திலீப் குமார்: சினிமா வெறியின் குறியீடு! - ஷாஜி

 

.dilip-kumar

 

என்னுடைய ‘சினிமா வெறியின் 40 ஆண்டுகள்’ புத்தகத்தின் அட்டையை வடிவமைத்தபோது, இந்திய, உலக சினிமாவில் என்னைப் பாதித்த நடிகை - நடிகர்களின் முகங்களைத்தான் அதன் முகப்பாக வைத்தேன். ஆயிரம் சொன்னாலும் சினிமாவின் முகம் என்பது என்றைக்கும் நடிகர்களே! அட்டைப்படத்தின் முதல் வரிசையின் எல்லாப் படங்களுமே கறுப்பு வெள்ளையில் அமைய, நடுவே வந்த திலீப் குமாரின் படம் மட்டும் வண்ணப் படமாக அமைந்தது வெறும் தற்செயலல்ல என்றே நினைக்கிறேன். 1950-களில் இந்தித் திரைப்படங்களின் முகமாகவே இருந்தவர் திலீப் குமார்.

நான் ஹைதராபாதில் இருந்த காலத்தில், அங்குள்ள முஸ்லிம் பெரும்பான்மைப் பகுதிகளான லால் தர்வாஸா, கோஷா மகால், மெஹ்திப் பட்டணம் போன்ற பகுதிகளுக்குச் சென்றபோது, அங்கே நூற்றுக்கணக்கான மாட்டுக்கறி பிரியாணிக் கடைகளைப் பார்த்தேன். பெரும்பாலும் ‘யூசுப் கான் கல்யாணி பிரியாணி’ என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. அந்த உணவுக் கடைகளின் பெயர்ப் பலகைகள் அனைத்திலும் திலீப் குமாரின் வண்ணப் படம் அழகாக வரையப்பட்டிருந்தது. இதற்கு ஒரு கதையைச் சொன்னார்கள்.

 

ஹைதராபாத் நகரை மிகவும் நேசித்த திலீப் குமார், அடிக்கடி அங்கே படப்பிடிப்புகளுக்கு வருவது வழக்கம். ஒருமுறை அவரது அதிதீவிர ரசிகர்களான ஏழை முஸ்லிம்கள் சிலர் அவரைச் சந்திக்கிறார்கள். தமது கொடிய வறுமையை அவரிடம் சொல்கிறார்கள். “நிறைய மாட்டுக்கறி பிரியாணிக் கடைகளை அமைத்தால் பலருக்குத் தொழிலும், பல்லாயிரக்கணக்கானோருக்குக் குறைந்த விலையில் சத்தான உணவும் கிடைக்கும்” என்கிறார்கள். அந்த யோசனையை ஏற்று, ‘கல்யாணி பிரியாணி’ என்று பெயர் வைத்து, நூற்றுக்கணக்கான உணவுக் கடைகளை அமைக்கும் முழுச் செலவையும் திலீப் குமாரே ஏற்றுக்கொண்டாராம்.

இன்றைய பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் சினிமா, நடிப்பு போன்றவற்றையெல்லாம் பெரும் பாவமாக நினைத்திருந்த ஓர் அடிப்படைவாத இஸ்லாமியக் குடும்பம் இருந்தது. அவர்களது தாய்மொழி ஹிந்த்கோ எனும் கோத்திர மொழி. அந்தக் குடும்பத்தின் 12 குழந்தைகளில் ஒருவராக 1922-ல் பிறந்தார் மொஹம்மத் யூசுப் கான் எனும் திலீப் குமார். இஸ்லாமியச் சமூகத்திலிருந்து புறப்பட்ட இந்தியாவின் முதல் திரைப்பட உச்ச நட்சத்திரமாக அவர் பிற்பாடு மாறினார்.

குடும்பத்தின் பாரம்பரியத் தொழிலான பழ வியாபாரமும், பழத்தோட்டம் வளர்ப்பதும் தோல்வியுற்றபோது, பழ விவசாயத்துக்கு ஏற்ற மஹாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் தேவலாலி மலைப் பகுதிக்கு அவருடைய குடும்பம் இடம்பெயர்ந்தது. அங்கே உள்ள பழமைவாய்ந்த ஆங்கிலப் பள்ளியில் யூசுப் கான் படிக்கும்போது, புகழ்பெற்ற நடிகர் பிருத்விராஜ் கபூரின் மகன் ராஜ் கபூரும் அங்கே படித்தார். இருவரும் நண்பர்களானார்கள். படிப்பிலும் நடிப்பிலும் கில்லாடியாக இருந்த யூசுப், ராஜ் கபூரின் தூண்டுதலால் ஒரு திரைநடிகனாக மாற முடிவெடுத்தார். அதைத் தனது அப்பாவிடமிருந்து மறைக்க திலீப் குமார் என்று பெயரை மாற்றிக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இஸ்லாம் மதத்திலிருந்து வந்த நடிகை, நடிகர்கள் பெரும்பாலும் தமது பெயரை மாற்றும் வழக்கம் அப்போது இருந்தது. மீனா குமாரி, மதுபாலா, நர்கீஸ் எனப் பல உதாரணங்கள். முஸ்லிம்கள் நடிகர்களாக வருவதில் அந்த மதத்துக்குள்ளேயும் பிற மதத்தவர்களிடையேயும் எதிர்ப்பு இருந்த காலகட்டம் அது.

கற்றுக்கொள்வதில் ஜித்தனான திலீப் குமார் உருது, இந்தி, ஆங்கிலம், வங்காளி,, மராத்தி என 12 மொழிகளைச் சிறுவயதிலேயே கற்றுத் தேர்ந்தவர். அதோடு இந்துஸ்தானி இசையும் சித்தார் இசைக் கருவியும் பயின்றார். நன்றாகப் பாடவும் கூடியவர். ஆனால், பொதுவெளியில் பாடுவதில் மிகுந்த கூச்சம் கொண்டவராக இருந்தார். நூற்றுக்கணக்கான பெருவெற்றிப் பாடல் காட்சிகளில் நடித்து, கோடிக்கணக்கான மக்களைக் கவர்ந்த திலீப் குமாருக்கு, சொந்தக் குரலில் பாடுவதில் நாட்டமே இருக்கவில்லை. ஆனால், அவரை ‘முசாபிர்’ படத்தில் வலுக்கட்டாயமாகப் பாடவைத்தார் மாமேதை சலில் சௌதுரி.

22 வயதில் நடிக்க ஆரம்பித்த திலீப் குமாரின் முதல் மூன்று படங்கள் படுதோல்விகள். நான்காவது படமான ‘ஜுக்னூ’தான் முதல் வெற்றிப் படம். அதிலிருந்தே அவரது தனித்துவமான நடிப்பு பாணி வெளிப்படத் தொடங்கியது. ஃபிலிம்பேர் விருதுகள் ஆரம்பித்த 1952-ல் ‘தாக்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான முதல் ஃபிலிம்பேர் விருதைப் பெற்றார் திலீப் குமார். பிறகு, ஒன்று இரண்டல்ல... பதினான்கு ஃபிலிம்பேர் விருதுகளைப் பெற்றார். ‘டிராஜிடி கிங்’, அதாவது துயரக் கதை நடிப்பரசன் என்று அவர் அழைக்கப்பட்டாலும்கூட, வாள்சண்டைப் படமான ‘ஆன்’, நகைச்சுவைப் படங்களான ‘ஆசாத்’, ‘ராம் அவுர் ஷ்யாம்’ என வித்தியாசமான கதைக்களம் கொண்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார். இருந்தும், மொத்தம் 65 படங்களில் மட்டுமே அவர் நடித்திருக்கிறார் என்பது மிகவும் ஆச்சரியமானது.

தமிழ்நாட்டுடன் நெருங்கிய உறவுகொண்டிருந்தவர் திலீப் குமார். கருணாநிதி, எம்ஜிஆர் போன்றவர்களுடன் தொடர்பில் இருந்தவர். அவர் நடித்த ‘உடான் கட்டோலா’ எனும் மாபெரும் வெற்றிப்படம் 1956-ல் ‘வானரதம்’ எனும் பெயரில் தமிழில் மொழி மாற்றப்பட்டு, இங்கேயும் பெரும் வெற்றி கண்டது. திலீப் குமார் மீதான தீவிர அபிமானத்தால், அவரது பெயரைத் தமது குழந்தைகளுக்கு வைக்கும் பழக்கம் 1950-60-களில் இந்தியா முழுவதும் இருந்தது. இவ்வாறுதான் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் தனது ஒரே மகனுக்கு திலீப் குமார் என்று பெயர் வைத்தார் என்று சொல்லப்படுகிறது.

ஆரம்பத்தில் காமினி கௌஷல், மதுபாலா, வைஜயந்திமாலா போன்ற நடிகைகளுடன் காதல் உறவில் இருந்த திலீப் குமார், இறுதியில் தன்னைவிட 22 வயது குறைவான சாய்ரா பானு எனும் நடிகையைத் திருமணம் செய்தார். பின்னர், அவர் அஸ்மா சாஹிபா எனும் ஹைதராபாத் உயர்குடிப் பெண்ணையும் திருமணம் செய்தார். ஆனால், திலீப் குமாருக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை. “எனக்கு நேரடித் திரை வாரிசுகள் இல்லை என்பதில் துளியளவும் வருத்தமில்லை. எனது நடிப்பு பாணியைச் சிறிதளவாவது பின்பற்றி நடிக்கும் அனைவரும் எனது வாரிசுகளே” என்று சொல்லியிருக்கிறார். அவ்வகையில், இந்தியில் பிற்காலத்தில் உருவான பல நட்சத்திர நடிகர்கள் அவரது வாரிசுகள்தான். தர்மேந்திரா, அமிதாப் பச்சன், ஆமிர் கான் போன்றவர்களின் நடிப்பில் திலீப் குமாரின் பாணியைக் காணலாம். ஷாரூக் கானின் நடிப்பில் அது தீவிரமாகவே இருக்கிறது.

திலீப் குமாரின் பாதிப்பு தென்படாத சிறந்த நடிகர்கள் இந்தியாவில் உருவாவது கடினம். காரணம், இந்தியத் திரையில் முறைநடிப்புக்கான அடித்தளத்தையே உருவாக்கியவர் அவர். இந்தியர்களினுடைய சினிமா வெறியின் ஒரு முக்கியக் குறியீடு திலீப் குமார். அவரது மறைவு ஒரு சினிமா காலகட்டத்தின் மறைவு. இந்தியத் திரையின் ஒப்பற்ற அம்முகத்துக்கு இதய அஞ்சலி!

- ஷாஜி, நடிகர், திரை விமர்சகர்.

தொடர்புக்கு: shaajichennai@gmail.com

Courtesy:  Thehindutamil.in.news 11 July 2021

 

No comments:

Post a Comment

Media Release- National Peace Council of Sri Lanka

National Peace Council of Sri Lanka 12/14 Purana  Vihara Road Colombo 6  Tel:  2818344,2854127, 2819064 Tel/Fax:2819064 E Mail:   npc@sltnet...