விடுதலைப் போராட்டம் முதல்… சாதி ஒழிப்புப் போராட்டம் வரை’ – தோழர் சங்கரய்யாவை அறிந்துகொள்வோம்!--ஆ.பழனியப்பன்



ந்திய அளவிலான கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா 100 வது வயதில் இன்று (2021.07.15) அடியெடுத்துவைத்துள்ளளார்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் நான்கு ஆண்டுகள் சிறை வாழ்க்கை. விடுதலைக்குப் பிறகு, நான்கு ஆண்டுகள் சிறை வாழ்க்கை. மூன்றாண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை எனப் பல தியாகங்களைச் செய்து, தன் வாழ்நாள் முழுவதையும் உழைப்பாளி மக்களுக்கு அர்ப்பணித்த என்.சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறு என்பது, ஒரு தனிமனிதரின் வரலாறு மட்டுமல்ல… அது தமிழகத்தின் அரசியல் வரலாறு… தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டக் கனலில் தகித்துக்கொண்டிருந்த காலத்தில், மதுரை மண்ணில் சங்கரய்யாவின் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்தது. அமெரிக்கன் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்துக்கொண்டிருந்தபோது, விடுதலைப்போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தார். மதுரையில் மாணவர் சங்கம் ஆரம்பிப்பது என்று அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் முடிவுசெய்தனர். சங்கத்தைத் தொடங்கிவைக்க பிரபல இளம் கம்யூனிஸ்ட் மோகன் குமாரமங்கலம் அழைக்கப்பட்டார். மதுரை மாணவர் சங்கம் என்ற அந்த அமைப்பின் செயலாளராக சங்கரய்யா தேர்வுசெய்யப்பட்டார். அமெரிக்கன் கல்லூரியின் மாணவர் மன்றச் செயலாளராகவும் ஆனார்.

கம்யூனிஸ்ட் கட்சியிலும் தன்னை இணைத்துக்கொண்ட சங்கரய்யா, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மாணவர்களைத் திரட்டினார். அதனால் ஆத்திரமடைந்த கல்லூரி நிர்வாகம், சங்கரய்யாவை கல்லூரியிலிருந்து நீக்க முடிவுசெய்தது. அதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். உடனே, கல்லூரி நிர்வாகம் பின்வாங்கியது. “நாங்கள் வேலைக்காகப் போராடுபவர்கள் அல்ல… நாட்டு விடுதலைக்காகப் போராடுபவர்கள்” என்று மாணவர்கள் மத்தியில் ஆர்ப்பரித்தார், சங்கரய்யா. பட்டப்படிப்பின் இறுதியாண்டுத் தேர்வை எழுதுவதற்கு15 நாள்களுக்கு முன்பாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரால் கல்லூரித் தேர்வை எழுத முடியவில்லை. அப்போது, 18 மாதங்கள் சிறைக்கொடுமைகளை அனுபவித்தார்.

பாளையங்கோட்டையில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக சங்கரய்யா தலைமையில் மாணவர் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, போலீஸ் தடியடி நடத்தியது. சங்கரய்யா காயமடைந்தார். பிறகு, மதுரையில் கைதுசெய்யப்பட்டார். அதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டக்களத்தில் குதித்தனர். மிரண்டுபோன ஆட்சியாளர்கள், சங்கரய்யாவை விடுதலை செய்தனர்.

‘படிப்பு முக்கியமா… நாட்டின் விடுதலை முக்கியமா’ என்று கேள்வி எழுந்தபோது, நாட்டின் விடுதலையே முக்கியம் என்று முடிவெடுத்தார். விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்ததுக்காகச் சிறையில் அடைக்கப்பட்ட சங்கரய்யா, நான்காண்டு காலம் சிறைக்கொடுமைகளை அனுபவித்தார். 1947-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ம் தேதியன்றுதான் சிறையிலிருந்து அவருக்கு விடுதலை கிடைத்தது. விடுதலைக்குப் பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றினார். கருத்து வேறுபாடு காரணமாக, 1964-ல் 35 உறுப்பினர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்துவந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினர். அந்த 35 பேரில் சங்கரய்யாவும் ஒருவர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

சுதந்திரப் போராட்டக்காலத்தில் ஒலித்த சங்கரய்யாவின் அந்தக் கம்பீரக்குரல், இன்னும் சுதி குறையாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆணவக்கொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சேலம் முதல் சென்னை வரையிலான நடைபயணத்தின் முடிவில் சென்னை தாம்பரத்தில் கடந்த மாதம் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய சங்கரய்யா, சாதிமறுப்புத் திருமணங்களை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று சமூகத்துக்கு வேண்டுகோள் விடுத்தார்.

“சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற பாரதியின் கனவு நனவாக வேண்டும். காந்தி, பெரியார், அம்பேத்கர், சிங்காரவேலர், அயோத்திதாசர், சீனிவாசராவ், ஜீவா போன்ற பல தலைவர்கள், வாழ்நாள் முழுவதும் போராடினார்கள். அத்தகைய தலைவர்கள் வாழ்ந்த மண்ணிலிருந்து கேட்கிறேன், தீண்டாமைக் கொடுமைகளை அனுமதிக்கலாமா? காங்கிரஸ், சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட்டுகள், திராவிட இயக்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு இயக்கத்தினர் போராடிப் பெற்ற சுதந்திர நாட்டில், தீண்டாமைக் கொடுமை ஒழிய வேண்டும்.

வாலிபர்களே, உங்கள் சகோதரிகளின் காதலை அங்கீகரியுங்கள். என் குடும்பத்தில் கலப்புத் திருமணங்கள் செய்துள்ளோம். எனவேதான் கூறுகிறேன், உங்கள் சகோதரி தனக்கேற்ற ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்துகொள்ள விரும்பினால், நீங்கள் சாதி, மதம் பார்க்காமல், அவருக்காகப் போராடி திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும். குடும்பத்தில் கொஞ்சம் சலசலப்பு வரலாம்; விரோதம் வரும். இவ்வளவு நாள் நீங்கள் திருமணம் நடத்தினீர்கள்; இனிமேல் நாங்கள் நடத்திக்கொள்கிறோம் என்று பெரியவர்களிடம் சொல்லுங்கள். கட்சிகளைக் கடந்து கேட்கிறேன் இந்தப் போராட்டத்தை இளைஞர்கள் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள்?

1967-ம் ஆண்டிலேயே தி.மு.க ஆட்சியில் சுயமரியாதைத் திருமணங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி போராடியது. இந்து மதத்தில் எந்த ஒரு சாதியைச் சேர்ந்த – உரிய வயதை அடைந்த இருவர், ஏழு பேர் முன்னிலையில் மாலை அல்லது மோதிரம் மாற்றிக்கொண்டாலோ தாலி கட்டிக்கொண்டாலோ அந்தத் திருமணம் சட்டப்படியானது என்று கொண்டுவரப்பட்டது. இது ஒரு புரட்சிகரமான நடவடிக்கை. அவர்களின் குழந்தைகள் முழு வாரிசுதாரர்கள் என்பதுதான் சட்டம். சுயமரியாதைத் திருமணங்களுக்கு எதிர்ப்பு, மறுப்புத் தெரிவித்தால், அனைத்துக் கட்சியினரும் பெண்களும் கூடிச்சென்று அந்த வீட்டின் முன் நின்று நியாயம் கேளுங்கள். சட்டம் ஒருபுறம் இருந்தாலும், மக்கள் இயக்கம்தான் அனைத்தையும் தீர்மானிக்கும். குடும்பத்துக்கு உள்ளேயும் சமூகத்திலும் போராட வேண்டும்.

சாதி ஆணவக் கொலையைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், கருத்து வேறுபாடுகளை மறந்து, தமிழகத்தில் தீண்டாமைக் கூடாது, தீண்டாமையால் கொலை, தற்கொலை நடக்கக் கூடாது என்பதற்காக ஒன்றுபடுங்கள்… காதல் திருணமங்களுக்கு ஆதரவு கொடுங்கள்” என்று முழங்கினார் சங்கரய்யா.

சாதி மறுப்பு குறித்த சங்கரய்யாவின் பேச்சு, ஊருக்கு மட்டும் உபதேசம் என்பதல்ல. சங்கரய்யாவே கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்தான். அவருடைய குடும்பத்தில் இல்லாத சாதிகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவருடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எனப் பலரும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். எளிய வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, இந்த வயதிலும் ஒரு மூத்த போராளியாகக் கட்சிப்பணி ஆற்றிவரும் சங்கரய்யா, ஒரு சகாப்தம்.

Source: chakkaram.com

 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...