இந்தியா இலங்கையின் நட்பு நாடா அல்லது நவ குடியேற்றவாத நாடா?

மார்ச் 18, 2016

Neo colonialism 2
ந்தியாவின் இந்துத்துவ வலதுசாரி அரசாங்கமும், இலங்கையின் மேற்கத்தைய சார்பு வலதுசாரி அரசாங்கமும் இரு நாடுகளுக்கிடையிலும் செய்து கொள்ள உத்தேசித்துள்ள ‘பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்’ (Economic and Technical Cooperation Agreement – ECTA) என்ற பெயரிலான உடன்படிக்கைக்கு இலங்கையின் தேசப்பற்றுள்ள அரசியல் சக்திகள் மத்தியிலும், மக்களிடத்திலும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டால். இந்தியாவின் தொழில்நுட்ப வல்லுனர்கள் இலங்கையின் தொழில்நுட்ப, விஞ்ஞானத்துறையில் ஆதிக்கம் செலுத்தவும், நமது பொருளாதாரத்தை இந்தியா கட்டுப்படுத்தவுமான சூழல் நிச்சயம் ஏற்படும் என்ற காரணத்தாலேயே, இலங்கையர்களில் கணிசமானோர் இந்த உடன்படிக்கையை எதிர்க்கின்றனர்.



ஆனால், மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, தற்போதைய அரசாங்கத்தின் ஐக்கிய தேசியக் கட்சிப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “என்ன எதிர்ப்பு வந்தாலும் ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவேன்” என ஒற்றைக்காலில் நிற்கிறார். மறுபக்கத்தில், நிறைவேற்று அதிகாரத்தின் பல அம்சங்களை இன்னமும் தனது கையில் வைத்திருப்பவரும், அரசுடன் பங்காளியாக இணைந்திருக்கும் ஒருபகுதி சிறீலங்கா சுதந்திரக் கட்சி அணியினரின் தலைவருமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த ஒப்பந்தம் பற்றி வாய்திறக்காமல் மௌனமாக இருக்கிறார்.

இன்னொரு பக்கத்தில், எடுத்ததிற்கெல்லாம் இந்தியக் காய்ச்சலால் அவதிப்படும் ஜே.வி.பி., இந்த ஒப்பந்த விடயத்தில் மிகவும் அடக்கி வாசிக்கின்றனர். இவர்கள்தான், கடந்த அரசாங்க காலத்தில் இந்தியாவுடன் ‘விசாலமான பொருளாதார பங்காளி ஒப்பந்தம்’ (Comprehensive Economic Partnership Agreemenet – CEPA) என்ற பெயரிலான ஒப்பந்தம் ஒன்றைச் செய்வதற்கு முயற்சி எடுத்தபோது, வானத்துக்கும் பூமிக்கும் இடையில் துள்ளிக்குதித்து எதிர்ப்பை வெளியிட்ட இலங்கையின் முன்னாள் ‘தேசப்பற்றாளர்கள்’ (தமது கட்சியிலிருந்து பிரிந்து சென்று தேசிய சுதந்திர முன்னணி என்ற தனிக்கட்சி அமைத்த விமல் வீரவன்சவையும், அதேபோல பிரிந்து சென்று முன்னிலை சோசலிசக் கட்சி என்ற கட்சியை அமைத்த குமார் குணரட்ணத்தையும் இன்றைய அரசைக் கொண்டு பழிவாங்குவதற்காக அதன் எல்லா நடவடிக்கைகளையும் ஜே.வி.பி. நிபந்தனையின்றி ஆதரித்து நிற்பது ஆச்சரியமானது அல்ல).

இலங்கையின் இன்றைய அரசு, இந்தியாவுடன் பொருளாதார – தொழில்நுட்ப ஒப்பந்தத்தை மட்டுமின்றி, வேறு பல ஒப்பந்தங்களையும் (சில இன்னமும் பகிரங்கப்படுத்தப்படவில்லை) செய்வதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. ஏற்கெனவே இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பலாலி விமான நிலையத்தையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் புனரமைக்கும் பணிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தற்போது புதிதாக பல ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. அதில் ஒன்று, இலங்கையில் அரசாங்க அம்புலன்ஸ் சேவை சிறப்பாகச் செயலாற்றும் சூழ்நிலையில், அதற்கும் மேலாக தேவையேற்பட்டால், தனியார்துறையினரும் தமது சேவையைச் சிறப்பாக வழங்கத் தயாராக உள்ள நிலையில், இந்தியாவிலுள்ள தனிப்பட்ட கம்பனிகள் இலங்கையில் அம்புலன்ஸ் சேவை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (அண்மையில் கூடிய தென் மாகாண அம்புலன்ஸ் சேவையாளர் சங்க வருடாந்த மாநாட்டில், தமது மாகாணத்தில் இந்திய அம்புலன்ஸ் சேவை நடைபெற அனுமதிக்கப் போவதில்லை என அச்சங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது)

இதுதவிர, இந்தியாவின் தமிழகக் கரைக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் தரைவழித் தொடர்பை ஏற்படுத்துவதற்காக பாலம் அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது வெறுமனே இரு நாடுகளுக்குமிடையிலான போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக என்று காரணம் கூறப்பட்டாலும், இதன் பின்னணி என்னவென்பதை ஊகிப்பது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. இந்தியாவின் பொருளாதார ஆதிக்கம் இலங்கையில் கட்டுப்பாடின்றி ஏற்படப்போகும் சூழலில், இந்தியர்களுக்கு தாம் நினைத்தபடி இலங்கைக்கு வந்து போவதற்கு ஒரு இலகுவான வழி தேவையல்லவா? (பிரித்தானிய காலனித்துவவாதிகள் இலங்கையைக் கைப்பற்றியதும் முதலில் செய்த வேலை, நெடுஞ்சாலைகளையும் புகையிரதப் பாதைகளையும் அமைத்தது ஏன் என்பதைப் புரிந்துகொண்டால், இந்தியர்களின் பாலத் திட்டத்தையும் புரிந்து கொள்ளலாம்)

இந்த இடத்தில் ஒரு விடயத்தை ஞாபகப்படுத்துவது அவசியம். 2002இல் சந்திரிக குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐ.தே.க. வெற்றி பெற்று ரணில் பிரதமரானார். பிரதமரானதும் அவர் செய்த முதல் வேலை, நோர்வேயின் (மேற்கின்) ஆலோசனையுடன் புலிகளுடன் சமாதான உடன்படிக்கை செய்தது. அடுத்ததாகச் செய்ய இருந்தது, மேற்கின் ஆலோசனையுடன் இந்தியாவின் தமிழகத்தையும், இலங்கையின் வடக்கு கிழக்கையும் ஒரே பொருளாதாரப் பிராந்தியமாக இணைத்து ‘அபிவிருத்தி’ செய்வது. ஆனால், சந்திரிக நாட்டின் நலன்கருதி ரணிலின் அரசைக் கலைத்ததால், ரணிலினதும், அவரது மேற்கத்தைய எஜமானர்களினதும் திட்டம் தவிடு பொடியாய்ப்போனது.

ஆனால், தற்போதைய நிலைமை மிகவும் வித்தியாசமானது. மேற்கு நாடுகளும், இந்தியாவும் முயற்சி செய்து இலங்கையில் சுமார் 20 வருடங்களாக ஆட்சியில் இருந்த ஏகாதிபத்திய – எதிர்ப்பு, தேசபக்தி அரசைத் தேர்தலில் தோற்கடித்து, தமக்குச் சேவகம் செய்யக்கூடிய அரசொன்றை ஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளனர். அந்த அரசில் வரலாற்றில் முதல் தடவையாக, வலதுசாரிப் பிற்போக்குக் கட்சியான ஐ.தே.கவுடன், அதன் பரம வைரியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரும் இணைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த அரசின் பாதுகாவலர்களாக சிறீ.ல.சு.கவின் ஸ்தாபகர்களாகவும், வழிநடத்துனர்களாகவும் இருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவினதும் அவர் மனைவி சிறீமாவோவினதும் புதல்வியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக குமாரதுங்க ஒருபுறமும், நீண்டகாலம் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேன மறுபுறமும் இருக்கின்றனர்.

முன்னைய மகிந்த ராஜபக்ச அரசு மனித உரிமைகளை மீறிச் செயற்பட்டு வருகின்றது எனக் காரணம் சொல்லியே அதை வீழ்த்திவிட்டு இன்றைய அரசை மேற்கத்தைய சக்திகளும், இந்தியாவும் பதவிக்குக் கொண்டு வந்திருந்தாலும், அந்தக் காரணம் மட்டும் உண்மை அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். இலங்கை சோசலிச சீனாவுடன் நெருங்கிச் செல்வதைத் தடுத்து, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமது இராணுவ மூலோபாயத்துடன் இலங்கையை இணைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

அந்த உண்மையை, இன்றைய மைத்திரி – ரணில் அரசு ஆட்சிக்கு வந்தபின்னர் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகள் துலாம்பரமாக எடுத்துக் காட்டுகின்றன. கடந்த ஒரு வருட காலத்தில் அடுக்கடுக்காக இலங்கைக்கு வந்து சென்ற அமெரிக்க மற்றும் ஐரோப்பிய இராஜதந்திரிகளின் தொகை இலங்கையில் முன்னொருபோதும் இல்லாதது. அதுமாத்திரமின்றி, இலங்கையின் வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர, இலங்கையில் இருக்கும் நாட்களைவிட, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கும் நாட்களே அதிகமாக இருக்கிறது.

முன்பு ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்த ஏ.சி.எஸ்.ஹமீத் பற்றி ஒரு நகைச்சுவைக் கதை சொல்லப்படுவதுண்டு. அவர் இலங்கையில் சலவைச் செலவு குறைவு என்பதற்காகத் துணிகளை வெளுப்பற்கு மட்டும்தான் இலங்கைக்கு வருவதுண்டு என்று சொல்லப்படுவதுண்டு. ஹமீத் உலகத்தைச் சுற்றிச்சுற்றி வந்தாலும், இறுதியில் ஜே.ஆர். அரசு உலக அரங்கில் தனிமைப்பட்டுப்போனதுதான் நடந்தது. அந்த நிலைமை நமது தற்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்களவுக்கும் நடக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.

இன்றைய இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு நிலபாவாடை விரிப்பது ஒன்றும் இருநாட்டு நலன்சார்ந்த நடவடிக்கை அல்ல. முன்னொருபோதும் இல்லாத வகையில் இலங்கையை இந்தியாவின் நவ காலனியாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான பாரிய முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என்பதூன் உண்மை. தம்மைப் பதவிக்குக் கொண்டு வருவதற்கு உதவியதற்கான நன்றிக்கடனாக மைத்திரி – ரணில் அரசு இந்தியாவுக்காக இவ்வாறெல்லாம் செயற்படுகின்றது என்பதே உண்மை. இதன் பின்னணியில் இந்தியா மட்டும் தனியாக இல்லை என்பது இன்னொரு முக்கியமான விடயம்.

ஏனெனில், இந்தியாவில் மோடி தலைமையிலான இந்துத்துவ பாரதீய ஜனதா வலதுசாரி அரசைப் பதவிக்குக் கொண்டு வருவதிலும் இதே மேற்கத்தைய சக்திகள்தான் முக்கிய பங்கு வகித்தன. அதன் பின்னர் இந்தியா ஆசியாவில் மேற்கத்தைய சக்திகளின் இளைய கூட்டாளியாக மாறியது. இப்பொழுது அதேசக்திகளால் இலங்கை இந்தியாவின் இளைய கூட்டாளியாக மாற்றப்படவுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கத் தலைநகர் வொசிங்டனில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்ற மூலோபாயப் பேச்சுவார்த்தையின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இலங்கை தென்கிழக்காசிய நாடுகளுடனும் தென்னாசிய நாடுகளுடனும் இணைந்து இந்தோ – பசுபிக் பொருளாதாரக் பாதையுடன் (Indo – Pacific Economic Corridor) இணைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு மூலோபாயப் பேச்சுவார்த்தையை அமெரிக்கா 2013இல் இந்தியாவுடன் நடாத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டம் நாற்பதுக்கும் மேலான நாடுகளை இணைக்கும் சீனாவின் மிகப்பெரிய ‘பட்டுப்பாதை’ (Silk Road) திட்டத்துக்கு எதிராகவே ஆரம்பிக்கப்பட்டது என்பது தெளிவானது.

அதுமட்டுமின்றி, தமது திட்டத்தின் அடிப்படையில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் போடப்படவுள்ள பாலத்தையும் நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கும்படி இலங்கையை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது என ‘நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை அண்மையில் எழுதியுள்ளது. இவையெல்லாம் தற்செயல் நிகழ்ச்சிகள் அல்ல.

இந்தியா, இலங்கையின் மிகவும் அயலிலுள்ள நட்பு நாடு. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு கொண்டது. இந்தியா பிரித்தானியரிடம் இருந்து போரடிப் பெற்ற சுதந்திரமே, போராடாத இலங்கைக்கும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தது. மறுபக்கத்தில் இலங்கையும் இந்தியாவும் இரண்டு வெவ்வேறான சுதந்திரமும் சுயாதிபத்தியமும் இறைமையும் கொண்ட நாடுகள். ‘தாயும் பிள்ளையும் ஒன்றென்றாலும், வாயும் வயிறும் வேறல்லவா?’ என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இலங்கையின் சில சிங்களப் பேரினவாதிகள் (ஜே.வி.பி. உட்பட) கடந்த காலத்தில் கூச்சலிட்டது போல, நாமும் இந்திய எதிர்ப்புக் கூச்சலிட முடியாது. இந்தியாவுடனான எமது உறவு அயலவர்கள் என்ற முறையில் முன்னுரிமையானது. ஆனால் அதேநேரத்தில் அது சமத்துவமாகவும் இருக்க வேண்டும். பெரியண்ணன் – சின்னத்தமபி உறவாக அது இருக்க முடியாது.

அப்படிப் பார்க்கையில் தற்பொழுது இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் மேற்கொள்ளப்படவுள்ள சகல ஒப்பந்தங்களும் அசமத்துவமானவையாகவும், இலங்கையை இந்தியாவின் நவ காலனியாக்குபவையாகவும், மேற்கு நாடுகளின் இராணுவ நோக்கங்களுடன் இலங்கையை இணைப்பனவாகவும் இருப்பதை அவதானிக்க முடிகிறது. இது இலங்கையை தாய்வான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் போன்ற ஏகாதிபத்தியப் பொம்மை அரசுகள் என்ற ஒரு நிலைக்கு இட்டுச் செல்லலாம். எனவே இந்தியாவுடன் எந்தவிதமான உடன்படிக்கையை மேற்கொண்டாலும், அதன் பின்னணியில் மறைந்து கிடக்கும் கண்ணிகள் என்னவென்பதை கவனமாக ஆராய்ந்து பார்ப்பது அவசியம்.
அவ்வாறில்லாவிட்டால், இலங்கை மிக நீண்டகாலம் அந்நிய ஆதிகத்திற்கு உட்பட்டு, தன் சுதந்திரத்தை இழந்து நிற்கும் அவல நிலைக்கு உள்ளாகலாம்.

வானவில் இதழ்  63_2016

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...