கெய்ல் ஓம்வெத்: அடையாளங்களைக் கடந்த தோழர்!--ரவிக்குமார்

 

ந்தியாவின் சாதி அமைப்பைப் பற்றி ஆராய்ந்த அயல்நாட்டுச் சிந்தனையாளர்கள் பலர் உள்ளனர். இந்தியாவின் சாதி எதிர்ப்பு இயக்கங்களைப் பற்றியும், அவற்றின் வரலாற்றைப் பற்றியும் அரை நூற்றாண்டுக்கு முன்பே இங்கே வந்து ஆராய்ந்து உலகுக்கு எடுத்துச்சொன்ன சிந்தனையாளர்களில் இருவரை முக்கியமாகக் கருதலாம்: ஒருவர் எலீனோர் ஜெலியட், இன்னொருவர் கெய்ல் ஓம்வெத் (Gail Omvedt). இருவருமே அமெரிக்காவைச் சேர்ந்த பெண்கள்.

அமெரிக்காவின் மினியாபொலிஸ் பகுதியில் பிறந்தவர் கெய்ல் ஓம்வெத் (1941-2021). மஹாராஷ்டிரத்தில் பிராமணரல்லாதவர்களின் அரசியல் இயக்கங்களைப் பற்றி முனைவர் பட்டப் படிப்புக்காக ஆராய்வதற்காக வந்த அவருக்கு, மஹாராஷ்டிரத்தில் மருத்துவராகவும் சாதி எதிர்ப்புச் செயல்பாட்டாளராகவும் இருந்த பாரத் பதங்கரோடு ஏற்பட்ட சந்திப்பு காதலாக மாறியது. அவரையே திருமணம் செய்துகொண்டு, இந்தியாவின் குடிமகளாகிவிட்டார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் அவர் செய்த முனைவர் பட்ட ஆய்வு, மேற்கு இந்தியாவில் 1818 முதல் 1930 வரை உயிர்ப்போடு இருந்த சாதி எதிர்ப்பு இயக்கங்கள் பற்றிய வரலாற்றை உலக அரங்குக்கு எடுத்துச்சென்றது.

இந்தியாவில் இருந்த பெண்ணிய இயக்கங்கள் குறித்தும் பல கட்டுரைகளை அவர் எழுதினார். 1970-களில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரைகள் பாலின விடுதலையும் வர்க்க விடுதலையும் பிரிக்க முடியாதவையாக இருப்பதை உணர்த்தின. தலித் இலக்கியம் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் மஹாராஷ்டிரத்தில் உருவான தலித் இலக்கியம் என்ற வகைமை உலகம் முழுவதும் அறிமுகமாக உதவின. அம்பேத்கருடைய எழுத்துகள் ஆங்கிலத்தில் அவ்வளவாகக் கிடைக்காத காலத்தில், மராத்தியில் இருந்த தரவுகளைப் பயன்படுத்தி அம்பேத்கரிய அரசியல் இயக்கங்களைப் பற்றி அவர் மிக முக்கியமான நூல்களை எழுதி வெளியிட்டார். அம்பேத்கருக்கு முந்தைய தலித் இயக்கங்கள் எவ்வாறு செயல்பட்டன என்ற வரலாறு அவரால்தான் வெளியுலகுக்குத் தெரியவந்தது.

1960-களில் தலித் அரசியல் எழுச்சி மஹாராஷ்டிரம், கர்நாடகம் முதலான மாநிலங்களில் உருவெடுத்தபோது, அவற்றைக் ‘குட்டி பூர்ஷ்வா’ இயக்கங்கள் என இடதுசாரிகள் விமர்சித்தனர். சாதிப் போராட்டம் வர்க்கப் போராட்டமாக வளர்ச்சிபெற வேண்டும் என அவர்கள் வெளிப்படுத்திய ஆதங்கத்தின் பின்னே சாதி எதிர்ப்புப் போராட்டம் என்பது பிற்போக்கானது என்ற விமர்சனமே தொக்கியிருந்தது. அந்தப் பார்வையை கெய்ல் ஓம்வெத் மறுத்தார். ‘‘கல்விப் பரவலால் உருவான புதிய தலித் தலைமையை ‘மத்தியதர வர்க்கம்’ என்றும், ‘குட்டி பூர்ஷ்வா’ என்றும் பெரும்பாலான இடதுசாரிகள் கூறுவது தவறு. இந்த மத்தியதர வர்க்கத்தின் மாறிவரும் இயல்பை நாம் கவனிக்க வேண்டும். அம்பேத்கர் காலத்தில் ஒருசில படித்த தலித்துகள்தான் இருந்தனர். அவர்களே அப்போதைய இயக்கத்தில் பங்கேற்றனர். 1970-களில் கல்வியும், இடஒதுக்கீட்டினால் பெற்ற உரிமைகளும் அரசுப் பணியாளர்களிலிருந்து அரசியல் தலைவர்கள் உருவாகக் காரணமாக அமைந்தது” எனப் புதிதாக உருவாகிவந்த தலித் இயக்கங்களை அவர் சரியாக மதிப்பிட்டார்.

கெய்ல் ஓம்வெத்தின் தனித்துவமான சிறப்பு, அவர் இங்கே இருந்த சாதி எதிர்ப்பு இயக்கங்களைப் பற்றி ஆராய்ந்து நூல்கள் எழுதியது மட்டுமன்றி தலித்துகள், பெண்கள், பழங்குடியினர் ஆகியோருடன் சேர்ந்து பல போராட்டங்களிலும் ஈடுபட்டார். அதனால் பல முறை அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மஹாராஷ்டிரம், பிஹார், உத்தர பிரதேசம், தமிழ்நாடு எனப் பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்ற மக்கள் இயக்கங்களில் அவர் பங்கெடுத்தார். அந்த நடைமுறை அறிவு மற்றவர்களுக்குப் புலப்படாத நுட்பமான அம்சங்களை அவர் பார்ப்பதற்கு உதவியது.

மஹாராஷ்டிரத்தில் தலித் அரசியலில் ஏற்பட்ட தேக்கநிலை, பகுஜன் சமாஜ் கட்சியின் பின்னடைவு ஆகியவற்றுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஏற்பட்ட தலித் எழுச்சியைச் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே சரியாக அவர் அடையாளம் கண்டார். அது இந்திய அளவில் தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்றால், மொழி குறித்த சில முடிவுகளை அது எடுத்தாக வேண்டும் என்று வலியுறுத்தினார். ‘‘இந்தியாவின் பல்வேறு மொழிகளைப் பேசுபவர்கள் தமது மொழிக்குத் தனித் தனி வரிவடிவம் வேண்டும் என எண்ணுகின்றனர். இது எனக்கு சரியாகப் படவில்லை. ஐரோப்பாவில் உள்ள வெவ்வேறு நாடுகள் ஒரே விதமான வரிவடிவத்தைத்தான் பயன்படுத்துகின்றன. அந்த நாடுகளுக்கிடையிலான தகவல் தொடர்பு வலுப்பெற அதுவும் ஒரு காரணமாக உள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகள் பிராமியிலிருந்து தோன்றியவையாகும். அதுவே அசோகர் காலத்துக் கல்வெட்டுகளிலும் காணப்படுகிறது” எனக் குறிப்பிட்ட அவர், ‘‘தேவநாகரி வரிவடிவம் பயன்படுத்தப்படுவதால் வடநாட்டில் உள்ளவர்கள் எளிதாகத் தொடர்புகொள்ள வசதியாக உள்ளது. இது தேவையில்லாமல் தென்னிந்தியாவைப் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தியுள்ளது. எனவே, எல்லா மொழிகளையும் எழுதுகிற ஒரே வரிவடிவத்தைப் பயன்படுத்துவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

தமிழ்த் தேசியம் என்பது குறித்து அவர் முன்வைத்த விமர்சனமும் முக்கியமானது. ‘‘சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் எனக் கூறப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் தங்களுக்கு மட்டுமே அது உரியது என்று நினைக்கிறார்கள்” எனக் குறிப்பிட்ட அவர், “ஒரு காலத்தில் திராவிடர்கள் இந்தியாவெங்கும் பரந்து இருந்துள்ளனர் என்பதை அம்பேத்கர் தெளிவுபடுத்தியதற்குப் பிறகு, திராவிட கலாச்சாரம் இந்தியா முழுவதும் பரவியிருந்தது என நாம் புரிந்துகொண்டோம். அப்படிப் பார்த்தால், மகர்களும் தமிழர்களும் மட்டுமல்ல, அனைவருமே திராவிடர்கள்தாம். அதை மஹாராஷ்டிர பிராமணர்களும், ராஜபுத்திர அல்லது சத்திரிய அடையாளத்தை விரும்புகிறவர்களும் ஒப்புக்கொள்ளாமல் போனால், அது அவர்களது பிரச்சினை” என்று குறிப்பிட்ட அவர், தமிழ்த் தேசிய இயக்கங்கள் அப்படி குறுகிய பார்வையோடு இருக்கக் கூடாது என வலியுறுத்தினார். மன்னர் சிவாஜி வழிபட்ட குலதெய்வங்களில் ஒன்றான கந்தோபா, தமிழ்நாட்டு முருகன்தான் என நிறுவிய ஜெர்மன் நாட்டு அறிஞர் குந்தர் சொந்தேமர் (Gunther Sontheimer) சிவாஜி ஹொய்சாளர் மரபைச் சேர்ந்தவர் என்று கூறுவது தமிழர்களுக்கு இணக்கமானது என்று கெய்ல் ஓம்வெத் சுட்டிக்காட்டினார்.

மனிதகுல விடுதலைக்காக அனைத்து விதமான அடையாளங்களையும் கடந்து செயல்பட்ட கெய்ல் ஓம்வெத்தை ஒருவிதத்தில் சே குவேராவுடன் நாம் ஒப்பிட முடியும். சாதி ஒழிப்பு அரசியலை வர்க்க மற்றும் பாலின விடுதலையோடு ஒன்றிணைத்து, வலுவான கோட்பாடொன்றை கெய்ல் ஓம்வெத் உருவாக்கித் தந்திருக்கிறார். அதைச் சரியாகப் பயன்படுத்துவதுதான் அவருக்குச் செய்யும் மெய்யான அஞ்சலியாக இருக்கும்.


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...