1956 முதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நடைபெற்று வந்த வலதுசாரிச் சதிகள்! - நமது அரசியல் நிருபர்சிறீலங்கா சுதந்திரக் கட்சி (சிறீ.ல.சு.க.) வலதுசாரிகளின் பிடியில் சிக்கியுள்ளதால் அதன் எதிர்காலம் குறித்து தேசப்பற்றுள்ள அனைவரும் கவலைக்குள்ளாகி உள்ளனர். ஏனெனில், 1948 பெப்ருவரி 4ல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரான 67 ஆண்டுகளில் சிறீ.ல.சு.க தலைமையிலான அரசுகள் ஆட்சியில் இருந்த ஏறத்தாழ 35 வருடங்களிலேயே தேசத்துக்காகவும், மக்கள் நலனுக்காகவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் காரணமாகவே நவீன வரலாற்றில் இலங்கை உலக நாடுகள் மத்தியில் தலைநிமிர்ந்து நிற்க முடிந்தது.

சிறீ.ல.சு.வவை 1951ல் ஆரம்பித்தவர்களில்இரண்டு முக்கியமானவர்கள் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவும் (சந்திரிகவின் தந்தை), டி.ஏ.ராஜபக்சவும் (மகிந்த ராஜபக்சவின் தந்தை) ஆவர்.பண்டாரநாயக்கவை பிற்போக்கு சக்திகள் 1959ல் படுகொலை செய்த பின்னர், அவரதுமனைவி சிறீமாவோ பண்டாரநாயக்க கட்சியையும், நாட்டையும் தனது கணவரின் அடிச்சுவட்டில் சிறப்பாக வழிநடத்தினார்.


அவர்களது புதல்வி சந்திரிக குமாரதுங்க 1994ல் நாட்டின் ஜனாதியாகத் தெரிவானதும், பதவி வழி காரணமாகசுதந்திரக் கட்சியின் தலைவராக 11ஆண்டுகள் பதவி வகித்தார். அந்தக் காலகட்டத்தில் அவர் கட்சியை அமைப்புரீதியில் பலப்படுத்துவதில் பெரிதும்அக்கறை காட்டாததுடன், தமதுபெற்றோர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி முற்போக்கு நடவடிக்கைகள் எதையும் பெரிதாக எடுக்கவுமில்லை. அதற்குஇரண்டு விடயங்கள் காரணமாக இருந்தன எனலாம். ஒன்று, ஐக்கிய தேசியக் கட்சியினால்(ஐ.தே.க.) ஆரம்பிக்கப்பட்டு பின்னர் சந்திரிகவிடம் கையளிக்கப்பட்ட புலிகளுடனான யுத்தம். மற்றையகாரணம்பண்டாரநாயக்க தம்பதிகளின் மற்றைய இரு பிள்ளைகளைகளான சுனேத்ர, அனுர போலவே சந்திரிகவும் தமது பெற்றோர்களைப் போல தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாக வளர்க்கப்பட்டிருக்கவில்லை.

 
இந்த நிலைமைகளே, சந்திரிக இன்று சர்வதேச பிற்போக்கு சக்திகளின்  வலையில் விழவும், ஐ.தே.கவுடன் சமரச அரசியல் செய்யவும் வழிவகுத்துள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவரது பெற்றோர்களான எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவும், திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்கவும் கூட, தமது காலகட்டத்தில் மிகவும் மோசமான வலதுசாரி சதிகளை நாட்டில் மட்டுமின்றி, தமது கட்சியிலும் எதிர்நோக்கியவர்கள்தான். ஆனால் அவர்கள் தமது உறுதியான நடவடிக்கைகள் காரணமாகவும், இடதுசாரிச் சக்திகளின் ஆதரவு காரணமாகவும், அவற்றிலிருந்து ஓரளவு வெற்றிகரமாக மீண்டு வந்தனர். அவற்றில் சிலவற்றை எமது வாசகர்கள் தெரிந்து கொள்வதற்காக தருவது அவசியம்.
 
பண்டாரநாயக்க 1956இல் ஐ.தே.கவை மிகவும் மோசமான முறையில் தோற்கடித்து(அந்தத் தேர்தலில் அக்கட்சிக்கு ஆக 8 ஆசனங்களே கிடைத்தன), ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார். அவர் ஆட்சிக்கு வந்ததும் மேற்கொண்ட மிகவும்
தீவிரமான ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக, அந்நிய வல்லாதிக்க சக்திகள் - குறிப்பாக எமது நாட்டில் 200 வருடங்களுக்கு மேல் காலனி ஆட்சி நடாத்திய பிரித்தானிய ஏகாதிபத்தியம், பண்டாரநாயக்க அரசுக்கு எதிராகப் பல குழிபறிப்பு வேலைகளைச் செய்தது. அதற்கு ஏகாதிபத்திய விசுவாசிகளான ஐ.தே.க. மட்டுமின்றி, அதே விசுவாசம் கொண்ட தமிழ் கட்சிகளான தமிழ் காங்கிரஸ் - தமிழரசு கட்சிகளும் உதவின.  
உதாரணமாக, திரிகோணமலையிலும், கட்டுநாயக்கவிலும் இருந்த பிரித்தானியரின் கடற்படை, விமானப்படைத் தளங்களை நாட்டிலிருந்து பண்டாரநாயக்க வெளியேற்றிய போது, அவர்களை வெளியேற வேண்டாம் என தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், பிரித்தானிய அரசி எலிசபெத்துக்கு தந்தி அனுப்பினார்.
அதாவது, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தலைவர் காந்தி, “வெள்ளையனே, வெளியேறு! ” எனக்  கோசமெழுப்ப, தனக்குஈழத்துக் காந்திஎனப் பெயர் சூட்டிக்கொண்ட செல்வநாயகம்,  வெள்ளையனே, வெளியேறாதே! ”  எனத் தந்தி அனுப்பினார்!


இறுதியாக வீட்டுக்கு வெளியே வந்த பண்டாரநாயக்க, சிங்களப் பேரினவாதிகளின் நிர்ப்பந்தத்தால் ஒப்பந்தநகலைக் கிழித்தெறிய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்.
சிங்களப் பேரினவாதிகளின் கட்சியான ஐ.தே.க. இப்படி நடந்து கொண்டதில் வியப்பதற்கு ஏதுமில்லை. ஆனால், சிறீ.ல.சு.கவிற்குள் இருந்த வலதுசாரிப்பிரிவினரும் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த விடாமல் தடுப்பதில் மறைமுகமான சூழ்ச்சிகளில் இறங்கினர் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. 
முன்னர் ஒருமுறை வாகனங்களில் உள்ள ஆங்கில எழுத்துக் கொண்ட இலக்கத் தகடுகளுக்குப் பதிலாக, சிங்களசிறீ எழுத்துப் பொறித்த இலக்கத் தகடுகளை அமுலுக்குக் கொண்டு வந்த பொழுது, அதற்கு தமிழரசுக் கட்சி எதிர்ப்புத் தெரிவித்ததால், அது திரும்பப் பெறப்பட்டது. ஆனால், ‘பண்டாசெல்வா ஒப்பந்தம்’ எழுதப்பட்டதை விரும்பாத சிறீ.ல.சு.கவினுள் இருந்த வலதுசாரிகள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இனக் குரோதத்தைத் தூண்டுவதற்காக மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு சிங்கள சிறீ எழுத்துப் பொறித்த பஸ்களைத் திட்டமிட்டு அனுப்பி வைத்தனர். அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே தமிழரசுக் கட்சியினர் சிங்களச் சிறீ எதிர்ப்புப் போராட்டம் என்ற வலைக்குள் விழுந்தனர்.
 
தமிழரசுக் கட்சியின்தளபதி’ என்று வர்ணிக்கப்பட்ட அ.அமிர்தலிங்கம் தார்ச்சட்டியுடன் வீதியில் இறங்கி பஸ்களில் இருந்த சிங்களச் சிறீ எழுத்துக்களை அழித்து இனக்குரோத அரசியலுக்கு எண்ணெய் ஊற்றிவிட்டார்.
 
ஆரம்பத்தில் என்ன எதிர்ப்பு வந்தாலும் தான் செல்வநாயகத்துடன் செய்து கொண்டஒப்பந்தத்தைக் கைவிடுவது இல்லை என உறுதியுடன் இருந்த பண்டாரநாயக்கவின் கரங்களைப் பலப்படுத்த வேண்டிய தமிழரசுக் கட்சி, அற்ப விடயத்துக்காக வீதியில் தார்ச்சட்டியுடன் இறங்கி சிங்களப் பேரினவாத ஐ.தே.கவின் திட்டத்துக்கு உதவி பண்டா – செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறியும் சூழ்நிலைக்கு உரமிட்டது.
 
இந்தச் சம்பவம்தான், சிறீ.ல.சு.கவினுள் ஏற்பட்ட வலதுசாரிகளின் முதலாவது சதி நடவடிக்கையாகும். அதில் அவர்கள் வெற்றி பெற்றாலும் பண்டாரநாயக்கவின் அரசை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. ஆனால் பின்னர், வெளிநாட்டு – உள்நாட்டு பிற்போக்கு சக்திகள் திட்டமிட்ட முறையில் பண்டாரநாயக்கவைக் கொலை செய்துதமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டனர்.
 
பண்டாரநாயக்கவின் கொலையின் பின்னர், சிறீ.ல.சு.க. மௌனித்து விடும் அல்லது அடுத்த தலைமை அவரது கொள்கைகளிலிருந்து தடம் புரண்டு விடும் எனப் பிற்போக்கு சக்திகள் எதிர்பார்த்தனர். ஆனால், தனது கணவரின் மறைவிற்குப் பின்னர் கட்சித் தலைமையைப் பொறுப்பேற்ற பண்டாரநாயக்கவின் மனைவி சிறீமாவோ, துணிகரமாக கட்சியை வழிநடாத்தி, நாட்டின் பிரதமராகி, உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார்.
 
அதுமாத்திரமின்றி, பிற்போக்கு சக்திகள் எதிர்பார்த்ததிற்கு மாறாக, இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து தனது கணவரின் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைகளை மேலும் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றார். இதைப் பொறுத்துக் கொள்ளாத பிற்போக்குச் சக்திகள் இராணுவத்திலிருந்த ஐ.தே.கவுக்குச் சார்பான வலதுசாரி சக்திகள் மூலமாக 1962இல் சிறீமாவோ அரசுக்கு எதிராக இராணுவச்சதி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தன.
 
ஆனால் இராணுவத்திலிருந்த சில தேசபக்த அதிகாரிகள் மூலம் உரிய நேரத்தில் அந்தத் தகவல் அரச தலைமைக்கு எட்டியதால் சதித்திட்டம் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. ஆனாலும், பிற்போக்கு சக்திகள் தமது முயற்சியைக் கைவிடவில்லை. 1964இல் சிறீமாவோ அரசு, இலங்கை முற்போக்கு சக்திகளின் நீண்டகாலக் கோரிக்கையான வலதுசாரி ஏரிக்கரை (லேக்ஹவுஸ்) பத்திரிகை நிறுவனத்தைத் தேசவுடமையாக்கும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அதைச் சாதகமாகப் பயன்படுத்திய பிற்போக்கு சக்திகள், சிறீ.ல.சு.கவிற்குள் இருந்த சி.பி.டி.சில்வா தலைமையிலான வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களை அந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க வைத்து, சிறீமாவோ அரசைத் தோற்கடித்தன. அதன் காரணமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
 
1965 பொதுத்தேர்தலில் சிறீ.ல.சு.கவோ, ஐ.தே.கவோ தனித்து அரசு அமைக்க அறுதிப் பெரும்பான்மை பெற்றிராதபோதும், தமிழரசு, தமிழ் காங்கிரஸ் போன்ற தமிழ் இனவாத கட்சிகளின் ஆதரவுடனும், கே.எம்.பி ராஜரத்ன, ஆர்.ஜீ.சேனநாயக்க போன்றவர்களின் சிங்கள இனவாத கட்சிகளின் உதவியுடனும் ஐ.தே.க. ஏழுகட்சிக் கூட்டாட்சி ஒன்றை அமைத்தது. சிங்கள  தமிழ் வலதுசாரி, இனவாத சக்திகளின் இந்தக் கபட நாடகத்தால் கோபமடைந்த மக்கள், 1970 பொதுத்தேர்தலில் சிறீமாவோவின் சிறீ.ல.சு.க., இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி என்பனவற்றைக் கொண்டமைந்த மக்கள் முன்னணியை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிபெற வைத்தன.
 
மக்களின் மிகுந்த ஆதரவுடன் பதவிக்கு வந்த அந்த அரசை ஒரு வருடத்திலேயே  கவிழ்ப்பதற்கான முயற்சியை சர்வதேச ஏகாதிபத்திய சக்திகளும், உள்நாட்டுப் பிற்போக்கு சக்திகளும் சேர்ந்து ஜே.வி.பி. இயக்கத்தின் ஆயுதக் கிளர்ச்சி வடிவத்தில் 1971 ஏப்ரலில் அரங்கேற்ற முயற்சித்தன. ஆனால் சிறீமாவோவின் உறுதியான தலைமைத்துவத்தினாலும், இடதுசாரிக் கட்சிகள் வழங்கிய ஆதரவினாலும், அந்த எதிர்ப்புரட்சி கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.
 
இந்தச் சந்தர்ப்பத்தில் பிற்போக்கு சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு இரட்டைச் சூழ்ச்சி அணுகுமுறையைக் கைக்கொண்டன. ஒருபுறத்தில் ஜே.வி.பியைப் பயன்படுத்தி ஆயுதக்கிளர்ச்சி மூலம் சிறீமாவோ அரசைக் கவிழ்க்க முயன்றன. மறுபுறத்தில் சிறீமாவோ போன்ற பெண் ஒருவரால் இப்படியான இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிப்பது கஸ்டம் ’ என்று கூறிக்கொண்டு, சிறீ.ல.சு.கவில் இருந்த வலதுசாரிகளின் தலைமைப் பேர்வழியான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க என்ற இரும்பு மனிதனை ’ நாட்டின் பிரதமராக்க வேண்டும் என்ற கருத்தைப் பிரச்சாரம் செய்து, வலதுசாரிகளின் கையில் ஆட்சியை எடுக்க முயன்றனர். ஆனால் சிறீமாவோவின் உறுதியான தலைமைத்துவத்தாலும், இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவாலும் அவர்களது அந்தச் சதித்திட்டமும் முறியடிக்கப்பட்டது.
 
இந்த நெருக்கடிகளி;ன் மத்தியிலும் மக்கள் முன்னணி அரசாங்கம் 1972இல் புதிய அரசியல் யாப்பை வரைந்து, பிரித்தானிய முடியரசுடன் இருந்த தொடர்பை அறுதியும் இறுதியுமாக அறுத்துக்கொண்டு இலங்கையை ஒரு குடியரசு நாடாகப் பிரகடனம் செய்தது. இந்த நிகழ்வானது பிரித்தானிய காலனித்துவவாதிகளை சீற்றத்துக்குள்ளாக்கியது. அவர்கள்  இலங்கை அரசுக்கு எதிராகப் பல்வேறு சூழ்ச்சி நடவடிக்கைகளில் இறங்கினர். குறிப்பாக, அந்த அரசியல் அமைப்பில் முன்னைய சோல்பரி அரசியல் அமைப்பில் சிறுபான்மை இனங்களுக்குப் பாதுகாப்புக்கென இருந்த 28ஆவது சரத்து நீக்கப்பட்டதையும், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதையும் எதிர்த்த, பிரித்தானியருக்கு ஆண்டாண்டு காலமாக விசுவாசிகளாக இருந்துவந்த தமிழ் பிற்போக்கு - இனவாத சக்திகளை பயன்படுத்தி பிரிவினைப் போராட்டத்தைத் தூண்டிவிட்டனர்.  
அதன்பின்னர் பிற்போக்கு சக்திகள் வேறொரு தந்திரோபாயத்தை வகுத்தன. சிறீமாவோவுக்கு தனது மகன் அனுர மீது அளவுகடந்த பிரியம் என்பதைக் கண்டுகொண்ட பிற்போக்கு சக்திகள், அனுரவைத் தமது கையில் போட்டுக் கொண்டன. முதலில் அனுர மூலம் அவரது மூத்த சகோதரியான சுனேத்ரவின் கணவர் குமார் ரூபசிங்க மீது அரசியல் தாக்குதல் தொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் குமார் ரூபசிங்க சிறீ.ல.சு.கவிலிருந்த இடது ஆதரவுச் சக்திகளின் குரலாக சிங்களத்தில் ஜனவேகய’ என்ற பத்திரிகையையும், தமிழில் ஜனவேகம்என்ற பத்திரிகையையும் நடாத்தி வந்தார்.
 
அவரது பத்திரிகையில் சிறீமாவோ அரசின் சில நடவடிக்கைகள் பற்றி வந்த விமர்சனங்களை வைத்துக்கொண்டு, அவரை அரச விரோதியாகப் படம்பிடித்து, அரசிலிருந்து தள்ளி வைப்பதில் அனுரவைப் பயன்படுத்தி பிற்போக்கு சக்திகள் பெற்றி பெற்றன. அதேபோல, சிறீமாவோவின் இளைய மகள் சந்திரிகவின் கணவரான விஜேகுமாரதுங்க இடதுசாரி ஆதரவாளர் என்றபடியால், அவருக்கும் அனுரவுக்கும் மோதலை உண்டாக்கி, அவரை சிறீ.ல.சு.கவை விட்டு விலகிச் செல்ல வைப்பதில் பிற்போக்கு சக்திகள் வெற்றிபெற்றன.
அதனால் விஜேகுமாரதுங்க விலகிச் சென்று தனியாக சிறீலங்கா மக்கள் கட்சி’ என்ற புதிய கட்சியை உருவாக்கினார். சந்திரிகவும் தனது கணவரின் கட்சியில் இணைந்து கொண்டார். (விஜேகுமாரதுங்கவை ஜே.வி.பியினர் சுட்டுப் படுகொலை செய்த பின்னரும், அனுர ஐ.தே.கவில் சேர்ந்த பின்னரும்தான், சந்திரிகவை தனது வாரிசாக சிறீமாவோ சிறீ.ல,சு.கவுக்குள் மீண்டும் கொண்டு வந்தார். சந்திரிக போன்று கட்சியை விட்டு விலகிச் சென்று திரும்பிவந்த வரலாறு வேறு எந்தவொரு சிறீ.ல.சு.க. சிரேஸ்ட தலைவருக்கும் கிடையாது) அதுமாத்திரமின்றி, அன்று உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட உணவு நெருக்கடியைப் பயன்படுத்தி அரசை வீழ்த்துவதில் ஐ.தே.க. முனைப்புடன் செயல்பட்டது. உணவு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உள்ள+ரில் உற்பத்தியைப் பெருக்குவதற்கான திட்டமொன்றை அரசின் பங்காளிக் கட்சிகளான இடதுசாரிக் கட்சிகள் முன்வைத்து செயல்படுத்த முனைந்தன. தற்காலிகமாக மக்களுக்கு கஸ்டங்கள் ஏற்பட்டாலும், அந்தத் திட்டம் வெற்றிபெற்றால் இலங்கை ஏகாதிபத்திய நாடுகளில் தங்கிநிற்கும் நிலை மாறியிருக்கும். ஆனால் மக்களின் உடனடி எதிர்ப்பைக் காரணம்காட்டி சிறீ.ல.சு.கவிலிருந்த வலதுசாரிகளான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவும், அனுர பண்டாரநாயக்கவும் அந்தத் திட்டத்தை எதிர்த்தனர். அவர்களின் கை வலுவாக ஓங்கியதால், பிரதமர் சிறீமாவோவினாலும் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட, இடதுசாரிக் கட்சிகள் அரசிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தச் சூழல் ஏற்பட்டது.
 
அதன் காரணமாக, பின்னர் 1977இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சிறீ.ல.சுகவும், இடதுசாரிக் கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டன. அந்தச் சூழல் ஐ.தே.கவுக்கு பெரும்
வரப்பிரசாதமாக அமைந்து, அக்கட்சி அத்தேர்தலில் ஆறில் ஐந்து ரும்பான்மையுடன் அமோக வெற்றியீட்டியது. முதல் தடவையாக இலங்கையின் மிகப்பெரிய அரசியல் குள்ளநரியான ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் ஐ.தே.க. அரசு அமைந்தது. ஜே.ஆர்., ஐ.தே.கவின் பரம வைரிகளான இடதுசாரிக் கட்சிகளையும், தொழிற்சங்கங்களையும் திட்டமிட்டு அழிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டார். சிறீ.ல.சு.வை வேறொரு முறையில் அழிக்கத் திட்டமிட்டார்.
 
முதலில் இப்பொழுது அவரது மருமகனான ரணில் விக்கிரமசிங்க கூறுவதுபோல, முழு நாடாளுமன்றத்தையும் அரசாக மாற்றப்போவதாகக் கூறிக்கொண்டு, றீ.ல.சு.கவையும் அரசுடன் சேரும்படி அழைப்பு விடுத்தார். (அந்தத் தேர்தலில் எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி, இன்று சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்வதுபோல, உண்மையான எதிர்க்கட்சியாகச் செயல்படாமல் ஜே.ஆர். அரசுக்குச் சார்பாகச் செயல்படத் தொடங்கியிருந்தது)
 
அவ்வாறு அக்கட்சி அரசுடன் இணைந்தால், சிறீமாவோவுக்கு வெளிநாட்டு அமைச்சர் பதவி தருவதாக ஜே.ஆர். ஆசைவார்த்தை காட்டினார். ஆனால் சிறீமாவோவும், சுதந்திரக் கட்சியும் ஜே.ஆரின் ஆசை வார்த்தையை முற்றுமுழதாக நிராகரித்துவிட்டனர்.  அதன்பின்னர், பழிவாங்கும் நோக்குடன் சிறீமாவோவின் குடியியல் உரிமையைப் பறித்து, சுதந்திரக் கட்சியை முடக்க முயன்றார். ஆனால் மக்கள் சிறீ.ல.சு.கவினதும், இடதுசாரிக் கட்சிகளினதும் பக்கம் இருந்ததால், அக்கட்சிகளின் கூட்டான மக்கள் முன்னணியை 1994இல் ஆட்சிக்குக் கொண்டுவந்து, ஐ.தே.கவின் 17 வருட கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டினர். இருந்தும் மக்கள் ஆதரவு பெற்ற அரசுக்கு எதிரான சதி, நாச வேலைகளை ஐ.தே.க. கைவிடவில்லை. அவர்கள் சர்வதேச பிற்போக்கு சக்திகளுடனும், தமிழ் பிரிவினைவாத பாசிசப் புலிகளுடனும் கள்ளக்கூட்டுச் சேர்ந்து தமது வேலைகளைத் தொடர்ந்து செய்து வந்தனர்.
 
பொதுவாக ஐ.தே.கவின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அந்தக் கட்சி சிங்களப் பேரினவாதத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வந்ததை அவதானிக்கலாம். 1994இல் ஆட்சிக்கு வந்த சந்திரிகவின் ஆட்சியிலும் அதை ஒருமுறை பிரயோகித்திருக்கின்றனர்.
2000ஆம் ஆண்டில் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக சந்திரிக அரசு கொண்டுவந்த தீர்வுப் பொதியை முறியடிப்பதில் ஐ.தே.க. சகல சிங்கள – தமிழ் இனவாத சக்திகளையும் ஓரணியில் திரட்டி வெற்றி கண்டது. ஐ.தே.கவின் இந்த நடவடிக்கையின் போது மீண்டும் ஒருமுறை சிறீ.ல.சு.கவில் இருந்த வலதுசாரி அணியினர் நாடாளுமன்றநாடாளுமன்றத்தில் எதிரணிக்குத் தாவி அந்தத் தீர்வுத்திட்டத்தை முறியடிப்பதற்கு உதவினர். இருந்தும் இலங்கை மக்களின் ஐ.தே.க. எதிர்ப்பு உணர்வு காரணமாக, 2015 ஜனவரி 8ஆம் திகதி வரை ஐ.தே.கவால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை.
 
இந்த நிலைமையில்தான் சர்வதேச பிற்போக்கு சக்திகள் புதிய உத்தியொன்றை வகுத்தன. அதாவது சிறீ.ல.சுவிலேயே ஒரு பலம்வாய்ந்த அணியினரை உடைத்தெடுத்து, அக்கட்சிக்கு எதிராகச் செயல்பட வைத்தனர். அதன்படி, அக்கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவரும், சிறீ.ல.சு.கவை ஸ்தாபித்த பண்டாரநாயக்கவின் மகளுமான சந்திரிகவையும், கட்சியின் பொதுச் செயலாளராகவும், சிரேஸ்ட அமைச்சராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேனவையும் பிரித்தெடுத்து, ஐ.தே.கவுடன் கூட்டுச்சேர வைத்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றியீட்டினர். மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கட்சியை விட்டோடிய மைத்திரி வெற்றியீட்டியபோதிலும், அந்த வெற்றியை வைத்து இதுவரை காலமும் சிறீ.ல.சு.க. தலைமையிலான முற்போக்கு அரசுகள் ஈட்டிய மக்கள் சார்பான வெற்றிகள் அத்தனையையும் இன்றைய மைத்திரி ரணில் அரசு குழிதோண்டிப் புதைக்க முற்படுவதுடன், கட்சியின் துரோகிகள் சிறீ.ல.சு.கவின் தலைமையையும் கைப்பற்றி, உண்மையான கட்சி விசுவாசிகளை ஓரம்கட்டிவிட்டு, கட்சியை ஐ.தே.கவின் ஒரு வாலாக மாற்றும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர்.
 
ஆனாலும், உண்மையான சிறீ.ல.சு.க. விசுவாசிகளும், நாட்டுப்பற்று உள்ள மக்களும், ஐ.தே.கவினதும், சிறீ.ல.சு.கவின் துரோகிகளினதும் இந்தச் சதி நடவடிக்கைகளை முறியடித்தே தீருவர் என்பது திண்ணம். ஏனெனில், வரலாற்றை எடுத்துப் பார்த்தால், சிறீ.ல.சு.கவுக்குள்ளிருந்தும், வெளியிலிருந்தும், அக்கட்சியை அழிக்க எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன.
 
இன்றைய சூழல் சற்று வித்தியாசமாக, அதாவது ஐ.தே.கவும், சிறீ.ல.சு.கவின் வலதுசாரிப் பிரிவும் இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைத்திருப்பதாலும், அந்த அரசுக்கு சர்வதேச பிற்போக்கு சக்திகள் பிராணவாயு ஏற்றிக் கொண்டிருப்பதாலும், தேசப்பற்றுள்ள மக்களுக்குச் சற்றுப் பாதகமான சூழ்நிலை நிலவினாலும், இன்றைய ஏகாதிபத்திய சார்பு, மக்கள் விரோத அரசு தூக்கியெறியப்படுவதும், சிறீ.ல.சு.க. உண்மையான வாரிசுகளுக்கு மீண்டும் கிடைப்பதும், அவர்களும் இடதுசாரிகளும் ஏனைய ஜனநாயக மற்றும் தேசபற்றுள்ள சக்திகளும் இணைந்து மீண்டும் மக்கள் சார்பு அரசொன்றை அமைப்பதும் யாராலும் தவிர்க்க முடியாத வரலாற்று நியதியாகும்.

 Source: வானவில், பங்குனி 2016

No comments:

Post a Comment

இலங்கை வரலாற்றில் அழியாத சுவடுகளைப் பதித்துச் சென்ற1953 ஓகஸ்ட் 12 ஹர்த்தால்!--மாவலியான்

மே 18, 2022 1953 இல் ஒரு பெரிய ஊர்வலத்தில் என்.எம். பெரேரா உரையாற்றுகிறார் 1953 ஆம் ஆண்டு ஹர்த்தாலையும் தற்போது காலிமுகத்திடலில் முகாமிட்டிர...