70 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு மலேரியாவை ஒழித்த சீனா!

70 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு மலேரியாவை ஒழித்த சீனா!

லேரியா காய்ச்சலை முழுவதுமாக சீனா ஒழித்துள்ளது. சீனாவின் 70 ஆண்டுகால போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது என உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது. சீனாவில் 1940ம் ஆண்டுகளில் சுமார் 3 கோடி பேர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து மலேரியாவை ஒழித்துக்கட்ட 1950-களில் இருந்து அந்நாடு கடுமையாக போராடியது. அதன் வெளிப்பாடாக கடந்த 4 ஆண்டுகளாக சீனாவில் ஒரு மலேரியா காய்ச்சல் பாதிப்பு கூட பதிவாகாமல் சீனா சாதித்துள்ளது. மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக மலேரியா காய்ச்சல் ஏற்படாவிட்டால், அந்த நாடுகள் உலக சுகாதார அமைப்பின் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது, மலேரியா மீண்டும் ஏற்படாது என்பதற்கான நடவடிக்கைகளையும் காட்ட வேண்டும்.

அதன்படி, மலேரியாவை ஒழித்துக்கட்டி உலக சுகாதார அமைப்பின் சான்றிதழை சீனா பெற்றது. இது தொடர்பாக அவ்வமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கூறுகையில், ‘மலேரியா நோயில் இருந்து மீண்ட சீன மக்களுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி கடினமான உழைப்பின் பலனாகும். மிகத்துல்லியமான நடவடிக்கையின் காரணமாகதான் சீனாவினால் இதை சாதிக்க முடிந்துள்ளது. இதன் மூலம் மலேரியா இல்லாத உலகை உருவாக்க முடியும் என்பதில் சீனா முன்னோடியாக திகழ்கிறது,’ என்றார்.

இதற்கு முன், அவுஸ்திரேலியா (1981), சிங்கப்பூர் (1982), புருணை (1987), பராகுவே, உஸ்பெகிஸ்தான் (2018), அல்ஜீரியா, ஆர்ஜென்ரீனா (2019), எல் சால்வடார் (2021) ஆகிய நாடுகளும் மலேரியாவை முற்றிலும் ஒழித்துள்ளன.

சீனா எப்படி மலேரியாவை வென்றது?

– கு.கணேசன்

ஜூன் 29-ல் உலக சுகாதார நிறுவனம், சீனாவை `மலேரியா இல்லாத நாடு’ என்று அறிவித்துள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக, கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் முனைப்பில் இருக்கும் சீனா, மலேரியாவுக்கான சுகாதார அமைப்புகளையும் தொடர்ந்து மேம்படுத்தி, இந்தச் சாதனையை எட்டியுள்ளது.

‘உலக மலேரியா ஆய்வு அறிக்கை – 2020’-ன்படி உலக அளவில் 2019-ல் மட்டும் 87 நாடுகளில் 22 கோடியே 90 லட்சம் பேர் மலேரியா உள்ளிட்ட கொசுக் கடி நோய்களால் பாதிக்கப்பட்டு, 4 லட்சத்து 9 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். மலேரியா பாதிப்பு ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகம். ஆசிய பசிபிக் நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் 90% இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூ கினி ஆகிய 5 நாடுகளில் பதிவாகியுள்ளன. இந்தியாவில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 கோடியிலிருந்து 60 லட்சத்துக்குக் குறைந்துள்ள செய்தி நமக்கு ஆறுதல் அளிக்கிறது.

சீனாவின் போர்க்களம்

‘30 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கு பசிபிக் மண்டல நாடுகளில் சீனா `மலேரியா இல்லாத நாடு’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மலேரியாவுக்குத் தடுப்பூசி இல்லாத நிலையில், 70 ஆண்டுகளாகப் படிப்படியாக நடைபெற்ற பல்வேறு தொடர் முயற்சிகள் மலேரியாவை ஒழித்துக்கட்டும் நிலை வரை நீடித்தன என்பது முக்கியமாகக் கவனிக்க வேண்டியது’ என்கிறார், உலக சுகாதார நிறுவனத்தின் மேற்கு பசிபிக் மண்டல இயக்குநர் தகெஷி காசை (Dr Takeshi Kasai) .

மலேரியாவுக்கு எதிரான சீனாவின் போர்க்களம் நீண்டது. 1940-ல் சீனாவில் 3 கோடிப் பேருக்கு மலேரியா பாதிப்பு இருந்தது. ஆனால், 1950-ல்தான் மலேரியாவுக்கு எதிரான போரை அது தொடங்கியது. மலேரியா பரவக்கூடிய இடங்களில் ‘டி.டி.டி’ மருந்து தெளிப்பதை வழக்கப்படுத்தியது. அங்கு வாழ்பவர்களுக்கு முன்னேற்பாடாக குளோரோகுயின் மாத்திரைகளை வழங்கியது. காலப்போக்கில், மருந்துகள் மற்றும் தடுப்புமுறைகளின் சக்திகளையும் முறியடித்து, மலேரியா கிருமிகளும் கொசுக்களும் தாக்குப்பிடித்து மீள்வது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், மலேரியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்தப் புதிய சவாலுக்கு ஏற்ப மாறின. ‘டி.டி.டி.’ மருந்துக்கு மாற்றாக ‘மாலத்தியான்’ மருந்து தெளிக்கப்பட்டது.

1967 மே 23-ல் சீனா ‘523 செயல்திட்ட’த்தைக் கொண்டுவந்தது. அதன்படி, 60 ஆய்வு நிறுவனங்களிலிருந்து 500 அறிவியலாளர்களைத் தேர்ந்தெடுத்து, மலேரியாவுக்குப் புதிய மருந்து கண்டுபிடிக்கத் திட்டமிட்டது. அதன் வழியில், 1972-ல் தூ யூயூ (Tu Youyou) எனும் பெண் மருத்துவ அறிவியலாளர், சீனாவின் மரபுவழி மருந்திலிருந்து ‘ஆர்ட்டிமிசினின்’ (Artemisinin) எனும் நவீன மருந்தைக் கண்டுபிடித்து, 2015-ல் நோபல் பரிசுபெற்றார். இப்போதுவரை மலேரியாவுக்கு ‘ஆர்ட்டிமிசினின் கூட்டுமருந்து’தான் உலகில் சிறந்த மருந்தாக இருக்கிறது. இந்த மருந்து சீனாவில் புழக்கத்துக்கு வந்ததும் மலேரியா குணமானதே தவிர, நோய்ப் பரவலை இதனால் தடுக்க முடியவில்லை. எனவே, மலேரியா பகுதிவாழ் மக்களுக்கு 1980-ல் கொசுக்கொல்லி மருந்து பூசப்பட்ட கொசுவலைகள் வழங்குவது அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பலனால், 1990-ல் மலேரியா தொற்றாளர்கள் ஒரு லட்சத்து 17 ஆயிரமாகக் குறைந்தனர்.

Tu Youyou

‘1-3-7’ அணுகுமுறை

2003-ல் சீனா நவீன நோய்க்கணிப்பு உத்திகளைப் புகுத்திப் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தியது. நாட்டில் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் சென்று தொற்றாளர்களைக் கண்டுபிடிக்கும் வகையில் சுகாதாரப் பணியாளர்களை அதிகப்படுத்தி, பயிற்சிகள் கொடுத்து, தடுப்புப் பணிகளை முடுக்கியது. ‘1-3-7’ அணுகுமுறை அறிமுகம் ஆனது. அதாவது, ஒருவருக்கு மலேரியா இருப்பதை ஒரே நாளில் உறுதிசெய்து, அன்றைக்கே அதை அரசுக்குத் தெரியப்படுத்தி, அடுத்த 3 நாட்களுக்குள் அது எப்படிப் பரவியது என்பதைக் கண்டுபிடித்து, 7-வது நாளில் அது பரவும் வாய்ப்புள்ள பகுதிகளையெல்லாம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்து, நோய்ப் பரவலைத் தடுப்பது இதன் செயல்வடிவம் ஆகும். நோய் பரவியவர்களுக்குப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கான மொத்தச் செலவையும் அரசே ஏற்றுக்கொண்டது. அதனால், ஆண்டுதோறும் 5 ஆயிரம் தொற்றாளர்கள்வரை குறைந்துகொண்டே வந்தனர். அடுத்து, பிற நாடுகளிலிருந்து சீனாவுக்கு மலேரியா பரவும் வழிகளையும் அந்நாடு அடைத்தது.

மலேரியாவை ஜெயிப்பதற்கு சீனா இப்படிப் பலதரப்பட்ட வியூகங்களை மாற்றி அமைத்ததோடு, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து, தொற்றாளரின் கிருமிகளை மரபணு பகுப்பாய்வு செய்து, உள்ளூர் தொற்றா, வெளிநாட்டுத் தொற்றா, எந்த மருந்து பலனளிக்கும் (Molecular Surveillance and genome based approaches) என்பனவற்றையும் அறிந்து, சிகிச்சை மற்றும் தடுப்பு ஏற்பாடுகளைச் செய்தது அதன் வெற்றிப் பாதையில் ஒரு மைல்கல்.

இந்தியா கற்றுக்கொள்ளுமா?

‘2030-க்குள் மலேரியாவை ஒழிப்போம்’ எனும் குறிக்கோளுடன் செயல்பட்டுவரும் இந்தியா, சீனாவிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. முதலில், மலேரியா பரவும் பகுதிகளில் நோய்ப் பரவலியல் மற்றும் பூச்சியியல் தரவுகளைத் தயாரிப்பது முக்கியம். கிராமவாசிகள், மலைவாழ் மக்கள், பழங்குடிகள், வீடற்றவர்கள், எல்லைப் பகுதியில் வசிப்பவர்கள் என அனைத்துப் பகுதி தொற்றாளர்களையும் பதிவுசெய்து மரபணுப் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதும், இலவச சிகிச்சை கொடுத்துத் தொடர்ந்து கண்காணிப்பதும் அவசியம். கொசு ஒழிப்பு, வட்டார நோய்த் தடுப்பு, பொதுச் சுகாதார மேம்பாடு ஆகிய பன்முகச் செயல்பாடுகளிலும் நீண்ட கவனம் தேவை.

நோய்க் கணிப்பைப் பொறுத்தவரை தற்போதுள்ள ‘துரிதப் பட்டைப் பரிசோதனை’களைக் கைவிட்டு, ‘மைக்ரோ-பி.சி.ஆர். பரிசோதனை’களுக்கு மாற வேண்டும். அப்போதுதான் அறிகுறிகளற்ற தொற்றாளர்களையும் கண்டுபிடிக்க முடியும். 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கொரோனா பெருந்தொற்று காரணமாகச் சென்ற ஆண்டில் மலேரியாவுக்காகப் பரிசோதிப்பது 32% குறைந்திருக்கிறது. இந்த ஆண்டில் இந்தக் குறைபாடு களையப்பட வேண்டும். ‘புவியியல் தகவல் வகைமுறை’ (Geographic Information System – GIS) எனும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மலேரியா பகுதிப் பணிகளை ஒன்றிணைத்துக் கண்காணிப்பது நவீன உத்தி. இந்தியா இவற்றில் வெற்றிபெற்றால், வாழ்வாதார மேம்பாடு, வாழ்நாள் அதிகரிப்பு, சிசு மரண விகிதம் போன்ற நலவாழ்வு தொடர்பான மற்ற குறியீடுகளிலும் அந்த வெற்றி எதிரொலிக்கும்.

-இந்து தமிழ்
2021.07.13

 Source: The Hindutamil 

No comments:

Post a Comment

Modi government seeking to tighten India's repressive film censorship regime- By Yuan Darwin

 India’s Hindu supremacist Bharatiya Janata Party (BJP) government is seeking to tighten the country’s already intrusive and pervasive film ...