புரட்சியாளர் சே!- பெ.சிதம்பரநாதன்

See the source image

Photo: courtesy:blackopinion.


உலக நாடுகளின் வரலாறுகளில் உபோராட்டங்கள் இரத்தம் தோய்ந்த
பக்கங்களாகவே உள்ளன. 39 வயதில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு ராஜாளிப்
பறவையை நினைவுகூர்வது, நமது ஆன்மாவின் பசிக்கு அமுதத்தையே
வார்ப்பது போன்றது. அந்த ராஜாளிப் பறவை யார்? தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஆர்ஜென்ரினாவில் பிறந்த அவர், ‘சே’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட சேகுவேரா. சேகுவேராவின் வாழ்க்கை, சாகசங்கள்
நிறைந்த சரித்திரம். சேயின் சம்பவங்கள் ஒவ்வொன்றையும் கற்பனை செய்து
கணநேரம் பார்த்தால் போதும், நமது இரத்த ஓட்டத்தையே உறைந்து
போகச் செய்யும், மயிர்க் கூச்செறிய வைக்கும் வீர தீர விளையாட்டுகளாகும்.
மருத்துவ மாணவராக இருந்தபோதே அவர் ஆர்ஜென்ரினாவில் தமது ஊரை
விட்டுவிட்டு வெளியேறினார். 1950களில் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நடந்து வந்த மக்கள் எழுச்சிகளைப் பற்றியெல்லாம் அந்த 17 வயதிலேயே
அறிந்து வைத்திருந்தார்.


இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு நாட்டில் வாழ்ந்து வந்த புரட்சிவாதி ஹில்டா காடியா அகஸ்டா மூலமாக மார்க்சீயக்
கோட்பாடுகளைக் கற்றதோடு,சோசலிசத்தைப் பரப்பவும் சேகுவேரா
தன்னை அர்ப்பணிக்கத் திட்டமிட்டார். உருகுவே நாட்டின் பத்திரிகையாளர்,
சே குவேராவைப் பற்றிக் கூறுகையில், அவரை ஓர் அதிபுத்திசாலி என்றும்,
அவருக்கு உயர் கணிதத்தில் அபார ஞானம் இருந்தது என்றும், சிக்கல்
நிறைந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிப்பது அவருக்குப் பிடித்திருந்தது
என்றும், தொல்லியல் அகழ்வாராய்ச்சியிலும் ஈடுபாடு காட்டினார் என்றும் குறிப்பிட்டுள்ளது ஒருவிதக் குறைவு நவிற்சிதான்.அவரோ, பிறவி ஆஸ்துமா நோயாளி. ஆனாலும், அதைப் பொருட்படுத்தாமல் புரட்சிகரச் சிந்தனைகளிலும் செயல்பாடுகளிலும் உற்சாகமாக ஈடுபட்டவர். மருத்துவக் கல்விக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 17 வயதில் மாணவராக இருந்தபோதே தனது
ஊரைவிட்டு வெளியேறினார்.

மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது தன் சொந்த நாடான
ஆர்ஜென்ரினாவில் 4500 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து,
தமது கிராமங்களைப் பற்றிய புரிதலைப் பெற்றுள்ளார். அவர் கடைசியாகச்
சென்ற கார்டோபா நகரில் ‘புத்தகத்தில் நமது நாட்டைப் பார்த்தது போதும் –
தேசத்தை நேரில் பார்க்கப் புறப்படுவோம் வா’ என்று தனது நண்பர் டாக்டர் ஆல்பர்ட்டோவுடன் இணைந்து பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.

இருவரும் 8 ஆயிரம் கி.மீ. இந்த இரண்டாம் பயணத்தில் மோட்டார் சைக்கிளில் போனார்கள். அதனைப் பற்றி அவர் எழுதிய நாட்குறிப்பு, ‘மோட்டார் சைக்கிள் டயரி’ நூல். அப்பயணத்தில் ஓர் ஊரில் வீடில்லாத தம்பதிகளைப் பார்க்க நேரிட்டது.அவர்கள் சொன்ன செய்தி, இவர்களை உலுக்கிவிட்டது. போலீஸ்காரர்கள் தங்களைக் கம்யூனிஸ்ட்டுகள் என்று ஊரிலிருந்தே அடித்துத் துரத்தி விட்டனர் என்பது அச்செய்தியாகும். அதிர்ச்சியடைந்த சே குவேரா,முதலாளித்துவத்தின் ஈவு இரக்கமற்ற சுரண்டல் முறையை உணர்ந்தார். இதனை எதிர்க்க வேண்டும் என அவருடைய மனம் எரிமலையானது.அங்கிருந்து அதே மோட்டார் சைக்கிளில் சிலி நாட்டின் செம்புச் சுரங்கப் பகுதிகளுக்குப் போனார்கள். அச்சுரங்கத் தொழிலாளர்கள் இரக்கமில்லாமல் சுரண்டப்படுவதைக் கண்டு கோபமடைந்தார்கள். சுரங்கத்தின் மேலாளரிடம் அத்தொழிலாளிகளுக்குக் குடிக்கத் தண்ணிர் தருமாறு கேட்டனர். அந்த மேலாளரோ, எப்போது கொடுப்பது என்று எனக்குத் தெரியும். இப்போது அவர்கள் சாகப் போவதில்லை என்று பதில் கொடுத்தாராம். 

 

1952களில் ஆண்டஸ் மலைப்பிரதேசத்தில் நிலவிய கொடிய வறுமை பற்றி சே குவேரா அறிந்தபோதுதான் மகத்தான ஒரு போராட்டத்திற்கு மக்களைத் திரட்டத் திட்டமிட்டார். புரட்சிக்கு முதல் தேவை ஆயுதமே என்பதையும் உணர்ந்தார். 

பின்னர் அவர்கள் பெரு நாட்டிற்குப் பயணமானார்கள். அங்கு அவர்களின்
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி,இருவரும் கீழே விழுந்து
காயமடைந்தனர். பிறகு, மோட்டார் காரில் அவர்களின் பயணம் தொடர்ந்தது.
பெரு நாட்டில் உள்ள தொழுநோயாளிகள் மையத்திற்குச் சென்று இருவரும் அங்கு சேவை செய்தனர். அந்நோயாளிகள் தந்த மூங்கில் படகில் அமேசான் நதியில் பயணித்து வெனிசுலா நாட்டிற்குச் சென்று சேர்ந்தனர்.
அங்கேயே அம்மக்களுக்குச் சேவை செய்வதற்காக டாக்டர் ஆல்பர்ட்டோ
தங்கி விட்டார். அதனால் சே குவேரா மட்டும் அங்கிருந்து மியாமிக்குப்
புறப்பட்டார். அங்கிருந்து தனதுதாயாருக்கு எழுதிய ஒரு கடிதத்தில்,
தென் அமெரிக்க நாடுகளில் அடக்குமுறை அதிகமாக இருப்பதாகவும் வீதிகளில் எப்போதும் மக்களை அச்சுறுத்தும் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினரின் நடமாவட்டங்களைக் கண்டதாகவும், இதற்கு எதிர்வினையாக மக்கள் புரட்சி வெடிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மியாமியிலிருந்து புறப்பட்டுப் போய் பாதியில் விட்டு வந்த தனது மருத்துவக் கல்வியை முடித்து 1953 இல் டாக்டராக வெளிவந்தார். பின்னர் கௌத்தமாலா நாட்டிற்குப் போனார். அங்கிருந்த அமெரிக்கப் பழ நிறுவனம் ஒன்று, பழங்களைப் போலவே தொழிலாளர்களையும் பிழிந்து வந்ததை அறிந்து, அதற்கு எதிராகப் போராடத் தொடங்கினார்.


அப்போது கௌத்தமாலா அதிபர், அப்பழ நிறுவனத்தின் நிர்வாகத்தை அடக்கும் நோக்கில் விவசாய பூமி முழுவதும் அரசுக்குச் சொந்தமென அறிவித்தார். கௌத்தமாலாவில் சே இருந்தபோது பெரு நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஹில்டா என்ற பெண்ணுடன் நேசமும் நெருக்கமும் கொண்டார்.இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகள். ஆனாலும் விவாகரத்துச் செய்து கொண்டனர்.பின்னர் அங்கிருந்து சே
மெக்சிகோவுக்குப் பயணமானார்.மெக்சிகோவில் ஒரு தேநீர்க்கடையில்
தான் பிடல் காஸ்ட்ரோ சகோதரர்களைத் தற்செயலாகச் சந்தித்தார். காஸ்ட்ரோ சகோதரர்கள் கியூபா சர்வாதிகாரி பாட்டிஸ்டாவிடமிருந்து தப்பித்து,மெக்சிகோவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். பாட்டிஸ்டா சர்வாதிகாரியைத் தூக்கி எறிவதற்கான திட்டத்தைக் காஸ்ட்ரோ
சகோதரர்களுடன் சேர்ந்து சே தான் தீட்டினார்.மெக்சிகோவிலிருந்துதான் கொரில்லாப் போர் முறைப் பயிற்சியை, சே தனது புரட்சிப் படைக்குத் தந்தார். சர்வாதிகாரி பாட்டிஸ்டாவுக்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு. அவரை எதிர்த்து கிரான்மா என்ற கப்பலில் கியூபாவுக்கு 49 புரட்சிப் படையினருடன்
இம்மூவரும் புறப்பட்டனர்.சர்வாதிகாரி பாட்டிஸ்டாவை ஒழிப்பதற்காகக் கியூபாவில் வெடித்த புரட்சியில் பிரதானப் பங்கு வகித்தவர் சே. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முயன்ற சர்வதிகாரி பாட்டிஸ்டா அங்கிருந்து தப்பித்து வெளியேறினார். 

 

1959 இல் புரட்சி அரசு கியூபாவில் ஆட்சியைக் கைப்பற்றியது. பிடல் காஸ்ட்ரோ சே குவேராவுக்குக் கியூபா குடியுரிமை அளித்ததுடன், அவரைக் கியூபா அரசில் தொழில் அமைச்சராகவும் நியமித்தார். தேசிய வங்கியின் தலைவராகவும் ஆக்கினார். பின்னர் சே, கொங்கோவில் புரட்சி செய்யத் திட்டமிட்டார். அது எதிர்பார்த்த வெற்றி தரவில்லை. அதனால், 1966 இல் கொங்கோவிலிருந்து திரும்பிய சே, அங்கிருந்து பொலிவியாவில் போராடப் புறப்பட்டார். சி.ஐ.ஏ. உளவு நிறுவனம் இவரைத் தொடர்ந்து கண்காணித்து வந்தது. பொலிவியாவில் அமெரிக்காவின் பொம்மை ஆட்சியின் இராணுவத்திடம் சே கைதாக நேர்ந்தது. பொலிவியாவில் உள்ள ஒரு கிராமப் பள்ளி வீட்டில் கைதியாகச் சிறை வைக்கப்பட்டார். அவருடன் இருந்த புரட்சிப் படையினரும் அங்கு அடைக்கப்பட்டிருந்தனர். சி.ஐ.ஏ. உத்தரவின்படி அமெரிக்க இராணுவத் தளபதி டெரான் என்பவன், சே இருந்த வகுப்பறைக்குள் புகுந்து எந்திரத் துப்பாக்கியால் சேகுவேராவைச் சுட்டுக் கொன்றான். சே குவேராவைச் சரியாக அடையாளம் காண, சேயின் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

 

தென்னமெரிக்க நாடுகள் பலவற்றிலும் சே குவேரா புரட்சித்தீயைக் கொண்டு சென்று, அந்த நாடுகளுக்குப் புதிய விடுதலையை உருவாக்கியதில் பெரும்பங்கு ஆற்றிய அசாதாரணமான மாவீரன். முதல் மனைவிக்குப் பிறகு அலைடா மார்ச் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நான்கு குழந்தைகள். மனைவி,குழந்தைகளுடன் பாசம் மிக்க ஒரு குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். அக்குழந்தைகளில் ஒருவர்தான் டாக்டர் அலைடா குவேரா மார்ச் என்ற சே குவேராவின் மகள். 57 வயதான அப்பெண், மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். அவர் தனது தகப்பனாரைப் பற்றிக் கூறுகையில், அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்றும், தொடர்ந்து எழுதி வந்தவர் என்றும் அவருடைய உரைநடை படிப்பதற்குச் சுவையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது மொத்தப் படைப்புகளும் அவருடைய பெயரில் அமைந்துள்ள மையத்திலிருந்து வெளியாகி வருகின்றன. சே குவேரா தன் வீட்டில் 3 ஆயிரம் நூல்களுக்கு மேல் வைத்திருந்தார். அவர் ஒரு மிகச்சிறந்த புகைப்படக்காரருமாவார் என்றெல்லாம் மகள் டாக்டர் அலைடா கூறியுள்ளார்.இவ்வாறு, ஓர் அறிவாளியாகவும், துல்லியமான இராணுவத் தாக்குதலுக்குத் திட்டமிடக் கூடியவராகவும் சாகசங்களை நேசிக்கக்கூடியவராகவும், அதே நேரத்தில் தொழில் ரிதியாக ஒரு மருத்துவராகவும், ஓய்வு நேரங்களில் கணிதச் சமன்பாடுகளில் காலத்தைச் செலவழித்து மகிழ்ந்தவராகவும், சே விளங்கியுள்ளார் என்பது அவரைப் பற்றிய சிறப்பான சரித்திரப் பதிவுகளாகும். அவருடைய கடைசி நேர வாழ்க்கைக் கட்டம் நம்மைக் கண்கலங்க வைக்கிறது. பொலிவியாவில் ஒரு கிராமப் பள்ளிக்கூட இல்லத்தில் அவரைக் கைது செய்து வைத்திருந்த இராணுவம், சி.ஐ.ஏ.வுடன் தொடர்பு கொண்டு அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டது. அதற்கு முன்பு, அந்தப் பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்து வந்த ஆசிரியரின் மகள் ஜூலியா என்பவள் அந்தக் கைதிக்குக் கடலை சூப் எடுத்துச் சென்ற அப்பெண் கூறுகிறாள், ‘அவர் யார் என எனக்குத்தெரியாது. அக்கைதியின் வலது காலில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. தீராத வலியைத் தாங்கிக் கொண்டு அந்த மனிதன் இருந்துள்ளார் என்று.அழுக்கடைந்த கிழிந்த ஆடைகளில் அவருடைய முகத்தைக் கண்டஜூலியா, அந்த மனிதர் பார்ப்பதற்கு அவ்வளவு கவர்ச்சிகரமாக இருந்தார்’எனக் குறிப்பிட்டுள்ளார்.அந்த சூப்பைச் சாப்பிட்டு விட்டு,மெல்லப் புன்னகை செய்து, இது அருமையான சூப் என்று அந்த
சின்னப்பெண்ணிடம் கூறியுள்ள அந்தக் கைதிதான் சே குவேரா. அது
பின்னர்தான் அவளுக்குத் தெரிய வந்தது.அசப்பில் அந்த அழகான முகத்தைப்
பார்த்தவர்கள் அவரை ஏசுநாதர் என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றால், சே
குவேரா சிறந்த அறிவாளி மட்டுமல்ல,அதற்குச் சமமான அழகானவரும்கூட.
அவருடைய முகம் அப்படியொரு ஞானசூரியனாக ஜொலித்திருக்கிறது.
சூப்பைக் கொடுத்துவிட்டுத் தன தாயாரிடம் அந்தப் பெண் வந்து சேர்ந்த
சில நிமிடங்களில், திடீரென்று துப்பாக்கிக் குண்டு வெடித்த சத்தம்
கேட்டது. அப்போது இரவு 1 மணி, ஒக்டோபர் மாதம் 9ந் திகதி, 1967 ஆம்
ஆண்டு.துப்பாக்கி சுடும் சத்தத்தைக் கேட்டு நடுங்கிப் போன அந்தப் பெண்,
அப்பள்ளிக்கூட இல்லத்திற்கு ஓடினாள். கைது செய்யப்பட்ட சே குவேரா வெறும் தரையில் இரத்த வௌ;ளத்தில் சாய்ந்து கிடந்தார். அவருடைய கண்கள்அரைவாசி திறந்தும், அரைவாசி மூடியுமிருந்தன.சே குவேராவைப் பற்றி இப்படிப்பட்டசெய்திகளைச் சேகரிக்கச் சேகரிக்க,நமது உடல் முழுவதும் புல்லரிப்பதை உணர முடிகிறது. அவர் இறந்தபோது அவருக்கு 39 வயதுதான்.
 

உலக நாடுகளே போற்றும் கியூபாவின் மருத்துவச் சேவையை உருவாக்கியவர் டாக்டர் சே குவேராதான் என்பதை நினைவுகூர்ந்து,கியூபாவின் தலைநகரான ஹவானாவில்,சே குவேராவின் திருப்பெயரில் ஒரு பண்பாட்டு மையத்தை (ஆரளழடரைஅ) எழுப்பி, அதனைக் கியூபா நாட்டுக்கு அதிபர் பிடல் காஸ்ட்ரோ
அர்ப்பணித்திருக்கிறார்.சே குவேரா ஒரு மகத்தான தலைவர்,மாவீரர். சோசலிசமே அவருடைய வேதம். சேவையே அவருடைய பொழுதுபோக்கு. வரலாறு, இலக்கியம்,பொருளாதாரம், அரசியல், மருத்துவம் எனப் பல துறைகளிலும் சாகசம் புரிந்த வித்தகர்.ஆர்ஜென்ரினாவில் பிறந்து,
தென்னமெரிக்க நாடுகளின் சுதந்திரத்திற்கான சூரியனாகக் கொதித்து உதித்தவர். புரட்சிக்காகத் தேச எல்லைகளைக் கடப்பதில் தமது
கால்களுக்குக்கூட அவர் சிந்திக்கக் கற்றுத் தந்தவர். சே குவேராவைக்
கணித முறையில் சுதந்திரத்திற்கான சூத்திரம் என்றே கூறலாம். அந்தச்
செஞ்சூரியனுக்கு ஒருபோதும் அஸ்தமனமில்லை.

No comments:

Post a Comment

UK Tory Party threatens war against Russia, prepares class war at home By Thomas Scripps

  Warning Russian President Vladimir Putin of “what could be a very, very bloody war”, UK Defence Secretary Ben Wallace announced yesterday ...