பாகிஸ்தான் ‘சர்வாதிகாரமும்’இலங்கை ‘ஜனநாயகமும்’ - பிரதீபன்


 See the source image

 Photo: Sundayobserver.lk

தென்னாசிய நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லாத்
தீர்மானத்தின் மூலம் பிரதமராக இருந்த இம்ரான் கானின் அரசு கவிழ்க்கப்பட்டுள்ளது. எதிரணியைச் சேர்ந்த ஒருவர் புதிய பிரதமராகப்
பொறுப்பேற்றுள்ளார். இன்னொரு தென் ஆசிய நாடான இலங்கையில் 69 இலட்சம் மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்சவையும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி அமைத்த அவர்   தலைமையிலான அரசையும் பதவி விலகக் கோரி வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.


மறுபுறத்தில், இன்னொரு தென் ஆசிய நாடான நேபாளத்திலும் அரசைப் பதவி
விலகக் கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாலைதீவு என்ற தென் ஆசிய நாட்டில் ஏற்கெனவே தேர்தல் மூலம்
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் சார்பான ஆட்சி மாற்றம்
ஏற்படுத்தப்பட்டுவிட்டது. தென் ஆசிய நாடுகளில் மிகுதியாக இருப்பவை இந்தியாவும் பங்களாதேசும் மட்டுமே. அதிலும் இந்தியாவிலும் இலங்கை நிலைமை வரலாம் என   ஏற்கெனவே அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு கட்டியம் கூறுவது போல, அமெரிக்க இராஜாங்க செயலாளர் பிளிங்டன் அண்மையில் இந்தியாவில் மனித உரிமைகள் மோசமடைந்து வருவதாக வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.



இவற்றில் பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய மூன்று நாடுகளையும்
பொறுத்தவரை ஒரு முக்கியமான விடயம் கவனத்துக்குரியது. இந்த மூன்று
நாடுகளும் அமெரிக்காவுக்கும் அதன் மேற்கத்தையக் கூட்டாளிகளுக்கும்
பிடிக்காத நாடுகள். அதே நேரத்தில் இந்த மூன்று நாடுகளும் சீனாவுடன்
நெருங்கிய நட்புறவைப் பேணி வருவதுடன், அண்மைக் காலங்களில்
ரஸ்யாவுடனும் நெருங்கிய நட்புக் கொள்ள ஆரம்பித்துள்ளன. இதில்
அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் மீது கடுமையான கோபம் ஏற்படக்
காரணமாய் அமைந்தது, ரஸ்யா உக்ரைன் மீது தாக்குதலை ஆரம்பித்த
சமயத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ரஸ்யாவுக்கு விஜயம்
மேற்கொண்டிருந்ததுதான். 


இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில
தொடர்ச்சியான பகைமை நீடித்து வருகிறது. ஆரம்பத்தில் அமெரிக்கா இரு
நாடுகளுடனும் ஓரளவு சமமான உறவுகளைப் பேணி வந்தது. சோவியத்
யூனியனில் ஸ்டாலின் மறைவுக்கு பின்னர் குருசேவ் அதிகாரத்துக்கு வந்து
சோவியத் - சீன உறவுகள் சீர்குலையத் தொடங்கியதும், சீனாவுடன் எல்லைத்
தகராறு கொண்டிருந்த இந்தியாவுடன் சோவியத் யூனியன் நெருங்கிய
உறவுகளை ஏற்படுத்தத் தொடங்கியது.
இந்தப் பின்னணியில் சீனாவும் அமெரிக்காவும் பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவைப் பேணத் தொடங்கின. இந்தியாவில் இந்திராகாந்தி பிரதமராக
இருந்த காலத்தில் சோவியத் யூனியனுடன் மிகவும் நெருக்கமான
உறவுகளை ஏற்படுத்தினார். இரு நாடுகளுக்குமிடையில் பாதுகாப்பு
ஒப்பந்தமும் செய்யப்பட்டது. அந்தத் துணிச்சலில் இந்தியா 1971 இல் கிழக்கு
பாகிஸ்தானுக்கு தனது படைகளை அனுப்பி அதை “பங்களாதேஸ்” என்ற
பெயரில் ஒரு தனி நாடாக்கி பாகிஸ்தானைப் பலவீனப்படுத்தியது.
பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் முகமாக அமெரிக்கா தனது “என்ரர்பிறைஸ்” என்ற போர்க் கப்பலை இந்தியாவுக்கு அருகில் அனுப்பிய போதும், அதனால
மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல் போயிற்று.
இந்தியாவுடன் எப்போதும் போர்ச் சூழல் நிலவிய காரணத்தால் பாகிஸ்தானில்
இராணுவ ஆட்சிகளே பெரும்பாலும் நிலவி வந்துள்ளன. சுல்பிகார் அலி
பூட்டோதான் முதன் முதலாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட சிவிலியன்
அரசாங்கத்தை நிறுவினார். ஆனால் அவரது ஆட்சியைக் கவிழ்த்த இராணுவத் தளபதி ஸியாவுல் ஹக் தானே நாட்டின் ஜனாதிபதியாகி பூட்டோவையும் தூக்கில் போட்டார். சில வருடங்கள் கழித்து பூட்டோவின் மகள் பெனாசிர் பாகிஸ்தான் பிரதமராகத் தெரிவான போதும் அவரும் எதிரணியினரால் சுட்டுக்
கொல்லப்பட்டார்.
இந்தியாவில் பிரதமராக இருந்த இந்திராகாந்தி சீக்கிய பாதுகாவலர்களால்
சுட்டுக் கொல்லப்பட்ட பின்பு அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமரானார்.
அவரது காலத்தில் அமெரிக்காவின் பாகிஸ்தான் சார்பு கொள்கை
படிப்படியாக மாறத் தொடங்கி, இந்தியாவில் அமெரிக்க சார்பு வலதுசாரி
பாரதீய ஜனதா கட்சியின் அரசுகள் ஏற்பட்ட பின்பு, அமெரிக்கா பாகிஸ்தானை கைவிட்டு விட்டு இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை வைக்கத் தொடங்கியது.
இத்தகைய ஒரு சூழலில்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான்
தேர்தலில் வெற்றி பெற்று பாகிஸ்தான் பிரதமரானார். அவர் முன்னைய
காலங்களைக் காட்டிலும் அதிகமான உறவுகளை சீனாவுடன் வைத்ததுடன்,
ரஸ்யாவுடனும் உறவுகளை வலுப்படுத்தத் தொடங்கினார். அத்துடன், அமெரிக்காவின் பாகிஸ்தான் விரோதப் போக்கையும் வெளிப்படையாக
விமர்சிக்கத் தொடங்கினார். அவரது போக்கு அமெரிக்காவுக்குப்
பிடிக்கவில்லை. அமெரிக்காவுக்கு ஒரு நாட்டின் ஆட்சி பிடிக்கவில்லை
என்றால் இரண்டு வழிமுறைகளைக் கையாளும். நேரடி விரோத நாடு
என்றால் பொருளாதார மற்றும் அரசியல் தடைகளை விதிக்கும். நேரடி விரோத
நாடு அல்லாமல் தனக்கு எதிரான சீனா போன்ற நாடுகளுடன் ஒரு நாடு
நெருங்கிய உறவைக் கொண்டிருந்தால், வேறு வழிகளில் அந்த நாடுகளில்
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். 2015  இல் அவ்வாறுதான் இலங்கை
ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டார்.

பாகிஸ்தானில் தமக்கு பிடிக்காத இம்ரான் கானின் ஆட்சியை அகற்ற வேறு
வழிமுறை கையாளப்பட்டுள்ளது. முதலில் இம்ரான் கானின் ஆட்சியில்
பங்கு வகித்து வந்த ஒரு கட்சி அந்த ஆதரவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டது. அதனல் அவரது அரசு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. அதைத் தொடர்ந்து எதிர்க் கட்சிகள் மூலம் அவரது அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆட்சி கவிழக்கூடும் என அஞ்சிய இம்ரான் கான் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு  விடப்படுவதற்கு முன்னதாக பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்லத் தயாரானார். ஆனால் எதிர்க்கட்சிகள் அவரது தீர்மானத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினர். எதிர்க் கட்சிகளின் முறைப்பாட்டை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அனைவரும் பாராளுமன்றத்தைக் கலைத்தது அரசியல் சாசனப்படி தவறானது என ஏகமனதாகத் தீர்ப்பளித்தனர். எனவே தவிர்க்க முடியாது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் அவர்
தோற்கடிக்கப்பட்டார்.

ஆனால் எது எப்படியிருப்பினும், பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் அரசியல்
சாசனப்படியே செயல்பட்டு இம்ரான் கானைத் தோற்கடித்துள்ளனர்.
பொதுவாக ‘பாகிஸ்தானில் ஜனநாயகம் இல்லை, சர்வாதிகாரம்தான்
கோலோச்சுகிறது’ எனக் கூறப்பட்டு வரும் நிலையில், வழமைபோல
இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றாது பாராளுமன்ற ஜனநாயக முறையிலேயே
ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானோடு ஒப்பிடுகையில்
இலங்கையில் தற்பொழுது நடைபெறும் போராட்டம் மிகவும் வித்தியாசமானது.
ஒரு பக்கம் மக்களைத் தூண்டி விட்டு வன்முறை கலந்த வீதிப்
போராட்டங்களை நடத்துகின்ற அதே வேளையில், எதிர்க் கட்சிகள்
அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டு ஜனாதிபதியும் அரசாங்கமும்
பதவி விலக வேண்டும் என விடாப்பிடியாக வலியுறுத்துகின்றனர். அவர்கள் அரசியல் சாசன ரீதியாகவும், பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாகவும்
அரசாங்கத்தை மாற்றுவதற்குப் பதிலாக, வன்முறை மூலம் அரசாங்கத்தை
அகற்றுவதற்கே முயல்கின்றனர். ‘இலங்கை ஒரு ஜனநாயக நாடு’ எனப்
பெருமை பேசியவர்கள் இப்பொழுது தேர்தல் மூலம் சாதிக்க முடியாததை
வன்முறை மூலம் சாதிக்க முயல்கின்றனர்.

ஆரம்பத்தில் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராகவும், ராஜபக்ச
குடும்பத்துக்கு எதிராகவும் எனக் கூறி போராட்டத்தை ஆரம்பித்தவர்கள்,
இப்பொழுது பாராளுமன்ற உறுப்பினர்களாகவுள்ள சகல கட்சிகளையும் சேர்ந்த 225 பேரும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர். இது அவர்கள் பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை
என்பதையே காட்டுகிறது. அப்படியானால் இலங்கையில் இனிமேல் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சித் தேர்தல்களே தேவையில்லையா? இதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நிச்சயமாகப் பதில் சொல்ல வேண்டும். அத்துடன், இலங்கையில் என்ன வகையான அரசாங்கத்தை அவர்கள் விரும்புகிறார்கள் என்பதையும், அதை
என்ன வழிகளில் அவர்கள் ஏற்படுத்தப் போகிறார்கள் என்பதையும், நாட்டு
மக்களுக்கும் உலகிற்கும் தெரிவிக்க வேண்டும். 

தேசநலனைப் பார்க்காமல், தங்கள் சொந்த அரசியல் ஆதாயத்திற்காக இந்தச் சூழலைப் பலர் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல. முழு இலங்கை சமூகத்திற்கும் இது மிகவும் கடினமான காலம். இருப்பினும்,
எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்ற விரும்பினால், அவர்கள்
பாராளுமன்றத்தில் தங்களிடம் உள்ள எண்ணிக்கையைக் காட்டட்டும். எந்த
விதமான திட்டமும் இல்லாமல் வெறுமனே அராஜகத்தை மட்டும்
நோக்கமாகக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களின் இந்த விபரீதமான
போக்கு, சில வேளைகளில் இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படுவதற்கு வழிகோலினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...