போராட்டமும் வரலாறும் அம்பலத்தான்

 See the source image

 Photo: courtesy: buzzing.com

சாதிப் பிரச்சினை பற்றிப் பேசுகின்ற சிலர் பழந் தமிழிலக்கியங்களிலே ஆங்காங்கு காணப்படும் சில ‘மனிதாபிமான’க் கருத்துக்களைச் சுட்டிக்காட்டி, பெரும் பெரும் புலவர்கள் எல்லாம் சாதிமுறையை எதிர்த்தே
வந்திருக்கின்றனர் என்று தமக்குத் தாமே ஒருவகையான மனஅமைதியைத்
தேடிக்கொள்வதைக் காணலாம். சங்கப் புலவர்களிலிருந்து இராமலிங்கர் வரை “சாதி சமயச் சழக்குகளை” கண்டித்துப் பாடியவர் பலர் உள்ளனர் என்பது உண்மையே. ஆனால் அக்கண்டனத்தின் தன்மையே கூர்ந்து
நோக்கத்தக்கது. சாதி முறை கூடாது என்பதை எடுத்துக் கூறுவதற்குப்
பெரும்புலமையோ, பேரறிவோ தேவையில்லை. நிலைமையை மாற்றுவதற்கு ஏற்ற வழிவகைகளைக் கூறுவதிலேயே முந்தையோர் பெரிதும்
வேறுபடுகின்றனர்.


“கொடிது கொடிது வறுமை கொடிது” என்று ஔவைக் கிழவியும் பாடினாள்.
ஆனால் வறுமை சமுதாய நிதர்சனமாக இருந்து வந்திருக்கிறது. “இல்லை என்ற சொல்லை உலகில் இல்லை என்ன வைப்பேன்” என்று பாரதி  முழங்கியபோது வறுமை வெறும் வருணணையாக அன்றி மாற்றப்பட வேண்டிய பொருளாகக் காட்சி தந்தது. சாதி முறையும் அவ்வாறுதான்.
மனிதனை மனிதன் அடக்கி அடிமைப்படுத்தும் எல்லாவிதமான முயற்சிகளும் பல்வேறு காலங்களில் போராட்டங்களினாலேயே மாற்றப்பட்டுள்ளன என்பது வரலாற்று உண்மை. மனமாற்றத்தால் அடிப்படை மாற்றம் எதுவும் ஏற்படாது. மந்திரத்தால் மாங்காய் விழாததுபோல, சாதிக்கொடுமையைப் பற்றியும் எமது பழைய இலக்கியங்களிலே எடுத்துரைத்தவர்கள் ஆகக்கூடிய பட்சம் மனமாற்றத்தையே எதிர்பார்த்தனர். உடையவனும் இல்லானும் இருந்த – வணிக வர்க்கச் செல்வாக்கு ஓங்கிய சமுதாய அமைப்பிலே – வறியார்க்கு ஒன்று ஈவது பற்றி விரிவாக எடுத்துரைத்துப் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்’ இணக்க முறையை வகுக்க முயன்றார் வள்ளுவர்.


வறுமையை அதிகப்படவிடாது அதனைக் குறைக்க முயன்றால் செல்வனுக்கு
அதுவே உதவியாயமையும் என்று உபதேசம் பண்ணினார் வள்ளுவர்.
‘அறம்’ உரைத்த வள்ளுவர் எவர் பக்கம் நிற்கிறார் என்பது வெளிப்படை.
ஆனால் சமூக சிந்தனையாளனான அவர் வர்க்கப் போராட்டத்தைத்
தடுக்கவும் - கூர் மழுங்கச் செய்யவும் - முயன்றார்.

பிறப்பால் பெறும் பேதத்தை பேச்சளவில் மறுத்த பொய்யா மொழியார்
செய்தொழில் வேற்றுமையை அடிப்படையாக ஏற்றுக்கொண்டு,
மனிதரிடையே ஏற்றத்தாழ்வை அமைத்து அமைதி கண்டார். வள்ளுவர் புத்துலகு அமைக்க முயன்றவர் அல்லர். பழைய உலகை புத்திசாலித்தனமாக நடக்கும்படி புத்தி கூறியவரே. தார்மீக புனருத்தாரண இயக்கத்தினர், முதலாளிக்கும் (முதலாளித்துவம் அல்ல) தொழிலாளிக்கும் நட்புறவும்
நல்லெண்ணமும் உருவாக வேண்டும் எனப் பிரச்சாரம் செய்து
கலைவடிவங்களில் அக்கருத்தை  முக்கியப்படுத்துவது போலவே, தனது
காலத்து சமூக முரண்பாட்டிற்கு “அமைதியான” நிவாரணம் காண
முயன்றார் வள்ளுவர். ஆனால் அவர் அதில் எள்ளளவும் வெற்றிபெறவில்லை
என்பது சரித்திரச் செய்தி.


அருளும் அன்பும் ஆருயிர் ஓம்பலும் வள்ளுவர் தனது வர்க்கத்தவராகிய
வணிகருக்குக் கூறியவை. நேர்மையாகப் பொருள் கொடுத்து நீதியாகப் பணம் பெறுமாறு வள்ளுவர் இடித்து இடித்துக் கூறினார். ஆனால் வாய்ச்சொல்லால் வர்க்க இயல்புகள் மாறிவிடுமாயின் வரலாறே வேறாயிருக்குமே. வள்ளுவர் பலவாறு கூறி எச்சரிக்கை செய்திருக்கவும் வணிக வர்க்கம் தனது ஈவிரக்கமற்ற சுரண்டலைத் தொடர்ந்து
நடத்தியதை சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காப்பியங்களும் பிற நூல்களும் எமக்கு ஓரளவு காட்டுகின்றன.


அச்சுரண்டலையும் அதன் விளைவாகச் சமுதாயத்தில் பரவலாகக்  காணப்பட்ட துன்ப துயரங்களையும் எதிர்த்து மூண்டெழுந்ததே ‘பக்தி இயக்கம்’ எனப்படும் வர்க்கப் போராட்டம். தமது முன்னேற்றப்பாதையில்
அடியெடுத்துவைக்க பெருநிலக்கிழாரும், பிரபுக்களும் சைவம் என்ற பெயரில்
“ஆதரித்துத் தின்றுழலும் புலைய”ரையும்  உடன் காட்டி – அணிதிரட்டி, எதிர்
வர்க்கத்தினரின் “தலையை அறுக்கும்” அறத் தொழிலைச் செய்ய முற்பட்டனர்.


நாயன்மாரும் ஆழ்வாரும் சாதி முறைமையை எதிர்ப்பவராயினர். இறைவன் முன் யாவரும் சமம் என்று குரல் எழுப்பினர். வேடர் முதல் பறையர் வரை இறை பக்தர்களாயின் ஒன்றே என்ற கருத்து உருவாகியது. ஆனால் இதே வைதிக சமயங்கள் தனியுரிமையும் சிறப்புச் செல்வாக்கும் பெற்று விளங்கிய
சோழப் பெருமன்னர் ஆட்சியிலே முன்னிருந்ததைவிடச் சாதி முறை மிகக்
கடுமையாக அனுட்டிக்கப்பட்டது. அவரவர் யோகம் பாவத்துக்கேற்பவே
சாதியும் வாழ்க்கைத் தகுதியும் என்று சமாதானம் கூறப்பட்டது. இறைவன்
யாவரும் சமம் என்ற குரல் மறைந்தது. உயர்ந்த குலமக்களே தெய்வங்களாக
உலாவினர். தெருக்களிலே ‘உலாப்பவனி’ வந்த மானிட மன்னன் இறைவன் ஆனான். எனவே பக்திமான்கள் இழித்துப்பாடிய சாதி முறை, சாதிச் சழக்கு சமூக நிறுவனத்தினரின் கூறுகளில்  ஒன்றாயிற்று. சைவம் மேனிலை எய்திய
பிற்காலச் சோழர் ஆட்சியிலும் மடங்கள் செழித்து வளர்ந்த காலத்திலும்
வருணாசிரம தருமமே தலையாய தருமமாகப் பேணப்பட்டது.


எனவே மக்களது அபிலாசை மீண்டும் தலைதூக்குகிறது. இம்முறை,
சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் எதிர்த்துக் குரல் எழுப்பிய சித்தர்கள்
சாதியெதிர்ப்பையும் தமது கொள்கையில் இணைத்துக் கொண்டனர். ஆனால்
சமூகத்திலிருந்து ஒதுங்கி, புறவாசிகளாக – வெறும் கண்டனவாதிகளாக மட்டும் - சித்தர்கள் வாழ்ந்தனர். மக்களது அபிலாசைக்கு ஆக்கபூர்வமான
உருக்கொடுத்து எதிர்ப்பை நடைமுறை இயக்கமாக நெறிப்படுத்தும் ஆற்றலும்
அறிவும் அவர்களிடம் இருக்கவில்லை. தமக்குப் பிடிக்காத சமுதாயத்திலிருந்து தாமாகவே விலகிக்கொண்டனர். அவ்வளவில் அவர்கள் எதிர்ப்பு நின்றது. அந்தளவிலேயே அவர்கள் மக்களைக் கவர்ந்திருந்தமையை நோக்குமிடத்து மக்கள் இன்னும் முன்னேறத் தயாராயிருந்தமை புலப்படுகிறது. இன்னொன்று, சித்தர்கள் சமுதாய உணர்வு நிறைந்தவராய் இருந்தும் அவர்களது “தத்துவம்” சமய சம்பந்தமானதாயும் - அகநிலைப்பட்டதாயும் குறுகிய வரம்புக்குள் அமைந்தது. எனவே ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் அதன் செல்வாக்கு இயங்கமுடியாது போயிற்று.


இந்த வரலாற்று உண்மை சற்று ஆழமாக நோக்கத்தக்கது. ஏனெனில் சமயப் போர்வையிலேயே இதுகாலவரை சாதிப் பிரச்சினை நோக்கப்பட்டு
வந்தமையால், மிகச் சமீப காலம் வரை – அதாவது நவீன காலப் பகுதயிலும்
பலர் சமய அடிப்படையில் இப்பிரச்சினைக்கு விடிவுகாண எண்ணினர். கிறித்தவம், பௌத்தம் முதலிய சமயங்களைச் சேர்வதால் சாதிப் பிரச்சினைக்குத் (தம்மளவிலே) தீர்வு காண்பதாகப் பலர் கருதியிருக்கின்றனர்.
 

(இந்தக் கட்டுரை 1969ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தீண்டாமை
ஒழிப்பு வெகுஜன இயக்க மாநாட்டின் போது வெளியிடப்பட்ட சிறப்பு
மலரிலிருந்து எடுக்கப்பட்டதாகும். இந்தக் கட்டுரையை எழுதிய “அம்பலத்தான்” பெரும்பாலும் காலஞ்சென்ற பேராசிரியர் க.கைலாசபதி அவர்களே என்பது பலரின் கருத்தாகும்.)

No comments:

Post a Comment

இலங்கை வரலாற்றில் அழியாத சுவடுகளைப் பதித்துச் சென்ற1953 ஓகஸ்ட் 12 ஹர்த்தால்!--மாவலியான்

மே 18, 2022 1953 இல் ஒரு பெரிய ஊர்வலத்தில் என்.எம். பெரேரா உரையாற்றுகிறார் 1953 ஆம் ஆண்டு ஹர்த்தாலையும் தற்போது காலிமுகத்திடலில் முகாமிட்டிர...