இலங்கைத் தமிழர் அரசியலில் துரதிருஷ்டமான இலக்கமா 13?- –எஸ். எம். வரதராஜன்மெரிக்க மக்கள் தொகையில் குறைந்தது பத்து சதவீதத்தினருக்கு 13 என்ற எண்ணில் ஒருவித அச்சம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர் என அண்மையில் படித்தேன். இப்பதிவை இடுவதற்கு அந்தத் தகவலும் முக்கியமான காரணம் எனலாம்.

இங்கு நான் குறிப்பிடுவன இவற்றோடு தொடர்பான மூத்த ஊடகவியலாளர் அமரர் த. சபாரத்தினம், அமரர் சிவசிதம்பரம் ஆகியோர் சொன்னவையும் அவை தொடர்பாகத் தேடியவையுமாகும்.

சபாரத்தினம் அவர்கள் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தோடு நெருக்கமாக செயற்பட்டவர்களுடன் அந்நேரத்தில் தொடர்பிலிருந்த ஓர் ஆங்கிலப் பத்திரிகையாளர். டிக்சிட், பூரி, ஜெய்சங்கர்,காமினி,தேவநாயகம், ரொனி டி மெல், தொண்டமான், அமிர்தலிங்கம், சிவா, சம்பந்தன் ஆகியோருடன் தொடர்புகளைப் பேணியவர்.

13ம் திகதி வெள்ளிக்கிழமை என்றால் அதற்குப் பயப்படுபவர்கள் மேலைத்தேய நாடுகளில் இன்றும் அதிகம் உள்ளனர். மேற்கத்தைய நாடுகளுடான வர்த்தகத் தொடர்பு இலங்கையிலும் பெருநிறுவனங்களிடத்திலும் இந்த நம்பிக்கையையும் ஊற விட்டுள்ளது. 2000ம் ஆண்டு ஓர் ஊடக நிறுவனத்திற்காக அதன் தலைவரின் வேண்டுகோளின்படி யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய பிரதான வீதியில் ஒரு கட்டடத்தைப் பார்வையிட நானும் எனது அலுவலக நண்பரும் போயிருந்தோம்.

வல்லமை மிக்க அந்தத் தொழிலதிபர் பாரம்பரிய சோதிடத்திலும் எண் சோதிடத்திலும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். அவரது ஒவ்வொரு முன்னேற்ற அடிகளிலும் அவற்றின் கணிப்புகள் தொடர்பான நம்பிக்கைகளும் பங்காற்றியுள்ளன என்பதை அவருடன் பழகியோர் அறிவர். யாழ்நகரில் விற்பனைக்கு விடப்பட்டிருந்த அக்கட்டடத்தின் இலக்கம் அதிர்ஷ்டமானதாக இருந்ததால் மேற்கொண்டு மிகுதி நடவடிக்கைகளைத் தொடருவோம் என்றேன்.

சிங்களவரான தொழினுட்பம் சார்ந்த எனது நண்பர் கட்டடத்தின் நீளத்தை அளந்து பார்த்து விட்டு “எங்கள் பொஸ்ஸுக்கு அது பிடிக்காமற் போகும். நீ பார்”என்றார்.

அவர் சென்னது சரியாகவேயிருந்தது. அக்கட்டடத்தின் முன் அகலம் பதின்மூன்று மீற்றராகும். ஈற்றில், அவர் எனக்குச் சொன்ன சோதிடமே சரியாயிற்று. ‘பொஸ்’ பேச்சைத் தொடர விடவில்லை.

மிகவும் மலிவாகக் கிடைக்கவிருந்த கட்டடத்துடனான அக்காணி வாங்கப்படவில்லை.

உலகில் இலக்கம் 13 என்பதைத் தவிர்க்க ‘பதின்மூன்றாவது மாடி’ என்பது பல்தொடர் மாடிக் கட்டடத்தின் ஒரு பெயரின் பெயராகப் பாவிக்கும் முறை உள்ளது. 13ம் எண் துரதிர்ஷ்டவசமாகக் கருதப்படும் நாடுகளில் இவ்வாறு பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது.

13 வது மாடியைத் தவிர்ப்பதற்காக பதின்மூன்றாவது மாடிக்கு ‘12A’ அல்லது ‘M ‘ என்ற லத்தீன் அல்லது ஆங்கில அகரவரிசையின் 13 ஆவது எழுத்தைப் பாவிப்பது அல்லது 13 வது தளத்தை பொதுமக்களுக்கு மூடுவது அங்கு மிகவும் பொதுவானது.

ஒவ்வொரு ஆண்டும் 13 ஆம் வெள்ளிக்கிழமையன்று ‘பராஸ்கிவிடேகாட்ரியாபோபியா’ என அழைக்கப்படும் 13 ஆம் திகதி குறித்த பயம், ஆண்டு தோறும் 800 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி இழப்புகளை விளைவிக்கிறது எனப்படுகிறது.

திருமணம், பயணம் மேற்கொள்வது அல்லது மிகக் கடுமையான சூழ்நிலைகளில் வேலை செய்வதைத் தவிர்ப்பது போன்ற நம்பிக்கையாக இது இன்னும் தொடர்கிறது. உலகின் பழைமையான சட்ட ஆவணங்களில் 13வது விதியை அதன் பட்டியலிலிருந்து இத்தகைய மூடநம்பிக்கையுடன்தான் தவிர்த்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சிலுவைப் போரின் போது கிறிஸ்தவப் படைகள் ஜெருசலேமைக் கைப்பற்றியது ஒரு 13 வெள்ளிக்கிழமை ஆகும். ஆனால், இங்கு வரும் யாத்திரிகர்களுக்கு இஸ்லாமிய கட்டுப்பாட்டுப் பிரதேசங்களைக் கடந்து செல்லும் போது கொலை, கொள்ளை போன்ற அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தன.

கிறிஸ்தவர்களின் 13 மீதான பயத்திற்கு இதை விடவும் வேறு முக்கியமான இரண்டு காரணங்கள் உள்ளன.

இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கு முன் நடந்த இறுதி இராப்போசனத்தில் பங்குபற்றியோரின் எண்ணிக்கை 13 என்பது.

ஸ்கன்டினேவிய நாட்டில்பழைய நம்பிக்கையாக 12 தேவதைகள் இருந்தனர் என்றும் பின்னர் ‘லோகி’ என்ற தேவதை தோன்றியதால் மக்களுக்குப் பல இன்னல்கள் தோன்றியது என்பது.

இந்த நம்பிக்கைகளே உலக மக்களிடத்தில் பரவி ஒரு பொது நம்பிக்கையானது.

இனி இலங்கைத் தமிழரும் பதின்மூன்றும் என்ற விடயத்துக்கு வருவோம். இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் 13 ஆவது திருத்தம் இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியம் வாய்ந்தமை பற்றி இங்கு விளக்குவது அவசியமில்லை.

இப்பதிவில் ஆரம்பத்தில் குறிப்பிட்ட நம்பிக்கைகளில் ஏதோ ஒரு சக்தி இருக்குமாயின், அந்த இலக்கம் 13 ஆவதாக அமைந்தமைதான் தமிழர் விவகாரத்தில் மிகச் சோகமான நிலைக்கெல்லாம் காரணமாக அமைந்ததா? என இத்தகைய நம்பிக்கைகளில் ஆர்வமுடையோர் கேட்பதில் நியாயமுண்டு.

அப்படியாயின் அதே 13 தான் இலங்கைக்கு நேரில் வந்து பல இடையூறுகள், எதிர்வினைகள் மத்தியில் அந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதில் கையொப்பமிட்டுச் சென்ற இந்தியப் பிரதமரைப் பலி கொண்டதா? தொடர்ந்து இடம்பெற்ற துன்பங்கள், அவலங்கள் யாவற்றுக்கும் இந்தப் பதின்மூன்றுதான் காரணமா? இவ்வாறு இந்த அனர்த்தங்களை அனுபவித்து வாழும் யாராவது ஒரு சராசரித் தமிழ் மகன் நினைத்தால், சொன்னால் அவனில் குறை சொல்ல முடியாது.

இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதை விட, அதனைப் பூரணமானதாக நிறைவேற்றுவதில் இரவு பகலாக செயற்பட்டவர்கள் அன்றைய தமிழ்த் தலைவர்களாகவிருந்த அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோராவர்.

தங்களது அகிம்சைப் போராட்டத்தை இந்தியாவின் ஆலோசனையுடனும் உதவியுடன் ‘13 ஆவது திருத்தமாக’ ஏற்படுத்தினர். அதில் அவர்களுக்குத் திருப்தி இல்லாத போதிலும், அன்றைய இந்திய இராஜதந்திரிகள் கொடுத்த ஆலோசனையும் தைரியமுமே அவர்கள் அதனை ஏற்பதற்குக் காரணமாக அமைந்ததாக அப்போது தெரியவந்தது.

1989 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் திகதியே தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் கொல்லப்பட்டார். அதற்கு சில தினங்களுக்கு முன்னர் வல்லரசு நாடு ஒன்றின் அதிகாரிகள் அமிர்தலிங்கத்தையும், சிவசிதம்பரத்தையும் இந்தியாவில் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதற்குப் பின், அதாவது அமிர் கொலைசெய்யப்படுவதற்கு இருவாரங்களுக்கு முன்னர் இந்திய அதிகாரிகள் அமிர்தலிங்கத்தைச் சந்தித்ததாகவும் பின்னாளில் தகவல்கள் வந்தன. அப்போது, ஊடகர் சபாரத்தினம் அமிர்தலிங்கத்தைத் தொடர்பு கொண்டு பேசும்போது அவர் வழமையை விட மகிழ்ச்சியாகவிருந்ததாக சபாரத்தினம் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்தவாரம் பதின்மூன்றாம் திகதியளவில் முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் சொன்னாராம் அமிர்தலிங்கம். சிவசிதம்பரத்திடமும் அதனைச் சொல்லியிருக்கிறார் என அறிந்தேன்.

இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் வெளிவிருந்த இந்திய பிரபல சஞ்சிகையில் கட்டுரையாக ‘தமிழர் கூட்டணி செயலாளர் நாயகம் அமிர்: விடுதலை முயற்சியை புதிய கோணத்தில்…?’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட, முற்பக்க தலைப்பிட்டு ஆயத்தமாக இருந்தது.

அவ்வேளையில் அமிர் கொல்லப்பட்ட செய்தி சென்னையில் உள்ள பத்திரிகை அலுவலகத்துக்குப் பறந்தது. அந்தக் கட்டுரை நீக்கப்பட்டு, ‘ஒரு யுகத்தின் முடிவு’ என்ற கட்டுரை அதில் வெளியிடப்பட்டது.

Source: chakkaram.com

No comments:

Post a Comment

உலகம் உற்றுநோக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு--எம்.ஏ.பேபி

அக்டோபர் 16, 2022 சீ னக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு ஒக்ரோபர் 16ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. இதில...