ஜனாதிபதி என்னை இராஜினாமா செய்யுமாறு ஒருபோதும் கூறவில்லை!


னாதிபதி என்னை இராஜினாமா செய்யுமாறு ஒருபோதும் கூறவில்லை. அவ்வாறு கூறமாட்டார் எனவும் உறுதியாக நம்புகிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிரதேச சபைத் தவிசாளர்கள், மேயர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களுடன் இன்று (27.04.2022) அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வெளிநாட்டு உதவிகளை பெற்றேனும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யக்கூடாது என பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் மேயர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.

குறித்த சந்திப்பின் போது பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

கடந்த காலங்களில் சந்தித்து பேசுவதற்கு எங்களுக்கு அதிக நேரம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் இன்று நாடும் மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து சந்தித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தீர்வு காண்பதற்கான செயற்பாடுகள் குறித்து பேச சிலர் தமது ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

எனினும் இன்று நாட்டின் நிலைமை முற்றிலும் மாறுபட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒருபுறம் பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளது.

வரலாற்றில் தொடங்கி பல்வேறு காரணங்களுக்காக இந்த நிலைமை உருவாக்கப்பட்டது. இந்த நெருக்கடியிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தற்போது எமக்கு உள்ளது. எனவே அதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

இந்த அரசாங்கத்தை நாம் பொறுப்பேற்கும் போது அனைத்து வகையிலும் வீழ்ச்சியடைந்த ஒரு நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம். அப்போது பொருளாதாரத்தில் மட்டுமல்ல தேசிய பாதுகாப்பிலும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. தீவிரவாதிகளோ, பயங்கரவாதிகளோ இல்லாத நாட்டை உருவாக்கித் தருமாறு பெரும்பாலான மக்கள் கோரிக்கை வைத்தனர். இன்று நாம் அந்த கோரிக்கையை சரியாக நிறைவேற்றிவிட்டோம் என்று நினைக்கிறேன்.

தரிசு நிலமாக காணப்பட்ட நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் பெரும் முயற்சி செய்துள்ளோம் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.

இவற்றுக்கு மத்தியில்தான் நாம் சமீபத்தில் கொவிட் தொற்றுநோயை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது போன்ற ஒரு தொற்றுநோய் பற்றி முழு உலகமும் இதற்கு முன் அறிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். இந்தச் சவால் நமக்குப் புதிது. ஆனால் உங்கள் அனைவரின் ஆதரவோடு நாங்கள் அதை வெற்றிகரமாக எதிர்கொண்டோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அபிவிருத்தியடைந்த நாடுகளில் இலட்சக் கணக்கானோர் இறக்கும்போது, நம் நாட்டின் மரண விகிதத்தை பிறநாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாக பேண முடிந்தது.

மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவப் பணியாளர்கள், இராணுவம், பாதுகாப்புப் படையினர் போன்றோர் இதற்கு முக்கியப் பங்காற்றியுள்ளனர் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மக்களும் அதற்கு ஆதரவளித்தனர். இது நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படாவிட்டாலும், ஒரு அரசாங்கமாக எங்களால் இந்த கொவிட் தொற்றுநோயிலிருந்து முழு நாட்டையும் பாதுகாக்க முடிந்தது.

ஆனால் மக்களை அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்கான சவாலை நாங்கள் வெற்றி கொண்டோம். இன்று அவர்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையனோரே காலிமுகத்திடல் மைதானத்திற்கு வந்துள்ளனர். அங்கு வந்து எம்மை வெளியேறுமாறு கூறுகின்றனர். நாம் அனைவரும் மக்களின் ஆணையாலேயே இந்த இடங்களுக்கு வந்துள்ளோம். அந்த மரியாதை இன்றும் மக்களுக்கு உள்ளது. மக்கள் இறையாண்மை என்பது நாட்டின் அரசியலமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. நெருக்கடியான நிலையில் நாட்டை விட்டு வெளியேற மக்கள் எம்மை நியமிக்கவில்லை.

வேண்டியளவு குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம். ஆனால் அவை நிரூபிக்கப்பட வேண்டும். அப்படி இல்லாமல் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக இந்த நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச்செல்ல முடியாது.

நாம் வரலாற்றின் சவால்களில் இருந்து தப்பித்து ஓடியவர்கள் அல்ல என்பதை கூறத் தேவையில்லை. இந்த பொருளாதார சவாலில் இருந்து தப்பித்து ஓடமாட்டோம். எங்களிடம் குறுகிய கால மற்றும் நீண்ட கால பொருளாதார முகாமைத்துவ கொள்கை உள்ளது. அதற்கமைய இந்த சவாலை சமாளிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மத்திய வங்கி உட்பட பொது நிதி நிறுவனங்களுக்கு மக்களால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர்களை கடந்த காலங்களில் எமக்கு நியமிக்க முடிந்தது. அண்மையில் சீனப் பிரதமருடன் தொலைபேசியில் உரையாடினேன். சீனாவின் ஆதரவை எமக்கு பெற்றுத் தருவதாக அவர் உறுதியளித்தார். பல நட்பு நாடுகளுடனும் கலந்துரையாடினேன். இதன் விளைவாக, அவர்கள் ஏற்கனவே எங்களுக்கு உதவத் தொடங்கியுள்ளனர்.

நாங்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று இலங்கையின் நிலைமையை சுட்டிக்காட்டிய போது, தற்போது எமக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். நமது நிதியமைச்சர் அலி சப்ரி சென்று அதைச் செய்தார். சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்ற அதிகாரிகளுடன் நான் கலந்துரையாடினேன். எங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அவர்களின் சில கோரிக்கைகளுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். அவற்றை பின்பற்றி நாம் முன்னேற வேண்டும். நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். வெளிநாட்டு உதவியை பெற்றேனும் நாட்டை கட்டியெழுப்ப தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்.

அந்த சமயங்களில்தான் சிலர் இங்கும் அங்கும் சென்று பேயாட்டம் ஆடுவது. அந்த பேய்களுக்கு பயந்தால் கல்லறையில் வீடு கட்ட மாட்டார்கள் என்பார்கள்.  அப்படிப்பட்டவர்களை நான் பார்த்திருக்கிறேன். எனவே அவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்பதைப் பார்க்க காத்திருக்கிறோம். எனவே, உங்கள் பலத்தால் அவர்கள் விரும்பியவாறு நாட்டைக் கட்டியெழுப்பவோ, நாட்டைக் கைப்பற்றவோ, எம்மை ஆட்டி படைக்கவோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை நினைவூட்டுகிறேன்.

நீங்கள் எம் மீது கொண்ட நம்பிக்கை வைத்து பணியாற்றுவது குறித்து நாம் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோன்று இன்னொரு விடயத்தை நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஜனாதிபதி ஒருபோதும் என்னை செய்யுமாறு ஒருபோதும் கூறவில்லை. அவ்வாறு கூறமாட்டார் எனவும் உறுதியாக நம்புகிறேன்’ எனத் தெரிவித்தார்.

Source:chakkram.com 

 


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...