நடைமுறையின் தத்துவம்-– ச.லெனின்அந்தோனியோ கிராம்ஷி (Antonio Gramsci)

ஏப்ரல் 27, 2022: 85வது கிராம்ஷியின் நினைவு தினம்

ந்த மூளை சிந்திப்பதை இருபது ஆண்டுக் காலம் தடுக்க வேண்டும் என்று பாசிஸ்ட் முசோலினியுடைய இத்தாலி அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார். எப்போதும் போல் ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கிணங்க நீதிமன்றம் அவரை இருபதாண்டுக் காலம் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. சர்வாதிகார முசோலினியும் அவரின் பரிவாரங்களும் அஞ்சிய அந்த மூளைக்காரனை சிறையில் தான் அடைக்க முடிந்ததே அன்றி அவர்களால் அவருடைய மூளை சிந்திப்பதைத் தடுக்க முடியவில்லை. இன்னும் சொல்வதானால் எந்த சிறை அவரின் சிந்தனையை முடக்கும் என்று நினைத்தார்களோ, அந்த சிறையிலேயே 2848 பக்கங்களுக்கு அவர் தனது சிந்தனைகளைக் குறிப்புகளாக எழுதிக் குவித்தார். அதுவே உலகப் பிரசித்தி பெற்ற நூல்களில் ஒன்றான அந்தோனியோ கிராம்ஷியின் சிறைக் குறிப்புகளாகத் திகழ்கிறது.

சிறையில் கிராம்ஷியின் உடல் நிலை மிக மோசமாக நலிவுற்றது. சிறையிலேயே அவர் இறந்தால் அது வேறுமாதிரியான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று பயந்த முசோலினி அவரை விடுதலை செய்தான். சிறையிலிருந்து வெளிவந்த சிறிது காலத்திலேயே தனது 47 ஆவது வயதில் 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் கிராம்ஷி மறைந்தார். இன்று உலகம் சந்தித்து வரும் ஒரு வலதுசாரி திருப்பத்தை எதிர்கொள்ள, பாசிசம் முடக்க நினைத்த கிராம்ஷியின் சிந்தனை காலத்தின் தேவையாக முன்னிற்கிறது. முசோலினியின் பாசிசத்தை நேரடியாகச் சந்தித்த அனுபவங்களோடு வெளிப்படும் கிராம்ஷியின் சிந்தனை நமது இந்திய நிலைமைக்கு மேலும் கூடுதல் பெறுத்தப்பாடுடையதாகிறது.

வலிகள் நிறைந்த வாழ்வு

குழந்தைப் பருவம் முதலே கடுமையான துயரங்களுக்கு மத்தியில் தான் கிராம்ஷி வாழ்ந்தார். சிறு வயதில் ஏற்பட்ட விபத்தினால் முதுகில் வலி மிகுந்த கூன் வேறு. கம்யூனிஸ்ட் அகிலத்தில் பணியாற்றிய ஒரு சிறு காலப்பகுதியை தவிரப் பெறும் பகுதியான காலம் துயரங்களே அவரின் வாழ்க்கையாக இருந்துள்ளது. குடும்ப வருமையின் காரணமாக அவரது பதினோராவது வயதில் அவர் ஒரு பதிவாளர் அலுவலகத்தில் வேலைக்குச் சென்றார். ”என்னை விடக் கனமான புத்தகங்களைச் சுமந்து செல்வது தான் எனக்குள்ள வேலை. யாருக்கும் தெரியாமல் பல இரவுகள் நான் அழுததுண்டு. என் உடம்பு அப்படி வலிக்கும்“ இவ்வாறு தனது இளம்பருவ வலிகளின் ஒரு துகளைப் பதிவு செய்துள்ளார் கிராம்ஷி.தனது குழந்தைப் பருவ அனுபவங்களின் அடிப்படையில் குழந்தைகளை முதிர்ச்சிப்பெற்ற அறிவார்ந்தவர்களாகப் பாவிக்க வேண்டுமென்றும் அவர்களோடு ஆழமான விஷயங்கள் குறித்துக் கூட விவாதிக்க வேண்டும் என்கிறார். தான் சிறையில் அடைக்கப்பட்டதைத் தனது மகனிடம் சொல்லாமல் மறைப்பது குறித்து அவர் எழுதும் போது “தனது ஆசிரியர்கள் சொல்லித் தருவது உண்மைதானா என்னும் ஐயத்தை எழுப்பி, சுயமாகச் சிந்திக்கவும் தனக்கான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கவும் தொடங்குகிற குழந்தை, இந்த விஷயங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ தெரிந்துகொள்ள நேர்வது அவனுக்கு மிகுந்த மனவேதனையைத் தரக்கூடியதாகும்…. தாங்களும் குழந்தைகளாக இருந்தவர்கள்தான் என்பதைப் பெரியவர்கள் மறந்துவிடுவதுதான் ஆச்சரியம்…“ என்கிறார் கிராம்ஷி.

வறட்டு நாத்திகம்

பொருள்முதல் வாதிகளான மார்க்சியவாதிகள் நாத்திகர்களே. ஆனால் பெரும்பான்மையான மக்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரம் முதலாளித்துவ வாதிகளில் பலர் நாத்திகர்களாகவும் உள்ளனர், எனவே அவர்கள் நமது கூட்டாளிகளும் அல்ல, கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்களுமல்ல. ஒரு “ புதிய பாட்டாளி வர்க்க கண்ணோட்டம் உருப்பெறும் வரை மதம் தான் ஒடுக்கப்பட்ட தனிமனிதனின் விருப்பம், ஆர்வம், நம்பிக்கை, உலகைப்பற்றிய கண்ணோட்டம் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்“ என்கிறார் கிராம்ஷி.

பொருள்முதல்வாதக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்வதும், சமூகத்தை அறிவியல் மனப்பான்மையோடு வளர்ப்பதும் அவசியம் தான் என்கிற போதும் வறட்டு நாத்திகம் பேசி நம்மிடம் வரவேண்டிய அணிகளை உள்ளேயே வரவிடாமல் செயக் கூடாது என்பதையே கிராம்ஷியின் வார்த்தைகள் எடுத்துரைக்கிறது.

“வாழ்வதென்பது இரண்டில் ஒன்றை ஆதரித்தே வாழ்வது என்று கருதுகிறேன், மெத்தனமாக இருப்பவர்களை வெறுக்கிறேன்.. நான் உயிரோடு இருப்பவன், இரண்டிலொன்று ஆதரிப்பவன், எனவே எதையும் ஆதரிக்காதவர்களை வெறுக்கிறேன்“ என்கிறார் கிராம்ஷி. நடுநிலையாளர், மய்யம் என்கிற போக்கெல்லாம் உயிரற்ற ஜடத்தன்மை கொண்ட போலித்தனம் தானேயன்றி வேறில்லை என்பதையும், இவையெல்லாம் ஒருவகையில் ஆளும் வர்க்கத்தின் குரல்களே என்றும் நமக்கு கிராம்ஷியின் குரல் உணர்த்தும்.

நடைமுறையின் தத்துவம்

தனது சிறைக் குறிப்புகளில் “மார்க்சியத்தை“ நடைமுறையின் தத்துவம் என்றே கிராம்ஷி குறிப்பிடுகிறார். சிறை தனிக்கையில் தனது எழுத்து சிக்கிக் கொண்டாலும் அவர்கள் அதைக் கண்டு பிடித்துவிடக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் இவ்வார்த்தையைக் குறிப்பிட்டிருந்தாலும், அதனை உண்மையில் உணர்ந்தே அவர் பயன்படுத்தியிருந்தார். மார்க்சியம் என்பது நடைமுறைக்கான வழிகாட்டியே அன்றி அது வறட்டு சூத்திரமல்ல என்றார் எங்கெல்ஸ். நடைமுறையோடு இணைக்கப்படாத தத்துவம் என்பது வெறும் சொற்கள் மட்டும் தானே தவிர வேறல்ல என்றார் லெனின். இந்த பாதையிலேதான் கிராம்ஷியின் பயணமும் இருந்தது.

எனவே தான் “விவரங்கள், உண்மைகள் ஆகியவற்றோடு பொருத்திக் காட்டப்படாத கோட்பாடும் தத்துவமும் வெறும் அருவங்களே என்பதும், கோட்பாட்டாலும் தத்துவத்தாலும் வழிகாட்டப்படாத அரசியல் நடைமுறை வெறும் உத்வேகத்தினால் செய்யப்படும் பயனற்ற காரியமே“ என்கிறார். அதே போல் கருத்துலகத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதற்கு நிகரான முக்கியத்துவம் நடைமுறை பணிகளுக்கும் உள்ளது என்றார் கிராம்ஷி.

அடித்தளமும் மேல் கட்டுமானமும்

மார்க்சியம் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை இயந்திரத்தனமாக அணுகுவதையும் அவர் எதிர்த்தார். குறிப்பாகப் பொருளாதார பகுதியில் அதாவது அடித்தளத்தில் ஏற்படுகிற மாற்றம் அரசியல் புரட்சியில் அப்படியே பிரதிபலிக்கும் என்ற இயந்திரத்தனமான போக்கு எங்கெல்ஸ் காலத்திலேயே நிலவியது.

எனவே தான் “அரசியல் நிகழ்வு வளர்ச்சிகளின் அடிப்படைக் காரணம் பொருளாதாரம்தான் என்பதை மட்டுமே நானும் மார்க்சும் கூறிவருகிறோம். பொருளாதாரக் கூறு இயந்திரத்தனமாகவே அரசியலில் வெளிப்படும் என்று அதற்குப் பொருளல்ல.“ அரசியல், ஆட்சி, கலை எனக் கருத்துத் தளத்தை அதாவது மேல் கட்டுமானங்கமளை பாதிக்கின்ற பல்வேறு கூறுகள் அரசியலின் கதிவேகத்தையும், குணாம்சத்தையும் நிர்ணயிக்கின்றன. இவற்றுக்குள் ஏற்படுகிற பரஸ்பர செல்வாக்கு தான் சமூகப்பூர்வ, அரசியல்பூர்வ வாழ்கையில் பிரதிபலிக்கும் என்றார் எங்கெல்ஸ்.

பாசிசம் குறித்த விவாதத்தை இதன் அடிப்படையாகக் கொண்டுதான் கிராம்ஷி மேற்கொண்டார். “பாசிச மனோபாவத்தின் வேர் என்பது, பெரும்பாலான மக்கள் பாசிசத்தை ஏற்பதிலும் அடங்கியுள்ளது. முந்திய தேசியவாதத்தின் தோல்வியின் விளைவே பாசிசம் என்றும், பிரச்சினைகளைப் புரட்சிகரமான முறையில் கணக்குத் தீர்க்காவிடில் விவசாயிகளும் மத்தியத்தர வர்க்கத்தினரும் பாசிசப் பதாகையின் கீழ் அணி திரள்வர்“ என்றும் கிராம்ஷி எச்சரிக்கிறார்.

பாசிசமானது குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் முதலாளித்துவம் தன் பொருளாதாரச் சிக்கலிலிருந்து விடுபட எடுக்கும் வடிவமாகத் தோற்றமளிக்கும், அதே வேளையில், இது கலாச்சார மற்றும் சமூகப் பிரச்சனை என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். அதேபோல் பாசிசம் என்பது ஆளும் வர்க்கத்தின் கொள்கையைச் சார்ந்தது மட்டுமல்ல, அது பெரும்பாலான மக்கள் பாசிசத்தை ஏற்றுக் கொள்வதையும் பொறத்ததாக இருக்கிறது என்கிறார் கிராம்ஷி.

பழமைவாதமே பாசிசத்திற்கான தளத்தை உருவாக்கிக் கொள்கிறது. ஒரு புரட்சிகரமான மாறுதல் நிகழாததும், மத பிற்போக்குத்தனத்திற்கு எதிரான கோட்பாட்டு ரீதியிலான சண்டை நடத்தப்படாததுமே இதற்கான காரணம் என்கிறார் அவர். முக்கால் நூற்றாண்டுக்கு முந்தைய கிரம்ஷியின் கருத்துக்கள் அனைத்தையும் அப்படியே இங்கு பொருத்திப் பார்ப்பது மார்க்சிய இயக்கவில் கண்ணோட்டத்திற்கு ஏற்புடையதல்ல. ஆனால் அதன் சாராம்சங்கள் நமக்குக் கூடுதலாக உதவக்கூடும்.

இந்தியாவில் பாசிசம்..?

சமீபத்தில் ஃபிரன்ட்லைன் இதழுக்கு அளித்த பேட்டியில் ஒரு கேள்விக்கு கிராம்ஷியின் பார்வையை உள்ளடக்கி இந்திய நிலைமைகள் குறித்துப் பேரா.அய்ஜாஸ் அகமத் அளித்த பதில் கவனிக்கத்தக்கது.


இப்போது பாசிசம் இந்தியாவிற்கு வருகிறதா? என்ற கேள்விக்கு அவர் “இல்லை“ என்றே பதில் அளித்துள்ளார். இந்திய முதலாளி வர்க்கத்திற்கோ அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கோ இப்போது பாசிசம் தேவைப்படவில்லை என்கிறார் அவர். “அது எவ்வளவு கோரமானதாக இருந்தாலும், அல்லது சரியாகக் குறிப்பிட்ட நேரத்தில் தலைதூக்கினாலும் சரி, வகுப்புவாத வன்முறை என்பது பாசிசம் அல்ல. ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் நாடாளுமன்ற வகைப்பட்டதாக இல்லாத அதன் பல்வேறு அணிகளில் பாசிச குணாம்சங்கள் நிச்சயம் இருக்கிறது. ஆனாலும் உலகம் முழுவதிலும் அதிதீவிர வலதுசாரித் தன்மை கொண்ட பல இயக்கங்கள், கட்சிகளிலும் கூட இத்தகைய குணாம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 1880 களில் இருந்தே பாசிச போக்கு என்பது முதலாளித்துவ அரசியலில் தொடர்ந்து நீடித்தே வருகிறது என்றாலும் ஒரு சில நாடுகள் அல்லது அரசியல் கட்சிகளைத் தான், அதன் உண்மையான பொருளில், பாசிசத் தன்மை கொண்டவை என்று குறிப்பிட முடியும்.“ என்கிறார் அய்ஜாஸ்.

மரண பயம்

“பாசிசம் அதன் பல்வேறு முகங்களுடன் வெளிப்படும் போது, அவர்கள் உள்ளூர மிகவும் பலவீனமானவர்கள் என்கிறோம். முதலாளித்துவ முறை தவிர்க்க முடியாத நெருக்கடியைச் சந்திக்கும்போதோ. அல்லது சந்திக்க நேரும் என்ற மரண பயம் அவர்களை கீழ்ப்படுத்தும் போதுதான் பாசிசத்தையும் சர்வாதிகாரத்தையும் நோக்கி நகர்கின்றனர்“ என்றர் கிராம்ஷி. இதன் மூலம் பாசிசம் மற்றும் அதன் சர்வாதிகாரத்திற்கான முடிவுரையையும் அவர் குறிப்பிட்டார்.

அவரின் கனிப்பு அவர் இறந்த அடுத்த பத்தாண்டுகளுக்குள் உண்மையானது. பாசிச நாசிசத்தின் முசோலினியும் ஹிட்லரும் இரண்டாம் உலகப் போராடு முடிந்து போயினர். இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி மக்கள் கூட்டத்தால் கொல்லப்பட்டு அவனது உடல் பிரதான சாலை ஒன்றில் தலைகீழாகக் கட்டி தொங்கவிடப்பட்டது. அந்த உடலைத் தாக்கியும், சுத்தியல் கொண்டு அடித்தும், துப்பாக்கிகள் கொண்டு சுட்டும், எச்சில் உமிழ்ந்தும் மக்கள் கூட்டம் மேலும் தனது எதிர்ப்பை காட்டியது. சர்வாதிகாரிகளின் முடிவு இப்படியாகத்தான் எழுதப்பட்டது என்பதே வரலாறு.

பாசிசமும் அதன் பண்புகளும் அவைகளின் ஆதிக்கமும் நிரந்தரமல்ல. மக்களின் எழுச்சி அதற்கு முடிவு கட்டும். அதற்கு உதவும் சக்திகளாக கம்யூனிஸ்ட்டுகளும் ஜனநாயகவாதிகள் உள்ளிட்ட ஆதிக்க எதிர்ப்பு சக்திகளையும் ஒன்றிணைந்து போராட வேண்டியுள்ளது. அதே நேரம் தாராளமய பொருளாதார நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளே இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த வலத்துத்திரிபிற்கு முக்கியமான காரணம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒன்றை அகற்றிவிட்டு மற்றொன்றை அமரவைப்பதல்ல நமது இறுதி இலக்கு. “சோஷலிசம் என்பது ஒரு அமைப்பை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக மற்றொரு அமைப்பைக் கொண்டு வருவதல்ல, மாறாக உண்மையான ஒரு அமைப்பை உருவாக்குவது தான்“ என்கிற கிராம்ஷியின் வார்த்தைகளே நமது லட்சியமாகும்.

Source: chakkarm.com 

 


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...