தடுப்பூசி ஏற்றிக்கொள்வதே ஒரே வழி!

 

இலங்கையில் கோவிட் -19 தொற்றால் நாளொன்றுக்கு 200 மரணங்கள் வரையில் பதிவாகின்றன. இதுவரையில் மொத்தமாக 8400 மேற்பட்டோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகமாக மரணிக்கின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தைத் தாண்டியும், இதில் பூரண குணமடைந்தவர்கள் மூன்றரை இலட்சம் பேராகவும் உள்ளனர். உலகில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கைகள் பட்டியலில் இலங்கை தற்போது 59வது இடத்தில் உள்ளது. ஓரு நாட்டின் சனத்தொகையோடு ஒப்பிடுகையில் மிகக்கூடிய மரணங்கள் பதிவு செய்யப்பட்ட நாடாக இலங்கை இப்போது பதிவாகி இருக்கின்றது.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவததால் நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலுமுள்ள மருத்துவமனைகள் மற்றும் கொழும்பிலுள்ள தனியார் வைத்திய நிலையங்கள் நிரம்பி வழிகின்றன. இவ்வாறான நிலையில் கோவிட்-19 பரவலின் உக்கிரத்தைத் தடுப்பதற்கு மக்களை வீடுகளுக்குள் முடக்க வேண்டும். அதனால் அரசாங்கம் மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்தது.

இதற்கு அடுத்தபடியாக முடக்கநிலையை அறிவிக்க வேண்டும். ஆனால் நாட்டை முடக்கினால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், இன்றைய நிலையில் நாட்டை மூடினால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும், வாழ்வாதாரத்துக்கு மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும், போன்ற அச்சங்கள் இருந்ததால் அரசாங்கம் முதலில் அதனை விரும்பவில்லை.

 

எனினும் அஸ்கிரிய, மல்வத்து மகாநாயக்கர்கள், ஆளும் கட்சியினரின் ஒருபகுதியினர், எதிர்க்கட்சிகள் மற்றும் மருத்துவ அமைப்புகள் விடுத்த வேண்டுதல்களை அடுத்து, ஓகஸ்ட் 20 இலிருந்து ஓகஸ்ட் 30 வரை நாடு தழுவிய முடக்கநிலையை (Lockdown) அமுல்படுத்துவதாக அரசு அறிவித்தது. தற்போது இந்த முடக்கநிலையை செப்டம்பர் 6 வரை நீடிப்பதாக அரசு மறு அறிவிப்பொன்றினையும் வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் 10ந் திகதியே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கைப்பிரஜை இலங்கைக்குள் அடையாளம் காணப்பட்டார். இத்தாலியிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட ஒருவரே இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதாக அப்போது சொல்லப்பட்டது. அதனால் இலங்கை உடனடியாகவே சுற்றுலாப் பிரயாணிகளின் வருகைகளை நிறுத்தி, விமான நிலையங்களை மூடியதோடு மாத்திரமல்லாது, நாட்டின் முதலாவது முடக்கநிலையையும் அறிவித்தது.

கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் இலங்கை அரசு, முதலாவது கோவிட் தொற்றாளர் இனங்காணப்பட்டவுடனேயே முடக்கநிலையை அறிவித்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியது. பின்னர், கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதும் படிப்படியாக முடக்கநிலைத் தளர்வு அறிவிக்கப்பட்டது. இலங்கையில் முதலாவது கொரோனா அலையின் போது தடுப்பூசிகள் இல்லாததால், தனிநபர் இடைவெளி மற்றும் முகக்கவசம் மூலமாக மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, பிரேசில் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் கொரோனா மரணங்கள் நாளொன்று ஆயிரக்கணக்காக இருக்கையில், அந்நாடுகள் பல மாதங்களாக முடக்கப்பட்டன. அக்காலப்பகுதியில் இலங்கையின் முன்னேற்பாடான பல நடவடிக்கைகள் காரணமாக பாதிப்பு குறைவாக இருப்பதாக உலக சுகாதார சபையால் பாராட்டப்பட்ட நாடு இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் முதலாவது கொரோனா மரணம் கடந்த வருடம் மார்ச் 28இல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் டிசம்பர் 31 வரை 204 பேர் வரையிலேயே மரணித்திருந்தனர். இவ்வருடம் மே 18 வரை இறப்பின் எண்ணிக்கை 1015 பேராகவே இருந்தது. ஆனால் கடந்த மூன்றே மாதத்தில் 7000 பேருக்கு மேல் மரணித்தது என்பதே, இலங்கை கொரோனா நெருக்கடியில் சிக்கியுள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகின்றது.

கொரோனா பரவல் அதிகரித்திருப்பதற்கு ஏற்ப, நோயாளிகளை உரிய முறையில் பராமரிக்க வசதிகள் போதாமை என்பது நாடு தழுவிய ரீதியில் சவாலாக இருந்து வருகின்றது. எனினும் நோயாளர்களைக் கண்காணிப்பதிலும், அவர்களுக்கான விஷேட வைத்திய வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் வைத்தியசாலைகளும் அவற்றின் கீழ் உள்ள சுகாதாரத் தரப்பினரும் இரவும் பகலும் அயராது செயற்பட்டு வருகின்றனர் என்று தெரியவருகின்றது. இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் தொகையும் ஓரளவு திருப்தி தருவதாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு முதலாவது தடுப்பூசித் தொகுதி இந்தியாவிலிருந்து ஜனவரி 28ந் திகதி வந்தடைந்தது. இந்தத் தடுப்பூசி, Oxford–AstraZeneca என்ற பிரித்தானிய – ஐரோப்பிய தடுப்பூசியின் இந்தியத் தயாரிப்பான கோவாக்ஸ் (Covax) ஆகும். அதைத்தொடர்ந்து அமெரிக்கா 1.5 மில்லியன் மொடெர்னா (Moderna) தடுப்பூசிகளை அன்பளிப்பு செய்தது. இப்போது சீனத்தயாரிப்பான சினோபார்ம்(Sinopharm) தடுப்பூசிகளே அதிகளவில் ஏற்றப்படுகின்றன. இதுவரையில் இலங்கையில் 55% ஆனோர் குறைந்தது ஒரு முறையாவது தடுப்பூசியை ஏற்றிக் கொண்டுள்ளனர்.

யாழ் குடாநாட்டில் வீட்டுக்கு வீடு சென்று தடுப்பூசி வழங்கும் திட்டம் ஒன்றினை இலங்கை இராணுவம் மேற்கொண்டு வருகின்றது. தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு செல்ல எவரையாவது சார்ந்திருக்க வேண்டியிருக்கின்ற வயது முதிர்ந்தவர்களுக்கு இந்தத் திட்டம் மிகுந்த பலனையளிக்கின்றது. இந்தத் திட்டம் ஊடாக வரிசையில் நிற்கும் தேவை இல்லாததால், தடுப்பூசி நிலையங்களுக்குச் செல்வதால் ஏற்படும் தொற்று பரவல் சாத்தியங்களையும் குறைக்க உதவுகின்றது. இவ்வாறான இராணுவத்தின் நட்புரீதியான அணுகுமுறையானது, இலங்கையில் சமூகங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தினையும்; ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை.

கொரோனா தொற்றானது உடலில் குணப்படுத்த முடியாத பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதாகும். அது இலகுவாக, வேகமாகப் பரவக் கூடியதாகும். ஒருவர் தமக்கு தொற்று ஏற்பட்டுள்ளதென்பதை விட, தன்னால் தன் குடும்பமும் அயலவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பொதுநல உணர்வு முக்கியமானது. சமூகவியல் நோக்கில் கூறுவதாக இருந்தால், பொறுப்புக் கூற வேண்டிய செயற்பாடு. இதுவே தொற்றுப்பரவலை தடுக்க எம்மைத் தயார்படுத்துவதாகும்.

கொரோனா வைரஸை துல்லியமாக கணிப்பது கடினம், உருமாறக்கூடியது. இந்த வைரஸ் கூடிய விரைவில் மறைந்து போகலாம் என்று நம்புவதற்கு மிகச்சொற்ப காரணங்கள் மட்டுமே உள்ளன என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தொற்று பரவும் எண்ணிக்கை குறையலாம் என்றும், ஒரு கட்டத்தில் தொற்று இருக்கும், ஆனால் குறைந்த அளவில் இருக்குமெனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதேபோன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய அளவிற்கு கடுமையான பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை குறையலாம் என்றும், தீவிர சிகிச்சைக்குட்ப்படுத்தப்பட வேண்டியவர்கள் மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே இருப்பார்கள் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தடுப்பூசி விஷயத்தில் மக்கள் மற்றும் அரசாங்கத்தைத் தாண்டி, பல்வேறு போலி செய்திகள், வதந்திகள், மக்களின் தேவையற்ற அச்சங்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. தடுப்பூசி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்கள் அனைத்தையும் நம்ப வேண்டாம். சரியான தெளிவின்றி கிடைக்கும் தகவல்களையெல்லாம் தயவுசெய்து பிறருடன் பகிர வேண்டாம்!

ஓரு புதிய நோய்க்கிருமி, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத நபருக்குள் நுழையும்போது, அது பேரழிவை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி மக்களிடத்தில் உருவாகியவுடன், நோய்க்கிருமியுடனான நமது உறவு மாறுகிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை நாங்கள் பெற்றுக்கொள்வதற்கு தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதே சிறந்த வழி! தடுப்பூசி ஏற்றுவதால் மாத்திரம் கொரோனாவிலிருந்து முழுமையாகப் பாதுகாப்பு பெறமுடியும் என்று கூறமுடியாது. தடுப்பூசியை ஏற்றிக் கொண்ட பின்னரும் உரிய சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஏனெனில் கொரோனா வைரஸ் திரிபுகளின் ஆபத்து எப்போதுமே தொடர்ச்சியாக இருந்து கொண்டேயிருக்கும்!

எனவே பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினைக் பேணுவது, கைகளை அடிக்கடி சவர்க்காரம், கிருமிகொல்லி கொண்டு சுத்தம் செய்வது போன்றவற்றைக் கட்டாயம் தொடர்ந்து கடைப்பிடிக்கவும். நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனைகளை, சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளவும்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எம்மை நாமே பாதுகாப்பதுடன், எமது சமுதாயத்தில் இடம்பெற்றுள்ள அனர்த்தத்தை தடுக்க எம்மால் முடிந்த முயற்சிகளை செய்வதோடு, எமக்காக களத்தில் நின்று சேவையாற்றும் மருத்துவர்களுக்கும் தாதியினருக்கும் உறுதுணையாக இருப்போம். இந்த சோதனையான காலகட்டத்தில் கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸில் இருந்து நாங்கள் விடுபட, இலங்கை மக்கள் ஒவ்வொருவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணமிது.

 

Vanavil 128 August 2021

No comments:

Post a Comment

President Chandrika and former Chief Justice Shirani Bandaranayke By Victor Ivan

  Former President Chandrika Kumaratunga and Former Chief Justice Shirani Bandaranayake    Publication of a biography by former Presid...