சீர்திருத்தங்கள் மக்கள் நலனை மையமாகக் கொண்டிருக்கவேண்டும், மாறாக கொள்ளை லாபம் ஈட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கக்கூடாது--சீத்தாராம் யெச்சூரி

.


ப்போதும் நம்மிடம் கேட்கப்படும் கேள்வி, நீங்கள் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாளரா அல்லது எதிரானவரா என்பதாகும். உள்ளடக்கம் இல்லாமல் எந்த சீர்திருத்தமும் இருந்திட முடியாது. ஒவ்வொரு சீர்திருத்தமும் உள்ளடக்கத்தை, ஒரு நோக்கத்தைப் பெற்றிருக்கும். இடதுசாரிகள் ஒரு சீர்திருத்தத்தை ஆதரிக்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா என்பதை இவைதான் தீர்மானிக்கின்றன. இங்கே மையமான பிரச்சனை என்ன வென்றால், மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் நம் மக்களின் நலன்களுக்கானவையாக இருக்கின்றனவா, அவர்களின் வாழ்வாதாரங்களை அதிகப்படுத்து வதற்கானவையாக இருக்கின்றனவா மற்றும் நம் நாட்டின் பொருளாதார இறையாண்மையை வலுப்படுத்துவதற்கானவையாக இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். இவற்றின் அடிப்படையில்தான் நாட்டில், கடந்த பல பத்தாண்டுகளில் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம், அவை குறித்த நம் அணுகுமுறையும் இருந்திருக்கிறது. இது நம் அணுகுமுறையாக இருப்பது தொடரும்.

ஒன்றிய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், வேளாண் உற்பத்திப் பொருள்களுக்குக்குக் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட உத்தரவாதம் வேண்டும் என வலியுறுத்தியும் விவசாயிகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் பின்னணியில்தான் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் முப்பதாண்டுகள் வந்திருக்கின்றன. இவை, ஒரு நூற்றாண்டுக்கு முன், பீகார் மாநிலத்தில் சம்பரான் என்னுமிடத்தில் வலுக்கட்டாயமாக அவுரிச்செடி (இண்டிகோ) வளர்க்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற சத்தியாக்கிரகம், கார்ப்பரேட் விவசாயம், சிறு அளவிலான விவசாய உள்பத்தியை அழித்தொழித்தமை (மோடியின் பணமதிப்பிழப்பு) மற்றும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.

கடந்த முப்பதாண்டுகளாக உலக அளவிலும் சரி, இந்தியாவிலும் சரி பின்பற்றப்பட்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்கள் மக்களின் வயிற்றில் அடித்தும், வறுமையை அதிகரித்தும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மிகவும் வேகமான முறையில் விரிவுபடுத்தியும், அனைத்து நாடுகளிலும் உள்நாட்டுத் தேவைகளைக் கூர்மையாக வீழ்ச்சியடையச் செய்யும் நிலைக்குச் சென்றிருப்பதையும் காட்டியிருக்கின்றன. கொரோனா வைரஸ் பெருந்தொற்று, தொடர்ந்து மக்களின் வாழ்வை நாசப்படுத்திக்கொண்டிருப்பதுடன் உலக அளவிலான பொருளாதார மந்தமும், மக்களின் வாழ்க்கை மீதான அதன் தாக்கமும் சேர்ந்து அவர்களின் வாழ்க்கையில் பேரழிவினை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. இவை மார்க்ஸ் ஒருதடவை கூறியதை மீளவும் நினைவுபடுத்துகிறது: “முதலாளித்துவம், இவ்வளவு பிரம்மாண்ட உற்பத்திச் சாதனங்களையும், பரிவர்த்தனைச் சாதனங்களையும் மாயவித்தைபோல் தோற்றுவித்துள்ள முதலாளித்துவம், தளது மந்திரத்தின் வலிமையால் பாதாள உலகிலிருந்து தட்டிபெழுப்பிவந்த சக்திகளை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மந்திரவாதியின் நிலையில் இருக்கிறது.”

இந்தியாவில் சீர்திருத்த நடவடிக்கைகள் சர்வதேச நிதிமூலதனத்தின் ஆதிக்கத்தின் கீழ் செயல்படும் நவீன தாராளமயத்துடன் இணைந்த ஒன்றேயாகும். இங்கே அதன் குறிக்கோள், முதலாளித்துவத்தின் மிகமோசமான கொள்ளையடிக்கும் குணத்தைக் கட்டவிழ்த்துவிடடு, கொள்ளை லாபம் ஈட்டுவதேயாகும். பொதுச் சொத்துக்கள் அனைத்தையும், பொதுச் சேவைகள் அனைத்தையும் தனியார்மயப்படுத்துதல், அனைத்து கனிமவளங்களையும் தனியார்மயப்படுத்துதல், மக்கள் மீது “உபயோகக் கட்டணங்கள்” (“user charges”) வசூலித்தல் ஆகியவை இவற்றின் குறிக்கோளாகும். நவீன தாராளமயம் உலக அளவிலும், இந்தியாவிலும் கார்ப்பரேட்டுகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

நவீன தாராளமயக் கொள்கை கடைப்பிடிக்கத் துவங்கியதிலிருந்தே பணக்காரர்களின் மீதான வரிகள் உலக அளவில் 79 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. 2008 நிதி மந்தம் ஏற்பட்டபின்னரும்கூட, அநேக பில்லியனர்கள் மூன்றாண்டுகளில் தங்கள் செல்வாதாரங்களை 2018 வாக்கில் இரட்டிப்பாக்கிக் கொண்டுள்ளார்கள். இந்த வளர்ச்சி என்பது உற்பத்தி அதிகமானதன் மூலமாக அல்ல, மாறாக ஊக வர்த்தகத்தின்மூலமாகவே பெருக்கிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஆழமான உலக மந்தம் பங்குச் சந்தைகளில் எதிர்மறையாகத் தாக்கத்தை ஏற்படுத்தாததே காரணமாகும்.

மறுபக்கத்தில், உலக அளவில் வருமானம் ஈட்டிவந்தவர்களில் 80 சதவீதத்தினர் தங்களால் 2008க்கு முன்பிருந்த நிலைக்கு வருமானத்தை ஈட்ட முடியவில்லை. ஸ்தாபனரீதியான தொழில்களில் மீதான தாக்குதல்களும், தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் மீதான தாக்குதல்களும் இக்காலத்தில் அதிகரித்து, அமெரிக்காவில் 1979இல் தொழிற்சங்கங்கள் நாலில் ஒருவரைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிலையிலிருந்து, இன்றையதினம் பத்தில் ஒருவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலைக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

இந்தியா: ஏற்றத்தாழ்வுகள் மிகவும் அருவருக்கத்தக்க விதத்தில் அதிகரித்திருக்கிறது

இந்தியாவிலும் பொருளாதார சமத்துவமின்மைகள் பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ‘ஒளிரும் இந்தியா’ எப்போதும் ‘அவதியுறும் இந்தியா’வின் தோள்களிலேயே சவாரி செய்து கொண்டிருக்கிறது. ‘ஒளிரும் இந்தியாவின்’ வெளிச்சம், ‘அவதியுறும் இந்தியா’வின் சீரழிவுகளுக்கு நேர்மாறாக இருக்கின்றது.

2020 மார்ச் மாதத்தில் இந்தியாவின் முதல் 100 பில்லியனர்களின் செல்வவளம் 12,97,822 கோடி ரூபாய்களாக அதிகரித்திருந்தது. இந்தத் தொகையானது நாட்டிலுள்ள 138 மில்லியன் ஏழைகளுக்கு தலா 94,045 ரூபாய்க்கான காசோலை தரக்கூடிய அளவிற்குப் போதுமானது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு மணி நேரத்தில் முகேஷ் அம்பானி சம்பாதித்திடும் தொகையை நம் சாமானிய தொழிலாளி (unskilled worker) சம்பாதிக்க வேண்டும் என்றால் 10 ஆயிரம் ஆண்டுகள் உழைத்திட வேண்டும். அவர் ஒரு விநாடியில் சம்பாதிக்கும் தொகையை, சாமானிய தொழிலாளி சம்பாதிக்க வேண்டும் என்றால் மூன்றாண்டுகள் உழைத்திட வேண்டும். இவ்வாறுதான் ஆக்ஸ்பாம் அறிக்கையான ‘சமத்துவமின்மை வைரஸ்’ (“The Inequality Virus”) என்னும் அறிக்கை தெரிவிக்கிறது.

மறுபக்கத்தில், நம் நாட்டில் வெளியிடப்பட்ட தரவுகள், 2020 ஏப்ரலில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர் என்று காட்டியிருக்கிறது. சமூக முடக்கக் காலத்தில் இந்தியாவில் உள்ள பில்லியனர்களின் செல்வம் 35 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 2009க்குப்பின் இது 90 சதவீதமாகும். அமெரிக்க டாலரில் 422.9 பில்லியன்களாகும். உண்மையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் நாட்டில் உள்ள உயர்நிலையில் உள்ள 11 பில்லியனர்களின் செல்வம் அதிகரித்திருத்துள்ள செல்வத்திலிருந்து, நம் நாட்டில் அமல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தினை பத்து ஆண்டுகளுக்கு நடத்திட முடியும் அல்லது நம் நாட்டின் சுகாதார அமைச்சகத்தினை பத்து ஆண்டுகளுக்கு நடத்திட முடியும்.

நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 59.6 சதவீதத்தினர் ஒரேயொரு அறை உள்ள இடத்தில்தான் அல்லது அதுகூட இல்லாமல்தான் வசிக்கிறார்கள்.

உலகில் உள்ள அரசாங்கங்களில் சுகாதாரத்திற்காக செலவு செய்திடும் அரசாங்கங்களுடன் ஒப்பிடும்போது இந்தியா, உலகில் நான்காவது மிகவும் குறைவான சுகாதார பட்ஜெட்டைப் பெற்றிருக்கும் நாடாகும். கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் இந்தியாவில் உள்ள உயர் 11 பில்லியனர்கள் மீது, அவர்களுடைய செல்வத்தில் 1 சதவீதம் வரி விதித்திருந்தாலே நாட்டிலுள்ள ஏழைகளுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் குறைந்த விலையில் மருந்துகள் அளிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள மக்கள் மருந்து திட்டத்திற்கு (Jan Aushadi Scheme) இப்போது செய்துள்ள ஒதுக்கீடு போன்று 140 மடங்கு ஒதுக்கீடு செய்திட முடியும்.

இந்தியாவில் கடந்த பல பத்தாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டுவந்த பொருளாதார சீர்திருத்தங்கள் மக்கள் மத்தியில் பொருளாதார சமத்துவமின்மைகளைக் கூர்மையாக அதிகரித்திருக்கிறது. இந்த சீர்திருத்தங்கள் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டுவதைக் குறியாகக் கொண்டிருந்ததேயொழிய, மக்கள் நலன் பற்றிக் கவலைப்படவே இல்லை. பிரதமர் மோடி செல்வத்தை உருவாக்குபவர்களை மதிக்க வேண்டும் என்று நமக்குப் புத்திமதி கூறுகிறார். செல்வம் என்பது மதிப்பைப் பணமாக்குதலே தவிர வேறல்ல. (Wealth is nothing but the monetization of value) அதாவது, உழைக்கும் மக்களால் உற்பத்தி செய்யப்பட்ட மதிப்பைப் பணமாக்குவதே தவிர வேறல்ல. இவ்வாறு நம் மக்களின் ஒட்டுமொத்த செல்வத்தையும் உற்பத்தி செய்திட்ட உழைக்கும் மக்கள்தான் மதிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

வறுமை: அதிவேகமான வளர்ச்சி

மோடி அரசாங்கமானது ஆட்சிக்குவந்தவுடனே திட்டக் கமிஷனை ஒழித்துக் கட்டியதன் மூலம், மக்களின் வறுமை நிலையை அளப்பதற்காக, நாடு சுதந்திரம் பெற்றக்காலத்திலிருந்து, இருந்துவந்த, அடிப்படை ஊட்டச்சத்து தேவைக்கான நெறிமுறைகளையும் (basic nutritional norm) ஒழித்துக்கட்டியது. கிராமப்புறங்களில் ஊட்டச்சத்து தேவை என்பது நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 2200 கலோரி உணவு என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது நகர்ப்புறங்களுக்கு 2100 கலோரியாகும். தேசிய மாதிரி சர்வே (National Sample Survey) மேற்கொண்ட ஆய்வுகள், 1993-94இல் கிராமப்புற இந்தியாவில் 58 சதவீதத்தினரும், நகர்ப்புற இந்தியாவில் 57 சதவீதத்தினரும் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்தார்கள் என்று காட்டுகின்றன. இதேபோன்று இந்த அமைப்பு அடுத்து 2011-12இல் மேற்கொண்ட ஆய்வுகள், இதே சதவீதம் முறையே 68 மற்றும் 65 ஆக அதிகரித்திருப்பதாகக் காட்டுகின்றன. அடுத்து இந்த அமைப்பானது 2017-18இல் இந்த ஆய்வுகளை மேற்கொண்டது. எனினும் மோடி அரசாங்கம் இதன் ஆய்வு முடிவுகளை வெளியே சொல்லக்கூடாது என்று மூடி முறைத்துவிட்டது. இதேபோன்று இந்த அரசாங்கம் உலக அளவில் பாராட்டுக்களைப் பெற்றிருந்த நம் தரவு அடிப்படையிலான நிறுவனங்களையும் அழித்துக்கொண்டிருக்கிறது. ஊடகங்களுக்குக் கசிந்துள்ள இதன் தரவுகள் காட்டுவது என்னவென்றால், தனிநபர் உண்மையான நுகர்வு செலவினம் (per capita real consumption expenditure), (இது உணவை மட்டும் குறிப்பிடுவது அல்ல), கிராமப்புறங்களில் 9 சதவீதம் வீழ்ச்சியடைந்திருப்பதாகக் காட்டுகிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று நாட்டைப் பீடிப்பதற்கு முன்பாகவே கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வறுமை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் நிலைமை மேலும் மோசமாகியது.

கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றும், அதற்கு எதிராக நம் மக்களைப் பாதுகாப்பதற்கு இயலாதவிதத்தில் நம் சுகாதார அமைப்பின் கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதும் இப்போது கூர்மையாக தோலுரித்துக் காட்டப்பட்டு விட்டது. இப்போது நாம் எதிர்கொண்டிருக்கும் ஆழமான பொருளாதார மந்தம் என்பது, உலக அளவில் ஏற்பட்டுள்ள நவீன தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியேயாகும். நவீன தாராளமயக் கொள்கையின் குறிக்கோள் என்பது மக்கள் மீது சாத்தியமான அனைத்து விதங்களிலும், அதாவது சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஊதிய வெட்டுகள், வேலையிலிருந்து வெளியேற்றுதல், மிகவும் முக்கியமாக இந்தியாவில் ‘பணமதிப்பிழப்பு’ (‘demonetization’) நடவடிக்கைமூலமாக மேற்கொண்டதுபோல் சிறிய உற்பத்தியாளர்களை ஒழித்துக்கட்டுதல் ஆகிய நடவடிக்கைகளின் மூலமாக கொள்ளை லாபம் ஈட்டுவது என்பதேயாகும்.

இவ்வாறாக பொருளாதார நடவடிக்கைகளின் அனைத்து வாய்ப்பு வாசல்களும் ஆக்கிரமிக்கப்பட்டபின் இப்போது நாட்டின் விவசாயத்தையும் கார்ப்பரேட்டுகளின் கொள்ளை லாப வேட்டைக்காக அழித்துக்கொண்டிருக்கிறது. ஒப்பந்த விவசாயத்தைக் கொண்டுவரவும் அதன்விளைவாக நாட்டில் உணவுப் பற்றாக்குறையை உண்டாக்கவும் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

இன்றையதினம், உலக பசி-பட்டினி அட்டவணை (Global Hunger Index), இந்தியாவை மிகவும் “ஆபத்தான வகையினத்தில்” (“serious category”) சேர்த்திருக்கிறது.

2019-20க்கான தேசிய குடும்ப சுகாதார சர்வே-5, ஊட்டச்சத்தின்மை மிகவும் மோசமானமுறையில் அதிகரித்திருப்பதாக, குறிப்பாக குழந்தைகள் மத்தியில் அதிகரித்திருப்பதாகவும், குழந்தை இறப்புகள் அதிகரித்திருப்பதாகவும், இதேபோன்று இதர அட்டவணைகளையும் காட்டுகிறது.

சென்ற மாதம், ஐ.நா.மன்றத்தின் நிலையான அபிவிருத்து இலக்குகள் உலக அட்டவணை(SDG global index), இந்தியாவை இரு படிநிலைகள் (two ranks) தாழ்த்தி இருக்கிறது. கடந்த ஓராண்டில், இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை 60இலிருந்து 134 மில்லியன்களாக அதிகரித்திருக்கிறது என்று அமெரிக்காவில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Centre) மதிப்பிட்டிருக்கிறது. சென்ற ஆண்டில் உலக ஏழைகளின் வளர்ச்சிக்கு இந்தியா 57.3 சதவீதம் பங்களிப்பினைச் செலுத்தி இருக்கிறது. நம் நாட்டில் உள்ள மத்தியதர வர்க்கத்தினரில் 59.3 சதவீதத்தினர் வறுமைக்குழிக்குள் விழுந்திருக்கிறார்கள்.

மதவெறியர்கள்-கார்ப்பரேட்டுகள் கள்ளப்பிணைப்பு

2014க்குப்பின் கார்ப்பரேட்டுகள்-மதவெறியர்களின் நச்சுக் கலவை ஏற்பட்டிருக்கிறது. இது நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலமாகவும், பொதுத்துறை மற்றும் கனிம வளங்களை மிகப்பெரிய அளவில் தனியாரிடம் ஒப்படைப்பதன் மூலமாகவும் கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டக்கூடிய அரக்கத்தனமான கொள்கை பின்பற்றப்படுகிறது. இதன் விளைவாக முன்னெப்போதும் இலலாத அளவிற்கு கூட்டுக் களவாணிகள் முதலாளித்துவமும், அரசியல் ஊழலும் அதிகரித்திருக்கின்றன. இத்துடன் மக்களின் ஜனநாயக உரிமைகள், குடிமை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீது இரக்கமற்றமுறையில் தாக்குதல்களும் அதிகரித்திருக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து கூறுபவர்கள் அனைவரும் தேசத் துரோகிகள் என கருதப்படுகின்றனர், இந்திய அரசமைப்புச்சட்டம் மக்களுக்கு அளித்திட்ட உத்தரவாதங்களை ஒழித்துக்கட்டிவிட்டு, அரக்கத்தனமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டம்/இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தேசத்துரோகக் குற்றப்பிரிவு ஆகியவற்றின்கீழ் மக்கள் வகைதொகையின்றி கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்படுகின்றனர்.

இவை அனைத்தும், உலகத்திற்கு இந்தியாவை “தேர்தல் எதேச்சாதிகார அரசு” (“electoral autocracy”) இருப்பதாக அறிவிப்பதற்கு இட்டுச் சென்றிருக்கிறது. உலகப் பொருளாதார சுதந்திர அட்டவணையானது (The global economic freedom index), இந்தியாவை 105ஆவது இடத்திற்குத் தள்ளியிருக்கிறது. இது சென்ற ஆண்டு 79ஆவது இடத்தில் இருந்தது. மனித உரிமை சுதந்திர அட்டவணை (human freedom index)யிலும் இந்தியா 94ஆவது இடத்திலிருந்து 111ஆவது இடத்திற்கு வீழ்ந்திருக்கிறது. ஐ.நா.மன்றத்தின் மனித வளர்ச்சி அட்டவணை (UNDP Human Development Index), இந்தியாவை சென்ற ஆண்டு 129ஆவது இடத்திலிருந்த இந்தியாவை இந்த ஆண்டு 131ஆவது இடத்திற்குத் தள்ளி இருக்கிறது.

நாட்டுமக்களில் பெரும்பான்மையோரின் துன்ப துயரங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதுடன், எதேச்சாதிகரமும் இவ்வாறு அதிகரித்துக்கொண்டிருப்பதானது, இவர்களை முசோலினி கடைப்பிடித்த “கார்ப்பரேட்டுகளுடன் கூடிக்குலாவும்” பாசிசக் கொள்கைக்கு மிக நெருக்கமாக நகர்த்திக் கொண்டிருக்கிறது.

உலக அளவில் நவீன தாராளமய சீர்திருத்தங்கள் பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் திவாலாகிவிட்டன என அங்கீகரிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தி எகனாமிஸ்ட் இதழ், அதிகரித்துக்கொண்டிருக்கும் சமத்துவமின்மைகளைக் குறித்துக் கூறும்போது, “சமத்துவமின்மை, திறனற்ற நிலைக்கு சென்று, வளர்ச்சிக்கு உதவாத கட்டத்திற்குச் சென்றுவிட்டது” (“Inequality has reached such a stage where it can be inefficient and bad for growth”) என்று முடிவுசெய்திருக்கிறது.

நவீன தாராளமய சீர்திருத்தங்களின் திவால்தன்மை

ஜோசப் ஸ்டிக்ளிட்ஸ், (Joseph Stiglitz), “சமத்துவமின்மையின் விலை” (“The Price of Inequality”) என்னும் தன் நூலில், மக்களின் 1 சதவீத உயர் குடியினர் குறித்தும், 99 சதவீத இதர மக்கள் குறித்தும் பேசிவிட்டு, கடைசியில் கீழ்க்கண்டவாறு முடிவுக்கு வருகிறார்: “நம் சமூகம் ஆழமாகப் பிளவுபட்டிருப்பது தொடருமானால், நம் பொருளாதார வளர்ச்சி, முறையாக அளவிடப்பட்டால், நாம் என்ன எய்தியிருக்கிறோமோ அதைக்காட்டிலும் அதிகமாக இருந்திடும்.” (Our economic growth, if properly measured, will be much higher than what we can achieve, if our society remains deeply divided.”)

அனைத்து முன்னேறிய நாடுகளும் அரசின் செலவினங்களின்கீழ் மக்களுக்கு மிகப்பெரிய அளவில் ஊக்குவிப்பு நிதித்தொகுப்புகளை அறிவித்திருக்கின்றன. நவீன தாராளயமக் கொள்கைக்கு இது ஒரு வெறுப்பூட்டும் செயலாக இருந்தபோதிலும் அவை அவ்வாறு அறிவித்திருக்கின்றன. மக்களின் உள்நாட்டுத் தேவைகளையும் பொருளாதார நடவடிக்கைகளையும் புதுப்பிப்பதைக் குறியாகக் கொண்டே அவை இவ்வாறு செய்திருக்கின்றன. இது தொடர்பாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் அரசின் செலவினங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு வக்காலத்து வாங்கி, “நான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லைதான், ஆனாலும்…” என்று கூறியிருக்கிறார்.

எனினும், மோடி அரசாங்கம், கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகள் வங்கிகளில் வாங்கியிருக்கின்ற பல கோடி ரூபாய் கடன்களை ரத்து செய்துள்ள அதே சமயத்தில், அரசின் செலவினங்களை உயர்த்துவது குறித்து எதுவும் கூறாது கள்ள மவுனம் சாதிக்கிறது. நாள்தோறும் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்துவதன் மூலம் மக்கள் மீது சுமைகளை ஏற்றிக்கொண்டே இருக்கிறது. இவற்றின் விளைவாக ஒட்டுமொத்த பணவீக்கம் ஏற்படுகிறது. இது, உள்நாட்டுத் தேவையை மேலும் சுருக்கி, பொருளாதார மந்தத்தை மேலும் ஆழமாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் உள்ள நாம், இத்தகைய சீர்திருத்தக் கொள்கைகளை ஆழமாக ஆய்வுக்கு உட்படுத்தியாகவேண்டியது அவசியமாகும். நம் முன்னுரிமைகளை மாற்றியமைத்திட வேண்டும். விவசாயத்தையும் உணவுப் பாதுகாப்பையும் வலுப்படுத்திட வேண்டும். சுகாதாரம், கல்வி ஆகியவற்றின் முதலீடுகளை அதிகரித்திட வேண்டும். நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் விதத்திலும், உள்நாட்டுத் தேவையை ஊக்குவிக்கும் விதத்திலும் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டி எழுப்பிட, பொது முதலீடுகளைக் கூர்மையாக அதிகரித்திட வேண்டும். இவை அனைத்தும் நம் மக்களின் மீதான கருணையினால் மட்டுமல்ல. நம் நாட்டின் பொருளாதாரத்தைப் புதுப்பித்திட வேண்டுமானாலும் இது ஒன்றே வழியாகும். இத்துடன் சுற்றுச்சூழல்கள் குறித்தும் உரிய தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். மிகவும் முக்கியமாக மக்கள் மத்தியில் சமூக நல்லிணக்கத்தைக் குலைத்திடும் பிளவுவாதப் போக்குகளை நிராகரித்திட வேண்டும். இத்தகு பிளவுவாதப் போக்கிற்குத் தீனிபோடும் பிற்போக்குத்தனமான பத்தாம்பசலிக் கொள்கைகளுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும், நம் சமூகத்தை மிருகத்தனமாக மாற்றிடும் போக்குகளுக்கும் முடிவு கட்டிடவேண்டும்.

இவைதான் மக்கள் நலன்களை மையமாகக் கொண்ட, சீர்திருத்தங்களாகும். இவை கொள்ளை லாபம் ஈட்டும் சீர்திருத்தங்களுக்கு எதிரானதாகும். இதுபோன்ற சீர்திருத்தங்களே இந்தியாவிற்குத் தேவையாகும்.

இத்தகைய சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்கான ஒரே வழி மக்களின் போராட்டங்களை இவற்றின் அடிப்படையில் வலுப்படுத்துவதாகும். கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கான சீர்திருத்தங்களுக்கு மாற்றாக, மக்கள் நலன் சார்ந்த சீர்திருத்தங்கள் அடிப்படையில் வெகுஜன இயக்கங்களை ஏற்படுத்திட வேண்டும். மக்களின் கோரிக்கைகளின் திசைவழியில் மாற்றியமைத்திட ஆளும் வர்க்கங்களுக்கு நிர்ப்பந்தம் அளித்திட வேண்டும். கடந்த முப்பதாண்டுகளாக நாட்டில் கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மக்கள் மீது பெரிய அளவில் துன்ப துயரங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இவற்றை மாற்றி, மக்கள்நலன் சார்ந்த சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு இதுவே சரியான தருணமாகும்.

தமிழில்: ச.வீரமணி

 source:chakkaram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...