லங்கையில் தற்போது பதவியில் இருக்கும் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகளாலும், ‘பொதுமக்கள்’ என்ற பெயரிலும் நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

ஆரம்பத்தில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் என ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் தற்பொழுது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளினதும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பதவி விலகும்படியும் கோரி நிற்கிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வைக் காரணம் காட்டியே இந்தப் போராட்டம் ஆரம்பமானது. அதனுடன் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான போராட்டமாகவும் அது சித்தரிக்கப்பட்டது. பின்னர் முழு அரசாங்கமும் ஊழல் மோசடியில் ஈடுபட்டதால் ஜனாதிபதியும் பிரதமரும் முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என உரு மாறியது.

ஆர்ப்பாட்டம் செய்பவர்களின் கருத்து இரண்டு விதமாக உள்ளது. ஒன்று, இலங்கையில் மட்டும்தான் இத்தகைய பொருளாதார நெருக்கடி தோன்றியுள்ளது என்றும், அதற்கு இன்றைய அரசாங்கம் பின்பற்றி வரும் கொள்கைகளே காரணம் என்பதும். இரண்டாவது, ராஜபக்ச குடும்பம் பெரும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதால்தான் நாட்டுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்பது.

உண்மையில் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இலங்கைக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல என்பதை ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் கவனிக்கிறார்கள் இல்லை அல்லது தெரியாதது போல நடிக்கிறார்கள். இன்றைய பொருளாதார நெருக்கடி என்பது இலங்கை போன்ற சகல வளர்முக நாடுகளையும் மட்டுமின்றி, வளர்ச்சியடைந்த மேற்கு நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.

உலகளாவிய இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு அடிப்படையான காரணம் வளர்ச்சி அடைந்த நாடுகளின் உலகமயக் கொள்கையாகும். வளர்ச்சி அடைந்த நாடுகள் உலகின் முன்னணி நிதி நிறுவனங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுடன், வளர்முக நாடுகளை ஈவிரக்கம் இன்றிச் சுரண்டியும் வருகின்றன.

அடுத்ததாக, கடந்த இரு வருடங்களாகத் தொடரும் கொவிட் – 19 என்ற பெருந்தொற்று சகல நாடுகளினதும் பொருளாதார நடவடிக்கைகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

இன்னொன்று, ரஸ்ய – உக்ரைன் போர் ஏற்படுத்தியுள்ள தாக்கம். இந்தப் போரைக் காரணமாக வைத்து அமெரிக்காவும் அதன் மேற்கத்தையக் கூட்டாளி நாடுகளும் ரஸ்யா மீது சுமார் 400 வரையான பொருளாதார மற்றும் அரசியல் தடைகளை விதித்துள்ளன. இதனால் உலகப் பொருளாதாரக் கட்டமைப்பே ஆட்டம் கண்டுள்ளது. முக்கியமாக எரிபொருட்களின் விலைகள் அதிகரித்து சகல நாடுகளிலும் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவே தனது நீண்டகாலத் தேவை கருதி நிலத்துக்கு அடியில் சேமித்து வைத்துள்ள எரிபொருளை வெளியே எடுத்துப் பயன்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலைமையில், முழுக்க முழுக்க உலகப் பொருளாதாரக் கட்டமைப்பில் தங்கியுள்ள இலங்கை இந்த நிலைமையால் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடந்த காலத்தில் அந்நியச் செலாவணியை ஈட்டித் தந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், உல்லாசப் பயணத்துறை, தேயிலை மற்றும் ஆடை ஏற்றுமதி என்பன கொவிட் பெருந்தொற்றுக் காரணமாக பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளன. அதன் காரணமாகவே டொலர் பற்றாக்குறை ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்கள், மருந்து வகைகள், எரிபொருள் என்பவற்றை இறக்குமதி செய்து மக்களுக்கு வழமை போல வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டது.

இலங்கைக்கு இந்த நிலைமை ஏற்பட்டதற்கு இன்றைய அரசாங்கமோ அல்லது ராஜபக்ச குடும்பமோ மட்டும் தனியான காரணங்கள் அல்ல. இன்றைய நெருக்கடிக்கு அவர்களும் ஒரு பங்காளிகள் மட்டுமே.

உண்மையில் இன்றைய நெருக்கடி நிலை ஏற்பட்டதற்கு உலக முதலாளித்துவ அமைப்பு முறையும், இலங்கையின் நவ காலனித்துவ பொருளாதார அமைப்பு முறையுமே அடிப்படைக் காரணங்கள். இலங்கையை ஆட்சி செய்த சகல முதலாளித்துவ அரசியல் கட்சிகளும், ஆட்சி செய்யாவிட்டாலும் முதலாளித்துவ முறையைப் பாதுகாத்த மற்றைய சகல கட்சிகளுமே இன்றைய நிலைக்குக் காரணகர்த்தாக்கள். ஆனால் திருடனே மற்றையவனைப் பார்த்து ‘திருடா’ எனக் கூச்சல் போடுவது போல எதிர்க்கட்சியினர் இன்றைய நெருக்கடி நிலைக்கு தற்போதைய அரசாங்கமே முழுக் காரணம் என விரலை நீட்டுகின்றனர்.

ஒரு தவறான சமூக அமைப்பு முறை காரணமாக ஏற்பட்டுள்ள இன்றைய நெருக்கடி நிலைக்கு ராஜபக்ச குடும்பம்தான் முழுக் காரணமும் என்ற வாதமும் ஏற்கக் கூடியது அல்ல. கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்த சகல அரசியல்வாதிகளும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். சிலர் மீது வழக்குகளும் கூட நடந்திருக்கின்றன. ஆனால் யாராவது தண்டிக்கப்பட்டிருக்கிறார்களோ என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில், அரசியலில் ஈடுபட்ட ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் சிலரும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், நாட்டின் சொத்துகள் அனைத்தையும் தனியொரு குடும்பம் திருடியதால்தான் நாடு திவாலடைந்து போனது என்ற வாதம் யதார்த்தமானது அல்ல. 2015 இற்கு முன்னரும் ஆட்சியில் இருந்த ராஜபக்ச அரசாங்கம் மீதும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. ஆனால், 2015 இல் ‘நல்லாட்சி’ என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் அமைந்தது. அந்த ஆட்சியில் ராஜபக்ச குடும்ப அங்கத்தவர்கள் மீதும், அவரது ஆட்சியில் இருந்த சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றங்களில் பல வழக்குகள் போடப்பட்டதுடன், விசேட ஆணைக்குழுக்கள் அமைத்து விசாரணைகளும் நடத்தப்பட்டன. ஆனால் ஒரு குற்றச்சாட்டாவது இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை.

மாறாக, நல்லாட்சி அரசாங்கத்தால், குறிப்பாக பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்காவால், தனது நெருங்கிய நண்பரான அர்ச்சுனா மகேந்திரன் என்பவரை மத்திய வங்கி ஆளுநராக நியமித்து, அவர் வங்கியின் பல்லாயிரக்கணக்கான கோடி பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு போய் சிங்கப்பூரில் சொகுசாக வாழ்க்கிறார். அவரை இன்றைய அரசாங்கத்தாலோ, சிங்கப்பூர் அரசாங்கத்தாலோ அல்லது ‘இண்டபோல்’ என்ற சர்வதேச பொலிஸ் பிரிவினராலோ இலங்கைக்குக் கொண்டு வந்து விசாரணை நடத்த முடியவில்லை. இன்றைய பொருளாதார நெருக்கடிக்காக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வோர் மகேந்திரன் இலங்கையில் ஏற்படுத்திவிட்டுப் போன பொருளாதார நெருக்கடி குறித்து மறந்து விட்டே ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

இன்றைய நெருக்கடிக்கு அரசாங்கத்தின் கொள்கைகள்தான் காரணம் எனக் குற்றச்சாட்டுகளை முன் வைப்பவர்கள் அரசாங்கத்தின் எத்தகைய கௌ;கைகளால் இந்த நிலைமை உருவானது என்பதைத் தெளிவாக ஏன் வைக்கிறார்கள் இல்லை? அதேபோல, ராஜபக்ச குடும்பத்தின் ஊழல் மோசடிகளால்தான் இந்த நிலைமை உருவானது எனக் குற்றச்சாட்டுகளை அடுக்குபவர்கள் அவர்கள் செய்த ஊழல் மோசடிகள் எவை என்பதை ஏன் தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள் இல்லை? மொட்டையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து விட்டு, ‘அரசாங்கத்தை விட்டுப் போ’ என்றால் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா?

அது தவிர, ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பதவி விலகக் கோருபவர்கள், அதன் பின் எவ்வாறு ஒரு அரசாங்கத்தை மீண்டும் உருவாக்கப் போகிறார்கள்? அல்லது அரசாங்கமே இல்லாமல் நாட்டை ஆளப் போகிறார்களா? அப்படி ஆள்பவர்கள் யார் யார்? தவிர இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு எவ்வாறான தீர்வை அவர்கள் காணப் போகிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கு அவர்களுடைய பதில் என்ன? ஆட்சி மாற்றத்தைக் கோருபவர்கள் ஏன் தமது திட்டங்களை நாட்டு மக்கள் முன்பாக வெளிப்படையாக வெளியிடவில்லை?

உண்மை என்னவென்றால், இப்பொழுது ஆட்சி மாற்றத்தைக் கோருபவர்கள் உண்மையான சமூக மாற்றத்தைக் கோரவில்லை. ஆட்சி மாற்றம் கோருபவர்களும் இன்றைய முதலாளித்துவக் கட்டமைப்பின் அங்கத்தவர்களும் பாதுகாவலர்களுமே. அவர்களது கோரிக்கை, நோக்கம் எல்லாம் தற்பொழுது ஆட்சியில் இருக்கும் நபர்களை அகற்றிவிட்டு தம்மை அந்த இடத்தில் இருத்துவதே தவிர, இன்றைய முதலாளித்துவ சமூக கட்டமைப்பை மாற்றி அந்த இடத்தில் ஒரு சமதர்ம, நீதியான ஆட்சியமைப்பை உருவாக்கி, நாட்டைத் தன்னிறைவுப் பொருளாதாரத்தில் வளர்த்தெடுத்து, மக்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதல்ல.

உண்மையில் இன்றைய உலக முதலாளித்துவ கட்டமைப்பு முறையினாலும், அதனுடன் பின்னிப் பிணைந்த இலங்கையின் முதலாளித்துவக் கட்டமைப்பு முறையாலும் இலங்கை மக்கள் பல விதமான பொருளாதாரத் துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. அதன் காரணமாக அவர்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணக் கோரிப் போராடுவது இயல்பானதும் தவறற்றதுமாகும்.

ஆனால், அவர்களது போராட்டங்களைப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு சில சுயநல அரசியல் சக்திகள் ஒரு பக்கத்தில் முயல்கின்றனர். மறுபக்கத்தில் இலங்கையின் ஸ்திரத்தன்மையை நிலைகுலைய வைத்து, அதன் மூலம் நாட்டை ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களின் காலடியில் விழ வைத்து, இலங்கையை தமது ஆதிக்க நோக்கத்தின் ஆடுகளமாக்க சில அந்நிய சக்திகள் முயல்கின்றன. இதுதான் இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் பின்னணி.

வெவ்வேறு அரசியல் நோக்கம் கொண்டவர்களால் பின்னணியில் இருந்து இயக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டங்களில் மக்கள் வெறும் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது மட்டுமே உண்மை. காலம் வெகுவிரைவில் இதை நிரூபிக்கும்.

Source: vaanavil 136 April 2022