வட மாகாண முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரன்இணை த்தலைமை வழங்கும்‘தமிழ்
மக்கள் பேரவை’ புதிய அரசியல் அமைப்புக்கான தனது யோசனைகளைப் பகிரங்கப்படுத்தி
இருக்கிறது. அந்த யோசனைகள்அடங்கிய நீண்ட அறிக்கையின் சாராம்சம், வடக்கு கிழக்கில்
வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு சமஸ்டி முறையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதுதான். சமஸ்டிக்கோரிக்கை என்பது தமிழரசுக் கட்சியினால் 57 வருடங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்பது இன்று அரசியலில் ஈடுபட்டிருக்கும் பலருக்குத்
தெரியுமோ என்னவோ?ஆனால், விக்னேஸ்வரனை முதலமைச்சராக்கிய, தமிழரசுக்
கட்சியை பிரதான அங்கத்துவக் கட்சியாகக் கொண்டிருக்கிற தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியல் அமைப்பு சம்பந்தமாக இதுவரை தனது யோசனை எதையும்
முன்வைக்கவில்லை. தற்போதைய மைத்திரி– ரணில் அரசுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒட்டி உறவாடி வருவதால்,‘அரசு எதைத் தந்தாலும் ஏற்றுக் கொள்வோம், அல்லது
ஒன்றையும் தராவிட்டாலும் பரவாயில்லை ’ என்று கருதி வாளாவிருக்கிறார்களோ தெரியவில்லை.
1972 மே 04ஆம் திகதி வல்வெட்டித்துறையில் தமிழ் அரசியல் கட்சிகள் கூடி தமிழர் ஐக்கிய
விடுதலை முன்னணியை (TULF) உருவாக்கிய போது, தமிழரசுக் கட்சி அதில் முக்கிய பங்கு வகித்தது. பின்னர் அந்த முன்னணி 1976இல் வட்டுக்கோட்டையில் மாநாடு கூடி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ‘தமிழ் ஈழம் ’ தான் ஒரேயொரு முடிந்த முடிபுஎனப் பிரகடனம் செய்தது. அந்தக் கோரிக்கையை தமிழ் மக்கள் மத்தியிலான சர்வசன வாக்கெடுப்பாக
அறிவித்து, தமிழர் விடுதலைக் கூட்டணி என இன்று அழைக்கப்படும் அந்த முன்னணி 1977 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வடக்கு கிழக்கில் அமோக வெற்றி பெற்றது.இருந்தும் அத்தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அமோக
வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததால், தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சி அந்தஸ்துப் பெற்றிருந்த போதும், இன்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றிருந்த போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது அரசியல் சகபாடியான மைத்திரி– ரணில் அரசைப் பாதுகாப்பதற்காக நடந்து கொள்வதைப் போல, அன்றைய ஜே.ஆர். அரசைப் பாதுகாப்பதற்காக தமிழ் ஈழக் கோரிக்கையை கைவிட்டது. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் ஈழக்
கோரிக்கையை நம்பிய தமிழ் இளைஞர்கள் அக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக ஆயுதம் ஏந்திப் போராடி பெரும் அழிவைச் சந்தித்தனர்.
அதன் பின்னர் தமிழர் கூட்டணியை உத்தியோகபூர்வமாக வைத்திருக்கும்
வீ.ஆனந்தசங்கரியும் சரி, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் (தமிழரசுக் கட்சியும்) சரி, ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கூறி வருகின்றனரேயொழிய, தமது முன்னைய தமிழ் ஈழக் கோரிக்கையைக் கைவிட்டதாக இன்றுவரை அறிவிக்காமல் தந்திரமாக இருந்து வருகின்றனர். (தமிழகத்தில்
திராவிட முன்னேற்றக் கழகமும் தனது மாநில சுயாட்சிக் கோரிக்கையை கைவிட்டதாக அறிவிக்காமல் இப்படித்தான் கபட நாடகம் ஆடி வருகிறது) ஐக்கிய இலங்கையை
ஏற்றுக் கொண்டால், தமிழ் ஈழக் கோரிக்கையை கைவிட்டதாக அறிவிக்கலாம்தானே? ஏன் இரட்டை வேடம் போடுவான்? ஆனால் வட மாகாண முதலமைச்சர் இந்த விடயத்தில் சரியோ பிழையோதமிழ் ஈழத்தைக் கைவிட்டதாக உணர்த்திவிட்டார். அவர் தனது தமிழ்
மக்கள் பேரவையின் தீர்வு ஆலோசனையாக சமஸ்டிக் கொள்கையை (அது சரியா பிழையா
என்பது தனியாக ஆராயப்படவேண்டியது) முன்வைத்ததின் மூலம் தமிழ் ஈழம் என்ற கொள்கையை நிராகரித்திருக்கிறார். அது ஒரு வகையில் நேர்மையான ஒரு செயல்.
ஆனால் அதேநேரத்தில் தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் சித்தாந்த நிலைப்பாடு என்ன என்பதையும் விக்னேஸ்வரன் அணியினர் அம்பலமாக்கிவிட்டனர்.வட்டுக்கோட்டை தமிழ் ஈழத்தீர்மானத்தை நிராகரித்த விக்னேஸ்வரன் குழுவினர்,வட்டுக்கோட்டை மாநாட்டில் எடுத்த இன்னொரு தீர்மானத்தையும் நிராகரித்துள்ளனர். அதாவது, வட்டுக்கோட்டையில்
தமிழீழத் தீர்மானத்தை முன்மொழிந்த தமிழர் விடுதலைக் கூட்டணி, தனது தீர்மானத்தில் எதிர்காலத்தில் தாம்அமைக்கப்போகும் தமிழீழ அரசு,‘சமதர்ம தமிழீழ குடியரசு’ ஆக
இருக்கும் எனப் பிரகடனம்செய்திருந்தது. அந்தக் கருத்தையேபின்னர் தமிழீழத்துக்காகப் போராடியசில ஆயுதப் போராட்ட இயக்கங்கள்,‘எமது கொள்கை சோசலிச தமிழ் ஈழம்
அமைப்பது ’ எனப் பிரகடனம்செய்தன.
ஆனால் இப்பொழுது விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் பேரவை தமது புதிய அரசியல் அமைப்பு யோசனைகளில் இலங்கை பிரித்தானியா பின்பற்றும் வெஸ்ற்மினிஸ்ரர் (ஏற்கெனவே ஏறக்குறைய அதுதான் நடைமுறையில்இருக்கிறது) அரசியல் அமைப்பைக்
கொண்டிருக்க வேண்டும் என்றும்,தேர்தல் முறையைப் பொறுத்தவரையில் ஜேர்மனியின் முறையை ஒத்திருக்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறது.இந்த ஆலோசனைகளைப் பார்த்து
தமிழ் மக்களில் யாராவது கவலைப்படுவார்களோ என்னவோ?
ஏனெனில், பிரித்தானிய வெஸ்ற்மினிஸ்ரர் முறையினால் பிரித்தானியாவிலேயே அயர்லாந்து,
ஸ்கொட்லாந்து சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரச்சினையை இன்றுவரை தீர்த்து வைக்க முடியவில்லை. அதுமட்டுமின்றி, இந்த முறையைப் பின்பற்றிய இலங்கையிலும்
இந்த அரசமைப்பு முறையினால் இனப்பிரச்சினை தீராதது மட்டுமின்றி, அது மேலும் சிக்லாகியும் இருக்கிறது. அப்படியிருக்க விக்னேஸ்வரன் குழுவினர் வெஸ்ற்மினிஸ்ரர் முறையைச் சிபார்சு செய்தது அவர்களின் சிந்தனைக் குறைவினாலா அல்லது
பிரித்தானிய ஏகாதிபத்திய விசுவாசத்தினாலா?உலகிலேயே சிறுபான்மைத் தேசிய
இனங்களின் பிரச்சினையை முதன்முதலாக வெற்றிகரமாகத் தீர்த்து, உலகிற்கே முன்னேடியாக அமைந்தது மாமேதை லெனின் தலைமையில் உருவாக்கப்பட்ட சோசலிச சோவியத் யூனியன்தான். அது ஏன் மெத்தப்படித்த இந்த விக்னேஸ்வரன் குழுவினரின் கண்களுக்குத் தெரியாமல்போனது என்று தெரியவில்லை.
இன்று பலர் பிற்போக்கான, ஐக்கிய தேசியக் கட்சி சார்பான, ஏகாதிபத்திய விசுவாசம் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்
மக்கள் பேரவையைப் பார்க்கின்றனர். அப்படியானவர்களுக்கு தமிழ் மக்கள் பேரவையின் முதலாளித்துவ சார்பு அரசியல் அமைப்புச் யோசனைகள் கண்ணைத் திறந்து வைக்க வேண்டும்என்பதே எமது விருப்பமாகும்.
வானவில் இதழ் 63
No comments:
Post a Comment