ஒன்றிரண்டு தடவையே அவர் குரலைக்
கேட்டதுண்டு. அவரது முகம் நிழற் படங்களாகப் பார்க்கக் கிடைத்தது இந்த ஜனவரி முதல்
தான். முகத்தைக் காட்டியபோதுதான் தனது பெயர் தமிழினி ஜெயக்குமரன் என்றும் தானொரு
ஈழப் போராளி என்றும் சொன்னார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் முகநூல்-வழியாகப் பல
தடவை உரையாடியிருக்கிறோம். உரையாடல் ஆரம்பித்தால் ஒருமணிநேரத்துக்குமேல் போகாது.
அதற்கு முன் அவரது முகநூல் கணக்கிற்கான பெயர் வேறொன்று. அதுவும்கூட அவரது
உண்மைப்பெயரல்ல. பெற்றோர் வைத்த பெயர் சிவகாமி. அந்தப் பெயரில்தான் இணையவழிக்
கடிதத்திற்கான கணக்கு வைத்திருந்தார். அவரது கவிதைகள், சிறுகதைகளையெல்லாம்
அதன் வழியாகவே எனக்கு அனுப்பிவைப்பார். வாசித்து, விவாதித்து, மாற்றி எழுதி
அனுப்பிய அவர் கதைகளை இங்குள்ள இடைநிலைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தேன்.
அம்ருதாவில் மட்டுமே ஒரு கதை அச்சானது. உயிர்மையில் வெளிவரும் பட்டியலில்
இருக்கிறது என மனுஷ்யபுத்திரன் சொன்னார். இதுவரை வரவில்லை. ஒருவேளைப் புலிகளின்
முக்கியப் பொறுப்பில் இருந்தவர் என்று தெரிந்திருந்தால் கதைகள் அச்சாகியிருக்கலாம்.
அதே காரணத்துக்காக அச்சாகாமலும் போயிருக்கலாம்.
என்னோடு ரொமீலாவாகவும், தமிழினி ஜெயக்குமரனாகவும் அவர்
நடத்திய உரையாடல்கள் எங்கள் இருவருக் கிடையிலானவை என்றாலும் பொதுவெளியில் வெளிப்
படுத்தப்படவேண்டியவை. அந்தரங்கமானவை எதுவுமில்லை. ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறும்
சமூக உயிரியின் மாற்றம் பற்றிய பாடம் இந்த உரையாடல்கள். ஈழப்போரின் பின்னணியில்
சாட்சியங்களாகக் கூட அமையலாம். அதனாலேயே இவற்றைத் தருகிறேன்.
அவர் புலிகள் இயக்கத்தோடு தொடர்புடையவர் என்பது
தெரியாத தொடக்கநிலை உரையாடல் ஒன்றில், “ ஈழத் தமிழர்களின் அரசியல் -
புலிகளின் போர்நிலைப்பாடு எனக்கு உடன்பாடு கிடையாது. அதிலும் இந்தியாவைப்பற்றிய
புரிதல் ஈழப்போராட்டக்காரர்கள் ஒருவருக்கும் இல்லை என்பது என் நிலை. இதுபற்றிச்
சில கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு உரையாடலைத் தொடர்ந்தேன்.
தேர்தல் நடந்து திரு விக்கினேஸ்வரன் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நேரம் அது: அந்த
உரையாடல் இப்படி நடந்தது.
அவர்:
நான் மிக இளம் வயதில் புலி அரசியலின் வழி சென்றவள்தான்.
ஆனால் அந்த வன்முறை உண்மையான விடுதலையை தராது என 2009 க்குப் பின் முற்றிலுமாக உணா்ந்து
விட்டேன், ஆனாலும் தமிழ் அரசியல் வாதிகள், படித்தவா்கள் இப்போதும் தேசியம் பேசிக் கொண்டு எதிர்ப்பு அரசியல் செய்வது
எனக்கு உடன் பாடில்லை. இந்நிய பிரதமரின் பதவியேற்பு நிகழ்வுக்கு, இலங்கை அதிபா் வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு கொடுத்தும் அதை ஒரு இணக்க
அரசியலுக்கான ஆரம்பமாக எடுததுக் கொள்ளாமல் சிறு பிள்ளைத்தனமாக தட்டிக் கழப்பது
எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது.
நான்: எதிர்ப்பு அரசியல் முடிவுக்கு வர வேண்டிய கட்டம்
எப்போதோ வந்து விட்டது.உலக அரசியலில் ஆதரவற்றவர்களாக ஈழத்தமிழர்கள் ஆகி
விட்டார்கள். உதிரிகளாகத் தொண்டு நிறுவனங்கள் தரும் ஆதரவு அரசியல் விடுதலைக்கு
உதவாது. நலத்திட்டங்கள், உதவிகள்
கிடைக்க மட்டுமே பயன்படும்
அவர்:
அந்த உண்மை தலைகனம் பெருத்தவா்களுக்கு புரிவதில்லை. இனியும்
ஏழைகளின் பிள்ளைகள் சாக வேண்டும் அந்த இரத்தத்தில் தாம் குளிர்காய வேண்டுமென் றெ
விரும்புகிறார்கள். இன்று இவ்விடம் பற்றி மிகவும் கவலையுடன இருக்கிறேன்.
நான்:
அகதிகளாக ஐரோப்பாவுக்குப் போனவர்கள் ஒருவரும் இலங்கை
திரும்ப மாட்டார்கள்; ஆனால்
ஈழநாடு வேண்டும் என்று பண உதவி செய்கிறார்கள்
அவர்:
உண்மைதான், அத்துடன் இவா்கள் ஒன்றை புரிவதில்லை. எமது
பிரச்சனையை சிங்கள மக்களுக்கு எவருமே சொல்லுவதில்லை, உண்மையில்
அந்த மக்கள் அடிப்படையில் மிகவும் அன்பும் இரக்கமும் கொண்டவா்கள் சிறையில்
எத்தனையோ சிங்கள பெண்களுடன் பழகியிருக்கிறேன். அவர்களுக்கு பிரச்சனை என்னவென்றே
தெரியாது.
இந்த உரையாடலில்கூட அவர் தமிழீழப் போராளிகளில்
முக்கியமான தலைவர்களில் ஒருவர் என்பதை என்னிடம் சொல்லவில்லை. அதற்கு முன்பு
என்னோடு பேசியபோது அவரது இளமைக் காலம் பற்றிச் சொல்லியிருக்கிறார். அப்போது அவரது
பெயர் ரொமீலா ஜெயன்.
நான்: நீங்கள் என்ன பட்டம் படித்தீர்கள்?
அவர்:நான் எந்த பட்டமும் படிக்குமளவு எனது நாட்டு யுத்தம்
இடமளிக்கவில்லை ஜயா. கா.பொ தா உயா்தரம் படித்தேன் பரீட்சை எழுத முடியவில்லை.ஆனால்
நிறைய வாசிக்க விருப்பம்.
நான்: பட்டம் இருந்தால் தொடர்ந்து படிக்கும் வாய்ப்பை
உருவாக்கலாம் என நினைத்தேன். வாசிப்பதே போதும் தான். பட்டம் இருந்தால் நாம்
வாசிப்பதோடு மற்றவர்களையும் வாசிக்கச் செய்யலாம். வாசித்தை பகிர்ந்து கொள்ள
முயலுங்கள். எல்லாருக்குமாக இல்லையென்றாலும் நண்பர்களோடு முதலில் கதைக்கலாம்.
பின்னர் பொது வெளிக்குப் போகலாம்
அவர்: பலகலைக்கழகம் சென்று படிக்க வேண்டும் என்பது என்
இளவயதின் இலட்சியம், அது
வெறும் கனவானபோது எனது வாழ்வின் திசைகள் மாறி 20 வருடங்களை
சாவின் விளிம்பில் நடந்து மீண்டும் சமூக வாழ்வுக்குத் திரும்பியுள்ளேன். இதன்
பின்னரே ஜெயன் அவா்களை மணந்தேன், என் கற்றல் மீதான ஆா்வம்
இனனும் அப்படியேதான் உள்ளது. உங்களைப் போன்ற வழிகாட்டிகளின் மூலம் இழந்த கல்வியை
பெற விரும்புகிறேன். பட்டம் தேவையில்லை அறிவையே நேசிக்கிறேன்.
நான்: இது போதும். படிக்க வேண்டும் என்ற ஆசையும்
தீர்மானமும் இருந்தால் போதும். தினமும் வாசியுங்கள். கொஞ்சமாக எழுதி வையுங்கள்.
அப்புறம் அதையே வாசித்துப் பாருங்கள். மற்றவர்களுடையதை வாசிப்பதைப் போல உங்கள்
எழுத்தையும் விலகி நின்று வாசிக்க முடிந்தால் நீங்கள் எழுத்தாளராக ஆகி விட
முடியும். உங்களது 20 ஆண்டு அனுபவம் பல கதைகளைச் சொல்ல வாய்ப்பளிக்கும்
அவர்: ஜயா என்னிடம் உள்ள இரத்தமும்தசையுமான உணா்வுகளை காலம்
இடமளித்தால் எழுத தீா்மானமாகவுள்ளேன், என் துணைவரின் விருப்பமும் அதுவே
மேலும் ஜயா தங்களின் பொன்னான நேரம் இடமளித்தால் எனது முகநுால் பக்கத்தில்
பதிவிலிடும் கவிதைகளை சற்று விமா்சியுங்கள் அது என்னை வளா்க்க உதவியாக இருக்கும்,
நான்:நேரம் ஒதுக்கி வாசித்துச் சொல்கிறேன்
முகநூலில் அவர் கவிதைகள் பற்றி ஒருமுறை விவாதம்
ஒன்றைச் செய்தோம். அந்த நேரத்தில் ஈழத்தில் நடந்த பயங்கரவாதம் பற்றி முகநூலில்
நடந்த ஒரு விவாதத்தைச் சுட்டிக்காட்டி அவரது கருத்தை நான் கேட்டேன்.
நான் : சோகமும் வலியும்
நிச்சயமின்மையுமான வாழ்க்கையைப் பேசும் உங்கள் கவிதைகளைத் தொடர்ந்து வாசிப்பதே
சிரமமாக இருக்கிறது; ஆனால்
நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்
அவர்: எனக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை
எங்களுக்கேற்பட்ட அனுபவங்கள் இனி எவருக்கும் ஏற்படக்கூடாது. உயிர் கருகும்
வேதனையின் வலி கொடியது, என்னைப்
பொறுத்தவைரை இனி அது எதிரிக்கும் ஏற்படக்கூடாது.
நான்: ஆம். அதனையே நானும் விரும்புகிறேன்
அவர்: இன மத மொழி இப்படியான வேறுபாடுகளை களைந்து மனித
இனத்தை ஒண்றினைக்கும் போராளியாக தொடர்ந்தும் போராட விரும்புகிறேன்.
நான்: பயங்கரவாதம் பற்றிய இந்தக் குறிப்பு பற்றிச்
சொல்லுங்கள் -
அவர்: மனசுக்குள் கனமாக சுழன்று கொண்டிருக்கிற விடயத்தை
பற்றி திடீரென கேட்டு திறமையான வாத்தியார் என்பதை நிரூபித்து விட்டீர்கள் சார், கொஞ்சம்
பொறுங்கள் ஆசுவாசப்படுத்திக் கொண்டு சொல்லுகிறேன்.
நான்: உங்கள் நாட்டை மனதில் வைத்தும் எழுதப்பட்டது. அது
உடனே புரிந்து விட்டது. உங்கள் நண்பர்களோடு முடிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பகிர்வதால் சிக்கல் என்றால் வேண்டாம்
அவர்: அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சியாக வன்முறை
உருவாகிறது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இது அன்புக்கான அங்கீகாரம் தொடங்கி
அதிகாரம் வரை நீடிக்கிறது. ஆனாலும் எனது அனுபவத்தில் வன்முறை தீர்க்கமான முடிவைத்
தராது. பழி வாங்கல்களாகவே திசை மாறிச் சென்று விடும். மனிதனின் உணா்ச்சி வசப்பட்ட
நிலையும், விரக்தியுமே
வன்முறை. எந்த பயங்கரவாதியும் ஆழ் மனதில் அதனை வெறுப்பவனாகவே இருப்பான்
சூழ்நிலைகள் அவனை கைதியாக்கி இயக்கும் . அவனுடன் அல்லது அவா்களுடன் உள்நோக்கங்கள்
இன்றி உண்மையான புரிந்துணா்வுடன் அணுகும் போது அவனின் சக்தி பயனுள்ள போராட்ட
சக்தியாக மாறும் அதற்குத்தான் எவருக்கும் மனமோ, நேரமோ
இல்லையே சார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் கதைகள்
எழுதுவதாகவும் சொன்னார். அவர் கதைகள் எழுத முயன்ற காலகட்டமும், திரும்பத்திரும்ப
எழுதிப் பார்த்ததும் அது பற்றிய உரையாடல்களும்
முக்கியமானவை. அந்த உரையாடல்களில் அவரது சிறை வாழ்க்கையின் குரூரமும் போரின்மீது
கொண்டிருந்த காதல் கொஞ்சங்கொஞ்சமாக விலகியதும் வெளிப்பட்டன. எழுத்துத்துறையில்
ஈடுபட்டுப் பழையனவற்றைத் தீவிரமாகப் பதிவுசெய்துவிட வேண்டுமென்ற ஆர்வம் இருந்தது.
எழுத்தாளராக ஆகவேண்டுமென்ற ஆசையில் உரையாடிய அவரோடு நடத்திய உரையாடல்கள் எனக்கே
திருப்தியளித்த உரையாடல்கள்.
அவர்; நான் எழுதிய சிறுகதை ஒன்று தங்களின்
விமா்சனம், திருத்தங்களுக்காக அனுப்ப விரும்புகிறேன் சார்
நான்; அனுப்புங்கள். படித்துவிட்டுச் சொல்கிறேன்
அவர்:தங்களின் ஈ மெயில் முகவரிக்கு அனுப்புகிறேன்.
இருக்கிறதா?
நான்: ramasamytamil@gmail.com
அவர்: இதைவிட இன்னும் இரண்டு கதைகள் உள்ளன. சில
திருத்தங்களை செய்து விட்டு அனுப்புகிறேன் சார். தங்களுடைய பொன்னான நேரத்தை
முகமறியாத இந்த மாணவிக்கும் செலவழிப்பதற்காக மிகவும் நன்றிசார். நான் ஒரு ஏகலைவி
நான்: அடிப்படையில் நான் கதை விரும்பி. கதைகள் எழுதும்
மாணவிகளை ரொம்பப் பிடிக்கும்
அவர்: சரி ஐயா, இந்த கதையில் வருபவை உண்மையான
சம்பவங்கள்
நான்: அப்படியானால் கவனமாக எழுதியிருப்பீர்கள்
அவர்: கட்டுரை போல அமைந்து விட்டதோ தெரியவில்லை
நான்: படித்துவிட்டுச் சொல்கிறேன். அப்படி இருந்தால் என்ன
செய்யலாம் எனவும் விவாதிக்கலாம்
நான்: வணக்கம். கதையை வாசித்துவிட்டேன். இருக்கும்
அமைப்பில் பெரிய திருத்தங்கள் எதுவும் தேவைப்படாது. ஆனால் கதைசொல்லி வெறும்
கதைசொல்லியாக மட்டும் இருக்க வேண்டுமா? என்றொரு கேள்வி இருக்கிறது எனக்கு
அவர்:புரிகிறது ஐயா கதை சொல்லியின் பக்கத்தை விபரிப்பதானால்
அது அரசியல் அல்லது இன முரண்பாடு பற்றிய பிரச்சனைகள் எதையும் தொடுவதாக அமைந்து
விடும் எனப்பயப்படுகிறேன்.
நான்: அப்படி இல்லாத கதைசொல்லி அந்தப் பெண்ணின் நிலைக்காக
ஏன் பச்சதாபம் கொள்ள வேண்டும். அதற்கான நியாயம் வேண்டுமே?
அவர்: ஒரு அரசியல் காரணத்திற்காக சிறைப்பட்டிருக்கும்
கைதிக்கு மனிதாபிமானமும், மனித
சமூகம் பற்றிய கவலையும் இருக்க முடியாதா?
நான்: அவர் அரசியல் கைதி என்பது திட்டவட்டமாக இல்லை.
பயங்கரவாத அடக்குமுறைச் சட்டத்தின் கீழ் கைதாகியிருக்கிறாள் என்ற தகவல் மட்டுமே
உள்ளது. அதுகூட பொய்யாக இருக்குமோ என்று தோன்றும்படியான குறிப்பே உள்ளது
அவர்: உண்மையை சொல்ல வேண்டுமானால் எமது பிரச்சனையை மட்டும்
மையப்படுத்திப்பார்க்கும் தன்மை விடுத்து பரந்து பட்ட பார்வை விரிந்த இடம்
அங்குதான்.
நான்: கதைசொல்லியை வெறும் கதைசொல்லியாகக் காட்டாமல் அவர்
ஒரு அரசியல் கைதி என்பதைக் காட்டும் ஒரு நிகழ்வை நினைவில் கொண்டு வந்தால் கூடப்
போதும்.
அவர்:
ஐயா அங்கு அரசியல் கைதிகள் என நாமதான் சொல்லிக் கொள்ளுவோம், பயங்கரவாத
கைதிகள் எனவே நடத்தப்படுவோம்
நான்: அப்படி நடத்தப்படுவதற்கான நியாயம் இல்லாமலேயே
அப்படியான சிறைக்குரூரங்களை அரசிடமிருந்தும், சிறையிலிருக்கும்
தாதாக்களிடமிருந்தும் பெறும் நிலையைச் சொல்லிவிட்டு, அப்படியான
அறியாமையில் உழலும் அந்தப் பெண்ணின் நிலைக்காக இரங்கும் நபராகக் கதைசொல்லியை
எழுதினால் நன்றாக இருக்கும்
அவர்: அப்படி நான் ஒரு அடையாளத்தை விரிவாக காட்டினால், இன அரசியல்
வந்தவிடாதா? உண்மையில் இது எப்படித்திரும்பினாலும்
இடிக்கின்ற ஒரு விடயமாகவே எனக்கு பட்டது ஐயா.
நான்: உங்கள் சூழலில் எங்கே சுத்தினாலும் இன அரசியலில்
நுழையும் வாய்ப்பிருக்கிறது புரிகிறது
அவர்: சிறையில் போதை உலகம் மிகவும் பயங்கரமானது, அதில் ஒரு சிறு
துளியை என்றாலும் வெளிக்காட்டுவதாக கதை அமைய வேண்டும் என நினைத்தேன். இதில் வரும்
ஒவ்வொரு பாத்திரங்களுமே உண்மையானவைகள் ஐயா
அவர்: கதையை வாசிக்கும் ஒருவருக்கு கொஞ்சமாவது தாக்கம்
ஏற்படுத்துமா? எனது
எழுத்து சரிவர உணர்வுகளை வெளி்க் கொண்டு வருகிறதா ஐயா
நான்: அந்த வகையில் போதுமான விவரங்களும் விவாதங்களும்
உள்ளன. சுதர்சினி என்ற தலைப்பும், அவளது நிலைக்காகப் பரிதாபப்படும்
கதைசொல்லியும் அதிகம் கவனிக்கப்படும் விதமாகக் கதை உள்ளது.
போதையின் விளையாட்டும் விதிமீறல்களும்
அதிகமாக்கப்பட்டிருக்கலாம். கதைசொல்லியின் இடம் குறைக்கப்பட்டிருக்கலாம்
கதைசொல்லியின் உணர்வுதான் கதாசிரியரின் உணர்வு என்பதாகக்
காட்டுவதில் இன்னும் கவனம் வேண்டும்
அவர்: ஐயா இது கொஞ்சம் புரியவில்லை
நான்: கதைசொல்லி அரசியல் கைதி; ஆனால் அவளிடம்
தன்னிலை அறியாத - போதையில் உழலும் பெண்ணின் அப்பாவித்தனத்தைக் கரிசனத்தோடு
கவனிக்கும் ஈடுபாடும் கொண்டவள் - என்பதாக எழுதும்போது கதாசிரியர் அந்தக்
கதைசொல்லிதான் கதாசிரியர் என்பதும் வெளிப்படும்.
இருக்கும் கதையே சிறந்த கதையாகவே இருக்கிறது. கொஞ்சம்
கூடுதல் அழுத்தத்திற்காகவே இதையெல்லாம் சொன்னேன். சில எழுத்துப்பிழைகள், சில சொற்கள்
நீக்கம் செய்து வைத்துள்ளேன். அனுப்பி வைக்கவா?
அவர்:மிகவும் நன்றி ஐயா உண்மையில் எனது வாழ்வில் இப்படி ஒரு
சந்தர்ப்பம் அமையுமென நான் நினைத்திருக்கவில்லை.
நான்:அனுப்பி வைக்கிறேன். அத்தோடு இங்கு ஏதாவது பத்திரிகை
அல்லது இணைய இதழ்களில் வெளியிடவும் ஏற்பாடு செய்கிறேன்
அதற்கு உங்கள் விருப்பம்/ அனுமதி தேவை
அவர்:ஐந்து வருடங்களுக்கு முன்பு மண்ணோடு மண்ணாக போயிருக்க
வேண்டியவள். இன்று கூட எனது கணவருடன் பேசிக் கண்ணீர் விட்டபோது, அவர் சொன்னார்
வாழ்க்கையில் எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்கிறது பேராசிரியா் ஐயாவுடன் கதை பற்றி
பேசுங்கள் என்றார். மேலும் கதைக்கு ரோமிலா ஜெயன் என்ற பெயரை போடலாம் ஐயா
நான்:நல்லது. சில நாட்களில் எதில் வரும் என்பதைச்
சொல்கிறேன்.
அவர்: நன்றி ஐயா மேலும் இரு கதைகள் உள்ளன. உங்களுக்கு
சிரமம் கொடுக்கிறேனோ எனத் தெரியவில்லை.
நான்: அனுப்புங்கள். நேரம் கிடைக்கும்போது படித்துவிட்டுச்
சொல்கிறேன். இப்போது கதையை அனுப்பியிருக்கிறேன்
ஆரம்பத்தில் இரண்டு மூன்று கதைகளுக்கே இப்படி
விவாதித்தோம். பின்னர் அவரது எழுத்து சிக்கல் இல்லாததாக ஆகிவிட்டது. தேர்ந்த
எழுத்துக்காரராக ஆகிவிட்டார். தலா இரண்டு கதைகளைத் தீராநதி, உயிர்மை,
அம்ருதா போன்றவற்றிற்கு அனுப்பி வைத்தேன். அம்ருதாவில் மட்டும்
ஒருகதை அச்சானது. மற்றவர்கள் வாசித்தார்களா? என்று
தெரியவில்லை. பின்னர் பௌசர் நடத்தும் எதுவரை இணைய இதழில் அடுத்தடுத்து வரத்தொடங்கின அவரது எழுத்துகள் அவற்றைக்
கவனப்படுத்தி மலைகள். காமிலும் முகநூலிலும் எழுதிய போது விவாதம் நூலாக்கம்
நோக்கிநகர்ந்தது. அதற்கு முன்பு அவர் “ தமிழினி” யாக வெளிப்பட்டதைச்
சொல்லவேண்டும்.
ஈழத்தமிழர் பிரச்சினையில் எனது நிலைப்பாடுகளை முன்
வைத்து நான் எழுதிய முகநூல் கட்டுரை ஒன்றை எழுத்தாளர் தமிழ்நதியோடு இணைத்து
உரையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்தபோது அவராகவே வந்து உள்டப்பியில் உரையாடல்
நடத்தினார். "தமிழ்நதி புலிகளின் ஆதரவாளர்; நான் புலி" என்று சொன்னார்.
அதற்கு முன்பு என்னோடு பேசியபோது இவ்வளவு ஆணித்தரமாகச் சொன்னதில்லை. அந்த உரையாடலை நடத்தியபோதுதமிழினி
ஜெயக்குமரன் என்ற பெயரில் முகநூலுக்கு வந்துவிட்டார்.
அவர்: வணக்கம் ஐயா
நான்: தமிழ்நதி நினைப்பதுபோல் தான் உள்ளதா?
அவர்: உங்களுடைய பதிவு வாசித்தேன் யதார்த்தத்தை புரிய
வைத்திருக்கிறீர்கள். அது செரிமானமாவது மிகவும் கடினம்
நான்: விரும்பினால் கருத்திடலாம். செரிமானத்திற்குப் பலரது
கருத்தும் உதவும்
அவர்: புரிகிறது அதற்கு
முன் நான் உங்களிடம் ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்.
நான்: சொல்லலாம்
அவர்: என்னை அறிந்திருக்கிறீர்களா ஐயா?
நான்: பதிவுகளின் வழியாக அறிந்ததுதான்
அவர்: உங்களுக்கு ரொமீலாவை தெரியமா?
நான்: தோழிதான். அவரது கதைகளை வாசித்திருக்கிறேன். அவரது
கணவர் வழியாகவே அவர் பழக்கம்
அவர்: நான்தான் ஐயா அந்த பெயரில் கடந்த காலத்தில் எழுதி
வந்தேன். எனது பெயரில் அண்மையில்தான் முகநுால் தொடங்கினேன். தங்களிடம் நான்
நிறையவே பேசியிருக்கிறேன். உங்களின் பதிவுகள் எனக்கு பிடிக்கும். எனது உண்மையான
பெயரை தெரியப்படுத்த வேண்டும் எனக் காத்திருந்தேன் இன்று அதற்காகன அவகாசம்
கிடைத்தது. உங்கள் தோழி ரோமீலாதான் தமிழினி. நான் இருபது வருடம் இயக்கத்தில்
இருந்தேன். அரசியல் பெண் போராளிகளுக்கு தலைவியாக பணி செய்தேன். என்னில் ஏதும்
கோபமி்ல்லையே ஐயா?
நான்: அப்படியா? மகிழ்ச்சி. இதில் பாதியை ரொமீலாவாகவே
சொன்னது தானே
அவர்: எனது இதயத்தில் உங்களை எனது ஆசானாக வரித்துக் கொண்டு
விடயங்களை கற்றறிந்து வந்ததால் உண்மை மறைப்பது என் மனதிற்கு உடன்பாடாக
இருக்கவில்லை ஐயா எனது பாதுகாப்பு கருதியே ஆரம்பத்தில் வேறு பெயரில் எழுத
வேண்டியிருந்தது. இப்போது அந்த பிரச்சனை இல்லை.
நான்: அப்படியானால் லண்டன் போவதாகச் சொன்னதும், ஜெயனும்
உண்மைதானே
அவர்: ஐயா எல்லாமே உண்மை எனது பெயர் மட்டும்தான் வேறு
மன்னித்துக் கொள்ளுங்கள்.
அவர்: ம்ம். நல்லது. மன்னிப்பெல்லாம் எதற்கு? போராட்ட
வாழ்க்கையில் மறைப்பதும் வெளிப்படுவதும் தவிர்க்க முடியாதது
அவர்: மிகவும் நன்றி ஐயா உங்களின் புரிந்து
கொள்ளுதலுக்கு
நான்: தமிழ்நதி தீவிரப்புலி ஆதரவாளர். தி.மு.க. வெறுப்பாளர்
அவர்: அவர் ஆதரவாளர்; நான்புலி. ஆனால் இப்போது இல்லை.
நாளாந்தம் மாறிச்செல்லும் அனைத்தையும் அரசியலையும் கூட அவர்கள் ஏற்றுக் கொள்ளத்
தயாராக இல்லை இதற்கான காரணம் ஒருவிதமான கருத்துப் பிடிவாதமே தவிர புத்திஜீவித்தனம்
அல்ல என்பது எனது கருத்து. யதார்த்தம் களத்தின் வழியாகப் புரிந்துகொண்ட
யதார்த்தம்.
போர் அவர்களுக்கு எப்போதும் தேவை, ஒரு கிறிக்கெட்
போட்டியின் ருசி. அதன் நேரடி வலியை அனுபவித்தவனுக்கு போர் எப்போதும் எங்கேயும்
தேவையற்றது.
அவரது எழுத்துக்களை நூலாக்கம் செய்வது தொடர்பான
உரையாடல்களைச் செப்டம்பர் மாதத்தில் -மிக அண்மையில் நடத்தினோம்.
· வணக்கம் ஐயா!
அவசரமாக எனக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது. நான் எழுதியுள்ள புத்தகம் ‘ஒரு
கூர்வாளின் நிழலில்...’ அப்புத்தகத்திற்கு பொருத்தமான அட்டைப்படத்திற்கான நவீன
ஓவியம் பெறக்கூடிய ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்த முடியுமா சார?
· மிகவும் நன்றி, யாரென்று
அறிந்து கொள்ளலாமா?
· பாபு -
காட்சிப்பிழை இதழ் வடிவமைப்பாளர்.
· காலச்சுவடு
கோட்டோவியங்கள் போடும் ஸ்தபதி
· மிகவும் நன்றி
ஐயா அவர்களுக்கு புத்தகம் பற்றிய மேலதிக விபரங்கள் தெரிவிக்க வேண்டுமா?
· ரபீக் - மெடாலிக்
பெயிண்டிங் செய்வார்
· மருதுவிடம் கூட
கேட்கலாம்
· ஓரிரு
வாரங்களுக்குள் செய்து தருவார்களா ஐயா?
· பணம் தரவேண்டும்
· எனக்கு
இவ்விடயங்களில் முன் ஆனுபவம் இல்லை ஐயா சராசரியாக எவ்வளவு கேட்பார்கள்?
· புத்தகம் பற்றி
சுருக்கமாக அனுப்பி வைக்க. நான் பேசி சொல்கிறேன்
· பிறகு பேசலாம்
· ஞானப்பிரகாசம்
ஸ்தபதியுடன் போனில் பேசினேன். புத்தக அளவு, கதைகள், ஒன்றிரண்டு,
என்ன பெயரில் வருகிறது போன்ற தகவல்கள் கேட்டார். முடிந்தால் அவரது
இமெயிலில் அனுப்பிவிட்டுப் பேசுங்கள். முகநூலிலும் இருக்கிறார்
· வணக்கம் ஐயா, ஓவியர்
ஸ்தபதிக்கு முகநுால் நண்பர் வேண்டதலும், எனது செய்தியும்
அனுப்பியுள்ளேன். உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி ஐயா. அவரும் லங்கையராம். பணம்
வேண்டாம் என்று கூறியுள்ளார்.
· வணக்கம் ஐயா, ஆங்கில மொழி
பெயர்ப்பு வேலை நடக்கிறது பெரும்பாலும் அடுத்த மாதமளவில் வேலைகள் முடியும் என
நினைக்கிறேன்.
· நல்லது.
இந்தநேரத்தில் தான் தமிழ்நாட்டு இதழாளர்கள் ஈழம்
சென்று வந்தது பற்றியும் அப்போது உயிரோடு இருந்த திரு தமிழ்ச்செல்வன் பெண்கள்
அணியையும் அதன் முக்கியப்பொறுப்பாளர்களையும் சந்திக்கவேண்டும் எனச் சொல்லி ஏற்பாடு
செய்ததையும் பிரேமா ரேவதி காலச்சுவடில் எழுதியிருந்தது பற்றிய விவாதம் வந்தது.
அதுவரை அவரை அவ்வளவு முக்கியமான இடத்தில் இருந்தவர் என நான் நினைக்கவில்லை.
போராளிகளுக்கான உடையுடன் படம் ஒன்றைக் காட்டியதும் இல்லை. அதுபற்றியும் கேட்டேன்.
· பிரேமா ரேவதியின்
இணைப்பில் எல்லாம் வெளிப்படையாகிவிட்டதே?
· அப்படியா? அது ஒரு துளி.
ஒற்றை வாக்கியத்தில் பதிலளித்துவிட்டு நகர்ந்துவிட்டார். உரையாடல்
தொடர்ந்தது
· ஸ்தபதி படம்
அனுப்பியுள்ளார் நன்றாக வந்திருப்பதாகப்படுகிறது அவரது பக்கத்தில்
பதிவேற்றியுள்ளார்.
எனது புத்தகத்துக்கு தமிழ் நாட்டிலிருந்தும் பயங்கரமான
எதிர்ப்புகள் கிளம்பும் என நினைக்கிறேன்.
· கதைகள்
மட்டுமென்றால் உடனடியாக இருக்காது. கட்டுரை அல்லது அனுபவங்கள் என்றால் எதிர்ப்பு
தீவிரமாக இருக்கவே செய்யும்
நான் அதனை வரவேற்கிறேன். எனது நோக்கம் எவரையும்
புண்படுத்துவது அல்ல எமது சந்ததிக்கு செய்தி சொல்லுவது. தீவிரவாததேசிய காய்ச்சலில்
இருந்து வெளியே வந்து சிந்திக்க வேண்டும்.
· ஆமாம். இப்போது
சொல்லவில்லையென்றால் எப்போதும் சொல்ல முடியாது
நிச்சயமாக நான் மிகவும் மணத்துணிவோடுதான் இதனை
எழுதியுள்ளேன். எதிர்ப்புகளைகண்டு அஞசப் போவதில்லை. மேலும் எதிர்ப்புகள்
வரும்போதுதான் எமது கருத்துக்களும் அங்கே சரியான தாக்கத்தை செலுத்தும்
துணிவு தான் முக்கியம். வாக்கினில் உண்மை இருந்தால் தானாக
வந்து சேரும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு -ரொமீலாவாக இருந்து உரையாடியபோது
விசா வாங்குவதில் சிக்கல் இருப்பதாகச் சொன்னார். அப்போதெல்லாம் புற்றுநோய்க்கான
மருத்துவம், விழிப்புணர்வு
பற்றிய தகவல்களைத் தனது முகநூல் பக்கங்களில் இணைப்பார். இதை ஏன் இணைக்கிறார் என்று
குழப்பமாக இருந்தது. அவருக்கிருந்த நோய் பற்றிய உள்ளுணர்வே அதனைச்
செய்யத்தூண்டியிருக்கிறது என்று இப்போது தோன்றுகிறது. விரைவில் லண்டன்
போய்விடுவேன் என்றும் இன்னொருவிதமான வாழ்க்கைக்குள் நுழைந்துவிட முடியும் என்றும்
நம்பிக்கையோடு இருந்தார். அதற்காக ஆங்கிலமெல்லாம் கற்றுவருவதாகச் சொன்னார்.
இந்தப் பெண்ணை விரைவில் சந்தித்துப் பேசுவேன் என்று
நினைத்திருந்தேன். இலங்கையில் இல்லையென்றால் லண்டனிலாவது சந்திக்க
வாய்ப்பிருக்கிறது என்று சொல்லியிருந்தார்.எனது கணவரோடு உங்களைச் சந்தித்து
உரையாடுவேன் என்று சொன்ன தமிழினி இப்போது இல்லை. அவர் ஈழப்போராட்டத்தின்
அரசியல்பிரிவுத் தலைவி என்ற எண்ணத்தில் என்னோடு பேசியதில்லை. நானும் அப்படிப்
பேசியதில்லை. தோழமையோடு பேசிய ஒரு பெண்ணோடு - ஆர்வமிக்க மாணவியோடு நடத்திய
உரையாடல்களை இணையப்பக்கங்களிலிருந்து இறக்கிவைத்து வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
அவை அனைத்தையும் இங்கே தரமுடியாது. தரவும் கூடாது.
நீண்ட நெடும் பயணமாக அமைந்திருக்க வேண்டிய வாழ்க்கை ஒரு
குறும்பயணமாக முடிந்துபோய்விட்டது. அவரது நூலுக்குரியதாக
ஞானப்பிரகாசம் ஸ்தபதி அனுப்பிய மூன்று படங்களில் ஒன்றைத் தேர்வு செய்தபோது அவர்
எழுதிய வரி:
· சரி ஐயா அப்படியே
ஆகட்டும். நன்றி

·
மரணமே நீ கொடியை
Source ; http://ramasamywritings.blogspot.co.uk/2015/11/blog-post_4.html
No comments:
Post a Comment