இலங்கையின் பொருளாதாரம் முகம்கொடுக்கும் பாரிய பிரச்சினை டொலர் பற்றாக்குறை ஆகும்


Dr. P. Nandalal Weerasinghe

பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து மீள்வது ஒரு நாளிலோ ஒரு வாரத்திலோ செய்ய முடியாத ஆச்சரியமான விடயம் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க (Dr. P. Nandalal Weerasinghe) தெரிவித்தார்.  மத்திய வங்கியின் புதிய ஆளுநர் தமது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை நிலைபெறச் செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய விசேட பேட்டியில் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:

கேள்வி: தற்போதைய பொருளாதாரப் பிரச்சினையை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?  

பதில்: வேகமாக பள்ளத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் வண்டியின் நிலைமையையே எமது தற்போதைய பொருளாதாரம் கொண்டுள்ளது என்பதைக் கூற வேண்டும். இவ்வேளையில் அவ்வாறான சிரமமான நிலைமைக்கு ஆளாகியுள்ள பொருளாதாரத்தை அதில் இருந்து மீட்பதற்கான தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.  

கேள்வி: வேகமாக பள்ளத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் வாகனத்தை மீட்பதற்கு நீங்கள் முதலில் எடுக்கும் நடவடிக்கை என்ன?  

பதில்: இச்சந்தர்ப்பத்தில் நாம் உடனடியாக செய்ய வேண்டியது வாகனத்திற்குச் சென்று வேகமாகச் செல்லும் வாகனத்தின் வேகத்தை குறைக்க பிரேக்கை அழுத்தி, அதன் பின்னர் வாகனம் விபத்துக்குள்ளாவதை தடுக்க வேண்டும். அதுவே எமது கடமையாகும்.  

கேள்வி: அதனைச் செய்வதற்கு நீங்கள் தயாராக உள்ளீர்களா?  

பதில்: ஆம், நிச்சயமாக அதனைச் செய்ய வேண்டும். அதற்காகவே ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவில் இருந்த என்னை உடனடியாக வந்து மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை பொறுப்பேற்று இதனை நிறைவேற்றும்படி வேண்டுகோள் விடுத்தார். நான் அவ்வேளையில் இலங்கையின் மத்திய வங்கியின் நிதி சட்ட வரையறைகளுக்கு அமைய வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டேன்.  

கேள்வி: உலகில் எந்த ஒரு நாட்டிலும் மத்திய வங்கி சுயாதீனமான நிறுவனமாகவே செயல்பட வேண்டுமா?  

பதில்: நிச்சயமாக… உலகில் எந்த ஒரு நாட்டிலும் மத்தியவங்கி சுயாதீனமாக, சுதந்திரமாக வெளிப்படைத் தன்மையுடன் செயல்படக் கூடிய நிறுவனமாக இருக்க வேண்டும். இலங்கை மத்திய வங்கியும் அவ்வாறான நிலைமைக்கு வருவதற்கு நான் முயற்சி செய்கின்றேன்.என்னுடன் நிதிச் சபையும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடும். நிதிச் சபையின் ஒத்துழைப்பு நூறுவீதம் எமக்குக் கிடைத்துள்ளது. எனக்கும் பெரும் நம்பிக்கை உண்டு. நாம் எடுக்கும் நடவடிக்கைகள் ஊடாக இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை காப்பாற்ற முடியும் என்று எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் இது மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையாகும்.அதனை நாம் அவ்வாறே மேற்கொள்ள வேண்டும். அதனால்தான் நான் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.  

இனி எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவதில் எனக்கு பெரும் பல விடயங்கள் உள்ளன. அவற்றின் இடையே மிக விரைவாக புதிய அமைச்சரவை ஒன்று நியமிக்கப்பட்டு, புதிய நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவதாகும். தற்போது நிதி அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று நிதியமைச்சின் செயலாளராக இலங்கை மத்திய வங்கியில் பிரதி ஆளுநராக கடமையாற்றிய மஹிந்த சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் மத்திய வங்கி தரப்பிலான நிதிக் கொள்கைகள் மற்றும் நிதி அமைச்சின் தரப்பில் எடுக்கப்படுகின்ற அரச நிதி கொள்கை ஆகியவற்றுக்கிடையே மோதல் ஏற்படாமல் நடவடிக்கை மேற்கொள்ள இலகுவாக உள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களிலும் உள்ள இரு தரப்பாரும் ஒரே நோக்கத்தை வெற்றி கொள்வதற்காக நடவடிக்கையில் ஈடுபடுவதால் பிரச்சினை மோசமாக இருந்தாலும் விரைவாக தீர்வு காண முடியும் என்பதே எனது நம்பிக்கையாகும்.  

கேள்வி: இலங்கை முகம் கொடுத்துள்ள டொலர் பற்றாக்குறை தற்போது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதனைத் தீர்ப்பதற்கு நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?  

 பதில்: உண்மையில் இலங்கையின் பொருளாதாரம் முகம்கொடுக்கும் பாரிய பிரச்சினை டொலர் பற்றாக்குறை ஆகும். இதனால் நாம் உடனடியாக செய்ய வேண்டியது டொலர் பற்றாக்குறை ஏற்படக் காரணமான விடயங்களை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்து டொலர் கையிருப்பை அதிகரிப்பதாகும். இவ்வேளையில் நாம் முதலில் செய்ய வேண்டியது பற்றாக்குறைக்கு காரணமான விடயங்களில் பணத்துக்கான தீர்வைக் காண்பதாகும். அங்கு எமக்கு தெரிய வரும் விடயம் என்னவென்றால் எமது வெளிநாட்டு கடன்களை செலுத்துவதை தாமதப்படுத்துவது பிரதான அம்சமாகும்.

பிரச்சினை ஏற்படாத விதத்தில் தீர்வுக்கு செல்வதே நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கையாகும். அதற்காக சமூகத்தில் அநேகமானோர் கூறுவது போன்று சர்வதேச நாணய நிதியத்திடம் நாம் செல்ல வேண்டியுள்ளது.  

கேள்வி: ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அதனால் கிடைக்கும் பலன் என்ன?  

பதில்: நாம் ஒரு நாடாக தற்போது சிரமத்துக்குள்ளாகி இருந்தாலும் அது தொடர்ந்தும் அவ்வாறே இருக்கவும் கூடாது, இருப்பதும் நல்லதல்ல. அதன்படி உடனடியாக நாம் வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய அந்நிய செலாவணி கடனை திரும்ப செலுத்துவதை ஓரளவுக்கு தாமதப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதைத் தவிர எமக்கு நிவாரணமாக சலுகை அடிப்படையில் கடன்களை பெற்றுக் கொள்ள அக்கறை செலுத்த வேண்டியும் உள்ளது. இங்கு சர்வதேச நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டு முதலாவதாக கடன் மீள் கட்டமைப்பு திட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அதற்காக அவர்களின் ஒத்துழைப்பை இரண்டு வழிகளில் பெற்றுக் கொள்ள வேண்டும்.  

கேள்வி: சர்வதேச நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான அவ்விரண்டு வழிகளும் எவை?  

பதில்: அதில் முதலாவது செய்ய வேண்டியது கடன் மீள் கட்டமைப்பாகும். கட்டமைப்புக்குத் தேவையான தொழில்நுட்ப உதவியை பெற்றுக் கொள்வது இரண்டாவதாகும். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியை பெற்றுக் கொள்ள இவ்விரண்டையும் நாம் ஆறு மாதத்திற்கு முன்னர் மேற்கொண்டிருந்தால் இந்த பிரச்சினை இவ்வளவு மோசமாக மாறி யிருக்காது. ஆனால் நாம் அவ்வாறு செயல்படவில்லை. இங்கு எனது பொறுப்பு மரண விசாரணை நடத்துவது அல்ல. நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மேம்படுத்துவதே எனது நோக்கம். அதன்படி மிக விரைவாக தற்போது ஆரம்பித்துள்ள சர்வதேச நித்தியத்துடனான கலந்துரையாடலை விரைவுபடுத்துவதற்கு நான் எதிர்பார்த்து உள்ளேன்.  

 கேள்வி: இன்றோ நாளையோ சர்வதேச நாணய நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இலங்கை அரசு கலந்துரையாட வேண்டியுள்ளது அல்லவா? அதனை எவ்வாறு மேற்கொள்வீர்கள்?  

பதில்: தற்போது நிதி அமைச்சின் செயலாளருடன் பிரதிநிதிகள் குழு ஆரம்பக் கலந்துரையாடலை தொடங்கியுள்ளது. நாம் ேவாஷிங்டனில் அதன் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தவுள்ளோம். ஆனால் அதற்கு முன்னர் எமது நாட்டிலிருந்து இருந்து தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கலந்துரையாடல்களை மேற்கொள்கிறோம்.  

கேள்வி: சர்வதேச நாணய நிதியத்தால் இந் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு வழங்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன?  

பதில்: உண்மையில் இலங்கை முகம் கொடுத்துள்ள இந்தப் பிரச்சினைக்கு அரச வருமானம் குறைவே காரணமாக உள்ளது. அரசின் வரி வருமானம் குறைவதற்கு காரணமான பல செயல்கள் நடைபெற்று உள்ளன. அதனால் அரசாங்கத்தின் வருமானம் இல்லாமல் போனது. நாம் இச்சந்தர்ப்பத்தில் செய்ய வேண்டியது முடிந்தளவு அரசு வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகும். அதற்காக வரிக் கொள்கையில் மாற்றங்கள் பல மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதேபோன்று அரச செலவுகளை முடிந்தளவு குறைக்க வேண்டியுள்ளது. அத்தியாவசிய செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. விரயம், ஊழல்களை குறைக்க வேண்டும். அரசின் செலவை முடிந்தளவு பயன் மிக்கதாகவும் செயல்திறன் மிக்கதாகவும் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறான யோசனைகளை சர்வதேச நிதியம் சொல்வதால் மாத்திரமல்ல நாம் யோசனைகளை முன்வைத்து செயல்படுத்தினால் அது அரசின் சார்பாகவும் நாட்டின் சார்பாகவும் மக்களின் பக்கமிருந்தும் நல்ல பலனை பெற்றுக் கொள்ள முடியும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த நல்ல யோசனைகளை யார் செய்தாலும் நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் என்றால் அதனை நாம் செய்ய வேண்டும்.  

கேள்வி: தற்போது நாடு முகம் கொடுத்துள்ள உயர் பணவீக்கத்துக்கு காரணம் பணத்தை அச்சிட்டது என குற்றச்சாட்டு உள்ளது. மத்திய வங்கியின் தேவையின் பேரில் பணத்தை அச்சிட்டதுடன் மேலதிகமாகவும் பணத்தை அச்சிட்டதாக சில சமூக ஊடகங்களில் கதைக்கப்படுகின்றது.இந்நிலைமையை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?  

பதில்: பணம் அச்சிடுவது என்பது ஆழமாக பேசப்பட வேண்டிய தலைப்பாகும். சிலர் பணத்தை அச்சிடுவதை பிழையான விதத்தில் முன்வைக்கின்றார்கள். ஆனால் இலங்கை மத்திய வங்கி நிதி வர்த்தக சந்தையின் தேவையின் பேரிலேயே நோட்டுகளை அச்சடித்து உலாவ விட்டது. அதைச் செய்ய வேண்டும். அதற்காக இலங்கை மத்திய வங்கி செயல்படுவது தொழில்நுட்ப முறைகளுக்கு அமையவேயாகும். அதற்கு மேலதிகமாக பணத்தை அச்சிட்டு நிதி சந்தைக்கு உலாவ விடக் கூடாது. 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 300பில்லியன் ரூபா சந்தைக்கு விடுவிக்கப்பட்டது. நாம் அது தவறல்ல என அன்று கூறினோம். சிலர் குற்றம் சாட்டினார்கள். ஆனால் இன்று உண்மை வெற்றி கண்டுள்ளது. அதனால் நிதி சுழற்சியை எமக்கு வேண்டியவாறு மேற்கொள்ள முடியாது. நீங்கள் இரண்டாவதாக கூறுவது போன்று பணத்தை அச்சிடுவதாக சமூக ஊடங்களில் பரிமாறப்படும் செய்திகள் தொடர்பாக உடனடியாக இலங்கை பொலிசாருக்கு அறிவிப்பது பொறுப்பு வாய்ந்த நாட்டு மக்களின் கடமையாகும். அவ்வாறான விடயம் பொலிசாருக்கு தெரியவந்தவுடன் அதற்கு உடனடியாக அவர்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பார்கள். மத்திய வங்கியும் எம்மால் வழங்கக் கூடிய உயர்ந்தபட்ச பங்களிப்பை பெற்றுக் கொடுத்து மோசடியாக பணத்தை அச்சிடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக செயல்படுத்துவதற்கு தயங்க மாட்டோம்.  

 கேள்வி:இலங்கை ரூபாவின் பெறுமதியைப் பாதுகாப்பதற்கு நீங்கள் வழங்கும் யோசனைகள் எவை?  

பதில் :அதனைத்தான் நாம் கடந்த வெள்ளிக்கிழமை செயல்படுத்தினோம். சரித்திரத்திலேயே முதல் தடவையாக கொள்கை அளவிலான வட்டி வீதத்தை 7வீதத்தால் அதிகரிக்கச் செய்தோம். அதன் மூலம் இறக்குமதியை குறைப்பதற்கும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும் வழி ஏற்பட்டுள்ளது. இந்த முடிவுகளின் பலன் நாட்டிற்கு இன்றே கிடைக்காது. ஆனால் அம்முடிவு காரணமாக இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் நல்ல நன்மைகள் எமக்குக் கிடைக்கும்.  

கேள்வி:வெளிநாட்டு பணியாளர்களிடமிருந்து எமக்குக் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லவா?  

பதில்: நிச்சயமாக அதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் இங்கு ரூபாவின் பெறுமதியை டொலருக்கு இணைந்ததாக வீழ்ச்சியடைவதை தடுப்பதற்கு சந்தைக்கு இடமளிக்க வேண்டும். அதன்படி அதிகமாக டொலரை பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதோடு, அவற்றை சட்டத்தின் மூலம் வர்த்தமானி அறிவித்தல் செய்து சட்டங்களை விதித்து செய்ய முடியும் என நாம் நம்பவில்லை.  

கேள்வி: கடன் மீள்கட்டமைப்பு செய்யும் வேளையில் இலங்கை பெற்றுள்ள வெளிநாட்டு உள்நாட்டு கடன்கள் இரண்டும் மீள்கட்டமைப்பு செய்யப்படுமா?  

பதில்: தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை வெளிநாட்டு கடன் பிரச்சினையாகும். அதனால் வெளிநாட்டு கடனைச் செலுத்துவதற்கு மீள்கட்டமைப்பு செய்து சலுகைக் காலத்தை பெற்றுக் கொள்ளுதல் மீண்டும் வட்டி வீதத்தை குறைத்தல் போன்றவை கலந்துரையாடப் பட்டுள்ளன. உள்ளூர்க் கடனை திரும்பச் செலுத்துவது தொடர்பாக பிரச்சினை இல்லை என்பதால் அதனை மீள்கட்டமைப்பு செய்யும் நோக்கம் இல்லை.  

கேள்வி: மத்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவியில் அதிகாரங்கள் மற்றும் வரப்பிரசாதங்கள் உரித்தாகின்றன . உங்களது பதவியின்படி நீங்கள் ஐந்தாவது இடத்தில் உள்ளீர்கள். அது அண்மையில் இடம்பெற்ற ஒன்றாகும். நீங்களும் அதனை ஏற்றுக் போகின்றீர்களா?  

பதில்: எனக்கு வழங்கப்பட்டுள்ளது நிதி தொகுதியின் பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்தி செயல்படுத்துவதாகும். அவர்கள் பொதுமக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்கள். நான் அவ்வாறு தெரிவாகவில்லை. அதனால் நான் அது குறித்து கவனம் செலுத்தத் தேவையில்லை. நான் எனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் மற்றும் கடமைகளை நிறைவேற்றும் வகையில் செயல்படுவேன். அதற்கு அப்பால் நான் எதிர்பார்ப்பது எதுவுமில்லை.  

பேட்டி கண்டவர்: ஜயஸ்ரீ முனசிங்க
தமிழில்: வி.ஆர். வயலட்

Source : Chakkaram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...