வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் ! (2)
எஸ்.எம்.எம்.பஷீர்.
முஸ்லிம் மாகாண சபையே முஸ்லிம் மக்களுக்கு தாயகத்தையும் சுய நிர்ணய உரிமையையும் வழங்கும் என்றும் எந்த சந்தர்ப்பத்திலும்  தங்களின் முஸ்லிம் மாகாண சபைக்கான கோரிக்கையைகை விடமாட்டோம் என்றும் முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் கருத்து வெளியிட்டிருக்கிறார் , மிக முக்கியமாக தமிழர் தரப்பில் முன் வைக்கப்படும் சுய நிர்ணய உரிமை கோட்பாட்டிற்கும்  ,  தாயக் கோட்பாட்டிற்கும் (திம்பு கோட்பாட்டின் கோட்பாடுகளில் மிக முக்கிய இரண்டு  அம்சங்கள் )  அமைவாகவே அவர் அந்தக் கருத்தை முன்வைத்திருப்பதை வெளிப்படையாகவே  அவதானிக்கலாம். ஏனெனில் அவர் தமது கோரிக்கையை முஸ்லிம் காங்கிரசின் கருத்தாகவே முன் வைத்திருந்தார். ஆனால் அந்தக் கோரிக்கையை அவர் முஸ்லிம் காங்கிரசின் அதி உயர் பீடத்துக்கு  கொண்டு போக முன்னரே , அதுவே முஸ்லிம் காங்கிரசின் கருத்தென்றும் , தவிசாளர் என்ற வகையில் , அவரின் கருத்தே கட்சியின் கருத்து என்று வலியுறுத்தி இருந்தார்.இந்த முஸ்லிம் மாகாண சபைக் கோரிக்கையை அரசியல் சீர்திருத்தம் தொடர்பான மக்களின் கருத்தறியும் குழு கிழக்கு மாகாணத்தில் தனது அமர்வை மேற்கொள்ள முன்னரே முஸ்லிம் தரப்பின் கோரிக்கை முஸ்லிம்  மாகாண  சபையே என்று கோரிக்கை விடும்படி  கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்களை  தூண்டி உள்ளார். ஆனால் கிழக்கில் முஸ்லிம் காங்கிரசின் கட்சி உறுப்பினர்கள் பலர் சிவில் சமூக அமைப்புக்களின் ஊடாக முஸ்லிம் மாகான சபைக் கோரிக்கையை முன் வைத்திருக்கலாம் என்ற ஐயம் நியாயமாகவே எழுகிறது. அவ்வாறான கோரிக்கையின் பின்னணியில் முஸ்லிம் காங்கிரஸ்  சார்பில் வைக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து  முஸ்லிம் காங்கிரசின் கட்சி உறுப்பினர்களைக் கொண்ட சிவில் சமூக அமைப்புக்களின் முன் மொழிவுகள் இதுவரை வெளிப்படையாக பகிரங்கப்படுத்தப்படவில்லை. சேகு தாவூத் முன்னாள் ஈரோஸ் இயக்க தீவிரவாதியாக இருந்தவர். தமிழர்களின் அரசியலுடன் அனுபவப்பட்டவர். அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அல்லது வடக்கு கிழக்கு இணைப்பைக் கோரும் தமிழ்   அரசியல் கட்சிகளுக்கு முஸ்லிம் காங்கிரசின் ஆதரவையும் , அதேவேளை தங்களுக்கு அந்த இணைப்பினூடாக ஒரு ஆட்சிப் பிரதேசம் -தாயகம்- வேண்டும் என்பதை சூட்சுமமாக சொல்லி இருக்கிறார் என்று தோன்றினாலும் . மேலோட்டமாக தமிழர் தரப்பில் அப்படியான கோரிக்கை என்பது ஆச்சரியமானதல்ல. ஏனெனில் அவ்வாறான கோரிக்கையினை முஸ்லிம் காங்கிரஸ்  எவ்வித வரைபும் , மக்கள் ஆலோசனையும் இன்றி மிக நீண்டகாலமாகவே ஒரு  வெறும் கோரிக்கையாக முன் வைத்து வருகிறது.

ஆனால் முஸ்லிம்களைப் பொருத்தவரை  வடக்கிலும் கிழக்கிலும் நிலத் தொடர்பற்ற முஸ்லிம் பிரதேசங்களை  உள்ளடக்கி  முஸ்லிம் மாகாண  சபை ஒன்றை நிறுவுவதோ அல்லது நிர்வகிப்பதோ நடைமுறையில் மிகுந்த சவாலான விடயமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள் தெற்கிலே சிங்கள சமூகத்துடன் வாழும் நிலையில் தமிழர் தரப்பினரின் தாயக் கோட்பாட்டை , சுய நிர்ணயக் கோட்பாட்டை அடியொற்றி முஸ்லிம் "தாயக ", "தன்னாட்சி" கோட்பாடுகளைக் கொண்டு சுயாட்சி அலகு கோருவதென்பது நடைமுறையில்  சாத்தியமானதா என்பது மிக முக்கிய கேள்வியாகும்.


இவை யாவும் ஒரு புறமிருக்க , பசீர் சேகு தாவூதின் கருத்தைக் கேட்டு முன்னாள் முஸ்லிம் காங்கிரசின் தலைவரான அஸ்ரபின் ஒரே ஒரு மகனான  அமான் அஸ்ரப் , தனது தந்தை , துறைமுக கப்பல் , புனர்வாழ்வு ,மீள்நிர்மான  அமைச்சராக பதவியேற்றபின் நடந்த கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் " இந்நாட்டில் ஒரு சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்ற வகையில் , எங்களின் திறன்களின் வரம்புகளை நாங்கள் அடைந்துள்ளோம் " என்று அவர் குறிப்பிட்டதையும் , இலங்கை மக்களுக்கு பரந்தளவில் சேவை புரிவதென்றால் பரந்த தேசிய அரசியலுக்குள் முஸ்லிம்கள் பிரவேசிக்க வேண்டிய அவசியத்தையும் , அங்கு முஸ்லிம்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதையும் பற்றி  அஸ்ரப் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி உள்ளார்.

"As a party representing a minority in this country, we have reached the limits of our abilities. If we are to serve the nation and its people at a greater degree, we must then, now look to expand our horizons into national politics and aim to define a role for ourselves within.
Thus, he began to devote his career and time exclusively towards the formation of the National Unity Alliance (NUA) a pluralistic political entity whose mandate was solely for a UNITED Sri Lanka, undivided by any means.

இந்தப் பின்னணியில்தான் இந்த முஸ்லிம் மாகாண சபை கோரிக்கைக்கு முன்னர்  கிழக்கில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளை மேலோட்டமாக பார்ப்பது அவசியமாகிறது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டு முதன் முதலாக வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களிலும் (1988) , அதனைத் தொடர்ந்த  நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் (1989) , போட்டியிட்ட பொழுது முஸ்லிம் மாகாண  சபைக்கான  கோசங்களை முஸ்லிம் காங்கிரஸ் தங்கள் கட்சியின் அரசியல் இலக்காக வெறும் மேடைப் பிரச்சாரமாகவே  முன் வைத்தது. ஏனெனில் அவ்வாறான ஒரு கோரிக்கை குறித்து எவ்வித வரைபுகளும் முஸ்லிம் காங்கிரசிடம் இருக்கவில்லை. இது பற்றிய "வீட்டு வேலை  " (Home work )  ஒன்றைத் தன்னும் முஸ்லிம் காங்கிரஸ் அதுவரையில் செய்திருக்கவில்லை.  முஸ்லிம் மக்களைப் பொருத்தவரை அவர்களுக்கு அதுவரை கால பெற்ற அரசியல் அனுபவத்தில் கிரகிக்கவே மிகக் கடினமான ஒரு சங்கதியாகவே முஸ்லிம் மாகாணம் என்ற கோரிக்கை  இருந்தது. இலங்கையின் ஆட்சி அதிகாரம் குறித்து  புவியில் அரசியல் வரலாற்றுப் பின்னனியோ  , அதனையொட்டிய சிந்தனைகள் , கருத்தாடல்கள், போராட்டங்கள்  என்பனவோ  மேலோங்கியிராத ஒரு சமூகமான வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம் சமூகம் சடுதியாக தனித்துவ முஸ்லிம் அரசியல் முன்னெடுப்புக்களை மேற் கொள்ளவேண்டிய புற அரசியல் சூழ்நிலைகள் நிலவிய காலம் அது.

1970 களில் முஸ்லிம் கட்சி (இயக்கம்) ஒன்றினை இஸ்தாபித்திருந்தாலும் தமிழ் அரசியலுடன் தன்னை இணைத்துக்  கொண்டு அரசியல் போராட்டத்தில் இறங்கிய சட்டத்தரணிகளான எம்.எச்.எம்.  அஸ்ரப் , சம்சுதீன் , டாக்டர் உதுமாலப்பை போன்றோர் , தமிழ்த் தலைமைகளுடன் அதிருப்தி அடைந்த பின்னர் ,  தமிழர் கூட்டணியுடனான உறவை முறித்துக் கொண்டனர்.  அத்துடன் அவர்கள் ஒத்துழைத்த தனி நாட்டுக் கோரிக்கையையையும்   (தமிழ் ஈழக் கோரிக்கையை )  கைவிட்டனர். அவர்களின் அரசியல் கட்சியும் கிழக்கிலே செயலிழந்தது. அதன் பின்னர் ,  பல வருடங்கள் வரை கிழக்கிலே தனித்துவ முஸ்லிம் அரசியல் தரப்பில் எவ்வித செயற்பாடுகளும் காத்திரமாக முன்னேடுக்கப்படவில்லை. ஆனால் அதற்கான சூழலை கிழக்கிலே ஏற்படுத்திக் கொடுத்தவை தமிழ் இயக்கங்களின் ஆயுதப் போராட்டங்களே.

 தமிழ் ஆயுததாரிகளின் அட்டகாசங்களுக்கு உட்பட்டதனாலே முஸ்லிம்கள் தங்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டனர். தேசிய அரசியல் கட்சிகளில் பிரதிநித்துவம் வழங்கிய கிழக்கு பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகளின் அனுசரணைகள் அரசாங்க முஸ்லிம்களுக்கு கிடைத்தன. பரஸ்பரமாக இரண்டு இனங்களும் ஒரு பகை முரண்பாட்டை வளர்த்துக்  கொண்டனர். தமிழ் இயக்கங்களின் முஸ்லிம் மக்கள்  மீதான அடக்குமுறைகள் இந்திய ஒப்பந்தத்துடன்  மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. "முஸ்லிம்களின் முதுகளின் மீது எழுதப்பட்ட அடிமைச் சாசனமே இந்திய இலங்கை ஒப்பந்தம் " என்று அஸ்ரப்  கண்டனம் தெரிவித்திருந்தாலும் ,  அஸ்ரபும்  , இந்திய -இலங்கை ஒப்பந்தத்துக்கு உயிர் கொடுத்தார்.  வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட முன் வந்தார். இலங்கையின் பிரதான தேசியக் கட்சியான சுதந்திரக் கட்சி வடக்கு கிழக்கு தேர்தல்களை பகிஸ்கரிப்பு செய்த வேளை , முஸ்லிம் காங்கிரசின் பங்களிப்பு இன்றி இந்திய அரசு  வடக்கு கிழக்கு மாகாண தேர்தலை நடத்துவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டது. தெற்கில் ஜே வீ பீயின்  எதிர்ப்பும் , வடக்கு   கிழக்கில் புலிகளின் எதிர்ப்பும் இந்திய அரசு இலங்கை மீது திணித்த ஒப்பந்தத்தை எப்படியாவது நடைமுறை சாத்தியமாக்க வேண்டும் என்ற நிலையில்    முஸ்லிம் மக்களின் அரசியல்  பங்களிப்பு இந்தியாவிற்கு மிக மிக அவசியமாக  தேவைப்பட்டது.

அக்காலகட்டத்தில்  முஸ்லிம்கள் அரசியல் ரீதியில் தனித்துவ அரசியல் பிரக்ஞை கொண்டவர்களாக மாறி இருக்கவில்லை.  ஆனால் அடிப்படையில் இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானபின் முஸ்லிம்களின் அரசியல் அனாதரவுத்தன்மையை உணரப்பட்டது. அதனை முஸ்லிம் காங்கிரஸ் தனது அரசியல் இஸ்திரத்துக்காக  பயன்படுத்திக்கொள்ள வடகிழக்கு மாகாண சபை தேர்தல்களும் , பின்னரான நாடாளுமன்ற தேர்தல்களும் உதவின.

தொடரும் .

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...