திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்
எஸ்.எம்.எம்.பஷீர்  

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு".   -குறள்-

காலம் சென்ற திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள் 2016 மார்ச் 20  இல் தெற்கு இலண்டனில் உள்ள ஒரு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற பின்னர் , அவரின் உடல் இந்துமத வழக்கப்படி வட கிழக்கு சர்ரே மயானத்தில் (Surrey crematorium) தகனம் செய்யப்பட்டது. உலகின் ஒரு மூலையில் , ஒரு இன சமூக வரலாற்றின் இயங்கு தளத்தில் தனது பாத்திரத்தை பதித்த ஒரு  பெண்மணியின் இயற்கை எய்தல் ஆயிரக்கணக்கானோரின் இறுதி அஞ்சலியுடன்  ஆயிரம் மைல்களுக்கப்பால் முடிவுக்கு வந்தது. 


திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் , தனது கணவரின் அரசியலுடன்  தன்னை பிரிக்கமுடியாதவாறு இணைத்துக் கொண்டவர். அவரின் கணவரின் அரசியல் சித்தாந்தங்களில் , செயற்பாடுகளில்  பல்வேறு விமர்சனங்கள்  உண்டு . அந்த வகையில் அவர் மீதும் விமர்சனங்கள் எனக்கும் உண்டு.  துரதிஷ்டவசமாக நடைமுறை அரசியலில் கால் பாதித்தவர்களின் வரலாற்றுப் பாதிப்புக்களை , அவற்றின் தாரதம்மியங்களுக்கு ஏற்ப வரலாறும் பதிவில் வைத்திருக்கும்.!  விமர்சனங்களுக்கு உட்படுத்தும்!

சில வருடங்களுக்கு முன்னர்  இலண்டனில் இயங்கும் புலிகளின் துதிபாடும் வானொலி ஒன்றில்  அமிர்தலிங்கத்தைக் கொன்றவர்  விசு என்ற புலி என்று பகிரங்கமாக புகழ்பாடிய நாட்டில் புலம் பெயர்ந்து வாழ்ந்தவர் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம். கொலைஞரைத் துதி பாடுவோர் வாழும் நாட்டில் அவரின் காதுகளுக்கு அந்த கொடியோரின் குரல் கேட்டிருந்தால் மிகுந்த துயரமுற்றிருப்பார்.

அமிர்தலிங்கத்தை கொன்றவர்கள் , அழிந்து போனார்கள் என்பதை தனது வாழ்நாளில் கண்ட பின்னரே அவர் கண் மூடி உள்ளார். 

நான் அறிந்த வரையில் ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில்  ஒரு தமிழரின் மரண நிகழ்ச்சியில் இவ்வளவு மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தியது என்பது இரண்டாவது தடவையாகும். முரண் நகையாக அமிர்தலிங்கத்தைக் கொன்றவர்களின் குரலாக திகழ்ந்த அன்டன் பாலசிங்கத்தின் மரண நிகழ்வின் பின்னர்  இவரின் மரண நிகழ்விலே ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த முரண் நகை மரண நிகழ்வுகளே ஒரு வரலாற்று முன்னுதாரணத்தை விட்டுச் செல்கிறது.  தமிழர் அரசியலில் பயங்கரவாதம் , அதி தீவிர இனவாதம் முடிந்த புள்ளியில் ஜனநாயக மிதவாத அரசியல் மீளுயிர்ப்பு பெற்றுள்ளது. இவரின் மரணத்தை இருட்டடிப்பு செய்த, இவரின் கணவரின் கொலையை நியாயப்படுத்திய கொலையாளிகளின் ஆதரவு அரசியலை தனது மரணத்தின் மூலம் தோல்வியுறச் செய்துள்ளார் திருமதி அமிர்தலிங்கம்.  அவர்களின் (புலிகளின் ) தோல்வியையும் , அதற்கான நியாயங்களையும் அவரே பட்டறிந்துள்ளார்.

இவரை இரண்டு நிகழ்வுகளில் சந்தித்துள்ளேன். அவரின் அரசியல் சார்ந்த எனது அபிப்பிராய வேறுபாடுகளுக்கு அப்பால் , அவர் கலந்து கொண்ட அந்த இரண்டு நிகழ்வுகளிலும் அவரும் நானும் உரையாற்றி உள்ளோம். அதில் ஒரு நிகழ்வே இங்கு நினைவு கூறப்படுமளவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.


  7 மார்ச் 2006 ஆண்டு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின்  "டேராசே மார்கி"  அறையில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்  தமிழ் மிதவாத அரசியல் அனுசரணையுடன் , சில பிரபல பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் நடத்தப்பட்ட   மனித உரிமை தொடர்பான தமிழர் பிரச்சார நிகழ்ச்சி ( Tamils campaign for Human Rights in British Parliament) மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும் .  அந்த நிகழ்வில் அவர் ஆற்றிய உரையின் சில பகுதிகளை மாத்திரம் இங்கு மீட்டுப் பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் பொதுவாகவே சகல தமிழ் அரசுக் கட்சியின் , அல்லது தமிழர் கூட்டணியின் அரசியல்வாதிகளைப் போலவே  இலங்கைத் தமிழரின் வரலாறு , அவர்களின் உரிமைப் போராட்டங்கள் , அதற்கான நியாயங்கள்  என்பவற்றை அவர் தனது உரையில் முன் வைத்தார். தனது உரையில் திருமதி அமிர்தலிங்கம்

"சிங்கள கொடூரங்களின் ஏற்படுத்திய பயத்தின் காரணமாக  தெற்கில் வாழ்ந்த தமிழர்கள் வடக்கு,  கிழக்கு பகுதிகளுக்கு ஓடினார்கள் . ஆனால் இன்று புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் பகுதிகளில்  கூட எங்களின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை.

இலங்கை அரசாங்கம் கொன்றதை விட அதிக தமிழர்களை புலிகள் கொன்றிருக்கின்றனர். தமிழர்களை அவர்கள் (புலிகள்) தொந்தரவு செய்கின்றனர். "
என்று குறிப்பிட்டார்.

அது மாத்திரமல்ல அந்த நிகழ்வில் தான் இலண்டனில் பேரூந்தில் சென்ற பொழுது சந்தித்த ஒரு இளம் தமிழ் பெண் (தாய்) புலிகள் , தன்னிடம்  இரண்டாயிரம் பவுன்  ( சுமார் 360,000 இலங்கை ரூபாக்களை ) கேட்டிருப்பதாக  அழுதுகொண்டு சொன்னதை திருமதி அமிர்தலிங்கம் நினைவு கூர்ந்தார். ஒரு பெண்ணாய் புலிகளின் கொடூரத்தின் விளைவாய் கணவனை இழந்த பெண்னான திருமதி அமிர்தலிங்கம் ,   புலம்பெயர்ந்த தேசத்திலும் ,- அதுவும் இலண்டனில் - புலிகளின் நெருக்குவாரத்தால் துயுருரும்  மற்றுமொரு பெண்ணிற்கு துணை நின்றதை இச்சம்பவம் சுட்டிக் காட்டியது.  

அமிர்தலிங்கம் மறைந்த பின்னர் திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் இலண்டன் வந்து தனது பிள்ளைகளுடன் வாழ்ந்ததனால் புலிகளின் தொல்லைகளில்  இருந்து அவரால் தப்பிக்க முடிந்தது. அதேவேளை  (1987 இல் ) புலிகளால்  அமிர்தலிங்கத்துடன் தனது கணவனும் உடனிருந்த வேளையில் கொல்லப்பட்ட பொழுதும் திருமதி யோகேஸ்வரன்  அரசியலில் துணிச்சலாக நுழைந்தார்.

 திருமதி யோகேஸ்வரன் தனது கணவன் விட்டுச் சென்ற அரசியலை தொடர முயன்றார். யாழ் மாநகராட்சி சபையில் முதல் பெண் மேயர் என்ற சரித்திரத்தை மாத்திரமே அவரால் விட்டுச் செல்ல முடிந்தது. அவர் ஓராண்டு கூட பதவில் இருக்க புலிகள் விடவில்லை , அவரின் கணவரைச் சுட்டுக் கொன்றது போலவே இவரையும் சுட்டுக்  கொன்றனர். புலிகளால் சுடப்பட்ட முதல் பெண் தமிழ் அரசியல்வாதியாக இவர் இருக்க வேண்டும். 
தனது கணவர் இறந்து சுமார் பதினோரு ஆண்டுகளுக்கு பின்னர்  1988 ஆம் ஆண்டு இவர் யாழ் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்பதை கேள்வியுற்றவுடன் யாழ்ப்பாணத்தில் , புலிகள் ஒரு கண்டனக் கவிதை ஒன்றை பிரசுரமாக வெளியிட்டிருந்தனர்.  புலிகள் அக்கவிதையில் திருமதி சரோஜினி யோகேஸ்வரனுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் திருமதி சரோஜினி யோகேஸ்வரனோ புலிகள் ஒரு பெண்ணென்ற வகையிலும் ,  உயரிய நோக்கத்துடன் தேர்தலில் போட்டியிடுவதற்காகவும்  புலிகள்  தனக்கு எவ்வித தீங்கும்  இழைக்கமாட்டார்கள் என்று வெளிப்படையாக கூறினார். புலிகளின் கவிதையின் இறுதி வரிகள் புலிகளின் கொள்கைப் பிரகடனமே கொலைகள்தான் என்பதை பறைசாற்றின . 

" வெள்ளவத்தையில் வீதியுலாவும்
கொள்ளுப்பிட்டியில்
கோலாகலமாக இருந்த
சீமாட்டிக்கு சிம்மாசனம் தேவையாம்
.........

வருவோம் எனச் சொல்லுக
வருவோம்.......!  

புலிகளின் எச்சரிக்கை நிதர்சனமானது. அந்த வகையில் திருமதி அமிர்தலிங்கம் இலண்டன் ஏகி தனது பிள்ளைகளுடன் அவர் தம் குடுமபத்துடன் , பேரக் குழந்தைகளுடன் ஒரு  அமைதியான வாழ்க்கை வாழ்ந்து மறைந்துள்ளார். பல புகழ்பெற்ற அரசியல்வாதிகளின் துனைவியர்களைப் போல , அரசியலுக்கு அன்னியமில்லாத ஒருவராக இருந்தும் , அரசியல் துறவறம் பூண்டு , அந்நிய நாட்டில் அமைதியாக வாழ்ந்து மறைந்துள்ளார். அவரின் பிள்ளைகளும் குடும்பத்தினரும் , போராட்டம் என்ற பெயரில் அழிந்துபோன ஆயிரமாயிராம் சிறுவர்களை நினைத்திருக்க வேண்டும் , அதற்காக பச்சாதாபப்பட்டிருக்க வேண்டும். ஒரு தடவை  டாக்டர்  பகீரதன் இலங்கையின் வடக்கில் அநாதை சிறுவர்களுக்கு கல்வி அளிக்கும் பணி உட்பட பல சிறுவர் நலம் சார்ந்த பல சமூகப் பணிகளில்  ஈடுபட்டு வருவதாக என்னிடம் ஒரு விமானப் பயணத்தின் பொழுது குறிப்பிட்டார்.

பிற் குறிப்பு: திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விரும்பும் குறள் என , அவரின் மகன் . பகீரதன் மரண அஞ்சலி நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்த குறளே  மேலிடப்பட்டுள்ளது.
No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...