ஜம்மு-காஷ்மீர்: ஒன்றிய அரசின் சூழ்ச்சித்திட்டம்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

 


மோடி-அமித்ஷா இரட்டையர் ஜம்மு-காஷ்மீரின் குணாம்சத்தைத் தங்களின் இந்துத்துவா சித்தாந்தத்திற்கேற்ப மாற்றியமைத்திடும் வெறித்தனத்தில் உறுதியுடன் இருக்கிறார்கள்.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயங்கி வந்த 14 அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தது வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. 2019 ஆகஸ்ட் 5க்குப் பின்னர், மோடிஅரசாங்கம் ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவின்கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை  ரத்து செய்து, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததற்குப்பிறகு, அம்மாநிலத்தில் இயங்கிவந்த பிரதான அரசியல்கட்சித் தலைவர்களை சிறை மற்றும் வீட்டுக்காவல்களில் அடைத்துவைத்து, அவர்களை ஊழல் பேர்வழிகள் என்றும் தேசவிரோதிகள் என்றும் முத்திரை குத்தி அவமானப்படுத்தியும் வந்தது. அவர்களின் அரசியல் செயல்பாடுகளை முடக்குவதற்கு அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

மாநிலத்தை சீர்குலைப்பதில் தொடரும் வெறித்தனம்
இவ்வளவுக்குப்பிறகும் அக்கட்சிகள் அனைத்தும் இணைந்து குப்கார் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி என்னும் அமைப்பை உருவாக்கின. மாநிலத்தின் பிரதான அரசியல் கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும் இணைந்துள்ள இந்த மக்கள்கூட்டணியானது,   பிரதமர் அழைப்புவிடுத்துள்ள கூட்டத்தில் பங்கேற்பது எனத் தீர்மானித்தது. ஜம்மு-காஷ்மீரில் அரசியல் செயல்பாடுகள் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் நிச்சயமற்றமுயற்சி எதற்கும் இசைவளிக்க மறுத்துவிட்டதாகத் தங்களைக் குற்றஞ்சொல்லக்கூடாது என்பதற்காகவே, பிரதமரும் உள்துறை அமைச்சரும் விடுத்த அழைப்பிற்கு இவ்வாறு மக்கள் கூட்டணித் தலைவர்கள் இணங்கினர். ஜூன் 24 அன்று நடைபெற்ற கூட்டம் தொடர்பாக பலவிதமான ஊகங்கள் வெளிவந்தபோதிலும், இக்கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.நரேந்திர மோடி அரசு, ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டிருப்பதன் காரணமாக, அது தன் நடவடிக்கைகளைத் திரும்பப்பெறத் தள்ளப்பட்டிருப்பதாக சில விமர்சகர்கள் கூறியிருக்கிறார்கள். எனவேதான் எந்தத் தலைவர்களை அவமானப்படுத்தி, ஒடுக்கி சிறையில் அடைத்து வைத்திருந்ததோ அதே தலைவர்களை மீண்டும் அழைத்து அரசியல் செயல்பாடுகளைப் புதுப்பித்திட முன்வரக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்கள். இதுபோன்ற வாதங்களை பெரியஅளவிற்கு விவாதித்திடாமல் தள்ளுபடி செய்துவிடமுடியும்.  மோடி-ஷா இரட்டையர் தங்களுடைய இந்துத்துவா சித்தாந்தத்திற்கேற்ப ஜம்மு-காஷ்மீரை மாற்றியமைத்திடும் வெறித்தனத்தில் இப்போதும் உறுதியுடன் இருக்கிறார்கள்.

வெளிக்காரணிகள்  மட்டும் காரணமல்ல…
ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகள்தொடர்பாக வேறுசில புவி-அரசியல் பிரச்சனைகளும் (geo-political considerations) முன்வந்துள்ளன. ஆப்கானிஸ்தானத்தின் நிகழ்ச்சிப் போக்குகளில் தலிபான் இயக்கத்தின் கை மேலோங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு பாகிஸ்தானத்தின் கேந்திரமான பங்களிப்பு ஒரு பிரதான காரணியாக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. இத்துடன் அமெரிக்கா தன் ராணுவத்தினரை ஆப்கானிஸ்தானத்திலிருந்து செப்டம்பரில் முழுமையாக விலக்கிக்கொண்டுவிடும் என்று கருதப்படுகிறது. இதுவும் கூட ஏற்கனவேசிக்கலாகியிருக்கின்ற காஷ்மீர் பிரச்சனையை மேலும் சிக்கலாக்க வேண்டாம் என்று பார்க்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் நிலைமையில் ஏற்பட்டுள்ள நிகழ்ச்சிப்போக்குகள் நிச்சயமாக இந்தியா கவலைப்பட வேண்டிய ஓர் அம்சமாகும். ஆனாலும் இத்தகைய வெளிக்காரணிகள், ஜம்மு-காஷ்மீர் மீதான மோடியின் தற்போதைய சிந்தனையோட்டத்திற்கான காரணமாக இருக்க முடியாது. ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகளின் கூட்டம்,மோடி அரசாங்கம் மற்றும் பாஜக-வின் மிகவும்குறுகிய நிகழ்ச்சிநிரலிலிருந்தே அரும்பியிருக்கிறது. ஜம்மு-காஷ்மீருக்கு சுயாட்சி அளிப்பதற்கான எந்தவொரு நோக்கத்துடனும் இது அமைந்திடவில்லை. மாறாக தன்னுடைய இந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீரின் அடையாளத்தை மாற்றியமைப்பதற்கான நோக்கத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது.இந்த அடிப்படையில்தான் ஜம்மு-காஷ்மீர்மாநிலம்  ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்றுஇரு யூனியன் பிரதேசங்களாக மிகவும் திட்டமிட்டே மிகவும் முரட்டுத்தனமான முறையில் மாற்றியமைக்கப்பட்டது.

வெளியாட்கள் நிலம் வாங்குவதற்காக…
அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இதுவரையிலும் நீதித்துறை கூராய்வுக்கு எடுத்துக்கொள்ளாத நிலையில், இப்போது மோடி அரசாங்கம் அம்மாநிலத்திற்கு வெளியே இருப்பவர்கள் அங்கே நிலம் மற்றும் இதர வளங்களை வாங்குவதற்கு அனுமதி அளிப்பதற்கும் வசதி செய்துதரும் விதத்தில், அம்மாநிலத்தில் புதிய குடியுரிமைச் சட்டங்களை உருவாக்கிடவும், நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. அரசியல் அரங்கில், தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டு, அது புதிய யூனியன் பிரதேசங்களின் கீழ் சட்டமன்றத் தொகுதிகளை மறுசீரமைத்துக் கொண்டிருக்கிறது. முந்தைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 87 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.இதில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 46ம், ஜம்முவில் 37ம் லடாக்கில் 4ம் இருந்தன. 20 இடங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. இப்போது புதிய சட்டமன்றம் 94 இடங்களைப் பெற்றிருக்கும். இது முந்தைய சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைவிட 7 அதிகமாகும். இவ்வாறு தொகுதி மறுசீரமைப்பு மூலமாக ஜம்மு பகுதியில் கூடுதலான இடங்கள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தலித்/பழங்குடியினருக்கான இடங்களும் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. இவற்றின் குறிக்கோள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள இடங்களைக் குறைத்திட வேண்டும் என்பதேயாகும். இதில் அடங்கியுள்ள சூட்சுமம் என்னவென்றால், எதிர்காலத்தில் தேர்தல் நடைபெறும்போது, ஜம்மு-வில் பாஜகவின் ஆதிக்கத்தை உத்தரவாதப்படுத்துவதும், எதிர்காலத்தில் பாஜக-வின் பங்களிப்பு இன்றி எவ்விதமான அரசாங்கமும் அமைக்கப்பட முடியாத நிலையை உருவாக்குவதுமேயாகும். 

பகைமையை உணர்வை விசிறி விடுவதற்காக
பாஜக, தொகுதி மறுசீரமைப்பு மூலமாக, ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுக்கிடையே என்றென்றும் பகைமை உணர்வை உயர்த்திப்பிடித்திட வேண்டும் என்றே விரும்புகிறது. அதே சமயத்தில், ஒன்றிய அரசும், பாஜக-வும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வந்த பிரதான அரசியல் கட்சிகளை சீர்குலைப்பதற்கான முயற்சிகளிலும், தங்களுக்கு வெண்சாமரம் வீசும் புதிய சக்திகளை உருவாக்குவதற்கான முயற்சிகளிலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஜூன் 24 கூட்டத்தின் திசைவழி தெளிவானது. முதலில் தொகுதி மறுசீரமைப்பு. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். அதனை சட்டப்பூர்வமாக்கிட வேண்டும். அடுத்து அதன்பின்னர் தேர்தல்கள் நடத்தப்படும். அதன்பின்னர் “உரிய சமயத்தில்” மாநில அந்தஸ்து அளிக்கப்படும். இக்கூட்டம் முடிவடைந்தபின்னர் பிரதமர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “தொகுதி மறுசீரமைப்பு எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் தேர்தல்கள் நடக்க முடியும். ஜம்மு-காஷ்மீர் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைப் பெறும். அது ஜம்மு-காஷ்மீரின்வளர்ச்சியை வலுப்படுத்திடும்.”  இப்போது டெல்லியில் அல்லது புதுச்சேரியில் உள்ளது போன்ற ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமா?

அதிகரிக்கும் இடைவெளி
இதேபோன்ற “காலவரிசையை” அமித்ஷாவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: “நாடாளுமன்றத்தில் உறுதி அளித்தபடி மாநில அந்தஸ்தை மீண்டும் புதுப்பிப்பதற்கும் அங்கே தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் அமைதியானமுறையில் தேர்தல்களும் மிகவும் முக்கியமானவைகளாகும்.” ஆனால் நடைபெற்ற கூட்டத்திலோ அல்லது வெளியிலோ எவ்விதமான மாநிலம் என்று விளக்கப்படவில்லை. லடாக் உட்பட ஒருங்கிணைந்த முழு ஜம்மு-காஷ்மீர் மாநிலமாக அது இருக்குமா? அல்லது துணை ஆளுநரின் ஆணைப்படி நடக்கும்  டெல்லி மாநிலம் போன்று இருக்குமா?

டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தின் வெளிப்பாடு எப்படி இருந்தது என்பதை காஷ்மீர் மக்கள் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்திற்குப்பின்னர் ஒன்றிய அரசுக்கும் காஷ்மீர் மக்களுக்கும் இடையே இருந்துவந்த இடைவெளி மேலும் அதிகரித்து இருக்கிறது. இறுதியில், ஒன்றிய அரசு காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதன் மூலமும், வலுக்கட்டாயத்தின் மூலமும் மட்டுமே காஷ்மீரை ஆள முடியும் என்பது நிரூபணமாகியிருக்கிறது. 

– பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
தமிழில்: ச.வீரமணி

ஜூன் 30, 2021

Source: chakkaram.com

No comments:

Post a Comment

UK Tory Party threatens war against Russia, prepares class war at home By Thomas Scripps

  Warning Russian President Vladimir Putin of “what could be a very, very bloody war”, UK Defence Secretary Ben Wallace announced yesterday ...