சத்யஜித் ரே எனும் கம்யூனிஸ்ட்!-–ஆர்.சி.ஜெயந்தன்

 special-article-about-satyajit-ray
22 வயதில் சத்யஜித் ராய் (Satyajit Ray)

த்யஜித் ராயின் பின்னொட்டாக இருக்கும் அவரது சாதியின் பெயரைத் தமிழ்ச் சூழலில் ‘ரே’ என்ற எழுதியும் கூறியும் பழகிவிட்டோம். அதேபோல சத்யஜித் ராயின் படைப்புலகம் சார்ந்து அவரை, ‘இந்திய நியோரிலிஸ்ட்’ அல்லது ‘வங்க மொழி சினிமாவின் நியோரியலிஸ்ட்’ என்று அடையாளப்படுத்தி வருகிறோம்.

கலைக் குடும்பத்தில் பிறந்த ராய், வணிக ஓவியனாக வாழ்க்கையைத் தொடங்கி, பின் சுயாதீன திரைப்படப் படைப்பாளியாக உருவெடுத்த காலகட்டத்தில் இந்தியாவின் அரசியல், சமூக, பண்பாட்டுச் சூழ்நிலையைக் கொண்டு அவரை ‘இண்டியன் நியோரியலிஸ்ட்’ என்ற பெட்டிக்குள் மட்டுமே அடைக்கமுடியாது என்பதை அவர் எடுத்த 36 படைப்புகளில் 16-ஐ பார்த்திருந்தால் கூட நீங்கள் ஒப்புக்கொண்டுவிடுவீர்கள்.

நான் இந்த இடத்தில் சத்யஜித் ராய் பற்றிக் கூற வருவது, அவருக்குள் இருந்த ‘கம்யூனிஸ்ட்’ஐ அதனால் அவரது படைப்புகளில் விரவிக் கிடந்த பொதுவுடைமை பார்வையைத் தமிழ்ச் சூழலில் யாருமே அறிமுகப்படுத்தவில்லை என்ற வருத்தம் மேலிடுகிறது. கம்யூனிசம் வேர்விட்டுத் தழைத்தோங்கிய மாநிலத்தின் தலைநகரில் பால்யம் முதல் வளர்ந்த சத்யஜித் ராயின் ஆளுமையில், பொதுவுடைமைத் தத்துவமும் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளும் எப்படித் தாக்கம் செலுத்தாமல் இருக்கமுடியும்?

வேலைதேடும் இளைஞன்

தொழிலாளர்களையும் அவர்களது உழைப்பையும் குறிப்பாக ஒருங்கிணைக்கப்படாத உதிரித் தொழிலாளர்களையும், விவசாயக் கூலிகளையும் கம்யூனிசம் விதைத்த கனவுகளுக்காக ஏங்கிய ஏழைகளையும், தனது படங்களில் துணைக் கதாபாத்திரங்களாகவும் முதன்மைக் கதாபாத்திரங்களாகவும் சித்தரித்தவர் ராய். உதாரணத்துக்கு ராயின் இயக்கத்தில் உருவான ‘பிரதிக்வந்தி’ படத்தில் ஒரு தொடக்கக் காட்சியை எடுத்துக்கொள்வோம் (யூடியூப் இணையத்தில் கிடைக்கும் ‘பிரதிக்வந்தி’ படத்தைக் காண்பதற்கான இணைப்பு:https://bit.ly/35t7enI). இந்தப் படத்தின் கதை 70களில் கொல்கத்தாவில் நடக்கிறது.

தந்தையின் திடீர் இறப்புக்குப் பின், இரண்டுவருட மருத்துவப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, குடும்பச் சுமையை ஏற்றுக்கொள்கிறான் 24 வயது சித்தார்த்தா சௌத்ரி. ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற நெருக்கடியில் இளங்கலையில் அவன் படித்த தாவரவியலையொட்டி ஒரு வேலைக்கான நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறான். கொல்கத்தாவின் புறநகர் கிராமத்திலிருந்து கிளம்பி கொல்கத்தா மாநகருக்கு வருகின்றான். மத்திய அரசின் பொட்டானிகல் சர்வே ஆஃப் இண்டியா அலுவலகத்துக்கு வந்து சேர்கிறான்.

‘பதேர் பாஞ்சாலி’ இசைச் சேர்ப்புக்கான ஆலோசனையில் தனது படக்குழுவுடன் ராய்.

நேர்காணலுக்கு வந்த அலுவலகத்தில் தனது முறைக்காகக் காத்திருக்கும்போது அவன் தாம் அணிந்திருக்கும் பேண்டின் அடிப்பகுதியைப் பார்க்கிறான். அதில் மடித்துத் தைக்கப்பட்ட அடிப்பகுதி தையல் பிரிந்து கிடக்கிறது. நேர்காணலில் தனது முறை வருவதற்கு இன்னும் நேரம் பிடிக்கும் என்பதை அறியும் அவன், தையல் கடையைத் தேடி கடைவீதியில் நடக்கிறான். கோட் சூட்களைத் தைக்கும் தையல்காரர் ‘பழைய துணிகளைத் தைப்பதில்லை’ என அவனுக்கு சற்று தூரத்தில் இருக்கும் சிறு தையல்காரர்கள் கடையைக் காட்டுகிறார். அங்கே செல்லும் அவனுக்கு தன் லுங்கியில் ஒன்றைக் கொடுக்கும் அந்த இஸ்லாமியத் தையல்காரர், அதைக்கட்டிக்கொண்டு பேண்டைக் கழற்றி தரக்கேட்டு வாங்கி, மெண்டிங் செய்துகொடுத்துவிட்டு பத்து ரூபாய் வாங்கிக் கொள்கிறார். பேண்ட் சரியாகிவிட்டதில் ‘கிழிந்த ஆடை அணிந்தவன்’ என்று கூறி அதையே ஒரு தகுதிக்குறைவாகத் தன்னை நிராகரிக்க முடியாது என்ற தன்னம்பிக்கையுடன் நேர்காணல் அறைக்குள் நுழைகிறான்.

நீயொரு கம்யூனிஸ்ட்டா?

நேர்காணல் அறையில் மூன்று அதிகாரிகள் குழுவாக அமர்ந்திருக்கிறார்கள். மூத்த அதிகாரி சித்தார்த்தாவிடம் பெயர், ஊர் போன்ற விவரங்களை எல்லாம் கேட்டுவிட்டு, ‘ கடந்த பத்தாண்டுகளில் உன் மனதைப் பெரிதும் பாதித்த நிகழ்ச்சி எது?’ என்ற முதல் கேள்வியைக் கேட்கிறார். சித்தார்த்தா, ‘வியட்நாம் வெற்றிபெற்றது தான் என்னைப் பெரிதும் பாதித்தது’ என்று பதில் அளிக்கிறான்.

துணுக்கற்ற அந்த அந்த அதிகாரி, மனிதகுல வரலாற்றில் முதன்முதலாகச் சந்திரனில் கால் வைத்த தருணத்தைவிட வியட்நாம் போர் எப்படி முக்கியமானதாக இருக்கமுடியும் என்று நினைக்கிறாய்?” அவர் தனது பதிலை அவனிடம் எதிர்பார்த்துக் கேட்கிறார். “மனிதன் சந்திரனின் கால் வைப்பான் என்பது நாம் அனைவரும் எதிர்பார்த்ததுதான். விண்வெளி அறிவியலில் மனிதகுலம் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கும்போது அது என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. ஆனால், போரில் வியட்நாம் அடைந்த வெற்றி அப்படிப்பட்டதல்ல; வியட்நாம் மக்கள் தங்களது எதிர்ப்பாற்றலை, வீரத்தை உலகமே வியக்கும்படி வெளிக்காட்டினார்களே..! எந்தவித தொழில்நுட்பமும் இல்லாமல் அல்லவா அவர்கள் வெற்றிபெற்றிருக்கிறார்கள்!” என்று கிட்டத்திட்ட ‘சந்திரனில் கால் வைத்தவர்களால் வியட்நாமில் கால் வைத்தபோதும் என்று வெளியேறி ஓடினார்களே’ என்று அவன் சொல்லாமல் சொன்னதும் அந்த அதிகாரி தனக்கு முட்டிக்கொண்டு வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு ‘நீ ஒரு கம்யூனிஸ்ட்டா?’ என்று வெடித்துக் கேட்கிறார்.

சித்தார்த்தாவோ ‘இல்லை’ என்கிறான். அந்த அதிகாரி ‘உனக்குச் சொல்லி அனுப்புகிறோம்.. இப்போது நீ போகலாம்’ என்பதை உனக்கு வேலை இல்லை வெளியே போ என்கிற தொனியில் சொல்கிறார். ‘உண்மையைப் பேசுபவன் கம்யூனிஸ்ட் என்றால் சித்தார்த்தாவும் ஒரு கம்யூனிஸ்ட்தான்’ என்று அந்தக் காட்சியில் நிறுவிவிடுகிறார். அதன்பின் படித்த இளைஞர்களை விலங்குகளைப்போல் நடத்தும் அரசு இயந்திரத்துக்கு எதிராக, கடைசி நிமிடங்கள் வரை அவன் பட்டினியுடன் வெடித்துக் கொண்டிருப்பதுடன் படம் முடியும். கடவுள் மீதான நம்பிக்கை வெறும் வெற்று முழக்கம் என்ற கடும் விமர்சனத்தையும் ராய் படத்தின் இறுதியில் வைத்திருப்பார். இப்படி ராயின் படங்கள் நெடுக அவர் கம்யூனிஸ்ட்டாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட தருணங்களைக் காணமுடியும்.

ராயின் அறியப்படாத எழுத்து

அதேபோல தமிழ்ச் சூழலில் அறியப்படாத சத்தியஜித் ராயின் மற்றொரு முகம் அவரது எழுத்துகள். ஜெயகாந்தன் எழுதிய அளவுக்குத் திரையில் இயங்கவில்லை. திரை மொழியில் இலக்கியத்துக்கு நிகரான பல படைப்புகளைத் தந்த சத்யஜித் ராயின் இன்னொரு ஆளுமை, அவரது இலக்கிய முகம்.

சத்தியஜித் ராயின் பெற்றோர்

தனது படங்களில் ராய் படைத்த கதாபாத்திரங்களின் உலகிலிருந்து அவரது எழுத்துலகம் பெரிதும் மாறுபட்டிருப்பது ஆச்சரியமே. அவர் ஒரு சாகச எழுத்துக்காரர். பத்திரிகையாளர் குடும்பத்தில் பிறந்த சத்யஜித் ராயின் தாத்தா உபேந்திர கிஷோர் ராய், ‘சந்தேஷ்’ என்ற சிறுவர்களுக்கான மாதப் பத்திரிகை ஒன்றை வெற்றிகரமாக நடத்திவந்தார். தாத்தாவின் மறைவுக்குப் பிறகு ராயின் தந்தை சுகுமார் ராய் அந்தப் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்திவந்தார். ராய்க்கு இரண்டு வயதாக இருக்கும்போது அவரது தந்தை இறந்துவிடப் பத்திரிகையும் நின்றுவிடுகிறது. ராயின் பள்ளிப் பருவத்தில் ‘சந்தேஷ்’ பத்திரிகையின் பழைய ஃபைல் பிரதிகளைக் காட்டுகிறார் அவரது அம்மா.

தாத்தாவின் எழுத்துகள் வழியே இந்திய இதிகாசங்களில் நிறைந்திருக்கும் மாயாஜாலத் தன்மையும், தனது தந்தை சுகுமார் ராயின் படைப்புலகமும் அவரைக் கவர்ந்துவிடுகின்றன. தனது தந்தையின் ஓவியத்திறன் அளித்த உந்துதலில் சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்தில் ஓவியக் கலையை முறையாகப் பயின்று முடிக்கிறார்.

இயக்குநராக சத்யஜித் ராய் புகழ்பெற்ற பிறகு தனது குடும்பத்தின் அறிவுச் சொத்தான ‘சந்தேஷ்’ பத்திரிகையை 1961-ல் திரும்பவும் கொண்டுவருகிறார். பத்திரிகைக்கான தனது முதல் கதையை எழுதி, அதற்கு ஓவியமும் வரைந்த ராய், பிறகு ‘சந்தேஷ்’ பத்திரிகை அடுத்து வந்த 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் 1986-வரை இடைவிடாமல் எழுதிவந்திருக்கிறார்.

சந்தேஷில் ராய் எழுதிய கதைகள் அனைத்தும், துப்பறிதலையும் சாகசங்களையும் மையமாகக் கொண்டவை. ‘இந்தியாவின் ஷெர்லாக் ஹோம்ஸ்’ என்று புகழப்படும் அவரது ‘ஃபெலுடா’ கதாபாத்திரத்தின் துப்பறியும் சாகசங்களை வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருமே வாசித்து மகிழ்ந்திருக்கிறார்கள். ‘பெலுடா’ கதைகளைத் தாண்டியும் ஏராளமான கதைகளை எழுதியிருக்கிறார் ராய். அவரது ‘பெலூடா’ என்ற மாபெரும் துப்பறிவாளரைப் போல ‘ஜடாயு’என்ற துப்பறியும் எழுத்தாளரும் அவரது பல சிறுவர்களுக்கான கதைகளில் இணைந்துகொள்கிறார். ராய் எனும் படைப்பாளியின் பன்முக ஆளுமையைத் தெரிந்துகொள்ள அவரது படங்களைப் பார்ப்பதுடன் அவரது கதைகளை வாசிப்பதும் தனி அனுபவமாக அமைந்துவிடும்.

சத்யஜித் ரே 99-வது பிறந்த தினம்: 2020.05.02

இந்து தமிழ்

Source: chakkaram.com

No comments:

Post a Comment

President Chandrika and former Chief Justice Shirani Bandaranayke By Victor Ivan

  Former President Chandrika Kumaratunga and Former Chief Justice Shirani Bandaranayake    Publication of a biography by former Presid...