இலங்கையில் ஆட்சி மாற்றம் நடக்குமா?

 

லங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று நடைபெற வாய்ப்புள்ளதாக அல்லது நடைபெற வேண்டும் என்ற கருத்துப்பட சில தரப்புகள் கூறி வருகின்றன.

இந்தமுறை வழமைபோல வெளிநாட்டு ஊடகங்களோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ இதைக் கூறவில்லை. ஜே.வி.பி அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்போ கூட உள்ளுர விரும்பினாலும் அவ்வாறு கூறுவதைக் காணோம். இந்தக் கருத்தைத் தொடர்ந்து கூறி வருபவர்கள் ஐ.தே.கவிலிருந்து பிரிந்து ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் தனிக்கட்சியை உருவாக்கி நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் சஜித் பிரேமதாச குழுவினரே இந்தக் கருத்தைக் கூறி வருகின்றனர்.

அவர்களது இந்தக் கருத்துக்கு சில பௌத்த குருமார்கள் ஆதரவளிப்பதுடன், ஊடகங்களும் குறிப்பாகத் தமிழ் ஊடகங்களும் முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

ஆனால் என்ன வகையில் ஆட்சி மாற்றம் நிகழும் என சஜித் குழுவினர் கூறவில்லை.

ஆட்சி மாற்றம் நிகழ்வதானால் சில வழிமுறைகளில்தான் நிகழ முடியும்.

அதாவது, ஜனாதிபதியினதும் நாடாளுமன்றத்தினதும் பதவிக்காலம் முடிவடைந்து தேர்தல் நடந்தால் ஆட்சி மாற்றம் நிகழலாம்.

அல்லது ஜனாதிபதி மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்து அது வெற்றி பெற்றாலும் ஆட்சி மாற்றம் நிகழலாம்.

அல்லது 1953இல் அன்றைய ஐ.தே.க. அரசுக்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் மக்களை அணிதிரட்டி ஒரு மாபெரும் ஹர்த்தால் போராட்டம் நடத்தி அரசாங்கத்தைச் செயலிழக்க வைத்தது போல ஒரு முயற்சியை மேற்கொண்டாலும் ஆட்சி மாற்றம் நிகழலாம்.

அல்லது 1971 மற்று 1988 – 89 காலப்பகுதியில் ஜே.வி.பி. இயக்கம் மேற்கொண்டது போன்ற ஆயுதக் கிளர்ச்சி ஒன்றை நடத்தியும் ஆட்சி மாற்றம் ஒன்றை நிகழ்த்தலாம்.
அல்லது இராணுவத்தினர் ஒரு சதி நடவடிக்கையை நிகழ்த்தியும் ஆட்சி மாற்றம் ஒன்றைச் செய்யலாம்.

ஆனால் தற்போதைய நிலைமையில் இலங்கையில் இப்படியான நடவடிக்கைகள் எதற்குமே வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. எனவே எதிர்க்கட்சியினர் வெறுமனே ஆகாயத்தில் கோட்டை கட்டி மகிழ்கின்றனர் என்பது நிரூபணமாகிறது.

எதிர்க்கட்சியினர் இப்படியெல்லாம் பேசுவதற்கு அவர்கள் அரசாங்கத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?

ஒன்று, விலைவாசி உயர்வு.

இரண்டாவது, அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு.

மூன்றாவது, கொவிட் நோயைக் கையாள்வதில் அரசாங்கத்தின் திறமையீனம்.

நான்காவது, அரசாங்கம் இராணுவமயமாகி வருவதாகவும், மக்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதாகவும் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு. இப்படி இன்னும் பல.

கொவிட் தொற்றுக் காரணமாக நாட்டின் அன்றாட இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதால் நாட்டில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு, அரசாங்கம் சுமூகமாகச் செயற்பட முடியாத ஒரு நிலை தோன்றியுள்ளது என்பது உண்மையே. இந்த நிலைமை இன்றைய அரசாங்கத்தால் தோற்றுவிக்கப்பட்ட ஒன்றல்ல. சுதந்திரத்துக்குப் பின்னர் மாறிமாறி நாட்டை ஆட்சி செய்த இரண்டு முதலாளித்துவக் கட்சிகளினதும் தூரநோக்கற்றதும், நாட்டு நலன் கருதாததுமான ஆட்சிகளின் தொடர்ச்சியே இந்த நிலைமைக்குப் பிரதான காரணம். கொவிட் அதன் பாரதூரத்தன்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

எனவே, இன்று ஆட்சியில் இருக்கும் சிறீலங்கா பொதுஜன பெரமுன மட்டுமின்றி வேறெந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. சில வேளைகளில் அத்தகைய கட்சிகளின் ஆட்சியில் இப்போதிருப்பதை விட நிலைமை இன்னும் மோசமாகவும் இருக்கலாம்.

உண்மையில் நாட்டின் இத்தகைய நிலைமைகளுக்கு அடிப்படைக் காரணம் நடைமுறையில் இருக்கும் ஏற்றத்தாழ்வான முதலாளித்துவ ஆட்சி முறையே. நாட்டை ஆட்சி செய்த இரண்டு பிரதான கட்சிகளும் அந்த அமைப்பு முறையை மாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. அவர்கள் செய்யவும் மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பிரித்தானிய ஏகாதிபத்தியம் கையளித்துச் சென்ற முதலாளித்துவ பாராளுமன்ற முறையையே தொடர்ந்து பேணிப் பாதுகாத்து வருகின்றனர். அதை அவர்கள் ஒருபோதும் மாற்றத் துணியமாட்டார்கள் என்பதோடு, விரும்பவும் மாட்டார்கள்.

நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் தமக்குள் ஐக்கியப்பட்டு, ஒரு சரியான தலைமையை கட்டியெழுப்பி, பரந்துபட்ட வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே நாட்டில் ஒரு அடிப்படையான அரசியல் மாற்றத்தையும் சமூக மாற்றத்தையும் கொண்டுவர முடியும். இதைத்தவிர, இலங்கையின் இன்றைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வேறு ஏதும் குறுக்கு வழிகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

source: Editorial , Vanavil 129 September 2021  

No comments:

Post a Comment

Soaring food prices drive hunger around the world-by John Malvar

The 2021 Global Hunger Index (GHI), published on Thursday, revealed soaring levels of hunger among the poor and working populations around t...