தோல்விகளிலிருந்து கற்கவேண்டிய பாடங்கள்- முருகபூபதி


மக்கள்  ஆதரவு   அற்ற  எந்த  விடுதலை   இயக்கமும்  இறுதியில்    படுதோல்வியைத்தான்   சந்திக்கும்
கிணற்றுத் தவளைகளுக்கு மீட்சியில்லை
                                        
Rohana_WijeweeraVelupillai_Prabhakaranஇலங்கையில்  1977  இல்  ஜே.ஆர். ஜெயவர்தனா  பதவிக்கு  வந்ததும் தேர்தல்காலத்தில் அவர்  வழங்கிய  வாக்குறுதிக்கு  அமைய  1971 இல்  கிளர்ச்சிசெய்து,  குற்றவியல்  நீதி  ஆணைக்குழுவால் தண்டிக்கப்பட்டு  ஆயுள்கைதிகளாக  இருந்த  மக்கள்  விடுதலை முன்னணியினரை  விடுதலை   செய்தபொழுது,   வடக்கில்  தமிழ் இளைஞர்களின்   தமிழ் தீவிரவாதம்  வளரத்தொடங்கியிருந்தது.
அவர்கள்  மத்தியில்  உருவான  விடுதலை  இயக்கத்தில்  முதலில் பிரபாகரனும்  உமா மகேஸ்வரனும்  இணைந்திருந்தனர்.
தென்னிலங்கையில்  1971   இல் நடந்த  சிங்கள  இளைஞர்களின் கிளர்ச்சி  ஏன்  முறியடிக்கப்பட்டது ? , அந்த  இளைஞர்கள்  எவ்வாறு கைதானார்கள்  என்பதை  அந்த   இயக்கம்  முதல் கட்டமாக ஆராய்ந்தது.
தோல்விகளிலிருந்து  பாடம்  படிக்கவேண்டும்  என்பதற்காக,   மக்கள் ஆதரவு   அற்ற  எந்த  விடுதலை   இயக்கமும்  இறுதியில் படுதோல்வியைத்தான்   சந்திக்கும்  என்ற  பாடத்தை  மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து  கற்றுக்கொள்வதற்காக   ஒரு  தமிழ் நூலை  வெளியிட்டனர்.

இந்த  நூல்  தமிழ்நாட்டில்  அச்சிடப்பட்டிருந்தது.  நீதியரசர்  அலஸ் முன்னிலையில்  மக்கள்  விடுதலை  முன்னணி  தலைவர்  ரோகண விஜேவீரா   அளித்த  வாக்கு மூலத்திலிருந்து  சில  முக்கியமான பகுதிகளின்   தொகுப்புத்தான்  அந்த  நூல். மொழிபெயர்ப்பு  சிறப்பாக  இருந்தது.
அதில்  விஜேவீரா,  இனங்களின்  சுயநிர்ணய  உரிமை  பற்றி  சொன்ன கருத்துக்களும்  இடம்பெற்றிருந்தன.அதனை   வாசிக்கத்தொடங்கியபொழுது,   மக்கள்  விடுதலை முன்னணியின்  செயற்பாடுகள்,  அரசியல்  பொருளாதார  மறுமலர்ச்சி   மற்றும்  இளம்  தலைமுறையின்  உணர்வுகள்  பற்றிய சிந்தனைகளை   தமிழ்  மக்கள்  மத்தியிலும்  உருவாக்கவேண்டும் என்ற   எண்ணத்துடன்தான்  மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாக நினைக்கத்தோன்றியது.
இறுதியில்--  அந்த  மக்கள்  விடுதலை  இயக்கம்  ஏன் தோல்வியடைந்தது ?  என்பதை  ஆதாரங்களுடன்  குறிப்பிட்டு நிறைவடைந்தது.
இந்த   நூல்  என்வசம்  கிடைத்தபொழுது,   அதனை  கொழும்பில் ஆமர்வீதியும்  புளுமெண்டால்  வீதியும்  சந்திக்கும்  இடத்தில் அமைந்திருந்த  ஒரு  மர ஆலை  கட்டிடத்தின்  மேல்மாடியில் அமைந்த   மக்கள்  விடுதலை  முன்னணியின்  அலுவலகத்திலிருந்த ரோகண  விஜேவீராவுக்கு  வாசித்துக்காண்பித்தேன்.
அவர்   சிரித்துக்கொண்டு  கேட்டார்.   " அலஸ்  முன்னிலையில் சமர்ப்பித்த  தனது வாக்கு மூலத்தை  அழகாக  தமிழில்  மொழிபெயர்த்திருக்கிறார்கள் " -  என்று   மாத்திரம்  அவர்  சொன்னார்.   தோல்விக்கான  காரணங்களை  தாம்  கூட்டங்களில்  விளக்குவதாகச் சொன்னார்.
கட்சியின்   செயலாளர்  லயனல்  போப்பகே,   தாம்  சிறையிலிருந்த வேளையில்   எழுதிய  இனங்களின்  சுயநிர்ணயம்  என்ற  நூலை தமிழில்   வெளியிட   விரும்பினார்.
அந்த  நூல்  பின்னர்  தமிழிலும்  ஆங்கிலத்திலும்  வெளியானது.
சிறையிலிருந்து  எழுதப்பட்ட  பல  குறிப்புகள்  பின்னாளில் உலகப்பிரசித்தம்  பெற்று  பல  மUma_Maheswaranொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கின்றன.   காந்தி,   நேரு,  மண்டேலா   மட்டுமன்றி பிடல்  காஷ்ரோ,   சேகுவேரா  முதலானோரின்  நூல்களும்  அவ்வாறு பலமொழிகளில்   கிடைக்கின்றன.
தமிழகத்தின்   அரசியல்  தலைவர்கள்  முதல்  கவிஞர்கள், பத்திரிகையாளர்களும்   தமது  சிறைக்குறிப்புகளை எழுதியிருக்கின்றனர்.
அதுபோன்று   புஷ்பராசா  (ஈழப்போராட்டத்தில்  எனது  சாட்சியம்) , புஷ்பராணி  (  அகாலம்)   ஆகியோரும்   தமது  சிறைவாழ்க்கை   பற்றி எழுதியிருக்கின்றனர்.
இலங்கையில்  இறுதிப்போருக்குப்பின்னர்,   கோர்டன்வைஸ்   எழுதிய கூண்டு,     ஃபிரான்ஸிஸ்   ஹரிசன்    எழுதிய   ஈழம்: சாட்சியமற்ற போரின்   சாட்சியங்கள்   என்பனவும்   மக்களிடம்  பிரபல்யம் பெற்றன.   இந்த  ஆசிரியர்களினால்  ஆங்கிலத்தில்  எழுதப்பட்ட இந்நூல்கள்  ஏன்  தமிழில்  வெளிவந்தன  என்ற  கேள்விக்கான பதிலும்  1977 -78    காலப்பகுதியில்  வெளியான  விஜேவீராவின் சிங்கள  வாக்குமூலம்  ஏன்  தமிழில்  புலிகளினால்  வெளி வந்தது என்பதற்கான   பதிலும்  ஒரு  புள்ளியில்தான்  சந்திக்கின்றன.
தேவைகளின்  நிமித்தம்  என்பதே  அந்த  புள்ளியில்  இருந்து கிடைக்கும்   பதில்.
------------
சிவகாமி  தமிழினி  எழுதியிருக்கும்,  ஒரு  கூர்வாளின்  நிழலில் நூலை  அவர்   சிங்களத்திலும்  வெளியிடுவதற்கு  விரும்பியிருக்கிறார்   என்பதையும்  தற்போது  ஊடகங்களில் தொடரும்   தமிழினி  அமளியிலிருந்து  அறியமுடிகிறது. 
அதன்   மூலப்பிரதி  தர்மசிறி  பண்டாரநாயக்கா  என்ற  இலங்கையில் பிரபலமான   சிங்கள  திரைப்பட  இயக்குநர்  வசம்  மொழிபெயர்ப்பு முயற்சிக்காக   சென்றிருப்பதாகவும்  விரைவில்   சிங்களப்பிரதி வெளியாகவிருப்பதாகவும்  தகவல்  வெளியாகியிருக்கிறது.  தர்மசிறி பண்டாரநாயக்காவும்  முற்போக்காளர்.     இவருடைய   படங்களுக்கு சர்வதேச   விருதுகளும்  கிடைத்துள்ளன.   பல  நாடகங்களையும் இயக்கியுள்ளார்.
தமிழினி  தடுத்துவைக்கப்பட்டிருந்த  காலத்தில்  நாடெங்கும்  அவர் குறித்து   பலதரப்பட்ட  அவதூறு  பிரசாரங்களும்  பரவியிருந்தன. அவர்   விடுதலையானதும்  வடமாகண  சபைத்தேர்தலில் நிற்கப்போகிறார்  என்றும்  கதையளந்தார்கள்.
புனர்வாழ்வு   முகாமிலிருந்து  ஒரு  சுற்றுலாவுக்கு  கொழும்புக்கு அவர்   அனுப்பிவைக்கப்பட்டபோது,   ஒரு  அமைச்சர்  அவரிடம் அரசியலுக்கு  வாருங்கள்  என்றும்  அழைத்திருக்கிறார்  என்ற செய்தியையும்  கூர்வாளின்  நிழலில்  நூலில்  காணமுடிகிறது.
தன்மீது   சுமத்தப்பட்ட  பழிகளை  துடைத்தெறியவேண்டும்  என்ற எண்ணமும்   அவருக்கு  இருந்திருக்கலாம்.   அதனால்  தன்னைப்பற்றி பெரும்பான்மை   இனம்  கொண்டிருந்த  பொதுவான  கருத்தியலுக்கு பதில்   வழங்குவதற்கு  அவர்  விரும்பியதுதான்,   இன்று  தமிழ்  ஈழ உணர்வாளர்களின்   வயிற்றில்  புளியைக்கரைத்துவிட்டது.
சிங்களத்தில்  இந்நூல்  வெளிவந்தால்  அது  ஈழப்போராட்டத்தையே கேள்விக்குள்ளாக்கிவிடும்   என்று  இன்றும்  ஈழக்கனவுடன்,   முன்னாள் போராளிகளுக்காக   எதுவும்  செய்யாமல்   போர்  முடிந்து  எழு ஆண்டுகளாகப்போகும்   சூழலிலும்  தமது  தாயகத்தின்  பக்கம் எட்டியும்   பார்க்காமல்,   முகநூல்களில்  தமது  பொச்சரிப்பை உமிழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
சிங்கள  மொழிபெயர்ப்புகளை  தீண்டத்தகாத  பண்டமாக  பார்த்து அவற்றில்   சரக்குத்தேடும்  தரப்பினர்  சகோதர  இனத்தை விரோதியாகவே  தொடர்ந்தும்  பார்க்கின்றனர்.   இந்நிலைதான் சிங்களத்தீவிரவாதிகளிடமும்   இருக்கிறது.
இரண்டு   தரப்பு  இனவாதங்களும்  தீவிரவாதங்களும்தான்  முடிவில் எமது   தேசத்தை  அழிவைநோக்கி  தள்ளிச்சென்றன.
-----------------
இன்றைய  சம்பவம்  நாளைய  வரலாறு  என்போம்.   தமிழினி  தமிழ் ஈழ   விடுதலைப்போரில்  சாவின்  வாசல்களை  சந்தித்து திரும்பியிருந்தமையினால்,   தன்னைப்போன்று  அந்த  வாசலுக்கு தள்ளப்பட்ட   ஆயிரக்கணக்கான  இளம்  தளிர்கள்  குறித்து  உருக்கமாக  பதிவுசெய்துள்ளார்.
(சைனா கெய்ரெற்சி. (China Keitetsi) எழுதிய குழந்தைப்போராளி புதினத்தை வாசித்துப்பாருங்கள்)Junius_Richard_Jayawardana
தோல்வியிலிருந்துதான்  பாடம்  கற்கவேண்டும்.  அதனால்தான்  அன்று   விஜேவீராவின்  வாக்குமூலத்தை  புலிகள்  ஆராய்ந்தனர்.  விஜேவீரா  தாம்  சந்தித்த  தோல்வியை  சுயவிமர்சனத்துக்குட்படுத்தி ஜனநாயகப் பாதைக்குத்   திரும்பி  கட்சியை  வளர்த்து  பதிவுசெய்து மாவட்ட  சபைத்தேர்தல்  முதல்  ஜனாதிபதித்  தேர்தல்வரையில் சந்தித்தார்.
அவர்   ஜே.ஆரை  எதிர்த்து  போட்டியிட்டபோது,   கொப்பேகடுவ ஸ்ரீலங்கா  சுதந்திரக்கட்சியின்  சார்பில்  போட்டியிட்டு  இரண்டாம் இடத்தையும்   விஜேவீரா  மூன்றாம்  இடத்தையும்  பெற்றிருந்தனர். இடது சாரித்தலைவரும்  முன்னாள்  அமைச்சருமான  கொல்வின் ஆர் டி. சில்வா   நான்காம்  இடத்திற்கு வந்தார்.
அந்தத்தேர்தலில்  குமார்  பொன்னம்பலமும்  போட்டியிட்டார். இதனை   பின்னாளில் (2015 இல் ) குருநாகல்  மாவட்டத்தில்  போட்டியிட்ட   சிவாஜிலிங்கத்துடன்  ஒப்பிடலாம்.
கொல்வின்,   ஜே.ஆரின்  பால்யகால  நண்பர்.   தேர்தல்  முடிவுகள் கொழும்பு   நகரசபை  மண்டபத்தில்  அறிவிக்கப்பட்டபொழுது,   ஜே.ஆர்.  நாட்டு  மக்களுக்கு  நன்றிதெரிவித்து  பேசியதையடுத்து, அவர்  அருகில்   நின்றவாறு   தமக்கு  வாக்களித்த  மக்களுக்கு நன்றிதெரிவித்தவர்  கொல்வின்.
கொல்வின்   பெற்ற  வாக்குகளை  விட  விஜேவீரா  பெற்ற  வாக்குகள் இரண்டு   மடங்கு   அதிகம். அவ்வேளையில்   பிரபல  கேலிச்சித்திரக் கலைஞர்  விஜேசோமா ஒரு  கேலிச்சித்திரம்  வரைந்தார்.
ஜே.ஆர்.  இடையில்   கறுப்பு பட்டி  அணிந்து  கராத்தே   அடிக்கிறார். தரையில்  கொப்பேகடுவ,  விஜேவீரா,   கொல்வின்,  குமார் பொன்னம்பலம்   வீழ்ந்து  கிடக்கின்றனர்.   அவர்களின்  அருகே   ஒரு மரத்தின்  பின்னால்  மறைந்து  நிற்கும்  ஒரு  புலி  பதுங்கியிருந்து அனைத்தையும்    பார்த்துக்கொண்டிருக்கிறது.
அந்தப்புலி  - பின்னர்  பாய்ந்தது  என்பது  வரலாறு.   அந்தப்புலிக்கு  காமினி திசாநாயக்கா   வரையில்  பலரும்  பலியானதுடன்,   பிரேமதாசா   மற்றும்  அமிர்தலிங்கம்,   ரஜீவ் காந்தி  உட்பட  புலிகளின் தளபதி    மாத்தையாவும்   பலியாகினார். சந்திரிக்கா   ஒரு  கண்ணை   இழந்தார். ஜே.ஆர். அரசியலிலிருந்து  ஒதுங்கி  இயற்கை  எய்தினார்.
விஜேவீரா,  1971  இல்  தோல்வியடைந்து   1978   இல்  சிறையிலிருந்து மீண்டு  ஜனநாயகப்பாதைக்கு   வந்திருந்த  நிலையில்  1983 இனக்கலவரத்தை   ஜே.ஆர்.  தந்திரோபாயமாக  இடதுசாரிகள்  மீது சுமத்தியதனால்   விஜேவீராவும்  அவருடைய  தோழர்களும் தலைமறைவாகினர்.
இந்நிலையில்   லயனல் போப்பகே   சிறைவைக்கப்பட்டு  பின்னர் விடுதலையானார். ஜே.ஆர். எதிர்பார்த்தது  நடந்தது.   தலைமறைவில்  இயங்கும் இயக்கங்கள்   மீண்டும்   கிளர்ச்சி  செய்யும்  என்ற  எதிர்பார்ப்பு அவரிடம்  இருந்தது.   அதற்கான  ஒரு  சந்தர்ப்பத்தை  அவரே இந்தியாவுடன்   செய்துகொண்ட  ஒப்பந்தம்  மூலம் உருவாக்கிக்கொடுத்தார்.
விஜேவீரா  குடும்பத்துடன்  கைதானார்.   பின்னர்  அவரும்  உபதிஸ்ஸ   கமநாயக்காவும்  வேறு  வேறு  சந்தர்ப்பங்களில் சுட்டுக்கொல்லப்பட்டு   எரிக்கப்பட்டனர். பீனிக்ஸ் பறவை போன்று   மக்கள்  விடுதலை  முன்னணி   மீண்டும் எழுந்தது.    இன்று  பிரதான  எதிரணியாக  வளர்ந்துள்ளது.
காரணம் -  வரலாறு  கற்றுத்தந்த  பாடம்தான்.
இவர்கள்   தமது  தலைவர்  மறைந்துவிட்டதை  ஏற்றுக்கொண்டு முன்னைய  தோல்விகளையும்  ஒப்புக்கொண்டு  மக்களிடம்  திரும்பி வந்தனர்.
தவறுகளிலிருந்து  பாடம்  கற்றால்தான்  முன்னேற  முடியும். நோயிலிருந்துதான்  மருத்துவ  சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
தமிழினி   தனது  நூலில்  அதனைத்தான்  செய்திருக்கிறார். இன்றுவரையில்  தமது  தலைவர்  மீண்டும்  வருவார்  என்று கிணற்றுத்தவளைகளாக   கத்திக்கொண்டிருப்பவர்களின்   முடிவு இறுதியில்   மாரிகாலத்தவளைக்கு  ஒப்பானதாகத்தான்  அமையும்.
உணவு  தொடர்ச்சியாக  ஜீரணமாகாவிட்டால்  அதற்குரிய சிகிச்சையை   பெறல்வேண்டும்.   அதுபோல்  உண்மையை ஜீரணிக்கமுடியாதுபோனால்,    உளவியல்   சிகிச்சைக்கு ஆளாகவேண்டும்.
----------
ஈழவிடுதலைப்போராட்டத்தில்   கிடைத்த  மூன்று அரியசந்தர்ப்பங்களை  தவறவிட்ட   நிகழ்சThamilini Book்சிகள்   தமிழினியின் நூலில்   தெரிகிறது.   தனது  தந்தையை  ஒரு  விபத்தில்  இழந்தவர். சகோதரிகள்   இருவரும்  வீட்டில்  எவருக்கும்  தெரியாமல் மட்டுமல்ல   தமக்குள்ளும்  மறைத்துக்கொண்டு  போர்க்களத்தின் முகாமுக்கு   பயிற்சிக்கு  வந்திருக்கின்றனர்.   தங்கையை பறிகொடுக்கிறார்.   சகபோராளிகளை  கண்முன்னே   இழக்கிறார்.
கௌசல்யனுடன்  புறப்பட்ட  பயணத்தில்  மயிரிழையில்  தப்புகிறார். சுமார்   18   வருடங்கள்    அர்ப்பணிப்புடன்    இணைந்திருந்த போராட்டம் இறுதியில்   அர்த்தமற்ற  போர்  என்ற  முடிவுக்கு  வருகிறார். இந்தப்போரில்  புலிகள்  ஒருவேளை   வெற்றிபெற்றிருந்தால்,   இந்த நூலை   தமிழினி  எழுதியிருக்கமாட்டார்.   இன்று  தமிழினி  அமளியும் தோன்றியிருக்காது.   ஆனால்,  அவர்கள்  எதிர்பார்த்திருந்த  தமிழ் ஈழம்  அவர்கள்  தலைமையில்  எப்படி  இருந்திருக்கும்  என்று கற்பனைசெய்து  பார்த்தால்  நாம்  மற்றும்  ஒரு   வரலாற்றைத்தான் தரிசித்திருப்போம்.
தமிழினியின்  நூலில்  அவருடைய  வெலிக்கடை  சிறை அனுபவங்கள்   முக்கியமானவை.   அதனைப்படித்தபொழுது புஷ்பராணியின்  அகாலம்  நூலும்  கிரண்பேடியின்  நான்  துணிந்தவள்  நூலும்  நினைவுக்கு வந்தன. திகார்   சிறையில்  நிலவிய  சீர்கேட்டை  களைந்து  அதனை  மறுசீரமைக்க  கிரண்பேடி  கடுமையாகப்பாடுபட்டார்.    அங்கிருந்த போதை  வஸ்து  பாவனையாளர்களை  திருத்துவதற்கு  அவர் மேற்கொண்ட  முயற்சிகளினால்  அங்கு  கைதிகள்  மத்தியில்  ஒரு தேவதையாகத்தான்    பார்க்கப்பட்டார்.
தமிழில்   மாத்திரம்  இதுவரையில்  15   இற்கும்   மேற்பட்ட மறுபதிப்புகளை   அந்த  நூல்  கண்டுவிட்டது.   முதலில்  ஆங்கிலத்தில்   வெளியாகி  புகழ்பெற்றதையடுத்து  தமிழுக்கு  வந்தது.
இன்று   இலங்கையில்  சிறைச்சாலைகள்  மறுசீரமைப்பு  அமைச்சர் ஒரு தமிழர்.   இன்றும்  இலங்கை   சிறைகளில்  அரசியல்கைதிகள் போதை  வஸ்து  கடத்தல்காரர்கள்  மத்தியில்தான் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில்  அன்றாடம்  பத்திரிகைகளைப் புரட்டினால்  போதை வஸ்து  கடத்தல்  சம்பந்தப்பட்ட  செய்திகளும் -  இந்த  வர்த்தகத்தில் ஈடுபடும்  பாதாள  உலகக்கோஷ்டிகள்  பற்றிய  செய்திகளும்  அவை மேற்கொள்ளும்   துப்பாக்கிச்சமர்கள்  பற்றிய  செய்திகளைத்தான் காணமுடிகிறது.
முன்னர்  வடபிராந்தியக்கடலில்  ஆயுதங்கள்தான்  வந்தன.   இன்று கேரளகஞ்சா    வந்துகொண்டிருக்கிறது. தமிழினியின்   நூலில்  சொல்லப்பட்டுள்ள  பல  விடயங்கள்  சிங்கள மக்களுக்கும்   ஆங்கில  வாசகர்களுக்கும்  தெரியவேண்டும். முக்கியமாக    சிறைச்சாலை   மறுசீரமைப்பு  அமைச்சர் தெரிந்திருக்கவேண்டும்.
சிறை   அதிகாரிகளின்  மத்தியில்  விழிப்புணர்வை   ஏற்படுத்த நடவடிக்கை   தேவை. அதனால்   தமிழினியின்  நூல்  சிங்களத்திலும்  ஆங்கிலத்திலும்  வரவேண்டும்.
புலிகளின்  புனிதப்போராட்டத்தை   தமிழினி  கொச்சைப்படுத்திவிட்டார்   என்று  புலன்பெயர்ந்து  புலம்புபவர்கள் இதுவரையில்   அந்த  முன்னாள்  போராளிகளுக்கு  எதனை  புனிதமாகச்செய்துவிட்டார்கள்   என்பதை  தமது  மனச்சாட்சியை உலுக்கிக்கேட்டுக்கொள்ளவேண்டும்.
-----------------------
இலங்கையில்  மொழிபெயர்ப்பு  முயற்சிகள்  பற்றியும் அவுஸ்திரேலியாவில்   மொழிபெயர்ப்பு  முயற்சிகள்  பற்றியும்  வேறு வேறு   சந்தர்ப்பங்களில்  இரண்டு  கட்டுரைகள்  எழுதியிருக்கின்றேன். அதில்   முதலாவது  கட்டுரை  சில  ஆண்டுகளுக்கு  முன்னர் வெளிவந்து   ஆங்கிலத்திலும்  சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்ட்டதுடன்,  இலங்கையில்  ஒரு  சிங்கள  இதழிலும் வெளியாகி,   முன்னாள்  அமைச்சர்  வாசுதேவ  நாணயக்காரவிடம் சேர்ப்பிக்கப்பட்டதாக   ஒரு   நண்பர்  தகவல்  தந்திருந்தார்.
இலங்கையில்   தெனகமஸ்ரீவர்தன,   மடுள்கிரியே  விஜேரத்தின,   உபாலி லீலாரத்தின,    திக்குவல்லை  கமால்,  ஏ.சி. எம். கராமத், சுவாமிநாதன்   விமல்,   முகம்மட்  ரசூக்,   ஜி.ஜி. சரத் ஆனந்த,  அதாஸ் பியதஸ்ஸி ,    இப்னு அசூமத்  ஆகியோர்  பல  தமிழ்ப்படைப்புகளை சிங்களத்திற்கு    மொழிமாற்றம்  செய்துள்ளனர்.
இவர்களின்    உழைப்பின்  பெறுமதி  தெரியாமல்  பிதற்றுபவர்களும் எம்மத்தியில்    இருக்கின்றனர்.
மல்லிகை ஜீவா,   ஞானம்  ஞானசேகரன்,   தெளிவத்தை  ஜோசப், சடகோபன்,    செ. கணேசலிங்கThamizini_Sivakamyன்,   நீர்வை பொன்னையன், உதயணன், சி.வி.வேலுப்பிள்ளை - செங்கைஆழியான்,    முருகபூபதி,   திக்குவல்லை கமால்,  மு. சிவலிங்கம்,    மலரன்பன்,   நடேசன்,   டென்மார்க்  ஜீவகுமாரன்  உட்பட பலருடைய   நூல்கள்  சிங்களத்தில்  கிடைக்கின்றன.
தமிழகத்தின்  ஜெயகாந்தனின்  அக்கினிப்பிரவேசம்,   புதுமைப்பித்தனின்  சாபவிமோசனம்  இரண்டு    பெண்களின்   (கங்கா - அகலிகை )   துயரம்  பற்றி  பேசிய  பிரபல்யம்  பெற்ற  கதைகள். இன்று    அவையும்  சிங்களத்தில்  கிடைக்கின்றன.  பாரதியின்   கவிதைகள்  பாரதியின்  வரலாறு  என்பனவும்  சிங்கள வாசகர்களுக்கு   அவர்களின்  மொழியில்  கிடைத்துள்ளது.
இந்த   முயற்சிகளின்  வரிசையில்  நாளை   தமிழினியின்  நூலும் வெளிவரவிருக்கிறது.

Source:  http://www.thenee.com/240316/240316.html

No comments:

Post a Comment

Modi government seeking to tighten India's repressive film censorship regime- By Yuan Darwin

 India’s Hindu supremacist Bharatiya Janata Party (BJP) government is seeking to tighten the country’s already intrusive and pervasive film ...