ஈஸ்டர் தாக்குதல்: மூன்று ஆண்டுகள் ! நீதியற்ற தேசத்தில் நாதியற்றவர்கள் !! முருகபூபதி

 


ஏலி ஏலி லாமா சபக்தானி “ என் தேவனே என் தேவனே… ஏன் என்னை கைவிட்டீர்…? யேசு சிலுவையில் அறையப்பட்ட போது உதிர்த்த வார்த்தைகள் . 2019 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு முன்பே, புலனாய்வுப்பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்தும், எதனையும் செய்யாமல் கையாலாகத்தனமாக இருந்தவர்களையும் தாக்குதல்களின் சூத்திரதாரிகளையும் விசாரிப்பதற்காக அன்றைய நாடாளுமன்றத்தினால் ஒரு விசாரணை தெரிவுக்குழுவும் நியமிக்கப்பட்டது. அதிலும் இழுபறிகள் நிகழ்ந்தன.

தேசிய புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சிசிர மெண்டிஸ் அந்த விசாரணைக்குழுவின் முன்னால் தோன்றி சாட்சியமளித்தார். அதனை அவதானித்தார் சம்பவங்கள் நடந்தவேளையில் நாட்டிலிருக்காத தேசத்தின் அதிபர் மைத்திரியார். உடனே என்ன செய்தார்? “ நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தவர்கள், பாதுகாப்பு துறையிலிருந்து வெளியேறியவர்கள் “ என்று ஒரு பெரிய குண்டைப் போட்டார். அது தேவாலயங்களில் பாவிக்கப்பட்ட குண்டுகளை விட மிகவும் வலிமையானது. அந்த பொன்னான வாக்கைக்கேட்டதும் சிசிர மெண்டிஸ் தனது ராஜினாமா கடிதத்தை பாதுகாப்பு செயலாளர் ஷாந்த கோட்டேகொடவிடம் கையளித்துவிட்டு, தனக்கு சுகமில்லை எனச்சொல்லி ஓய்வுக்குச்சென்றார்.See the source image
Image: times of India
“ நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் புலனாய்வு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்துவதை தான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை “ என்றும் மற்றும் ஒரு அதிரடிக் குண்டைப்போட்டார் மைத்திரியார். இவ்வாறெல்லாம் அவர் செய்யப்போகிறார் என்பதைத் தெரிந்துகொண்டே தெரிவுக்குழு பல வாரங்களாக விசாரணை செய்துகொண்டிருந்தது. ஊடகங்களும் அந்த விசாரணை வாக்குமூலங்களுக்காக பக்கங்களை நிரப்பிக்கொண்டிருந்தன. நாமும் படித்துத் தொலைத்( ந்) து கொண்டிருந்தோம்.

அங்கு சாட்சியமளித்த முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் பேசிய சுத்தமான சிங்கள மொழியை கேட்டு வியந்துபோன - எதிர்காலத்தின் பாதுகாப்பு அமைச்சர் பதவிக் கனவில் மிதந்த ஃபீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, “ தம்மால் கூட அவ்வாறு அழகாக சிங்களம் பேசமுடியவில்லையே “ என்று தனது குறைபாட்டை வெளிப்படுத்தினார்.

தேசிய பாதுகாப்பு சபையை உரிய முறையில் ( முன்னாள் ) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்ட வில்லை என பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.

“ தன்னை பதவி விலகுமாறும், அவ்வாறு பதவி விலகினால் தனக்கு இராஜதந்திர பதவியொன்றை வழங்குவதாகவும் “ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அழுத்தங்களை பிரயோகித்திருந்ததாக பொலிஸ் மாஅதிபர் பூஜித்த ஜயசுந்தர சாட்சியமளித்திருந்தார்.

இறுதியில் என்ன நடந்தது...? அந்த விசாரணைக்குழுவின் அறிக்கையை மைத்திரியார் கிடப்பில் போட்டார்.

“ போதைவஸ்து கடத்தல்காரர்களை எப்படியும் தூக்கிலே தொங்கவிடுவேன் “ என்று தனது பதவிக்காலத்தின் இறுதிப்பகுதியில் தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருந்த அவர், இறுதியில் செய்தது என்ன..?

ஒரு வெளிநாட்டுப்பெண்ணை துடிக்கத்துடிக்க கொன்றுவிட்டு மரணதண்டனைக்கைதியாக இருந்த ஒருவருக்கு பொதுமன்னிப்பு அளித்ததுதான்!

2019 இறுதியில் அதிபர் தேர்தல் நெருங்கியபோது, எதிரணி ( ராஜபக்‌ஷக்கள்) தனது அரசின் மீது பாதுகாப்பு தொடர்பாக முன்வைத்த விமர்சனங்களினால் கலவரமுற்றிருந்த பதவியிலிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவுக்கு, அல்பக்கதாதியின் உருவத்தில் ஒரு துரும்பு கிடைத்தது! ஐ.எஸ்.ஐ எஸ். அமைப்பின் தலைவர் அல் பக்தாதி கொல்லப்பட்டார்.

அதனை தனது அரசு கண்டித்ததாம்…! ஆனால், நாட்டின் தேசிய பாதுகாப்பை பொறுப்பேற்கப்போவதாக தேர்தல் பிராசர மேடைகளில் கூறிக்கொண்டிருக்கும் ராஜபக்‌ஷக்கள் அது தொடர்பாக கருத்துக்களை கூறுவதற்கு தயங்குவது ஏன்? என கேள்வி எழுப்பியதுடன், இவர்களுக்கும் அந்தப் பயங்கரவாத அமைப்புடன் ஏதேனும் தொடர்புகள் இருக்கிறதா? என்ற கேள்வி எழுவதாகவும் சொன்னார்.

இறுதியில் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடுப்பகுதியில் அதிபர் தேர்தல் முடிந்தவுடன் காட்சிகள் மாறின. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் அவசரமாக இலங்கை வந்த பாரதப்பிரதமர் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதிபர் தேர்தல் முடிந்த மறுகணமே தனது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை அவசரமாக இலங்கைக்கு அனுப்பி, தனது எஜமான் உங்களுடன் பேசவிரும்புகிறார். அவசியம் வாருங்கள் என்று புதிய அதிபருக்கு அழைப்புவிடுத்தார். புதியவரும் பதவி ஏற்றபின்னர் முதலாவது விஜயமாக பாரதம் சென்றார். குறிப்பிட்ட ஜெய்சங்கர் தற்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர். பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்களும் 2019 இல் தெரிவான புதிய அதிபரை சந்தித்து நடந்த சம்பவங்களுக்கு சரியான உரிய விசாரணைகளை நடத்துமாறு கோரினார். எதுவும் நடக்கவில்லை. இறுதியில் அவர் சர்வதேச சமூகத்தையும் வத்திக்கானில் போப்பாண்டவரையும் நாடினார் ! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகளாகிவிட்டன. “ ஏலி ஏலி லாமா சபக்தானி “ என் தேவனே என்தேவனே… ஏன் என்னை கைவிட்டீர் “ Source: elukathir.lk
    
 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...