‘பெகாசஸ்’ விவகாரம்: பி.கே, ராகுல் தொடங்கி முன்னாள் உச்சநீதிமன்ற பெண் ஊழியர் வரை நீளும் பட்டியல்!-–சே. பாலாஜிஜுலை 18ந் திகதி இரவு வெளியான பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus-spyware) மென்பொருள் பயன்பாட்டு அறிக்கையானது இந்தியாவில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் தொலைபேசிகள் இந்த ஸ்பைவேரை பயன்படுத்தப்பட்டு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வமான முழு பட்டியலானது தற்போது வரையிலும் வெளியாகவில்லை. பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் என 18ந் திகதி இரவு , 19ந் திகதி காலை என வெளியாகிக் கொண்டிருக்கும் இந்த புலனாய்வு அறிக்கை பட்டியலில் பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது இந்திய அரசியலை அதகளப்படுத்தியிருக்கிறது. அதேபோல், 2019-ல் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் அளித்த முன்னாள் உச்சநீதிமன்ற பெண் ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினரின் தொலைபேசிகள் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒற்றறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னாள் உச்சநீதிமன்ற பெண் ஊழியர்

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயால் தான் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானதாகக் குற்றம்சாட்டிய அந்த பெண் ஊழியரின் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால், ரஞ்சனை குற்றம்சாட்டிய அந்த பெண் ஊழியரின் மூன்று தொலைபேசி எண்கள் இஸ்ரேலின் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டிருந்தது புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், அந்த பெண் ஊழியரின் தொலைபேசி எண்கள் மட்டுமல்லாமல், அவரது கணவர் மற்றும் சகோதரர்கள் என மொத்தம் 11 தொலைபேசி எண்கள் கண்காணிக்கப்பட்டு வந்திருக்கிறது. வெளியாகியுள்ள மெகா பட்டியலில் ஒரு குறிப்பிட்ட நபருக்காக அதிகளவு தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது இந்த பெண் ஊழியர் விவகாரத்தில்தான்.

அதிகாரம் மிக்க முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டுப் பாதிக்கப்பட்ட பெண்ணை கண்காணித்து வந்துள்ளது கண்டிக்த்தக்க செயல் என்று சமூக செயற்பாட்டாளர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் இந்த விவகாரம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் ‘தி வயர்’ (The Wire) பத்திரிகையில் அமித் ஷா குறித்து செய்தி பதிவிட்டதற்காகக் குறிவைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பத்திரிகையாளர் ரோகினி சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியரின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக, “ஒரு பெண் ஒரு சக்திவாய்ந்த நீதிபதியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் புகார் கூறினார். என்ன நடந்தது? அவரது தொலைபேசிகளும் அவரின் குடும்பத்தினரின் தொலைபேசிகளும் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. நீதிபதி அரசுக்குச் சாதகமான தீர்ப்புகளை வழங்கினார். அதன் காரணமாக, ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு வெகுமதி வழங்கப்பட்டது. ஷேம் ஆன் யூ ரஞ்சன் கோகோய்” என்று பதிவிட்டிருக்கிறார்.

பிரசாந்த் கிஷோர்

தன்னுடைய தொலைபேசி எண்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக என்.டி.டி.வி செய்தி நிறுவனத்திடம் பேசியிருக்கும் பிரசாந்த் கிஷோர், “நான் என்னுடைய தொலைபேசிகளை 5 முறை மாற்றிவிட்டேன்” என்று கூறியிருக்கிறார். செய்தி ஊடகங்களின் புலனாய்வில் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் தொலைபேசி எண்கள் பலமுறை மாற்றப்பட்டு வந்தபோதிலும், இம்மாதம் (ஜூலை) 14-ம் தேதி வரை ஹேக் செய்யப்பட்டு உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் துல்லியமாக ஸ்கெட்ச் போட்டு நரேந்திர மோடியைப் பிரதமர் அரியணையில் ஏற்றி வைத்த பிரசாந்த் கிஷோர் அதற்குப் பிறகு, பாஜகவின் தீவிர எதிர்ப்பாளராக மாறினார். இந்நிலையில், மோடி இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்காகப் பணியாற்றத் தொடங்கியதிலிருந்தே அவரது தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ராகுல் காந்தி

ஜுலை 19ந் திகதி காலைகூட பெகாசஸ் ஸ்பைவேர் குறித்து மத்திய அரசை சூசகமாகச் சாடி ட்வீட் செய்திருந்த ராகுல் காந்தி, மதியம் வெளியான பட்டியலில் தன்னுடைய தொலைபேசி எண்கள் இருந்ததைக் கண்டு நிச்சயம் அதிர்ச்சியடைந்திருப்பார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிடம் காங்கிரஸ் வீழ்ந்தது, அதற்குப் பிறகு தொடர்ச்சியாகக் கட்சி தனது ஸ்திரத் தன்மையை இழந்து வந்தது, எனக் காங்கிரஸ் என்ற மாபெரும் அரசியல் கட்சி இந்திய அரசியலில் சறுக்கியமைக்கு இந்த தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதுகூட காரணமாக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். ஆனால், ராகுல் காந்தியின் தொலைபேசி எண்கள் ஹேக் செய்யப்பட்டதா என்று ‘Forbidden Stories’ உதவியுடன் நடத்தப்பட்ட புலனாய்வில் அவர் கண்காணிப்புகளைத் தவிர்ப்பதற்காக சில மாதங்களுக்கு ஒருமுறை தொடர்ச்சியாகத் தனது தொலைபேசிகளை மாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஸ்பைவேர் மூலம் தான் கண்காணிக்கப்பட்டு வந்தது தொடர்பாக ராகுல் காந்தி, “என்னைப் பொறுத்தவரையில், என்னை மட்டுமல்ல எதிர்க்கட்சித் தலைவர்கள், இந்தியக் குடிமகன்கள் என யார் குறிவைக்கப்பட்டிருந்தாலும் இந்த கண்காணிப்பு சட்ட விரோதமானது மற்றும் வருந்தத்தக்கச் செயல்தான்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

2019 இந்திய பொதுத் தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக பல இடங்களில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகச் சாடிய முன்னாள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் அசோக் லவாசாவின் பெயரும் வெளியாகியிருக்கும் பெகாசஸ் ஸ்பைவேர் கண்காணிப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அவர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக்கூறி குற்றம் சாட்டிய சில நாள்களிலேயே அவருடைய தொலைபேசிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்திய அரசு தரப்பு விளக்கம் என்ன..?

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரத்தைக் கையிலெடுத்து அமளியில் ஈடுபட்டதை அடுத்து, மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கக் குறிப்பில், “இந்திய அரசுக்கும் இஸ்ரேல் ஸ்பைவேர் நிறுவனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் புலனாய்வு அறிக்கையில் உண்மை இல்லை. அரசாங்கத்தின் மீது களங்கம் சொல்வதற்காகவே இத்தகைய குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. சரியாக, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒருநாளுக்கு முன்பாக இந்த விவகாரம் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்பட்டிருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த குற்றச்சாட்டில் அடிப்படை உண்மை இல்லை. இந்தியாவில் சட்டவிரோதமான கண்காணிப்புகளுக்கு இடமே இல்லை” என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருக்கிறார். பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்டப்பட்ட தொலைபேசியின் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றுள்ளது குறி்ப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாகச் சர்வதேச செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வரும் புலனாய்வு அறிக்கையில், இந்தியாவில் பெகாசஸ் மூலம் கண்காணிக்கப்பட்டாகக் கூறப்படும் அனைவருமே நரேந்திர மோடிக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் எதிராக ஏதோ ஒரு வகையில் செயல்பட்டவர்கள் தான் என்று அரசியல் பார்வையாளர்கள் பொதுவெளியில் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

source: chakkaram.com

 

No comments:

Post a Comment

President Chandrika and former Chief Justice Shirani Bandaranayke By Victor Ivan

  Former President Chandrika Kumaratunga and Former Chief Justice Shirani Bandaranayake    Publication of a biography by former Presid...