வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் ! (5)


எஸ்.எம்.எம்.பஷீர்.
முஸ்லிம் காங்கிரஸ்  , தனது முஸ்லிம் மாகாண சபைக்கான அரசியல் கோசங்களை seyad bazeerதேர்தல் பிரச்சாரங்களுக்காகவே முன்வைத்து வந்ததனால் , அது பற்றிய நடைமுறைச் சாத்தியங்கள் பற்றிய ஒரு ஆய்வினை அவர்கள் செய்திருக்கவில்லை என்பதையே 1990இல் கொள்ளுப்பிட்டியில் நடந்த இரண்டாவது முஸ்லிம் காங்கிரசின்  உயர்பீட சம்பாசனைகளும் உறுதி செய்தன. ஆனால் மீண்டும் 1994 இல் சந்திரிக்கா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்து,  இனப் பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப் பரவலாக்கம் பற்றிப் பேசும்  ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார்.
 

சந்திரிக்கா தமிழ் முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவை  பெற்று  சமாதானத்தைக் கொண்டு வரும் வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்ததால் முஸ்லிம் காங்கிரஸ்  அவருக்கு ஆதரவு வழங்கி  ஆளும் கட்சியில் அதிக முக்கியத்துவம் பெற்றது. ஆகவேதான் முஸ்லிம் காங்கிரஸ் 1995 இல்  மீண்டும் முஸ்லிம் மாகாண  சபை அல்லது அதையொத்த நிர்வாக அலகு குறித்து (வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட நிலையில் ) எப்படி அமைவது பற்றி ஆராய்ந்தனர். ஆனால் ஒரு மூடிய அறையில் தங்களின் உயர் கட்சி உறுப்பினர்களுடன் செய்யப்பட்ட கருத்தாடல்கள் என்ற வகையில் அவை திரும்பவும் மட்டக்களப்பு முஸ்லிம்களை தெற்கிற்கு இடப்பெயர்வு செய்வது பற்றி கருத்துரையாடல் செய்வதாகவே  அமைந்தது.

புதிய அரசியல் யாப்பு பற்றிய வரைபு ஒன்றினை தயாரிக்கும் பணியில் முஸ்லிம் காங்கிரசின்  தலைவரும் சந்திரிக்கா அரசால் ஆலோசிக்கப்பட்டார். அரசியல் யாப்பு நீண்ட ஆய்வுகளின் பின்னர் 1997ல் வரைபாக உருவெடுத்தது. ஆனாலும்  இந்த வரைபு ஆகஸ்து  2000 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் மசோதாவாக முன் வைக்கப்பட்டு , பின்னர் , மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் யாப்பு சீர்திருத்த மசோதாவாக கொண்டு வரப்பட இருந்தது. அம் மசோதா முன்னெடுத்துச் செல்லப்படாமல் போனதற்கான காரணங்கள் என்ன என்பது பலரும் அறிந்ததே.  .

எனினும் சந்திரிக்காவின் சட்ட சீர்திருத்த  மசோதா  வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கான ஒரு இடைக்கால அலகு ஒன்றை ( Interim Regional Council for the Northern and Eastern Regions) நிறுவது பற்றி குறிப்பிட்டிருந்தது.  அந்த  காலகட்டத்தில்தான் வடக்கு கிழக்கு இடைக்கால கவுன்சிலுக்கான முஸ்லிம் காங்கிரசின் பிரேரணைகளும் கட்சியினால் முன் வைக்கப்பட்டன. அந்த பிரேரணைகளில் மிக முக்கிய அம்சம்   திகாமடுல்ல மாவட்டத்தில்  கல்முனை , சம்மாந்துறை , பொத்துவில் ஆகிய  பிரதேசங்களை உள்ளடக்கி ஒரு புதிய நிர்வாக அலகுக்கான  கோரிக்கையை (கரையோர மாவட்டம் ) முஸ்லிம் காங்கிரஸ் முன் வைத்தது.

முஸ்லிம் காங்கிரசின் முஸ்லிம் மாகாண சபைக் கோரிக்கையானது 2000 ஆண்டுகளில்  வெறுமனே ஒரு கரையோர மாவட்ட கோரிக்கையாக தேய்ந்து போனது.  நிலத் தொடர்பற்ற வடக்கு கிழக்கில் உள்ள ஏனைய பிரதேசங்களை  திகாமடுல்ல மாவட்டத்தோடு அதனோடு இணைத்து கொள்வது பற்றிய சிந்தனைகள் சிக்கலானதாகவே இருந்து வந்துள்ளது.  அதற்கான விவாதங்களும் முன்னர் சொன்னது போலவே அவ் வப்பொழுது இடம் பெற்று வந்தன. ஆனாலும் நடைமுறையில் நிலத் தொடர்பற்ற பகுதிகளை இணைப்பது , மட்டக்களப்பு மாவட்டத்து முஸ்லிம்களையும் , திகாமடுல்ல மாவட்ட  தமிழர்களையும் பரஸ்பர இடமாற்றம் செய்வது  நடைமுறைச் சாத்தியமற்றது.  முஸ்லிம்களின் தீர்வு சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் ஒரு பக்க மேளமாகமாவே  ஒலித்தது.

1990 களின் பின்னரான முஸ்லிம் அரசியல் பரிமாணம் என்பது வடக்கு கிழக்கிலே மிக அதிக விலை கொடுத்து பெறப்பட்டதாகும். வடக்கு முஸ்லிம்களின்  வெளியேற்றமும் கிழக்கு முஸ்லிம்களின் படுகொலைகளும் இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் கவனத்துக்குரிய ஒன்றாக மாறியது . ஆனால் அரசியல் ரீதியில் முஸ்லிம்களால் இலங்கையின் இனப் பிரச்சினைத் தீர்வுகளில் போதிய செல்வாக்கு செலுத்த முடியவில்லை. இலங்கை அரசும் புலிகளுடன் அல்லது தமிழ் தரப்பு அரசியல் சக்திகளுடன் தீர்வு காண முற்பட்டனரே ஒழிய முஸ்லிம்களை ஒரு அக்கறையுள்ள தரப்பினராக கருதிச் செயற்பட முன் வரவில்லை. அதற்கான சந்தர்ப்பங்களை புலிகளோ தமிழ் தரப்பினோ முஸ்லிம்களுக்கு வழங்கத் தயாராக இருக்கவில்லை. இந்த நிலைமை இந்திய-இலங்கை ஒப்பந்தத்துடன் தொடங்கி இறுதி நோர்வே ஒப்பந்தம் வரை நீடித்தது.

நோர்வே ஒப்பந்தத்திலும் , சுனாமிக்கு பின்னரான பொதுக் கட்டமைப்பு அமைப்பிலும் கூட  முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். அந்த வகையில் முஸ்லிம் காங்கிரசானது அதன் உருவாக்கப்பட்ட நோக்கத்தை கைவிட்டு வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை தகுந்த முறையிலும்  சரியான தருணங்களிலும் முன் வைக்க முடியாது போனது. அதிலும்  குறிப்பாக 1994 களின் பின்னர் மிக நீண்டகாலம் இலங்கை அரசின் பங்காளிகளாக முஸ்லிம் காங்கிரஸ் இருந்த பொழுதும் அவர்களால் பாரிய அரசியல் வெற்றியைப் பெற முடியவில்லை என்பது மிகவும் விசனத்துக்குரிய உண்மையாயாகும்.

அஸ்ரபின் மறைவுக்கு பின்னர் மஹிந்த ராஜபக்சவின் முதலாவது ஆட்சிக் காலத்தில் (2006) உருவாக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிகள் குழுவுக்கென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு கொள்கை  பத்திரத்தை (Policy Paper) சமாதானச் செயன்முறையும் அரசியல் சீர்திருத்தமும் (Peace Process and Constitutional Reform ) என்ற பெயரில்   கையளித்தது. இந்த "கொள்கைப் பத்திரம்" சவுத் ஆப்ரிக்காவில் உள்ள சட்ட ஆலோசகர்களின் உதவியுடன் வரையப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. எது எவ்வாறாயினும் , இந்த கொள்கை பத்திரத்தில் அரசியல் யாப்பின் கீழ் எல்லா சமூகங்களுக்கும் சமஷ்டி  அல்லது அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு வழங்கப்படல் வேண்டும் என்றும் , அவைகள் அரசியல் யாப்பின் கீழ் பாதுகாக்கப்படல் வேண்டும்  என்றும் , அவ்வாறான அதிகாரப் பகிர்வு / அல்லது சமஷ்டி  என்பது ,  வடக்கு கிழக்கு பகுதிகளை உள்ளடக்கிய விசேடமாக முஸ்லிம்களுக்கான சுயாதிக்க  பிரதேசத்தைக் கொண்டிருக்க வேண்டும்  என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த கோரிக்கை மிகத் தெளிவாகவே வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதை அங்கீகரிக்கிறது என்பதுடன் முஸ்லிம்களுக்கு வடக்கு கிழக்கில் உள்ள நிலத் தொடர்பற்ற முஸ்லிம் பிரதேசங்களை இணைத்து சுயாட்சி வழங்க வேண்டும் என்பதயும் -இன்னொரு விதமாகக் கூறினால் முஸ்லிம் மாகாண சபை அல்லது அதையொத்த கோரிக்கையை முன் வைக்கிறது என்பது  இங்கு குறிப்பிடத்தக்கது. 

1.            Empowerment of all communities through federalism or a meaningful devolution of powers established under and protected by the Constitution. This should include an autonomous area comprising parts of the North and East specifically for the Muslim community.

மேலும் அந்தக்  கோரிக்கைக்கு விளக்கமாக :-

Muslims of the North and East now need autonomy in areas where they are a majority, to give them a sense of security that derives from being able to make or fully participate in decisions that most directly affect them. We have developed detailed proposals on autonomy which are now being discussed within the Muslim community.

மொத்தத்தில் முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை அடைவதில் காத்திரமான எந்த வெற்றியையும் பெற முடியவில்லை. கிழக்கு மாகாணம்  வடக்குடன் இணைக்கப்பட்ட நிலையில் பல வருடங்கள் இருந்த பொழுதும் சட்ட பூர்வமாக கிழக்கை பிரிப்பது பற்றிய விவாதங்களை அவர்கள் எழுப்பவில்லை. வடக்கிலே முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு அகதிகளாக மீண்டும் தங்களின் மீள் குடியேற்றம் பற்றிய முனைப்புக்களுடன் இருந்த முஸ்லிம் காங்கிரஸ் அவ்வாறான கோரிக்கையை முன்னெடுக்க தயங்கி இருக்கலாம்.

முஸ்லிம்களால் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் தமிழர் தரப்பை ஒத்த அழுத்தத்தை  ஏற்படுத்த முடியவில்லை என்பதாகும். வடக்கு கிழக்கு தமிழர்களின் இன வரலாறு அரசியல் செயற்பாடு என்பனவற்றுடன் கிழக்கில் தனித்துவ முஸ்லிம் அரசியல் அடையாளத்தை சம தளத்தில் முன்னிறுத்த முடியவில்லை என்பது ஒரு யதார்த்தமான நிலைப்பாடாகவே இருந்தது.  தமிழர் தரப்பு இனப் பிரச்சினை தீர்வு என்பதும் முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வு என்பதும் ஒரு சமன்பாட்டை  அடைய முடியவில்லை. ஆனாலும் இன்று வடக்கு கிழக்கு மாகாணங்கள் உத்தியோகபூர்வமாக பிரிக்கப்பட்ட நிலையில் என்றுமில்லாதவாறு முஸ்லிம்களின் துணையின்றி வடக்கு கிழக்கு இணைக்கப்படுவது முடியாத ஒன்று என்பதை  தமிழர் தரப்பு நன்கு உணர்ந்துள்ளது. ஒருவேளை இந்திய இலங்கை ஒப்பந்தப்படி சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டிருந்தாலும்  கூட நிச்சயமாக கிழக்கு பிரிக்கப்பட்டிருக்கும். என்பதும் எவ்வித ஐயங்களுக்கும் அப்பாற்பட்ட உண்மையாகும். ஆனால் வடக்கு கிழக்கை பிரிக்க முடியமா என்ற கேள்வி பற்றி ஒரு சிலரே தனிப்பட்ட கலந்துரையாடல்களில் கேள்வி எழுப்பினர் . ஆனால் மக்கள் ஐக்கிய விடுதலை முன்னணியே உச்ச நீதி மன்றத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தை பிரித்தெடுத்தது. இதில் கிழக்கைச் சேர்ந்த இப்ராஹிம் என்ற முஸ்லிம் ஒருவரும் அவர்களுடன் சேர்ந்தே நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

தொடரும்

    

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...