இந்தியாவில் இஸ்லாமியராக இருப்பது ஒரு குற்றமா? இந்துக் கும்பல்களால் தொடர்ந்து தாக்கப்படும் முஸ்லிம்கள்!-கீதா பாண்டே (Geeta Pandey)தவறு செய்ததற்கான முகாந்திரங்கள் இல்லாமலேயே இஸ்லாமியர்கள் இந்துக்களால் தாக்கப்படுவது இந்தியாவில் அன்றாட வழக்கமாகிவிட்டது, ஆனால் இதற்கு அரசு பெரிதாக எந்தக் கண்டனமும் தெரிவிப்பதில்லை.

சென்ற மாதம், இந்துக்களால் தாக்கப்படும் தனது இஸ்லாமியத் தந்தையை பயத்துடன் கட்டிப் பிடித்துக்கொண்டிருக்கும் ஒரு சிறுமியின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

45 வயதாகும் அந்த ரிக்‌ஷா ஓட்டுநர், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கான்பூரின் வீதிகளில் பகிரங்கமாகத தாக்கப்படுகிறார். அழுதுகொண்டிருக்கும் அவரது மகள், தாக்குபவர்களிடம் கெஞ்சுகிறார்.

“ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்” மற்றும் “ஜெய் ஶ்ரீராம்” என்று முழங்கச் சொல்லி அந்தக் கும்பல் அவரை வற்புறுத்தியது. ஜெய் ஶ்ரீராம் என்ற இந்த முழக்கம், தாக்குதல் நடத்தும் இந்துக் கும்பல்களின் முழக்கமாகவே கடந்த சில ஆண்டுகளில் மாறியிருக்கிறது.

அவர்கள் சொன்ன முழக்கங்களை எழுப்பிய பின்னும் அவர் தொடர்ந்து தாக்கப்பட்டார். காவல்துறை வந்து அவரையும் அவரது மகளையும் மீட்டது. தாக்குதல் நடத்தியதாகக் கைது செய்யப்பட்ட மூவரும் மறுநாளே பிணையில் வெளிவந்தனர்.

சில நாட்கள் கழித்து, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த வளையல் வியாபாரி ஒருவர், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இந்தூரில் தாக்கப்பட்ட காணொளி ஒன்று வைரலானது. தஸ்லீம் அலியை அடித்து உதைக்கும் இந்து கும்பல், இந்துக்கள் வாழும் பகுதிகளுக்கு வரக்கூடாது என அந்த இஸ்லாமியரை மிரட்டுகிறது.

ஐந்து – ஆறு பேரால் தாம் தாக்கப்பட்டதாகவும், தாக்கியவர்கள் மதத்தை அடிப்படையாகக் கொண்ட வசைகளைக் கொண்டு திட்டி, தன்னிடம் இருந்த பணத்தையும் ஆவணங்களையும் பிடுங்கிக்கொண்டு, இந்துக்கள் இருக்கும் பகுதியில் வளையல் விற்க வந்ததற்காகத் தன்னைத் தாக்கியதாகவும் அவர் காவல்துறையிடம் கொடுத்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வு விநோதமானது. தாக்குதல் நடத்திய ஒருவரின் 13 வயது மகள், தஸ்லீம் அலி தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகார் அளித்ததால் மறுநாள் அலி கைது செய்யப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டை அலியின் குடும்பமும் அண்டை வீட்டாரும் மறுத்துள்ளனர். ஐந்து குழந்தைகளின் தந்தையான அலி இப்படி செய்திருப்பார் என்று நம்பமுடியவில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவரது மத அடையாளத்துக்காகவே அலி தாக்கப்பட்டதாகவும் இந்த பாலியல் புகார் பின்பு சேர்க்கப்பட்டது எனவும் இதை நேரில் கண்ட சாட்சிகள் இந்திய ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் நடந்த இஸ்லாமியருக்கு எதிரான பல தாக்குதல்களில் இந்த இரு நிகழ்வுகள் சிறு உதாரணங்கள் மட்டுமே. 20 கோடி மக்கள்தொகையைக் கொண்ட, இந்தியாவின் மிகப்பெரிய சிறுபான்மையினர் சமூகமான இஸ்லாமியர்களுக்கு இதை விட மோசமான மாதங்கள் சமீபகாலங்களில் இருந்திருக்கின்றன.

இதற்கு முந்தைய காலத்திலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. அவை செய்திகளாகவும் பரபரப்பாகவும் முன்னிறுத்தப்பட்டன.

மார்ச் மாதம், தண்ணீர் குடிப்பதற்காக ஓர் இந்து கோயிலுக்குள் நுழைந்த பதினான்கு வயது இஸ்லாமிய சிறுவன் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.

ஜூன் மாதம், டெல்லியில் இந்துக்கள் இருக்கும் பகுதியில் பழம் விற்க முனைந்தார் என்பதால் இஸ்லாமியர் ஒருவர் தாக்கப்பட்டார்.

“இந்த வன்முறை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. இது எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்கிறார் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையைக் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆவணப்படுத்திவரும் பத்திரிக்கையாளர் அலிஷான் ஜெஃப்ரி (Alishan Jafri).

ஒவ்வொரு நாளும் இதுபோல மூன்று அல்லது நான்கு காணொளிகளைப் பார்ப்பதாகவும், ஒன்றிரண்டின் நம்பகத்தன்மையை மட்டுமே ஆராய்ந்து சமூக ஊடகங்களில் வெளியிடுவதாகவும் தெரிவிக்கிறார்.

இந்தியாவில் இருக்கிற இந்த மதப் பிரிவினை நெடுங்காலமாக இருப்பதுதான் என்றாலும் நரேந்திர மோதி தலைமையிலான இந்து தேசியவாத அரசு 2014ல் ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவிட்டதாக விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

“மத ரீதியான வன்முறை என்பது இங்கு புதிதல்ல. ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின் செயல்களாலும் அரசியல் உந்துதல்களாலும் இது அதிகரித்திருக்கிறது” என்கிறார் டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் துறையின் பேராசிரியராக இருக்கும் தன்வீர் எய்ஜாஸ்.

“நம்பிக்கையற்ற அந்த உணர்வு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. ஆனால் இப்போது மத தேசியவாதத்தால் அந்தப் பிரிவினை அதிகரித்துவிட்டது” என்கிறார்.

மோதியின் முதல் ஆட்சிக் காலத்தின் போது பசு பாதுகாவலர்கள் என்று அழைப்படுபவர்கள், மாட்டுக்கறி வைத்திருந்ததாகவும் பசுக்களைக் கடத்தியதாகவும் பல இஸ்லாமியர்களைத் தாக்கிய சம்பவங்கள் நடந்தேறின.

இதற்குப் பிரதமர் கண்டனம் தெரிவிக்கவில்லை, அவர் தெரிவித்த கண்டனமும் விரைவானதாகவும் அழுத்தமானதாகவும் இல்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

பா.ஜ.கவின் மூத்த தலைவரான பிரகாஷ் ஜவ்டேகர் பிபிசியிடம் பேசும்போது, “இதுபோன்ற நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அது மோசமானதுதான் என்று அரசு நம்புகிறது. ஆனால் சட்டம் ஒழுங்கு என்பது மாநிலக் கட்டுப்பாட்டில் இருப்பதால் அந்ததந்த மாநிலங்களின் பொறுப்பு அது” என்றார்.

இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்களை மட்டும் பெரிதுபடுத்திக் காட்டி ஊடகங்கள் பாரபட்சத்துடன் நடந்துகொள்கின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

“அதிகாரபூர்வ தகவல்களைப் பாருங்கள், 200 பேர் தாக்கப்பட்டால் அதில் 160 பேர் இந்துக்கள். எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் குறிவைக்கப்படுகிறார்கள்” என்று அவர் தெரிவித்தார். ஆனால் அந்தத் தகவல் எங்கிருந்து வந்தது என்று அவர் தெளிவுபடுத்தவில்லை.

இந்தியா இதுபோன்ற தரவுகளை சேகரிப்பதில்லை. 2019ல் ஒரு தகவல் சரிபார்ப்பு இணையதளம், கடந்த 10 ஆண்டுகளில் நடந்த தாக்குதல்களில், பாதிக்கப்பட்டவர்களில் 90%க்கும் மேற்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்று தெரிவித்தது.

இந்தத் தாக்குதல்களை நடத்துபவர்களுக்கு தண்டனை தரப்படுவதில்லை. இவர்களுக்கு அரசியல்வாதிகள் ஆதரவு தருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஓர் இஸ்லாமியரைத் தாக்கிய எட்டு இந்துக்களுக்கு, ஓர் அரசாங்க அமைச்சர் மாலை அணிவித்துப் பாராட்டிய நிகழ்வும் உண்டு.

“நம் நாட்டில் இதுபோன்ற தாக்குதல்கள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. இந்த குண்டர்கள் தண்டிக்கப்படுவதேயில்லை என்பதுதான் அதற்குக் காரணம். இந்த வெறுப்பு இப்போது மைய நீரோட்டத்திலும் கலந்துவிட்டது. இஸ்லாமியர்களைத் தாக்குவது ஒரு சாகசமாகப் பார்க்கப்படுகிறது. இவற்றை செய்பவர்களுக்குத் தகுந்த சன்மானமும் கிடைக்கிறது” என்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் ஹசீபா அமீன்.

2019ல் நரேந்திர மோதி மீண்டும் பதவிக்கு வந்த பிறகு இந்த வன்முறை பரந்து விரிந்ததாக மாறியிருப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

சில நேரம் இந்த வன்முறை வெறுமனே உடல்ரீதியானதாக இருப்பதில்லை. சிறுபான்மையினரை மோசமாக சித்தரிக்கும் ஒரு போக்காகவும் இது இருக்கிறது.

இந்தியாவில் கோவிட்-19 பரவத் தொடங்கியபோது, மோதியின் அமைச்சர்களும் கட்சித் தலைவர்களும் டெல்லியில் ஓர் இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் “கொரோனா ஜிஹாத்” மூலம் வைரஸைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டினர்.

இந்துக்களுக்கு வைரஸைப் பரப்புவதற்காக ரொட்டிகளின்மீது வைரஸைத் துப்பி அவர்கள் “ரொட்டி ஜிஹாத்” செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்துப் பெண்களைக் கவர்ந்து, அவர்களை இஸ்லாமுக்கு மதம் மாற்றுவதற்காக இஸ்லாமிய ஆண்கள் முயற்சி செய்வதாகக் குற்றம் சாட்டிய இந்து அமைப்புகள், அதை “லவ் ஜிஹாத்” என்ற இஸ்லாமியர் வெறுப்புப் பெயரால் குறிப்பிடுகின்றன.

கடந்த சில மாதங்களில், பல மாநிலங்கள் லவ் ஜிஹாத்துக்கு எதிராக சட்டங்களை இயற்றியுள்ளன. இந்த சட்டங்கள் இந்துப் பெண்களோடு பழகும் இஸ்லாமிய ஆண்களைக் குறிவைக்கின்றன. கடந்த மாதம், தன் இஸ்லாமியக் கணவரிடமிருந்து ஓர் இந்து மனைவி வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டதில் அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது. அது தலைப்புச் செய்தியானது.

இந்தப் பிரச்னையில் இஸ்லாமியப் பெண்களும் குறிவைக்கப்படுகிறார்கள். ஜூலை மாதம் பல இஸ்லாமியப் பெண்கள் இணையத்தில் “விற்பனைக்கு” என்று காட்சிப்படுத்தப்பட்டார்கள். ஓர் இணைய ஏலமும் இதற்காக நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமீனின் புகைப்படமும் இருந்தது.

சென்ற மாதம் நடந்த ஒரு போராட்டத்தில், தில்லியைச் சேர்ந்த ஒரு பாஜக தலைவர் “இஸ்லாமியர்கள் கொல்லப்படவேண்டும்” என்று முழக்கமிட்டார்.

“மத தேசியவாதம் பேசும் அரசியல்வாதிகள், இந்துக்கள் மேம்படவேண்டும் என்றால் இஸ்லாமியர்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படவேண்டும் என்று மக்களை நம்பவைக்கிறார்கள். இந்தப் பிரசாரம் திட்டமிட்டு, தொடர்ந்து நடத்தப்படுகிறது” என்கிறார் ஜாஃப்ரி.

தையற்காரர்கள், பழ வியாபாரிகள், மின் தொழிலாளர்கள், ப்ளம்பர்கள், வளையல் விற்பனையாளர்கள் போன்ற உழைக்கும் வர்க்க இஸ்லாமியர்களைக் குறிவைப்பதன் மூலம், அரசியல் பொருளாதார சூழலைக் கட்டுக்குள் கொண்டுவந்து, மத தேசியவாதத்தின் மூலம் வேலைகளைக் கையகப்படுத்தும் முயற்சியும் நடக்கிறது என்கிறார் பேராசிரியர் எய்ஜாஸ்.

“இந்த பிரிவினை ஆழமாகிவிட்டது, நம்பிக்கையின்மை அதிகரித்துவிட்டது. இந்த வெறுப்பில் அவர்களுக்கு ஒரு லாபம் உண்டு. இஸ்லாமியர்களை எதிரிகளாக சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். அவர்களை அழிக்கவில்லை என்றால் நாம் அழிந்துவிடுவோம் என்று சொல்கிறார்கள். ஆகவே வெறுப்பை வளர்த்து பயத்தை விதைக்கும் இந்த வேலையில் வன்முறைக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு” என்கிறார்.

மத தேசியவாதம் பல வன்முறைகளுக்கு வழிவகுக்கக்கூடிய ஓர் ஆபத்தான போக்கு என்கிறார் பேராசிரியர் எய்ஜாஸ்.

“ஒரு ஜனநாயகத்தில் இந்த பிரச்னை கடைசியாக நாடாளுமன்றத்தில் சென்று நிற்கிறது. எத்தனை நாள் இவர்கள் இதைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியும்?”

பிபிசி தமிழ்
2021.09.03

Source:  chakkram.com

No comments:

Post a Comment

President Chandrika and former Chief Justice Shirani Bandaranayke By Victor Ivan

  Former President Chandrika Kumaratunga and Former Chief Justice Shirani Bandaranayake    Publication of a biography by former Presid...