வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் ! (3)

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் ! (3)
எஸ்.எம்.எம். பஷீர்
1980களின் முற்பகுதியில் கிழக்கிலே தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான முரண்பாடுகள் ஆங்காங்கே துளிர்விடத் தொடங்கினாலும்  முஸ்லிம்கள்  தனித்துவ அரசியல் பிரக்ஞை கொண்டவர்களாக அல்லது தங்களுக்கென ஒரு அரசியல் கட்சியினை முழு அளவில் ஆதரிப்பவர்களாக இருக்கவில்லை . தேசிய அரசியல் நீரோட்டத்தில் இரு பெரும் அரசியல் கட்சிகளில் ஒன்றை ஆதரிப்பவர்களாக முஸ்லிம்கள் இருந்த நிலையில் , முஸ்லிம் காங்கிரஸ் 1981 களில் தோற்றம் பெற்றது. எனினும்  முஸ்லிம் மக்களின் ஆதரவு பெற்ற ஒரு கட்சியாக 1980 களின் பிற்பகுதியில் , குறிப்பாக இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னரே, அது பரிணமித்தது.  முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் நம்பிக்கையுடன் செயற்படும் சூழல் அப்பொழுதுதான் கனிந்து காணப்பட்டது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னரே 1988 இல் தான் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு கட்சியாகப் பதிவு செய்யுமளவு வீரியம் பெற்றிருந்தது என்பதையும் , அதற்கான சூழல் கனிந்து காணப்பட்டது என்பதையும்   இங்கு கவனிக்க வேண்டும். இக்கட்டுரை தொடரில் ஏற்கனவே குறிப்பட்டது போல இந்திய ஒப்பந்தமே வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் மிக முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் அனாதரவுத் தன்மையை  , "அடிமைச் சாசனம்" எனப்பட்ட இந்திய அரசின் ஆக்கிரமிப்பு ஒப்பந்தத்தை அஸ்ரப் தனது அரசியல் விழுதாக பயன்படுத்திக் கொண்டார்.  

இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டதன் பின்னணியிலேதான்  முஸ்லிம் அரசியல் கட்சிகள் அல்லது இயக்கங்கள் கிழக்கிலே மீண்டும் உயிர்ப்புடன் செயற்பட முன் வந்தன. அந்த வகையில் முஸ்லிம் காங்கிரஸ் இந்திய வலைக்குள் சிக்க வைக்கப்பட்டது.  மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட வைக்கப்பட்டது. போட்டியிட்டது. இலங்கை மீதான இந்தியாவின்  ஆக்கிரமிப்பு வட -கிழக்கு மாகாண சபையாக உருவெடுத்தது.

இங்கு இடைச் செருகலாக ஞாபக மூட்ட வேண்டிய ஒரு சம்பவம் ,

இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை மிகத் தீவிரமாக எதிர்த்த ஜே வீ பீ  , பின்னாளில் இந்திய ஒப்பந்தத்தினால் 13 திருத்தச் சட்டமூலம் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களில் பங்குபற்றுவது குறித்து  முன்னாள் ஜே வீ பீ தலைவர் சோமவன்ச அமரசேனாவிடம்,  இக்கட்டுரையாளர் வினவிய பொழுது , சோமவன்ச ஆத்திரமுற்றார்.  மேலும் அதுபற்றித் தொடர்ந்த வினாக்களுக்கு விடையளிப்பதை  தவிர்த்துக் கொண்டார்.   


முஸ்லிம்கள் தங்களுக்கு என ஒரு தனியான மாகாணம் வேண்டும் என்று நாடி இருந்தார்களா என்ற கேள்விக்கு மீண்டும் மறு விஜயம் செய்ய வேண்டி உள்ளது.

முஸ்லிம் காங்கிரசின் தலைவரான அஸ்ரப் தமிழ் ஈழம் கோரி தமிழர் கூட்டணியுடன் கூட்டு வைத்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த வேளையில் கிழக்கு முஸ்லிம் மக்கள் , அஸ்ரபையும் அவருடன் சேர்ந்து நின்ற முஸ்லிம்  அரசியல்வாதிகளையும் நிர்தாட்சண்யமாக புறக்கணித்தனர். 

முஸ்லிம் மாகாண சபை அல்லது ஏதேனும் முஸ்லிம்களுக்கான தனி நிர்வாக அலகு  பற்றிய சிந்தனைகள்  எதுவும் முஸ்லிம் மக்களுக்கு இருக்கவில்லை. 1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியினால் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு அஸ்ரப் புறந்தள்ளப்பட்ட பொழுது , 1981 இல் முஸ்லிம்களுக்கான தனி அரசியல் கட்சியினை அஸ்ரப் தோற்றுவிக்க முற்பட்டார்.

1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தல் பிரச்சாரங்களின் பொழுது அம்பாறை -திகாமடுல்ல மாவட்டத்தில் - அஸ்ரப் தமிழ் ஈழ தனினாட்டுக் கோசம் ( வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தினை உள்ளடக்கிய தனியரசு  ) எழுப்பிய பொழுது , அதே தேர்தலில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் , மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிட்ட   முன்னாள் கல்வி அமைச்சரான மறைந்த கலாநிதி பதியுதீன் மஹ்மூது அவர்களின் தேர்தல் மேடைகளை அலங்கரித்த அன்றய பிரபல அரசியல் பேச்சாளரான காத்தான்குடியை சேர்ந்த ரசூல் ஆசிரியர்   காரணகாரியமின்றி எதுகை மோனையாய் முஸ்லிம்களை கவருவதற்காக ஒரு புதிய அரசியல் கோசத்தை முன்வைத்தார். அதுதான் ” அடைந்தால் கிழக்கிஸ்தான் அடையாவிட்டால் "கபுரிஸ்தான்” அதாவது முஸ்லிம்களுக்கு என ஒரு தேசமாக “கிழக்கிஸ்தான்” அடையப்பட வேண்டும்; அவ்வாறு "கிழக்கிஸ்தான்" அடையப்படாது விட்டால்  மரணமடைந்து அடக்கஸ்தலத்தை அடையவேண்டும். (இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவு கோரி முஹம்மது அலி ஜின்னாஹ் தரப்பினால் முன்வைக்கப்பட்ட  கோசத்தை ஒத்தே இந்த கோசம் அமைந்திருந்தது) 

வினோதமாக ,  இரண்டு கோசங்களிலும்  முதலாவது அஸ்ரப் "போராடிய"  தமிழ் ஈழம் முஸ்லிம்களின் அரசியல் சிந்தனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அவர்கள் அந்தக் கோசத்தை ஆதரிக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க  அவர்கள் அதைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவுமில்லை. அது போலவே மட்டக்களப்பு மாவட்டத்தில் "கிழக்கிஸ்தான்" கோசமும் வெறும் அலங்கார மேடைப்பேச்சாகவே கருதப்பட்டது. ஆனாலும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதி முஸ்லிம்களைப் பொருத்தவரை பதியுதீன் வென்றால் அரசியலில் தாங்கள் மிகுந்த செல்வாக்குப்  பெற முடியும் என்று அவர்கள் நம்பினார்கள்.

இலங்கை இந்திய ஒப்பந்ததிதிற்கு முன்னரே , முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள சகல முஸ்லிம்  பிரதேசங்களையும் உள்ளடக்கி முஸ்லிம் மாகான சபைக் கோரிக்கையை  தங்களின் கட்சியின் கொள்கையாக ஏற்றுக் கொண்டிருந்தது , அது போலவே , "1985 இல் கல்முனையில் நடைபெற்ற சர்வகட்சி முஸ்லிம் பிரமுகர்கள் மாநாட்டிலும் முஸ்லிம்களின்  பாதுகாப்பு , தனித்துவ அடையாளம்  என்பவற்றை பேணுவதற்காக முஸ்லிம் மாகாணக் கோரிக்கை ஏற்றுக்  கொள்ளப்பட்டது " ( ஜி . நடேசன்) .

ஆனால் முஸ்லிம்  மக்களின் அரசியல் சிந்தனைத் தளத்தை தொடாத "முஸ்லிம் மாகாண சபைக் " கோரிக்கையை முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கப் புறப்பட்ட  முஸ்லிம் அரசியல்வாதிகள் முன் வைக்க காரணங்கள் என்ன என்பது பற்றிய உள்ளார்ந்த அரசியலும் , புற அரசியல் நிலவரங்களும் , அவ்வாறான கோரிக்கைகளை முன் வைத்தோரின் அரசியல் அபிலாசைகளும் , அவற்றிற்கான மக்களின் பிரதிபலிப்புக்களும் கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் வரலாற்று ஆய்வுகளுக்கு அவசியமானவை. 

 தமிழ் தேசிய அரசியலில் ஏற்பட்ட அதிருப்தியுடன் அஸ்ரப் நீண்டகாலம் ஒதுங்கி இருக்கவில்லை . மீண்டும்  உடனடியாகவே முஸ்லிம்களுக்கான தனித்துவ அரசியலை முன்னெடுத்தார்.  மாவட்ட அபிவிருத்தி தேர்தலில் தமிழரசுக் கட்சினர் அவரைப் புறக்கனித்தவுடனே (1981), தமிழ் ஈழம் கோரிய அஸ்ரப் கல்முனையில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில்  "கிழக்கிஸ்தான்" கோசம் எழுந்த காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸ் ,  முன்னாள் காத்தான்குடி சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான , காத்தான்குடி பட்டினாட்சி மன்ற தவிசாளரான அஹமது லெப்பையின் துணையுடன் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது.

இம்முறை 1977 இல் அவர் கோரிய தமிழ் ஈழத்துக்கு பதிலாக முஸ்லிம்களை அதையொத்த அரசியல் தடத்தில் கொண்டு செல்ல முஸ்லிம் மாகான சபைக் கோரிக்கையை அவர் பிரச்சாரப்படுத்தினார்.  யதார்த்தத்தில் அவரிடம் எந்தவிதமான சாத்தியமான திட்டங்களும் இருக்கவில்லை. அது போலவே அது பற்றி சிலாகித்த எந்த முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும் அல்லது  அக்கரையுடயோரிடமும் நடைமுறை சாத்தியமான திட்டம் எதுவும் இருக்கவில்லை.
ஆனாலும் அஸ்ரப் ஒரு சட்டத்தரணி என்ற படியாலும் அரசியல் அமைப்பு சட்டவாக்கங்கள் குறித்து ஆர்வம் கொண்டிருந்தபடியாலும் , அவரைப் பொருத்தவரை 1957 இன் பண்டா- செல்வா ஒப்பந்தம் முஸ்லிம் மாகாண சபை குறித்து ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கலாம். ஏனெனில் கிழக்கில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பிராந்திய சபைகளை நிறுவுவதைப் பற்றி அது முதன் முதலில் ஒரு ஒப்பந்த வரைபாக   உருவெடுத்திருந்தது,

பண்டா செல்வா ஒப்பந்தம்  பகுதி – ஆ, (2) குறிப்பிடும்

"வடமாகாணம் ஒரு பிராந்திய சபையாகவும், கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது கூடிய பிராந்திய சபைகளாக அமையும்."

பண்டா செல்வா ஒப்பந்தம்  பகுதி – ஆ, (3) குறிப்பிடும்

மாகாண எல்லைகளையும் தாண்டி 2 அல்லது மேற்பட்ட பிராந்திய சபைகள் இணைவதற்கு சட்டத்தில் ஏற்பாடு செய்யப்படும்; பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கு அமைவாக, ஒரு பிராந்திய சபை தன்னைப் பிரித்துக் கொள்ளவும் இயலுமாயிருக்கும் ,  2 அல்லது மேற்பட்ட பிராந்திய சபைகளுக்கு பொதுவான குறிப்பிட்ட நோக்கங்களும், அவை சேர்ந்து செயல்பட சட்டத்தில் இடமிருக்கும்.
தொடரும்

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...