ஜனாதிபதியின்அறிவிப்பு வரவேற்கத்தக்கது

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் 76வது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது அவர் ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் (யுவெழnழை புரவநசசநள) அவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைத்  தலைமையகத்தில், 19.09.2021 அன்று இடம்பெற்ற இந்த விசேட சந்திப்பில்,
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை, மிகவும் நேர்மறையான முறையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்குமென்று அன்டனியோ குட்டரெஸ் இலங்கை ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.


மேலும் இச்சந்திப்பின் போது இலங்கை ஜனாதிபதி, காணாமற்போனோர் தொடர்பில், அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுத்தல், அவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்கும்
நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல், மற்றும் நீண்டகாலமாக சிறையிலுள்ள கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளித்தல் போன்ற இலங்கை அரசின் திட்டங்களை ஐ.நா. பொதுச்செயலாளரிடம் எடுத்துரைத்துள்ளார்.


அத்துடன், இலங்கையின் உள்ளகப் பிரச்சினைகள், நாட்டுக்குள்ளேயே உள்ளகப் பொறிமுறையினூடாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றும், அதற்காக புலம்பெயர் தமிழர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றேன் என்ற அறிவிப்பு ஒன்றினையும் ஐ.நா. பொதுச்செயலாளர் முன்னிலையில் இலங்கை
ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.


இலங்கைக்குள் மிகவும் பலமான முறையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே தனது இலக்கு எனவும், அதன்படிக்கு, போராட்டக்காரர்கள் மீது முன்னைய காலங்களைப் போன்று பொலிசாரின் உதவியுடன் தடியடி, நீர்த்தாரைத் தாக்குதல் போன்றவற்றை நடத்த, தனது ஆட்சியின் கீழ் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும், போராட்டக்காரர்களுக்கு
என்னுடைய அலுவலகத்துக்கு முன்புறமாகவே தனியிடமொன்று
ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா. பொதுச்செயலாளரிடம் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.


இலங்கை ஜனாதிபதியும் ஐ.நா. பொதுச்செயலாளரும் சந்தித்து, இலங்கை தொடர்பான பல பிரச்சனைகளை ஒழிவு மறைவின்றி உரையாடிதோடு மாத்திமல்லாது, பரஸ்பரம் கருத்துக்களைக் பரிமாறிக்கொண்டானது இலங்கையின் வரலாற்றில் பெரும் திருப்புமுனையாகவே பார்க்கப்பட வேண்டும். 2013 ஆம் ஆண்டிற்குப் பின்னர், இலங்கை அரசதரப்பினர் கூட்டத்
தொடர்களுக்காக ஐ.நா. சபை செல்லும் ஒவ்வொரு தடவையும், அவை பரபரப்பான நிகழ்வுகளாகவே கட்டியமைக்கப்பட்டு வந்துள்ளன. இதற்குக்காரணம், 2009 ஆண்டு முடிவுக்கு வந்த இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்றதாக் கூறப்படும் சம்பவங்களை முன்னிறுத்தி, போர்க்குற்ற விசாரணைகளுக்கு இலங்கை அரசை உட்படுத்த வேண்டுமெனக் கூறி இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழ் தேசியவாத சக்திகள், மேற்கத்தைய
சக்திகளுடன் இணைந்து தீவிரமாக வேலை செய்து வருவதே.


முதன்முறையாக இலங்கை ஜனாதிபதி ஒருவர் புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாடத் தயாராக இருப்பதாக அறிவித்தது தொடர்பாக இலங்கையிலுள்ள தென்னிலங்கைக் கட்சிகள் இதுவரையில் எந்த கருத்தினையும் பகிரங்கமாக வெளியிட்டதாகத் தெரியவில்லை. ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இலண்டனை மையமாகக்கொண்ட உலகத்தமிழ் பேரவையும் (புவுகு) வேறு சில புலம்பெயர் சக்திகளும் இந்த அழைப்பினை வரவேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கையின் உள்ளகப்பிரச்சனைகளைத் தீர்க்க, இலங்கையிலுள்ள கட்சிகளுடனல்லவா பேச வேண்டும், அதைவிடுத்து எதற்காக ஜனாதிபதி புலம்பெயர் தமிழர்களை அழைத்துள்ளாரென்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. குறிப்பாக இலங்கையிலுள்ள தமிழ் தேசியவாதத் தரப்பினரைக்
கடந்து, புலம்பெயர் தமிழர்களுக்கு பகிரங்கமாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தமை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றே கூற வேண்டும். பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி புலம்பெயர் அமைப்புகளுக்கு
அழைப்பு விடுத்தமைக்கு குறைந்தது இரண்டு காரணங்கள் இருக்கலாம். 

முதலாவது, இலங்கைத் தமிழ் தேசியவாதத் தரப்பினருடன் கடந்த காலங்களில் பேசியதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால், இவர்களுடன் பேசுவதைக் காட்டிலும் இவர்களுக்கு பணப்பட்டுவாடை செய்யும் புலம்பெயர்
அமைப்புகளுடன் நேரடியாகப் பேசுவது நல்லது என்ற முடிவுக்கு அரசு வந்திருக்கலாம். அத்துடன், தமிழ் தேசியவாதத் தரப்பினரும் புலிகள் தோற்கடிக்கப்பட்ட யுத்தத்திற்கு தலைமை வகித்த ராஜபக்ஷ தரப்பினருடன் பேசுவதைக் காட்டிலும், ரணில் தலைமையிலான ஐ.தே.கவுடன் பேசுவதையே சௌகரியமானதாகக் கருதி நடந்து வருகிறார்கள். 

இரண்டாவது, ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு சில புலிசார்பு புலம்பெயர் அமைப்புகளே பின்னணியில் இருக்கிறார்கள் என்பது இலங்கை அரசின் கருதுகோளாக இருக்கலாம்.
இலங்கையின் கால் நூற்றாண்டு காலம் நீடித்த உள்நாட்டு யுத்தத்திற்கும், அதன் பின்னரான நிலைமைகளுக்கும் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மாத்திரமே காரணம் என்று தமிழ் தேசியவாதக்கட்சிகள் காலங்காலமாக குற்றஞ்சாட்டி வருகிறார்கள். இது மிகவும் தவறானது. இலங்கையில் சிங்கள –
தமிழ் பிரிவினையை ஊட்டி வளர்த்தமைக்கு தமிழ் தேசியவாதிகளும் முழுப்பொறுப்பாளிகளாவார். இந்த பொறுப்பை ஏற்று அவர்கள் உணர்ந்து நடந்தால் மாத்திரமே பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.


அத்துடன் உள்நாட்டு மற்றும் புலம்பெயர் தமிழ் தேசியவாதிகள், கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய ஆட்சியாளர்களை கடும் போக்காளர்களென வெளியுலகுக்கு சித்தரித்து அரசியல் செய்வதை முற்றாக நிறுத்த வேண்டும். இலங்கையின் உள்ளகப் பிரச்சினைகளை பேசுவதின் ஊடாக மாத்திரமே தீர்க்க முடியும் என்பதில் முற்றுமுழுதாக நம்பிக்கை
வைத்து, பொறுப்புணர்வோடு தமிழ் தேசியவாதிகள் செயற்பட்டால்
மாத்திரமே, இலங்கையிலுள்ள சகல இன மக்களுக்குமான சிறந்த
எதிர்காலத்திற்கான அடித்தளத்தினை இடலாம்.

Source: Vaanavil journal 129 September 2021

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...