணன்

சீன எழுத்தாளர் லூ சுன் (Lu Xun) பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் அவரது காதல் கடிதங்கள் தனி நூலாக வெளியாகியுள்ளது என்பதைப் பற்றிய தகவலை அறிந்தேன்.

சீனாவில் லூசுனிற்கு முன்பாக யாரும் தங்கள் காதல் கடிதத்தைத் தனி நூலாக வெளியிட்டது கிடையாது. ஆகவே அந்தப் புத்தகம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதே நேரம் சில கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறது

Letters Between Two என்ற அந்த புத்தகத்தை இணையத்தில் தேடிப் படித்தேன்.

தனது மாணவியும் தன்னை விடப் பதினாறு வயது குறைந்தவருமான சூ குவாங்பிங்கிற்கு லூசுன் எழுதிய கடிதங்களும் அதற்குக் குவாங்பிங் எழுதிய பதில்களும் இதில் அடங்கியுள்ளன

ஜு ஆன் என்ற பெண்ணை லூசுன் கல்லூரி நாட்களிலே திருமணம் செய்து கொண்டிருந்தார். அந்த மண உறவில் கருத்துவேறுபாடு உருவாகவே அவர் தனித்து வாழ்ந்து வந்தார்

லூ சுன் மாணவியாக இருந்த குவாங்பிங் தனது ஆசிரியர் மீது அன்பு கொண்டு அவருக்குக் கடிதங்கள் எழுதியிருக்கிறார். ஆரம்பக் கடிதங்களில் நலம் விசாரிப்பு மற்றும் பொது விஷயங்களைப் பற்றியே இருவரும் எழுதியிருக்கிறார்கள். மெல்ல அது காதலாக மாறி பரஸ்பரம் ஒருவரையொருவர் சீண்டிக் கொள்ளவும் அந்தரங்கமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் செய்திருக்கிறார்கள்

திருமணம் செய்து கொள்ளாமலே குவாங்பிங்குடன் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார் லூ சுன். அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தையும் பிறந்திருக்கிறது. குவாங்பிங் முதற்கடிதத்தை எழுதிய போது அவரது வயது 27.

அப்போது கல்லூரி படிப்பை முடித்துப் பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறார். அவர் பள்ளியில் படித்த போது இரண்டு ஆண்டுகள் லூ சுன் பாடம் கற்பித்திருக்கிறார். அந்த நாட்களில் லூ சுனின் பேச்சும் சிந்தனைகளையும் அவரைக் கவர்ந்திருக்கின்றன.

லூ சுனின் சிறுகதைகள் புதிய கதைப்போக்கினை உருவாக்கி பெரிய வரவேற்பினை பெற்றிருந்தன. ஆகவே தனது விருப்பத்திற்குரிய ஆசிரியரும் எழுத்தாளருமான லூ சுன் மீது குவாங்பிங் ரகசியக் காதல் கொண்டிருந்தார்

குவாங்பிங்கின் குடும்பம் ஒரு காலத்தில் வசதியாக இருந்தது. அவளது தாத்தா மாகாண ஆளுநராக இருந்தவர். ஆனால் தந்தையின் காலத்தில் குடும்பம் நொடித்துப் போனது. அவளது தந்தை ஒரு சிறு வணிகர். அம்மா ஏற்றுமதி வணிகம் செய்யும் ஒருவரின் மகள்.

அந்தக் காலச் சீனாவில் இளம் பெண்களின் கால்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பாதங்களைப் பிணைத்துக் கட்டும் பழக்கம் இருந்தது. அப்படிப் பாதங்களை இறுக்கமாகக் கட்டியதால் அம்மாவின் கால்கள் ஒடுங்கிப் போய்விட்டன. ஆள் துணையில்லாமல் அவரால் நடக்க முடியாமல் ஆனது.

இதன் காரணமாகக் குவாங்பிங்கின் தந்தை தன் மகளுக்கு அப்படி கால்களைப் பிணைத்துக் கட்டும் சடங்கு செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அந்தக் காலத்தில் இருபாலர் படிக்கும் பள்ளியில் பெண்களைச் சேர்க்க அனுமதிக்கமாட்டார்கள். அதை மீறி குவாங்பிங்கை இருபாலர் பள்ளியில் படிக்க அனுமதி தந்தார் அவரது தந்தை.

இளம் மாணவியாக அவள் தனது வீட்டில் பத்திரிக்கை படிப்பதை அண்டை வீட்டார் ஒரு புறம் வியந்து பார்த்தார்கள். மறுபுறம் இது பெண்களின் தலையில் மோசமான எண்ணங்களை உருவாக்கிவிடும் என்று கண்டித்தார்கள். ..

படிப்பில் சிறந்துவிளங்கிய குவாங்பிங் பீஜிங்கில் உள்ள கல்லூரியில் படித்திருக்கிறார். இந்த நாட்களில் அவர். பத்திரிக்கையாளராக விரும்பினார்

வார மாத இதழ்களுக்குத் தனது பயணம் மற்றும் சமூகப்பிரச்சினைகள் சார்ந்து சிறுகட்டுரைகள் எழுதிவந்தார்.

லூ சுன் குடும்பமும் ஒரு காலத்தில் செல்வாக்காக இருந்து நொடித்துப் போனது தான். அவருடன் பிறந்தவர்கள் மூவர். அவரே மூத்தவர். அந்த நாட்களில் ஜப்பானுக்குச் சென்று கல்வி பயிலுவது பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்பட்டது. அரசின் உதவித்தொகை பெற்று ஜப்பானுக்குச் சென்று படித்தார் லூசுன்.

மருத்துவம் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் ஒன்றிரண்டு ஆண்டுகளில் அவரது கவனம் மாறிப்போனது. இலக்கியமும் மொழியும் கற்றுக் கொள்ளத்துவங்கிப் படிப்பை முடிக்காமலே சீனா திரும்பினார்

பள்ளி ஆசிரியராகப் பணியாற்றத் துவங்கி பெண்கள் பள்ளி ஒன்றில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அப்போது தான் குவாங்பிங்கிற்கு ஆசிரியராக இருந்திருக்கிறார்.

ரஷ்ய மற்றும் பிரெஞ்சு இலக்கியங்கள் மீது அதிக விருப்பம் கொண்டிருந்த லூசுன் அதன் முக்கியப் படைப்புகளைச் சீன மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார். தனது சிறுகதைகள் மூலம் நாடறிந்த எழுத்தாளராக மாறிய அவர் அரசியல் கட்டுரைகளையும் சமூகப்பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்துத் தொடர்ந்து எழுதி வந்தார்.

குவாங்பிங்கை காதலிக்கத் துவங்கிய பிறகு அவரது வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது.

குவாங்பிங் அவரது கையெழுத்துப் பிரதிகளை நகலெடுத்து இதழ்களுக்கு அனுப்பி வைத்தார். சகோதரனுடன் பிணக்குக் கொண்டு விலகி இருந்த லூசுனுக்கு ஆறுதல் சொல்லி புதிய வாழ்க்கையை உருவாக்கித் தந்தார்

அவளது காதலின் வழியே தனது நீண்ட கால மனத்துயரை, வேதனையைத் தான் கடந்துவிட்டதாக லூ சுன் எழுதியிருக்கிறார். அவளது பிறந்தநாள் ஒன்றுக்காக ஒரு காதற்கவிதையை எழுதிப் பரிசளித்திருக்கிறார் லூசுன்.

மிதமிஞ்சிய குடி மற்றும் புகைப்பழக்கம் காரணமாக அவரது உடல்நிலை நலிவடைய நேர்ந்த போது குவாங்பிங் உடனிருந்து நலம்பெற உதவியிருக்கிறார். ஆனால் காச நோய் முற்றிய நிலையில் லூ சுன் இறந்து போனார். அதன்பிறகு அவரது படைப்புகளைத் தொகுத்து வெளியிடுவதில் குவாங்பிங் தீவிர கவனம் கொண்டிருந்தார்

லூ சுனின் உற்றதுணையாக விளங்கிய போதும் குவாங்பிங் இறந்த போது அவரது உடலை லூசுன் கல்லறைக்கு அருகில் புதைக்க அனுமதிக்கவில்லை. காரணம் அவர் அவளை முறையாகத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதே.

லூசுனின் மனைவி ஜு ஆன் ஷாக்ஸிங்கில் ஒரு தொழிலதிபரின் மகளாகப் பிறந்தவர், மற்ற பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அம்மாவின் விருப்பம் மற்றும் குடும்பக் கௌரவத்திற்காக அவளை லூசுன் திருமணம் செய்து கொண்டார். லூசுனை விடவும் மூன்று வயது மூத்தவர் ஜு ஆன். இவர்களின் திருமண உறவு நீடிக்கவில்லை.

லூ சுனின் மனைவியாக ஜு ஆன் 41 வருடங்கள் தனியாக வாழ்ந்து வந்தார்.

தனது திருமணத்திற்குப் பிறகே லூ சுன் கல்வி பயில ஜப்பான் சென்றார். வெளிநாட்டில் படிக்கும் மருமகன் என ஜு ஆன் குடும்பத்தில் அவர் ஒரு அறிவுஜீவியாகக் கருதப்பட்டார்.

சீனா திரும்பிய லூசுன் கட்டுப்பெட்டியாக இருந்த தனது மனைவியை விரும்பவில்லை. திருமணமான முதலிரவில் கூட அவர் ஒரு அறையிலும் ஜு ஆன் தனி அறையிலும் தூங்கினார்கள். அது தான் அவர்கள் குடும்பச் சம்பிரதாயம் என்று கூறப்பட்டது.

அவள் பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும், நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று லூ சுன் வற்புறுத்தினார். அவள் அதை ஏற்கவில்லை. நவீன வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள அவள் தயாராகயில்லை என்பதால் லூசுன் அவளை விட்டு விலகிக் கொண்டார்.

.பிரிந்து வாழ்ந்த போதும் லூசுன் அவளை விவாகரத்து செய்யவில்லை. காரணம் விவாகரத்துப் பெற்ற பெண் சமூக அந்தஸ்தை இழந்துவிடுவதோடு குடும்பத்தின் சொத்துரிமையினையும் இழந்துவிடுவாள். அப்படி அவளை நிர்கதியாக விடவேண்டாம் என நினைத்த லூசுன் அவளை விவாகரத்து செய்யவில்லை.

குவாங்பிங்குடன் வாழ்ந்த காலத்திலும் மனைவிக்கும் அவளது குடும்பத்திற்குத் தேவையான பணஉதவியை மாதந்தோறும் அனுப்பி வந்திருக்கிறார். அவரது மறைவிற்குப் பிறகு அது போலவே வருவாயில் ஒரு பகுதியை ஜு ஆனிற்குத் தவறாமல் அனுப்பி வந்தார் குவாங்பிங்., வருவாய் இல்லாத மிகக் கடினமான சூழ்நிலையிலும் கூட அந்தப் பணம் அனுப்பத் தவறவேயில்லை.

குவாங்பிங்கின் வாழ்க்கையினையும் அவளது காதல் கடிதங்களையும் வாசிக்கும் போது தஸ்தாயெவ்ஸ்கியின் உதவியாளராக வந்து அவரைத் திருமணம் செய்து கொண்டு சிறந்த வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னா தஸ்தாயெவ்ஸ்கி நினைவில் வந்து போகிறார்.

அன்னாவிற்கும் குவாங்பிங்கிற்கும் நிறைய ஒற்றுமைகளைக் காண முடிகிறது. இருவரும் படித்தவர்கள். எளிய குடும்பத்திலிருந்து வந்தவர்கள். தனித்து வாழ்ந்து வந்த எழுத்தாளருக்கு உதவி செய்ய முயன்றவர்கள்.. எழுத்திலும் வாழ்க்கையிலும் மாறாத்துணையாக விளங்கியவர்கள். அன்னாவை தஸ்தாயெவ்ஸ்கி திருமணம் செய்து கொண்டார். ஆனால் லூசுன் குவாங்பிங்கை திருமணம் செய்து கொள்ளவில்லை.

குவாங்பிங்கின் முதல் கடிதம் 11 மார்ச் 1925 அன்று எழுதப்பட்டிருக்கிறது, நான்கு பக்கமுள்ள கடிதமது. முதல் பக்கம் மிக அழகான கையெழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இரண்டு மற்றும் மூன்றாம் பக்கங்களில் அடித்தல் திருத்தல் கொண்டதாகக் கடிதம் உள்ளது. இதில் ஒன்றிரண்டு இடங்களில் அடிக்குறிப்புகளும் எழுதப்பட்டிருக்கின்றன.

ஏப்ரல் 1925 க்கு பிறகு குவாங்பிங் எழுதிய கடிதங்கள் மிக நீளமானவை. பக்க எண் போடப்பட்ட நாற்பது ஐம்பது பக்க கடிதங்களை எழுதியிருக்கிறார். இந்தக் கடிதங்களுக்கு உடனுக்கு உடனே லூசுன் பதில் எழுதியிருக்கிறார். அவளிடமிருந்து மறுகடிதம் வரத் தாமதமான போது அவரே அடுத்த கடிதங்களையும் எழுதி அனுப்பியிருக்கிறார். நாட்கணக்கில் கடிதம் வருவதற்குத் தாமதமாகும் போது தபால் துறை மீது கோபம் கொண்டிருக்கிறார்.

விடுமுறை நாளில் தபால் துறை செயல்படுவதில்லை என்பது அவரை எரிச்சல் படுத்தியிருக்கிறது. மூன்று நான்கு பகுதிகளாகக் கடிதத்தைத் தனியே பிரித்து எழுதி அனுப்பியிருக்கிறார். பெரும்பான்மை கடிதங்கள் இரவில் எழுதப்பட்டிருக்கின்றன. விடிகாலையில் அதைத் தபாலில் சேர்த்திருக்கிறார்.

இன்று எழுதப்படும் கடிதம் போல அன்புமிக்க என விளித்து எழுதப்படும் கடிதம் அந்நாளில் இல்லை. நேரடியாகப் பெண்ணின் பெயரைச் சுட்டி கடிதம் எழுதும் மரபு தான் அன்றிருந்தது.

குவாங்பிங் எழுதிய கடிதங்களை அவளது தோழி வாசித்துத் திருத்தம் செய்திருக்கிறாள். இந்தக் கடிதங்களில் அன்றைய சமகாலப்பிரச்சனைகள். பண்பாட்டு விஷயங்கள். அரசியல் நிலைப்பாடுகள் பற்றியும் அவர்கள் விவாதித்திருக்கிறார்கள்.

பிறர் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக அவளது பெயரின் முதல் எழுத்துகளை மட்டுமே லூசுன் பயன்படுத்தியிருக்கிறார். கடிதங்களையும் நாட்குறிப்புகளையும் அப்படியே திருத்தம் செய்யாமல் வெளியிட வேண்டும். அதில் பாசாங்கில்லாமல் எழுத்தாளரின் உண்மையான அகம் வெளிப்படுவதைக் காணமுடியும் என்கிறார் லூசுன்.

அவர் 1912 க்கு1936க்கும் இடையில் தனது நண்பர்கள். உறவினர்களுக்கு 5600 கடிதங்களை எழுதியிருக்கிறார். இந்த எண்ணிக்கை மிகப்பெரியது. அவரது காலத்தில் வேறு எவரும் இவ்வளவு கடிதங்கள் எழுதியதில்லை. கடிதம் எழுதுவதில் இவ்வளவு ஆர்வம் கொண்டிருந்த லூசுன் தனக்கு வரும் தேவையற்ற கடிதங்களைப் படித்தவுடனே எரித்துவிடுவார். முக்கியமான கடிதங்களைப் பாதுகாக்கத் தனியே மரப்பெட்டிகள் வைத்திருந்தார். அதில் வண்ண உறைகளில் கடிதங்களை முறையாகப் பாதுகாத்து வைத்திருந்தார்.

ஒரு நாளில் அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்கள் வருவதுண்டு. இதற்குப் பயந்து அவர் தனது வீட்டு முகவரியைத் தராமல் பதிப்பகத்தின் முகவரிக்கே கடிதங்கள் எழுதச் சொல்வதுண்டு. தனிப்பட்ட நண்பர்கள் மட்டுமே அவரது வீட்டுமுகவரிக்குக் கடிதம் எழுதினார்கள்.

தனது காதற்கடிதங்களைத் தொகுப்பாக வெளியிடுவதற்கு முன்பாகவே இதழ்களில் ஒன்றிரண்டினை வெளியிட்டு வாசகர்கள் அதற்குத் தரும் எதிர்வினையை, பாராட்டுகளைத் தெரிந்து கொண்டிருந்தார் லூசுன்.

எழுத்தாளர்கள். கலைஞர்களின் காதற்கடிதங்கள் இப்படி நூலாக வெளியாக மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளன. குறிப்பாகப் பீத்தோவனின் 1812 காதற் கடிதம் எடித் வார்டனின் காதல் கடிதங்கள் ஃப்ரான்ஸ் காஃப்கா தனது காதலி ஃபெலிஸ் பவாருக்கு எழுதிய காதல் கடிதங்கள் தனி நூலாக வெளியாகியுள்ளன.

மகப்பேறுக்காகக் குவாங்பிங் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது போன்சாய் மரம் ஒன்றை வாங்கி வந்து அவளது படுக்கை அருகே வைத்திருக்கிறார் லூசுன். குழந்தையுடன் அவள் வீடு திரும்பிய போதும் வீட்டில் அவளது படுக்கை அறையில் புதிய போன்சாய் மரம் ஒன்றை வாங்கி வைத்திருக்கிறார். அது நித்தியமான வாழ்க்கை அமையட்டும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு.

தாதியை நியமித்துக் குழந்தையைக் கவனித்துக் கொள்வதை விடுத்து அவரே குழந்தையைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றி நினைவு கொள்ளும் போது தன்னையும் குழந்தையும் அவர் பகலிரவாக மிகுந்த நேசத்துடன் கவனித்துக் கொண்டார் என்று எழுதியிருக்கிறார் குவாங்பிங்

பத்தாண்டுகள் அவர்கள் இணைந்து வாழ்ந்திருக்கிறார்கள். லூசுன் இறந்து 31 ஆண்டுகளுக்குப் பிறகு குவாங்பிங் இறந்து போனார். அவரது வாழ்க்கை லூசுனின் நூல்களை முறையாகப் பதிப்பு செய்வதிலே கழிந்து போனது.

எழுத்தாளராக லூ சுன் இன்று அறியப்படுவதற்குக் குவாங்பிங்கின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் எந்த அங்கீகாரமும் இன்றி அவர் இறந்து போனார் என்பது தான் வருத்தமானது.

சீன நவீன இலக்கியத்தின் தந்தையாகக் கருதப்படும் லூசுன் சிறுகதைகளில் சில தமிழில் வெளியாகியுள்ளன. கே. கணேஷ் மொழியாக்கம் செய்திருக்கிறார். இதில் ஒரு பைத்தியக்காரனின் குறிப்புகள் ஆ கியூவின் உண்மைக் கதை இரண்டும் மிக முக்கியமான கதைகள்.

லூசுன் ஆவணப்படத்தில் தனது தம்பியோடு ஏற்பட்ட பிணக்கைத் தாங்க முடியாமல் ஒரே வீட்டில் வேறுவேறு வாசல்கள் வைத்துக் குடியிருந்த நாட்களைப் பற்றி லூ சுன் சொல்கிறார். அந்தப் பிரிவை அவரால் தாங்கிக் கொள்ள முடியவேயில்லை. வாழ்க்கை குறித்த புதிய புரிதலை அதற்குப் பிறகே அவர் உருவாக்கிக் கொண்டார்.

லூ சுனின் கதைகள் திரைப்படமாக வெளியாகியுள்ளன. நாடகமாகவும் பல்வேறு நாடுகளில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

தஸ்தாயெவ்ஸ்கியின் House of the Dead” போலவே “10years of Silence” என லூ சுன் எழுதியிருக்கிறார். இந்த இரண்டு தலைசிறந்த எழுத்தாளர்களின் தனிப்பட்ட அனுபவங்களையும் ஒப்பிடும் போது அதிசயக்கத்தக்க ஒற்றுமையைக் காண முடிகிறது. இருவரும் அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் நோயினால் அவதிப்பட்டவர்கள். இருவரது வாழ்க்கையிலும் ஒரு இளம்பெண் மூலமே மீட்சி கிடைத்தது.

லூ சுனின் காதற்கடிதங்களில் காதல் மிகக் குறைவாகவே உள்ளது. சமூக அக்கறையும் எதிர்காலக் கனவுகளும் எழுத்தின் நுட்பங்களும் தான் அதிகம் பேசப்படுகின்றன.

உலகின் துயரை தனதாக்கிக் கொண்ட கலைஞனுக்கு வாழ்வில் சிறுமகிழ்ச்சியைத் தருவதற்கு முன்வந்த அன்னாவும் குவாங்பிங்க்கும் தூய அன்பின் வடிவங்களே.

நாம் எழுத்தின் மகத்துவத்தை நினைவு கொள்ளும் போது இவர்களின் மகத்தான அன்பையும் இணைத்தே நினைவு கொள்ள வேண்டும்.

Source:chakkaram.com  செப்டம்பர் 25, 2021

No comments:

Post a Comment

Soaring food prices drive hunger around the world-by John Malvar

The 2021 Global Hunger Index (GHI), published on Thursday, revealed soaring levels of hunger among the poor and working populations around t...