‘சுதந்திரத்தைப் பாதுகாக்க போராடுகிறோம்’: தோழர் என்.சங்கரய்யா


ந்திய சுதந்திரப் போராட்டத்தில் மதுரை நகரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சிம்மசொப்பனமாய் திகழ்ந்த அந்த இளைஞன். தனது இளமைக் காலத்தின் கனவுகளை உதறி எறிந்துவிட்டு, பற்றி எரியும் சுதந்திரத் தீயில் தன்னையே அர்ப்பணித்துக்கொண்டு, மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை, எட்டு ஆண்டுகள் சிறைக்கொட்டடியில் வாழ்ந்து, சுதந்திரம் பெற்ற பின்பும் மக்கள் விடுதலைக்காக இன்றுவரை அதாவது 85ஆம் வயதிலும் (2008 ஆம் ஆண்டு இப்பேட்டி எடுக்கப்பட்டது) களப்போராளியாய் இயங்கி வருகிற, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர், மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர், முதுபெரும் தோழர், தமிழகப் பத்திரிகைகளால் எளிமைக்கு உதாரணம் காட்டப்படும் வெகுசிலரில் ஒருவர் தோழர் சங்கரய்யா அவர்களைப் ‘புத்தகம் பேசுது’ இதழுக்காகச் சந்தித்தோம். 70 ஆண்டுகளுக்கு முன்புள்ள அனுபவங்களைக்கூட யோசிப்புக்கு அதிக அவகாசம் எடுக்காமல் சரளமாய் சொல்லுகிற ஆளுமை அவரிடம் உள்ளது.. இனி அவரோடு……

தமிழகத்தின் ஆரம்பகாலத் தொழிலாளர் இயக்கத்தின் நிலையை சொல்லுங்களேன்…

தேச விடுதலைப் போராட்டத்தின்போது 1906ல் புகழ்பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த வ.உ.சிதம்பரம், சுப்பிரமணிய சிவாவுடன் சேர்ந்துகொண்டு தூத்துக்குடியில் இருந்த அன்னியர்களுக்குச் சொந்தமான ஹார்வி டெக்ஸ்டைல் மில் தொழிலாளர்களை அணிதிரட்டுவதில் ஈடுபட்டிருந்தார். அந்தத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை அவர்கள் இருவரும் தலைமையேற்று நடத்தியதுடன், பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதுவே தமிழ்நாட்டிலுள்ள தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தோற்றுவாயாக இருந்தது என்று கூறினால் அது மிகையாகாது.

1917ல் ரஷ்யாவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த புரட்சியைப் பாராட்டிய தமிழகத்தின் தேசிய கவி சுப்பிரமணிய பாரதி “ஆகாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி’’ என்றும் “மனித சமுதாயத்தின் புதிய சகாப்தம் உதித்தெழுந்தது’’ என்றும் வர்ணித்தார்.

1923ஆம் ஆண்டு மே தினத்தன்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், சென்னை மீனவர்களின் பிரபலத் தலைவருமான சிங்காரவேலு செங்கொடி ஏற்றினார். சோசலிசக் கருத்துகளைப் பரப்பியதற்காக அவர் கைது செய்யப்பட்டார். 1924ல் பிரசித்தி பெற்ற கான்பூர் கம்யூனிஸ்ட் சதி வழக்கில் எதிரியாகக் குற்றம் சுமத்தப்பட்டார். சிறையில் இருக்கும்போது அவர் உடல் நிலை மோசமடைந்ததால் மருத்துவ சிகிச்சைக்காக விடுதலை
செய்யப்பட்டார்.

அதன்பிறகு, தென்னிந்தியாவில் கம்யூனிச இயக்கத்தின் கீழ் மக்களை அணிதிரட்டுவதற்காக மீரட் சதி வழக்கில் எதிரியாகக் குற்றம் சுமத்தப்பட்ட அமீர் ஹைதர் கான் அவர்களை 1931ல் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அனுப்பி வைத்தது. அமீர் ஹைதர் கான் அப்போது மாணவராக இருந்த பி.சுந்தரையாவுடன் நெருக்கமான தொடர்பு கொண்டு கட்சியைக் கட்டும் பணியில் ஈடுபட்டார். 1930க்குப் பின் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான எஸ்.வி. காட்டே பம்பாயிலிருந்து வெளியேறி சென்னை வந்தடைந்தார். அவர் சுந்தரய்யாவுடன் சேர்ந்து கொண்டு கட்சியை அமைக்கும் வேலைகளில் ஈடுபட்டார்.
1934ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு தொழிற் சங்கங்களைக் குற்றவியல் திருத்தச் சட்டம் 1908ன் கீழ் சட்டவிரோத ஸ்தாபனங்கள் என்று இந்திய அரசு அறிவித்தது. 1934ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி சென்னை இளம்தொழிலாளர்கள் கழகம்கூட சட்டவிரோத ஸ்தாபனம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த வளர்ச்சிக்கு இணையாகப் போராட்டங்களும் நடந்திருக்கும்தானே?

1931ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 61 வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன. வேலைநிறுத்தப் போராட்டம் செய்து வரும் தொழிலாளர்கள் மீது கடும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டதுடன், கொடுமையான அடக்குமுறைச் சட்டங்களும் விதிமுறைகளும் இயற்றப்பட்டன. இவ்வளவையும் மீறி நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டங்களில் 1,60,908 தொழிலாளர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

நிலவரி உயர்வினைக் கண்டித்து 1933ல் தஞ்சாவூர், செங்கற்பட்டு, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். நிலக் குத்தகை உயர்த்தியதைக் கண்டித்து 1934ல் மதுரை, கோயம்புத்தூர், சேலம் போன்ற மாவட்டங்களில் நிலவுடைமையாளர்களுக்கு எதிராகக் கலகம் நடைபெற்றது. அந்தக் காலங்களில் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் ஜமின்தாரி முறை நிலவி வந்தது. அப்பகுதிகளிலும் விவசாயிகளின் போராட்டம் வீறுகொண்டு எழுந்தது.

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கத்தைச் சொல்லுங்கள்?

1930களில் நடைபெற்ற ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் போர்க்குணமிக்க பலர் பங்கு-கொண்டனர். அதில் காங்கிரஸ் தலைவர்கள் செல்வாக்கு மிக்கவர்களாகத் தோன்றினர். அவர்களில் பலர் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். பி.ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ், பி.ஜீவானந்தம் ஆகிய தலைவர்கள் அவர்களில் அடங்குவர். 1936ஆம் ஆண்டு காட்டே, சுந்தரையா ஆகியோர் முன்முயற்சியால் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்பட்டது. அந்த கிளையில் பி.ராமமூர்த்தி, பி.சீனிவாசராவ், பி.ஜீவானந்தம், ஏ.எஸ்.கே. ஐயங்கார், கே.முருகேசன், சி.பி.இளங்கோவன் ஆகியோர் உறுப்பினர்களாய் இருந்தனர். இந்த கிளை தொழிலாளர்களை அணி திரட்டுவதிலும், தமிழகத் தொழிலாளி வர்கத்தின் பல்வேறு போராட்டங்களுக்குத் தலைமை தாங்குவதிலும் முன்நின்றது. இந்தக் கிளைதான் பிரசித்தி பெற்ற மெட்ராஸ் டிராம்வே தொழிலாளர்கள் சங்கத்தையும், மெட்ராஸ் பிரஸ் தொழிலாளர்கள் சங்கத்தையும் கட்டி உருவாக்கியது.

இந்த கம்யூனிஸ்ட் கிளைதான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவராய் இருந்த கே.முத்தையா மற்றும் ஆர்.உமாநாத் போன்றவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தது. பின்னர் அவர்கள் முறையே 1938, 1939ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர். நெல்லிக்குப்பம் பாரி தொழிலாளர்கள் சங்கத்தில் பணியாற்றிய சி.கோவிந்தராஜன் 1938ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அதேபோல, கோயம்புத்தூர் மில்லில் பணியாற்றியவரும், வீரம் செறிந்த பல போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவருமான கே.ரமணி மற்றும் சிலர் 1939ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர். கோயம்புத்தூரில் 1936-40ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு பி.ராமமூர்த்தி மற்றும் ஜீவானந்தம் தலைமை தாங்கினர்.

சென்னையில் பிரபல வழக்கறிஞராக இருந்த எம்.ஆர்.வெங்கட்ராமன் 1939ஆம் ஆண்டு தனது தொழிலைப் புறக்கணித்து மற்ற தோழர்களுடன் தன்னை முழுநேர ஊழியராக இணைத்துக்கொண்டார். அதேசமயம், மத்தியத் தலைமையின் முடிவுக்கு இணங்க அந்தத் தோழர்கள் தமிழ்நாட்டில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியை உருவாக்கினர். காங்கிரஸ் கட்சி மேடையிலும், காங்கிரஸ் சோஷலிஸ்ட் மேடையிலும் பிரதான கிளர்ச்சித் தலைவர்களாய் அவர்கள் விளங்கினர்.

இந்திய தேசிய காங்கிரசின் தலைமைப் பொறுப்-பிற்கு டாக்டர் பட்டாபி சீதாராமையாவுக்கு எதிராக சுபாஷ் சந்திரபோஸ் போட்டியிட்டார். மேற்கண்ட கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளாக இருந்தனர். அத்துடன் சுபாஷுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலிருந்து காங்கிரஸ் மாநாட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பெரும்பான்மையோரின் வாக்குகளைப் பெற்றுத் தந்தனர். இக்காலத்தில்தான் அகில இந்திய மாணவர் சங்கத்தின் கிளைகள் சென்னையிலும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், மதுரையிலும் மற்றும் பல்வேறு முக்கியமான மையங்களிலும் ஏற்படுத்தப்பட்டன. பல்வேறு கல்லூரிகளில் உள்ள மாணவர்களைத் திரட்டுவதற்கும், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களை நடத்துவதற்கும் இந்த மாணவர் சங்க அமைப்புகளே முக்கிய காரணமாகும். அப்போது நடந்த அனைத்து தொழிலாளர்கள் போராட்டங்களுக்குப் பின்னும் கம்யூனிஸ்டுகள் இருந்தனர்.

1939-40ஆம் ஆண்டுகளில் கட்சியின் மத்தியத் தலைமையின் ஆலோசனையின் பேரில் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் கட்சியை உருவாக்குவதற்காக கேரளாவிலிருந்து மூத்த கட்சி அமைப்பாளர்கள் ஏ.கே கோபாலன் தலைமையில் தமிழ்நாட்டுக்கு வந்தனர். அவர்கள் வெளிப்படையாக மேடையேறி பிரசங்கம் செய்து கட்சியைக் கட்டுவதற்கு சிரமமாக இருந்தபோதும், தலைமறைவாகவே செயல்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கட்சியை உருவாக்கினர். அவர்களுடன் தொழிற்சங்கத் தலைவரான வி.பி. சிந்தன் சிறிது காலத்திற்குப் பின் வந்து இணைந்தார். தமிழகத்தில் கம்யூனிச இயக்கம் வலுப்படுவதற்கு கேரள மாநில கட்சித் தோழர்களின் பங்கு மிகவும் சிறப்புடையதாகும். தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியை நிலைநிறுத்துவதற்கு அனுபவமிக்க தோழர்களின் பங்கு, ஆற்றிய பணி நினைவுகூரத்தக்கதாகும்.

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான அடக்குமுறைகளைச் சொல்லுங்கள்…

1939ஆம் ஆண்டு செப்டம்பரில் துவங்கி 2வது உலகப் போருக்குப் பின் தமிழகத்திலுள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமறைவுப் பணி தீவிரமடைந்தது. அதன் காரணமாக மாநில அரசின் கவனத்தை ஈர்த்தது.

தொழிற் சங்க இயக்கம் வலுவடைந்ததும், மாணவர் சங்க இயக்கம் பரவலானதும் உலகப் போருக்கு எதிரான இயக்கத்தில் அது பிரதிபலிக்கத் துவங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகள் தமிழகம் முழுவதும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் போடப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர் அல்லது தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். 1942ஆம் ஆண்டு மத்திவரை தமிழகத்தின் சிறையில் அடைக்கப்பட்ட தோழர்களுடன் ஆந்திரா மற்றும் கேரளா தோழர்களும் சிறையில் இருந்தனர்.

கட்சித் தலைமையோ தலைமறைவாக இருந்து கொண்டு செயல்பட்டு வந்தது. 1940ஆம் ஆண்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர், வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை சதி வழக்கு என்ற புகழ்பெற்ற வழக்கில் பி.ராமமூர்த்தி, ஆர். உமாநாத், சி.எஸ்.சுப்பிரமணியன், கே.கேரளீயன் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த அனுமந்தராவ் ஆகியோர் பிரதான எதிரிகளாவர். அதே ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சதி வழக்கும், கோவையில் கம்யூனிஸ்ட் சதி வழக்கும் போடப்பட்டது.

1941ஆம் ஆண்டு வேலூர் மத்தியச் சிறை-யிலடைக்கப்பட்ட கம்யூனிஸ்டுகள் அரசியல் கைதிகளாக மதிக்கப்பட வேண்டுமெனக் கோரி ஏ.கே கோபாலன் தலைமையில் சுமார் 200 கைதிகள் 19 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்திற்குப் பொதுமக்களின் ஆதரவு பெருகி வருவதைக் கண்ட மாநில அரசு, கம்யூனிஸ்ட் சிறை கைதிகளுடன் ஒப்பந்தத்திற்கு வர நேரிட்டது. அந்த போராட்டத்திற்குப் பிறகுதான் ஏ.கே.கோபாலன் மற்றும் சில தலைவர்கள் வேலூர் மத்திய சிறையிலிருந்து தப்பித்து வெளியேறினர். பின்பு தலைமறைவாக இருந்து கொண்டு கட்சிப் பணிகளை கவனித்து வந்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான தடை எப்போது நீக்கப்பட்டது?

1942ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மீதிருந்த தடையை நீக்கினர். அதன் பின் சட்டப்பூர்வமான அரசியல் நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் துவங்கின. கட்சியின் மாநில தலைமை அலுவலகம் சென்னையிலிருந்து செயல்படத் துவங்கியது.

கட்சியின் மீதான தடை நீக்கப்பட்ட பிறகு அடக்குமுறைகள் நடக்கத்தானே செய்தன?

ஆம், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆலைத் தொழிலாளர்கள், மாணவர்கள், இதர மத்திய தர ஊழியர்கள் பல்வேறு வேலைநிறுத்தப் போராட்டங்-களில் ஈடுப்பட்டனர். 1946ஆம் ஆண்டு ரெயில்வே தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம் மிகப்பெரிய வேலை நிறுத்தத்தை நீண்ட நாட்களுக்கு நடத்தியது. இந்த வேலைநிறுத்தத்தைக் கண்டு அஞ்சிய அரசு, காவல் துறையை ஏவிவிட்டு, பொன் மலையிலுள்ள தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் தலைமையகத்தை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட உத்தரவிட்டது. அதில் பலர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.

கோயம்புத்தூரில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் உச்சக்கட்டமாக, மில் நிர்வாகம் கூலிக்கு-அமர்த்திய ரவுடிகளின் மரணத்திற்காக, சின்னியம்பாளையத்திலுள்ள நூற்பாலைத் தொழிலாளர்கள் நான்கு பேர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதே நேரம் கோயம்புத்தூரில் உள்ள ஸ்டேன்ஸ் மில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீதும் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி பலரைக் கொன்றனர். உமாநாத் மற்றும் சில தோழர்கள் மீது கொலை வழக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 1946இல் கோயம்புத்தூர் மத்திய சிறையிலிருந்து உமாநாத் மற்றும் சில தோழர்கள் தப்பித்து வெளியேறினர். 1950ஆம் ஆண்டு கைது செய்யப்படும் வரை உமாநாத் தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார்.

1946ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரையில் உள்ள பிரிட்டிஷ் மில் முதலாளிகளும், சில அதிகாரிகளும் சேர்ந்து மதுரை சதி வழக்கு என்பதற்கு இரகசியமாக திட்டமிட்டனர். அதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பி.ராமமூர்த்தி அந்த வழக்கின் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கை எதிர்த்து மிகப்பெரிய போராட்டங்கள் நடந்ததால் 1947 ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி அதாவது சுதந்திரம் அடைவதற்கு ஒரு நாள் முன்பு விடுதலை செய்யப்பட்டனர்.

இதே நேரத்தில்தான் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களும், தொழிலாளி வர்க்க இயக்கங்களும் சக்திமிக்க அளவில் வளர்ந்து வந்தன. அதனைக் கண்ட சென்னை மாகாண அரசு ஏராளமான கம்யூனிஸ்டுகளைத் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. இவர்களும் சுதந்திரத்திற்கு முன் நாள் விடுதலை செய்யப்பட்டனர்.

சுதந்திரத்திற்குப் பிறகு அடக்குமுறைகள் நடக்கத்தானே செய்தன?

சுதந்திரத்திற்குப் பிறகு 1948ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கம்யூனிஸ்டுகளைப் பெருமளவில் கைது செய்யும் நடவடிக்கை துவங்கியது. நூற்றுக்கணக்கானோர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். 1951ஆம் வருடம் கடும் அடக்குமுறை தாண்டவமாடியது. பல்வேறு தோழர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். தலைமறைவுச் செயல்பாடு மட்டுமே சாத்தியமானதாக இருந்தது. வெகுஜன ஸ்தாபனங்கள் சட்டவிரோத அமைப்புகளாகக் கருதப்பட்டு அவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது.

கட்சிக்குள் நடந்த நிகழ்ச்சிகளும் கட்சிக்கு வெளியே நடந்த நடவடிக்கைகளும் கட்சியின் இரண்டாவது அகில இந்திய மாநாட்டில் தீர்மானித்தபடி நடைபெற்றன. அதில் நூற்றுக்கணக்கான தோழர்களின் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏராளமான சதி வழக்குகள் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக நடத்தப்பட்டன. திருச்சி சதி வழக்கில் பி.ராமமூர்த்தி உட்பட அனந்தநம்பியார், கல்யாணசுந்தரம், உமாநாத் மற்றும் 150 தோழர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

திருநெல்வேலியில் நடந்த கம்யூனிஸ்ட் சதி வழக்கில் தோழர் ஏ.நல்லசிவன் ஒரு எதிரியாகக் குற்றம் சாட்டப்பட்டு நீண்ட நாள் விசாரணை நடைபெற்றது. பல்வேறு தோழர்களுக்கு ஆயுள் தண்டனை உட்பட கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டன. மதுரையில் போலிசாருடன் சண்டையிட்டதாகப் பொய் கூறி மூன்று முக்கிய தோழர்கள் கொல்லப்பட்டனர். இது சம்பந்தமாக நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் ஒரு தோழருக்கு தூக்கு தண்டனையும் மற்றும் பலருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தஞ்சாவூரில் மூன்று தோழர்கள் திட்டமிட்டு சுட்டுகொல்லப்பட்டனர். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு நிலப்பிரபுக்கள் தூண்டுதலினால் விஷம் கொடுத்து சாகடிக்கப்பட்டார். கோவை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இரண்டு தோழர்கள் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1950ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சேலம் மத்திய சிறையில் கொடூரமான கொலைபாதகச் செயல் நடைபெற்றது. அங்கு அடைக்கப்பட்ட சிறைக் கைதி-களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமெனக் கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது நிராயுதபாணியாக இருந்த அவர்கள் மீது மிருகத்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 22 தோழர்கள் தன்னுயிரைத் தியாகம் செய்தனர். சுட்டுக்கொல்லப்பட்ட 22 பேரில் 19 தோழர்கள் கேரளாவைச் சார்ந்தவர்கள். இந்தக் காட்டுமிராண்டித்தனமான படுகொலையைக் கண்டித்து நாடே வெகுண்டெழுந்தது.

பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தலைவர்களும், தொண்டர்களும் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டனர். பாப்பா உமாநாத்தின் தாயார் லட்சுமி அம்மாள் சென்னை மத்திய சிறையில் நீண்ட நாள் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரைத் தியாகம் செய்தார். வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த தோல் பதனிடும் தொழிலாளியான ஆக்னஸ் மேரியும் இறந்தார். அதேபோல ஐ.வி. சுப்பையாவும் வேலூர் மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரைத் தியாகம் செய்தார்.

இந்த அடக்குமுறைகள் எப்போது முடிவுக்கு வந்தன?

1951ஆம் ஆண்டு கட்சியின் மத்தியத் தலைமை எடுத்த முடிவுகள் காரணமாக நிலைமையில் சிறிது மாற்றம் ஏற்பட்டது. அத்துடன் 1952ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலைக் கட்சி சந்தித்தது. சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் தமிழகப் பகுதியிலிருந்து 15 தொகுதிகளில் கம்யூனிஸ்டுகள் வெற்றிபெற்றனர். முன்னால் ஒன்றுபட்ட சென்னை மாநிலத்தில் காங்கிரசின் பலம் குறைந்தது. ஆந்திரப் பகுதியிலும், மலபார் பகுதியிலும் கம்யூனிஸ்டுகள் ஏராளமான தொகுதிகளில் வெற்றி-பெற்றனர்.

முடிவுக்கு வந்தது போல் இருந்த அடக்குமுறைகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மார்க்சிஸ்ட் கட்சி பிரிந்தபோது மீண்டும் தலைதூக்கிய நிலையைச் சொல்லுங்களேன்….

1963ஆம் ஆண்டு டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் 32 பேர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்ற பெயரில் கட்சியை உருவாக்கினார்கள். அந்த 32 தோழர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.ராமமூர்த்தி, எம்.ஆர். வெங்கட்ராமன், என்.சங்கரையா, கே.ரமணி ஆகிய நான்கு தோழர்களும் அடங்குவர். கட்சி உடைவதற்கு முன் நூற்றுக்கணக்கான தோழர்கள் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-சீன எல்லைத் தகராறின்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் அதிகமான தோழர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)க்கு ஆதரவான நிலை எடுத்த தோழர்கள் ஆவார்கள். அவர்கள் அனைவரும் 1963ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

1964ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் 7வது அகில இந்திய மாநாட்டுக்குப் பிறகு சுமார் 200க்கும் மேற்பட்ட தலைவர்களும் தொண்டர்களும் மாநில அரசால் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். 1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்-பட்டனர்.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழக இளைஞர்களும் மாணவர்களும் எப்போது தீவிரமாக ஈடுபட்டனர்?

மாணவர்களும், இளைஞர்களும் சுதந்திரப் போராட்டம் துவங்கிய காலத்திலிருந்தே பல போராட்டங்களை நடத்தினர். 1936ல் அகில இந்திய மாணவர் சங்கம் துவங்கப்பட்டது. அதன் கிளைகள் 1938ல் சென்னையிலும், 1940ல் மதுரையிலும் துவக்கப்பட்டன. பின்னர் தமிழகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. அதன் பதாகை சுதந்திரம், சமா-தானம், முன்னேற்றம் என சிவப்பு நட்சத்திரத்துடன் உருவாக்கப்பட்டது. அதில் சுதந்திரம் என்றால் விடுதலை என்பதும், சமாதானம் என்றால் சோசலிசம் என்பதும், முன்னேற்றம் என்றால் கம்யூனிசம் என்பதும் அவற்றின் உள் அர்த்தமாகும். இதுதான், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மாணவர்களைத் திரட்டுவதற்கான முழக்கங்களாக அப்போது இருந்தது.

அப்போது நடந்த சில சம்பவங்களைச் சொல்லுங்களேன்…

அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் யுத்த எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மீனாட்சி என்ற மாணவி பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதைக் கண்டித்து மதுரையில் நடந்த போராட்டத்தில் நான் கைது செய்யப்பட்டேன். மாணவர் இயக்கமும், தேசிய விடுதலை வீரர்களும் இணைந்து மதுரையில் மாபெரும் போராட்டத்தை நடத்தினோம்.

Bones are Broken, Skulls are Smashed Blood is Flowing in.. என்ற வாசகங்களுடன் நான் எழுதிய நோட்டீஸ் சம்ரு விடுதியில் மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த ஓ. நாராயணசாமி அறையில் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, அவர் கைது செய்யப்பட்டார். அதை எதிர்த்து மாபெரும் இயக்கம் நடைபெற்றது. பிறகு, அமெரிக்கன் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற கண்டன இயக்கம் நடைபெற்றது. அதற்கு, கிருஷ்ணசாமி மகன் லட்சுமிகாந்தன் பாரதி ஐ.ஏ.எஸ். அவர்களின் சகோதரி மகாலட்சுமி பாரதியைத் தலைமை தாங்கச் சொன்னேன், அதில் மாபெரும் போராட்டப் பிரகடனம் வெளியிடப்பட்டது. அதற்கு பிறகு கைது செய்யப்பட்ட நான் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டேன். ஆந்திராவைச் சேர்ந்த கோட்டீஸ்வரராவ், வல்லபராவ், ஜெ.வி.கே. மூர்த்தி, ரங்கநாயகலு, கேரளாவைச் சேர்ந்த அச்சுதன் உட்பட ஆறு மாணவர்கள் என்னுடன் சிறையில் இருந்தனர். வேலூர் சிறையில் பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த எங்களை 1941ஆம் ஆண்டு இராஜமகேந்திரபுரம் சிறையில் தனியாக அடைத்தனர். ஒரு வருடத்திற்குப் பின்பு என்னைத் தவிர மற்ற அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது காமராஜர் என்னுடன் சிறையில் இருந்தார். தனியாக உள்ள என்னை மற்ற கம்யூனிஸ்டுகள் இருந்த வேலூர் சிறைக்கு மாற்றச் சொல்லி அவர் கடிதம் எழுதினார். அத்ன் பிறகு என்னை வேலூர் சிறைக்கு மாற்றினர். பின்னர் எம்.ஆர். வெங்கட்ராமன், சீனிவாசராவ், வ.சுப்பையா, எம்.கல்யாணசுந்தரம், ஐ. மாயாண்டி பாரதி ஆகியோர் ஒன்றாக விடுதலை செய்யப்பட்டோம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கே.முத்தையா, ஆர்.உமாநாத், சுப்பிரமணிய சர்மா போன்ற தோழர்கள் கல்லூரி மன்றத்தை முற்போக்கு மேடையாகப் பயன்படுத்தினர். பம்பாயைச் சேர்ந்த சோசலிஸ்ட் தலைவர் எஸ்.எஸ் பாட்லிவாலாவை அழைத்து சென்னை மாணவர் சங்க மாநாட்டில் பேச வைத்தோம். பாட்லிவாலாவை ராஜகோபாலாச்சாரி நாடு கடத்தினார். சென்னை மாணவர் இயக்கம் வளர்ச்சி பெற்று 1938ல் எம்.எஸ்.ஓ (Madras Students Organisation) என்ற பெயரில் செயல்படத் துவங்கியது. தென்னிந்திய மாணவர் சம்மேளனத்தின் முதல் மாநில மாநாடு 1942ஆம் ஆண்டு ஜூலை மாதம் சேலத்தில் நடைபெற்றது. அப்போது மலபார், ஆந்திரா, கர்நாடகம் ஆகியவை இணைந்த மாகாணமாக இருந்தது. சுந்தரையா, ராமமூர்த்தி, மோகன் குமாரமங்கலம் போன்ற தலைவர்கள் அம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

எந்தச் சூழலில் தாங்கள் மாணவர் சங்கத்தின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்?

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைக் கொண்டுவர காங்கிரஸ் கட்சி நினைத்தது. அந்த நேரத்தில் மாணவர்கள் மத்தியில் குழப்பம் உருவாகி, பிளவு ஏற்பட்டது. அகில இந்திய மாணவர் சங்கத்திலிருந்து மாணவர் காங்கிரஸ் உருவானது. நடந்த அகில இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டில் முதல் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். மதுரை மாணவர் சங்க மாநாட்டில் சத்தியமூர்த்தி, காமராஜர், பி.ராமமூர்த்தி ஆகியோரைப் பேச வைத்தோம்.

தலைவர்களை விடுதலை செய்! அடக்குமுறையைக் கைவிடு! தேசிய சர்க்கார் அமை! என்ற மூன்று விஷயங்களை முன்வைத்து தமிழக மாணவர் சங்கம் சார்பாக இயக்கம் நடைபெற்றது. அதை காங்கிரஸ் மாணவர்கள் எதிர்த்தனர். நாம் அவர்களின் ஆகஸ்ட் இயக்கத்தை எதிர்த்ததால் பதிலுக்கு அவர்கள் இதை எதிர்த்தனர். அப்போது நெல்லையில் மாபெரும் பேரணி நடந்தது. அதற்கு நான் தலைமை தாங்கினேன். பேரணி மீது போலிஸ் தடியடி நடத்தினர். அதில் நான் உட்பட ஏராளமான மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இரண்டு நாட்களில் மீண்டும் என்னைப் பாதுகாப்புக் கைதியாக வேலூர் சிறையில் அடைத்தனர். பிறகு அங்கிருந்து கண்ணூர் சிறைக்குக் கொண்டு சென்றனர். அப்போதுதான் கையூர் தோழர்கள் தூக்கிலிடப்பட்ட சம்பவத்தைக் கேள்விப்-பட்டோம்.
கண்ணூர் சிறைக்கு கொண்டு சென்றபோது அங்கு ஏராளமான தோழர்கள் வரவேற்பு அளித்தனர். கண்ணூர் சிறைக்கு வெளியே “ஏ.கே. கோபாலன் ஜிந்தாபாத்” “கம்யூனிஸ்ட் கட்சி ஜிந்தாபாத்’’ என்ற கோஷங்கள் எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும்.

கையூர் தோழர்கள் இறப்பதற்கு முன்னதாக அவர்-களை பி.சி. ஜோஷி சந்தித்தார். கையூர் தோழர்கள் அளித்த பேட்டி மிகவும் முக்கியமானது. அந்த பேட்டி “மனிதத்துவத்தின் மலர்கள்’’ என்று அப்போது வெளியானது.

மாணவர் இயக்கத்திலிருந்து எப்போது கம்யூனிஸ்ட் கட்சி பணிக்கு வந்தீர்கள்?

1942ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாணவர் இயக்கத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில், மாணவர் சங்கப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர் ஆனேன்.

நாட்டு விடுதலைக்கும், மக்கள் விடுதலைக்கும் பல்வேறு தியாகங்களை புரிந்த நீங்கள் நம் நாடு விடுதலை அடைந்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?

கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளர் ஆன நேரத்தில், வி.கே.புரம், மதுரை பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டம் தீரத்துடன் நடைபெற்றது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் மதுரை சதி வழக்கு ஜோடிக்கப்பட்டது. என்னுடன் தஞ்சை சிறையில் அடைக்கப்பட்ட ஓமாந்தூரார் 1946ஆம் ஆண்டில் இடைக்கால அரசாங்கத்தின் முதலமைச்சர் ஆகிவிட்டார். அப்போதுதான் இந்த சதி வழக்கு போடப்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. அதில் முதல் குற்றவாளி பி.ராமமூர்த்தி, இரண்டாவது குற்றவாளி நான் (என்.சங்கரையா), மூன்றாவது குற்றவாளி கே.டி.கே. தங்கமணி என்று ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு தொடரப்பட்டது. 1947 ஆகஸ்ட் 14 வரை சிறையில் இருந்தோம்.

தூக்கிலிடப்பட்ட தியாகி பாலு அப்போது அங்கு ஆயுதப்படை கான்ஸ்டபிளாக இருந்தார். 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு நாங்கள் இருந்த சிறைக்கு நீதிபதி அலீம் வந்தார். இந்த சதி வழக்கு விசாரணை நடந்து, “கையாள் வைத்து காவல்துறையால் போடப்பட்ட பொய் வழக்கு இது’’ என தீர்ப்பு கூறினார். அதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்களுடன் ஊர்வலமாக வந்து திலகர் திடலில் பொதுக்கூட்டம் நடத்தினோம். நாங்கள் பேசி முடிக்கும்போது எல்லாக் கோயில்களிலும் சுதந்திர மணி ஒலிக்கிறது. நாங்களும் பொதுக் கூட்டத்தில் அறிவிக்கிறோம்.

1936ல் தாங்கள் மாணவர் சங்கத்தில் இருந்தபோது வைத்த கோஷம் “சுதந்திரம், சமாதானம், முன்னேற்றம்” என்பது இன்றும் பொருத்தப்பாட்டுடன் உள்ளது.

எதைச் சாதித்ததாக உணர்கிறீர்கள்?

அன்று துவக்கப்பட்ட அகில இந்திய மாணவர் சங்கம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மாணவர்களைத் திரட்ட மிகவும் முன்னணியில் இருந்தது. பின்பு இந்திய மாணவர் சங்கமாக மாறிய பின்பும் சர்வதேச சிந்தனையுடன் சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம் என்ற கோஷத்துடன் மாணவர்களைத் திரட்டி இன்று வலுவாய் வளர்ந்துள்ளது. இந்த கோஷங்களுக்குப் பின்னால் மாணவர்களைத் திரட்டுவதே ஒரு சாதனைதான்.

சர்வதேச சிந்தனையுடன் இளம் தலைமுறையை உருவாக்கினாலும் இன்று ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் இடதுசாரிகளைத் தவிர மற்றவர்கள் பங்கேற்பதில்லை என்ற கருத்து…..

இல்லை. இது தவறான கருத்து. கடந்த காலங்களைவிட தற்போதுதான் அனைத்துத் தரப்பினரும் அமெரிக்-காவின் அடாவடிகளை எதிர்த்துப் போராடத் துவங்கி உள்ளனர். குறிப்பாக அமெரிக்காவின் உள்ளேயே அவர்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு தோன்றி உள்ளது.

இளைஞர்கள், மாணவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் முன்பு போல பங்கேற்பதில்லை…. என்ற ஒரு குற்றச்சாட்டு பொதுவாக உள்ளது. அது குறித்து?
இதுவும் ஒரு தவறான புரிதல் என கருதுகிறேன். அன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது நேரடியாகக் களத்தில் சந்திப்பதாய் இருந்தது. அதாவது அந்த எதிர்ப்பு தேச விடுதலையுடன், உடனடித் தேவையுடன் இணைந்து இருந்தது. ஆனால், இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் நேரடியாய் ஆதிக்கம் செலுத்தவில்லை. இந்தியாவை ஆண்டு வரும் நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ ஆட்சியின் மூலம் தனக்குத் தேவையானவற்றைச் சாதித்துக் கொள்கின்றனர். இவர்களும் தனது கொள்கை நிலைபாடு காரணமாக அவர்களை ஆதரிக்கின்றனர்.

அப்படி எனில் இங்கு நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ ஆட்சி இருப்பினும் அமெரிக்க அல்லது பன்னாட்டு ஏகாதிபத்தியத்தின் ஆட்சி மறைமுகமாக நடக்கிறது என்று கருதலாமா?

இல்லை. அது அடிப்படையில் தவறான முடி-வுக்குக் கொண்டு சென்றுவிடும். இந்திய நிலப்பிரபுத்துவ முதலாளித்-துவ ஆட்சியாளர்களுக்கு இரட்டைத் தன்மை உண்டு. ஏகாதிபத்தியத்துடன் இவர்களால் உறவாடவும் முடியும், தேவையெனில் முரண்படவும் முடியும். இந்த இரட்டைத் தன்மை இப்போதும் உள்ளது. ஆனால் இந்த இரட்டைத் தன்மையை நக்சலைட்டுகள் ஒப்புக்கொள்வதில்லை. அதனால்தான் நமது ஆட்சியாளர்கள் அவர்களின் அடிமைகள் என்று முடிவு செய்த காரணத்தினால் அதை அழித்தொழிப்பது என முடிவு செய்கின்றனர். எனவே இங்கு நேரடியாக அமெரிக்காவின் ஆட்சி என்று சொல்வது தவறு.

உலகம் முழுவதையும் ஈர்த்த ரஷ்யப் புரட்சி உங்கள் இளமையை எப்படி பாதித்தது?

சோவியத் யூனியன் என்பது இந்திய சுதந்திரப் போரில் மிகவும் தாக்கத்தைச் செலுத்திய ஒரு மாற்றமாகும். காங்கிரஸ்காரர்கள் உட்பட அந்த தாக்கத்திலிருந்து மீள முடியவில்லை. அங்கு நடந்த சீர்திருத்தங்கள், முன்னேற்றங்கள் இங்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அதன் விளைவாகத்தான் இங்கு சோசலிச சிந்தனைகள் பரவின. எங்கள் மாணவப் பருவத்தில் இரண்டாம் உலக யுத்தம் நடந்தபோது சோவியத் யூனியனுக்கு மிகப்பெரிய ஆதரவு இங்கு இருந்தது. ஜெர்மனியை எதிர்த்து சோவியத் நடத்திய போர் சாதாரணமானது அல்ல. இரண்டு கோடி மக்களை அந்நாடு பலி கொடுத்தது. நான் இப்போது நினைத்துப் பார்த்தாலும் அந்த 1941 முதல் 1945 அந்த நான்காண்டு காலம் சிலிர்ப்பான அனுபவத்தைத் தருகிறது. 1945ல் வெளிவந்த ஃபால் ஆப் பெர்லின் என்ற படத்தின் இறுதிக் காட்சி. சோவியத் படைகள் பெர்லினுக்குள் நுழைந்து அங்கு கோட்டை மீது செங்கொடியை ஏற்றும் காட்சி மகத்தான படமாக்கப்பட்டது. எங்களைப் போன்ற இளைஞர்களை உத்வேகபடுத்திய படம் அது.

உலகின் மிகப்பெரிய யுத்தம் அது. புதிய சோசலிச நாடு அதில் வெற்றி அடைந்தது. அந்த வெற்றி இல்லையெனில் இந்தியா ஜெர்மனியிடம் வீழ்ந்திருக்கும். இன்று அக்டோபர் புரட்சி நடந்து 90 ஆண்டுகள் ஆகின்றன. இன்று சோவியத் யூனியன் இல்லாமல் போயிருக்கலாம் ஆனால் அவர்களின் மகத்தான சாதனைகள் யாராலும் புறக்கணிக்க முடியாதவை. அதன் தாக்கம் இன்றும் உள்ளது. தற்போது அங்கு மீண்டும் கம்யூனிஸ்டுகள் மக்களின் பேராதரவைப் பெற்று வருகின்றனர். அன்று போல இன்று சோசலிச அரசுகள் ஒரு நாட்டில் மட்டும் இல்லை. கியூபா இன்று தனி நாடல்ல..தென் அமெரிக்க நாடுகள் இன்று அதோடு அணிவகுத்து நிற்கின்றன. சீனா, ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத்தைச் சார்ந்த 4 நாடுகள் இணைந்து உருவாக்கி உள்ள சாங்காய் கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு சவாலாக உருவெடுத்துள்ளன. அதனால்தான் இன்று ஈராக் போல ஈரானை அமெரிக்காவால் நினைத்த நேரத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆனால் அமெரிக்கா தன்னுடைய நச்சுக் கரங்களை உலகம் முழுவதும் நீட்டிக்கொண்டுதானே இருக்கிறது. உதாரணம் இந்தியாவில் அது திணிக்க நினைக்கும் அணு ஒப்பந்தம்..?

ஆமாம், அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இயக்கங்களும் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. உதாரணமாக வடகொரியா, தென்கொரியா இணைந்து வருவது அமெரிக்க நலனுக்கு நல்லதல்ல. அமெரிக்க, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா கூட்டு இராணுவ நடவடிக்கை சீனாவுக்கு எதிராக இந்தியாவை நிறுத்தும் நிகழ்வு என்பதால்தான், இந்தியாவில் மக்களைத் திரட்டி இடதுசாரிகள் போராடினார்கள். அணு ஒப்பந்தப் பிரச்சினையில் இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாக்க மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இந்தியாவில் மின்சாரம் குறைந்த விலையில் தயாரிக்க வழி இருக்கும்போது இத்தகைய தீய ஒப்பந்தம் வேண்டாம் என்கிறோம். 123இல் கையெப்பம் இட்டால் நாம் இனி அணுகுண்டு தயாரிக்க வேண்டும் என்றாலும் அவர்களைக் கேட்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். மற்ற நாடுகளுடன் எந்த ஒப்பந்தமும் போடமுடியாது. உதாரணம் ஈரானுடனான குழாய்வழி கேஸ் ஒப்பந்தம். சர்வதேச அணுசக்திக் கழகத்திடம் பேச மட்டுமே அனுமதித்துள்ளோம். இந்தியாவுக்குப் பாதகமான எதையும் அனுமதிக்க மாட்டோம். சுதந்திரத்திற்குப் போராடிய கம்யூனிஸ்டுகள் இன்று பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்கப் போராடுகிறார்கள்.

மீண்டும் சோவியத் குறித்து ஒரு சில வார்த்தைகள். அதாவது ரஷ்யப் புரட்சியின் வெடிப்பிலிருந்து ஏராளமான இலக்-கியங்கள் வந்தன. உலகின் பல பகுதி மக்களை அது தட்டி எழுப்பியது. ஆனால் சீனாவில் புரட்சிக்குப் பிறகு அப்படி இலக்கியப் படைப்புகள் மற்ற நாட்டு மக்களைச் சென்றடையவில்லையே?
சோவியத் அளவிற்கு இல்லை என்றாலும் சீனாவி-லிருந்து படைப்புகளே வரவில்லை என்று கூறமுடியாது. ஆனால் எண்ணிக்கையில் குறைவு என்பதால் பலருக்குத் தெரியவில்லை.

இந்தியாவில் நமது கட்சி நடத்துகிற போராட்டங்கள் இலக்கியமாக வருவதில் என்ன பிரச்சினை? தொபாகா, கையூர், தெலங்கானா, சமீபத்தில் வென்மணி. ஆனால் நாம் நீண்ட காலமாக நடத்துகிற பல போராட்டங்கள் (உம்: சாதியப் பிரச்சினையில் தலையீடு) ஏன் இலகியமாக மாற்றப்படவில்லை? நான் இதனால் நம்முடைய படைப்பாளிகளின் பணியைக் குறைத்து மதிப்பிடவில்லை.

நாம் இப்போது நடைமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், அதற்கான ஊழியர்களை நாம் கண்டெடுக்க வேண்டும். வெகுஜனங்களைத் திரட்டும் பணி நம் முன்னால் உள்ளது. விவசாயிகளை, தொழிலாளர்களைத் திரட்டுவதுதான் வேலை. இப்போது நமது தோழர்கள் முற்போக்குப் பத்திரிக்கைகளில் எழுதி வருகின்றனர். அதெற்கென பத்திரிக்கைகள் நடத்தப்படுகின்றன. ஆனால் இப்போது அமைதியாக அமர்ந்து இலக்கியம் படைக்க முடியாது. அதற்கான நேரம் இதுவல்ல.

இல்லை தோழர். போராட்டத்தின் ஒரு பகுதிதானே இலக்கியம் என்பது?

அது பின்னால வரும். நாம் இப்போது அரசு அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த நேரத்தில் அரசியல் இலக்கியங்கள்தான் வரும், தத்துவார்த்த இலக்கியங்கள் பின்புதான் வரும்.

ஜனவரி 30 காந்தியின் நினைவு தினம், அது குறித்து..?

காந்தி ஒரு சனாதனிதான். ஆனால் அவரைக் கொன்றவன் பகவத் கீதையைக் கையில் வைத்திருந்த ஒரு இந்து. ஆர்.எஸ்.எஸ்.காரன். காரணம் காந்தி இந்து – முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தியவர். அவர் இருக்கும் வரை மதவெறியர்களின் திட்டம் வெற்றி அடையாது என்பதால் கொல்லப்பட்டார். மதவெறி அபாயம் அதிகரித்துள்ள சூழலில் அதற்கெதிரான போராட்டம் அவசியம்.

தமிழகத்தில் நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது அகில இந்திய மாநாடு குறித்து…

மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சூழலில் இந்த மாநாடு நடைபெறுகிறது. 19 மாநாடுகளில் 4 மாநாடு தமிழ்நாட்டில் நடைபெறுவது பெருமைக்குரிய விஷயம். 1953ல் 3வது மாநாடும், 1972ல் 9வது மாநாடும், 1992ல் 14வது மாநாடும் நடைபெற்றன. 2008ல் 19வது மாநாடும் நடைபெற உள்ளது. 1964ல் மார்க்சிஸ்ட் கட்சி துவங்கியது முதல் தொடர்ந்து வளர்ந்துவரும் இயக்கமாக உள்ளது. இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு இல்லாமல் மத்தியில் காங்கிரஸால் ஆட்சி நடத்திட முடியாது. பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகள் ஏழு மந்திரிகளைக் கொண்டுள்ளபோது, 44 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அது குறித்து சிந்திக்கவே இல்லை. வெளியிலிருந்துதான் ஆதரவு கொடுக்கிறோம். ஏனெனில் எங்களுக்குப் பதவியைவிட நாட்டு நலன்தான் முக்கியம்.

பொருளாதாரக் கொள்கையில் காங்கிரசும் பா.ஜ.க.வும் ஒன்றுதான். அவர்களை வித்தியாசப்படுத்துவது. மதவாதம்தான். பா.ஜ.க ஒரு மதவாதக் கட்சி, காங்கிரஸ் ஒரு மதச்சார்பற்ற கட்சி. மதச்சார்புள்ள பா.ஜ.க ஆட்சிக்கு வரக்கூடாது என்பதால்தான் காங்கிரஸை ஆதரிக்கிறோம்.

அமெரிக்கா இந்த உலகத்தை ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டுவரத் துடிக்கிறது. ஆனால் அவர்கள் ஆதிக்கத்தை முறியடிக்கும் சக்தியுடன் நமது ஆட்சியாளர்களும் இல்லை, பா.ஜ.கவும் இல்லை. அதனால்தான் மூன்றாவது மாற்றை முன்வைக்கிறோம். மூன்றாவது அணி இல்லை, மாற்றுக் கொள்கையை முன்வைக்கிறோம். இந்தச் சூழலில் இம்மாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது.

சந்திப்பு: எஸ்.ஜி.ரமேஷ்பாபு

(புத்தகம் பேசுது சிறப்பு மலர்: ஜனவரி, 2008)

Source: chakkaram.com

 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...