எஸ்.எம்.எம்.பஷீர்.
இலங்கையின்
அரசியல் வரலாற்றில் முதன்முறையாக அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள்
குறித்து பொதுமக்களின் அபிப்பிரயாயங்களை அறிந்து கொள்ள நியமிக்கப்பட்ட
குழு இலங்கையின் பல
பாகங்களுக்கும்
சென்று அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பில் மக்களிடமிருந்து
வாய்மொழி மூலமாகவும் மற்றும் எழுத்து மூலமாகவும் சமர்ப்பணங்களைப் பெற்று
வருகிறது. இக்குழுவினர் உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான
முன்மொழிவுகளை மக்களிடமிருந்து பெறுவதற்காக கிழக்கு மாகாணத்திற்கும் சென்ற
வாரம் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இக்குழுவினர்
நாடுதழுவிய அமர்வுகளின் மூலம் பெறப்படும் அரசியல் யோசனைகளை உள்வாங்கி
அறிக்கையொன்றைத் தயாரிக்கவும் அத்துடன் சிபார்சுகளைப் பரிந்துரைக்கவும்
பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவினால் கோரப்பட்டுள்ளனர். இதற்கான
அனுமதியை பிரதம மந்திரி அமைச்சரவையிடமிருந்து பெற்றுள்ளார். இக்குழுவினரின்
அறிக்கைகள் மற்றும் சிபாரிசுகள் என்பன அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள்
மீதான அமைச்சரவை உப குழுவுக்குச் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர்
அமைச்சரவை உப குழுவின் மூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று
நம்பப்படுகிறது. நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பானமையைப் பெற்று இறுதியில்
சர்வஜன் வாக்கெடுப்பு மூலமே சட்டவாக்கம் நடை பெறும் .
அரசியல் கட்சிகளின் பிரதிநிகளையும் சிவில் சமூக பிரதிநிகளையும் உள்ளடக்கிய இக்குழு நேரடியாக அரசியல் கட்சிகளின் சமர்ப்பனங்களை உள்வாங்க அமைக்கப்படவில்லை என்றாலும் இவ்வாறான அமர்வுகளில் கலந்து கொண்ட சிவில் சமூக அமைப்புக்கள் சில அரசியல் கட்சிகளின் கருத்துக்களை முன் மொழிந்துள்ளன. சிவில் அமைப்புக்களின் பெயரில் , பொது மக்கள் குழு என்ற வகையில் குழு அமர்வுகளில் கலந்து கொண்டவர்களில் பலர் அரசியல் கட்சிகளில் அங்கத்துவம் வகிப்பவர்கள் அல்லது அரசியல் கட்சிகளுடன் அல்லது அப்பிரதேச அரசியல் வாதிகளுடன் நெருக்கமாக செயற்படுபவர்கள். அந்த வகையில் அவர்கள் சமர்பித்த யோசனைகளை அரசியல் தந்திரோபாய அணுகுமுறையுடன் அரசியல்வாதிகளால் வழி நடத்தப்பட்டவை என்பதால் முற்றும் முழுதாக பகிரங்கப்படுத்தப்படவில்லை என்ற ஒரு அப்பிப்பிராயமும் நிலவுகிறது. எது எப்படியோ , எதோ ஒரு விதத்தில் பொது மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவின் இறுதி அறிக்கையில் அல்லது சிபாரிசில் பொது மக்களின் கருத்துக்கள் /ஆலோசனைகள் ஆங்காங்கே அரசியல் சட்டத்தில் இடம்பெறும் வகையில் உள்வாங்கப்பட்டுள்ளதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இன்னொரு விதத்தில் சொல்வதானால் பொது மக்களின் கருத்தறிதல் என்ற செயன்முறை மிக நிதானமாகவும் அவதானமாகவும் இடம்பெற்றதாக தெரியவில்லை. மிகக் குறுகிய காலத்தில் இடம்பெற்ற அமர்வுகள் பொது மக்களுக்கு போதிய அவகாசத்தை வழங்கவில்லை என்றே சொல்ல வேண்டும் . அந்த வகையில் தனி நபர்களின் யோசனைகளை விட ஏற்கனவே ஆரசியல் சீர்திருத்தம் தொடர்பில் அக்கறையும் ஆர்வமும் காட்டிவந்த அரசியல் கட்சிகள் , சிவில் சமூக அமைப்புக்களின் யோசனைகளை என்பன இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த அரசியல் சீர்திருத்தங்களில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆலோசனைகள் கோரப்பட்டாலும் , தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்த அம்சமே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் தமிழர் தரப்பு இலங்கையின் இன்றைய அரசு மூலமே அரசியல் தீர்வு காண முடியும் என்று நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்கு காரணமாக ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானம் இருக்கிறது , அந்த தீர்மானத்துக்கு ஒத்துழைத்த மேற்கு நாடுகள் இருக்கின்றன.
இந்த தீர்வு விவகாரத்தில் மிக முக்கிய அம்சமாக அமையப்போவது தமிழரின் பூர்வீக தாயகக் கோட்பாட்டின் (திம்பு கோட்பாட்டின் ) அடிப்படையில் தீர்வு முயற்சிகளில் கிழக்கு மாகாணத்தை மீண்டும் வடக்குடன் இணைக்க கூறுவதாகும். அந்த பின்னணியில் பொதுமக்கள் , சிவில் சமூக அமைப்புக்கள் கிழக்கில் முன்வைத்த யோசனைகளை ஆராய வேண்டி உள்ளது. குறிப்பாக தமிழ் முஸ்லிம் மக்களின் யோசனைகளில் வடக்கு கிழக்கு இணைப்பும், அந்த இணைப்பினூடாக வடக்கு கிழக்கில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களை இணைத்து தனியான முஸ்லிம் மாகாணம் அல்லது சுயாட்சிப் பிரதேசம் கோருவதும் , வடக்கு கிழக்கு இணைப்பை முற்றாக எதிர்ப்பதுமான விவகாரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை , மட்டக்களப்பு , அம்பாறை ஆகிய இடங்களில் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் குறித்து பொதுமக்களின் அபிப்பிரயாயங்களை அறிந்து கொள்ள நியமிக்கப்பட்ட குழுவானது தனது அமர்வுகளை ஒரு வார காலத்துள் முடித்துள்ளது. அந்த வகையில் முஸ்லிம்கள் தொடர்பில் இக்குழுவில் யோசனைகளை சமர்ப்பித்த தனி நபர்கள் சிலர் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு குறித்து மிகவும் வெளிப்படையாக தங்களின் ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளனர் . அத்துடன் குழுவிற்கு தெரிவித்த யோசனைகளில் அவ்வாறு ஆட்சேபனை தெரிவித்த நபர்கள் (பொது மக்கள்) அல்லது குழுவினர் தங்களின் ஆட்சேபனைகளை பதிவு செய்திருப்பார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது.
கிழக்கில் வாழும் தமிழ் மக்களைப் பொருத்தவரை பல தமிழ் சிவில் அமைப்புக்கள் வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தும் கோரிக்கையினை முன் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. பெரும்பான்மையான தமிழ் சிவில் அமைப்புக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வழி நடத்தப்பட்டுள்ளன என்றும் , அவர்கள் வடக்கு கிழக்கு கோரிக்கையினை அடிப்படையாகக் கொண்டு சமஷ்டி வரையான தீர்வினை முன் மொழிந்துள்ளதாக அறிய முடிகிறது.
வடக்கு கிழக்கு இணைப்பு ஏற்படுத்தப்படாது விட்டால் தமிழ் மக்களின் இதுகாலவரையான சகல சாத்வீக ஆயுத போராட்டங்களும் வியத்தமாகிவிடும் என்ற உணர்வு மேலோங்கி இருக்கும் வகையில் உணர்வும் தர்க்கமும் பின்னிப் பிணைந்த அரசியல் கருத்தியல் மிக ஆழமாக தமிழ் மக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது என்பதும் இங்கு கவனத்துக்குரியது. ஆயினும் தமிழ் மக்கள் மத்தியில் இணைப்புக்கு எதிரானவர்கள் மிகச் சிறுபான்மையாக இருக்கிறார்கள் என்பதும் , அவர்கள் , இணைப்பை விரும்பும் தமிழ் தேசியவாத சக்திகளுக்கு முன்னாள் , குறிப்பாக இவ்வாறான பகிரங்க செயற்பாடுகள் மூலம், தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பவில்ல என்பதும் குறிப்பிடத் தக்கது.
அவ்வாறே முஸ்லிம்களைப் பொருத்தவரை கடந்தகால கசப்பான அனுபவங்களை நினைவூட்டி அரசியல் ரீதியில் வடக்கு கிழக்கு இணைப்பின் மூலம் முஸ்லிம்கள் அரசியல் பலம் இழக்க நேரிடும் என்பதை வலியுறுத்தி , வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது என்று முஸ்லிம் சிவில் சமூகத்திலிருந்து மீண்டும் ஆங்காங்கே குரல் எழுப்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் அரசியல் பிரக்ஞை , சிவில் சமூக அமைப்புக்களின் நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம் மக்களோ அல்லது முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களோ மிக மிக பின் தங்கியவர்களாகவே இருந்து வருகின்றனர். அரசியல் ஆலோசனைக் குழு சந்திப்புக்களிலும் முஸ்லிம்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவாகவே காணப்பட்டிருக்கிறது. சிவில் அமைப்பு மூலம் அல்லது தனிநபர் சமூக முன்னெடுப்புக்கள் மூலம் முஸ்லிம்களுக்கு எத்தகைய அரசியல் அபிலாஷைகள் உண்டு என்பதை அரசியல் கட்சிகள் சாராத முஸ்லிம்கள் மிகக் காத்திரமாக முன்னெடுக்க தவறி இருக்கிறார்கள். வழக்கம்போலவே தங்களின் அரசியல் கட்சிகள் தங்களுக்கான அரசியல் அபிலாசைகளை முன்னெடுப்பார்கள் என்று முஸ்லிம்கள் பெரிதும் நம்பி இருக்கிறார்கள் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது. கிழக்கில் நடைபெற்ற அமர்வுகளில் முஸ்லிம்களின் மிகக் குறைந்த பங்களிப்பு அவதானிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்துக்கு அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் குறித்து பொதுமக்களின் அபிப்பிரயாயங்களை அறிந்து கொள்ள நியமிக்கப்பட்ட குழு விஜயம் செய்ய சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரான சேகு தாவூத் பசீர் சட்டென்று மவுனம் கலைத்து முஸ்லிம் காங்கிரசின் கோரிக்கை முஸ்லிம் மாகாண சபையே என்றும் , அதுவே தனது தலைவரின் கோரிக்கையாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலடியாக முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் மறைந்த தலைவர் அஸ்ரபின் மகன் தனது தந்தையின் கருத்தை அரசியல் நிலைப்பாடுகளை பசீர் திரிபு படுத்துகிறார் என்று திடீரென்று தோன்றி கருத்து வெளியிட்டுள்ளார்.
தொடரும்
No comments:
Post a Comment