அரசின் வெற்றிப் பயணத்தில் பசில் ராஜபக்‌ஷவின் வருகை மேலும் உத்வேகமளிக்கும்!


சில் ராஜபக்ஷ அவர்கள், 08.07.2021 அன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நிதி அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

அமைச்சரவைப் பொறுப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கு ஏற்ப, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதாரக் கொள்கைகள், திட்ட அமுலாக்கல் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவின் பெயர், கட்சியின் தலைமைச் செயலாளர் சாகர காரியவசமினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், தேர்தல்கள் ஆணைக்குழு 07.07.2021இல் பசில் ராஜபக்ஷவைப் பாராளுமன்ற உறுப்பினராகதை் தெரிவு செய்துள்ளதாக வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தது.

பசில் ராஜபக்ஷ, 2007ஆம் ஆண்டு தேசிய பட்டியல் மூலம் முதன் முறையாகப் பாராளுமன்றத்துக்குப் பிரவேசித்தார். அதனைத் தொடர்ந்து, 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டுப் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட  பசில் ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்தார்.

கொவிட் நோய்த் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள பல்வேறு செயற்பாடுகளுக்குத் தலைமை வகித்த பசில் ராஜபக்ஷ, கொவிட் ஒழிப்புச் செயற்குழுவின் உறுப்பினராகவும் பெரும் பணியாற்றினார்.

பொருளாதாரப் புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதிச் செயலணி மற்றும் காலநிலை மாற்றத்துக்குப் பேண்தகு தீர்வுகளுடன் பசுமை இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராகவும் பசில் ராஜபக்ஷ, உள்ளார். 

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், புஷ்பா ராஜபக்ஷ ஆகியோர், இந்தப் பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

எம்.பியாக பதவிப்பிரமாணம்
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்ட பசில் ராஜபக்‌ஷ, அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து, 08.07.2021 அன்று முற்பகல் சபாநாயகர் முன்னிலையில் எம்.பியாகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

கொரோனா வைரஸ் முழு உலகையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் சர்வதேசம் பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. அதன் பாதிப்புகள் இலங்கையிலும் பெரும் நெருக்கடி நிலையை தோற்றுவித்து வரும் நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி  நாட்டின் எதிர்காலத்தை  சுபீட்சமான பாதையில் இட்டுச் செல்வது  இன்றைய முக்கிய தேவையாக உள்ளது. அந்த வகையில் அரசாங்கம் பொருளாதாரத்தை முன்னேற்றும் பல்வேறு வேலைத்திட்டங்கள்  நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கக்கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் தனக்கு நிகர் தான்தான்  என்ற நற்பெயரைப் பெற்றுக் கொண்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்  பசில் ராஜபக்‌ஷ மீண்டும் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்க வேண்டும். மீண்டும் அவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பதவியை பொறுப்பேற்று நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தமது முழுமையான அர்ப்பணிப்புள்ள பங்களிப்பை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்தும் அழுத்தங்கள் தினம் தினம் வலுப்பெற்று வருகின்றன.

இத்தகைய சூழ்நிலையில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமாகாண ஆளுநருமாகிய  சுரேன் ராகவன் அது தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள்:

கேள்வி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவின் பாராளுமன்ற பிரவேசம் தொடர்பில் பல்வேறு தரப்புகளில் இருந்தும் சாதக பாதகமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் தங்களின் கருத்தை தெரிவிப்பீர்களா:

பதில்: அண்மையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ அரசியலில் குறிப்பாக பொருளாதார துறையில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அவரது பாராளுமன்றப் பிரவேசம் அரசாங்கத்தின் பயணத்திற்கு பெரும் உத்வேகமாக அமையும்.

நாட்டின் பொருளாதாரம், முதலீட்டுத்துறை மற்றும்  சுற்றுலாத்துறைகளுக்கு அவரது திறந்த பொருளாதாரக் கொள்கை யுடனான செயற்பாடுகள் இன்றியமையாததாக அமையும்.

பெரும்பாலும் எதிர்வரும்  6 ஆம் திகதி அவர் பாராளுமன்றத்திற்கு வருகை தருவார் என்றும் அதனையடுத்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக அவர் பதவி ஏற்கவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. உலக நாடுகளுடனான வர்த்தக உறவு, முதலீட்டுச் செயற்பாடுகளில் அவர் அதிக கவனம் செலுத்தி செயல்படுவார் என்ற நம்பிக்கையுள்ளது.

கொழும்பு துறைமுக நகரத் துக்கான முதலீட்டு நடவடிக்கைகளிலும் அவரது பங்களிப்பு பெரும்பாலும் இடம்பெறலாம். அத்துடன் உல்லாசப் பிரயாணத் துறையினை மீளக் கட்டியெழுப்புவதற்கான வெற்றிகரமான திட்டங்களை வகுத்துச் செயற்பட கூடியவர் அவர்.

வெளியிலிருந்து சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் அவர் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் போது அவற்றை உத்தியோக பூர்வ மாகவும் முன்னெடுக்க கூடியதாக இருக்கும்.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ்  சூழ்நிலையில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக்  கட்டியெழுப்புவதிலும் அரசாங்கத்தின் ஏனைய   செயற்பாடுகளிலும் அவரது பாராளுமன்ற பிரவேசம் பெரும் உத்வேகமாக அமையும்.

கேள்வி: வடக்கு மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த வடமாகாணத்திற்கான இரண்டாவது பல்கலைக்கழகம் வவுனியாவில் அமையவுள்ளது.அது தொடர்பில்  தங்களின் கருத்தை கூற முடியுமா?

பதில்: யாழ் பல்கலைக்கழகத்தின் கிளை நிறுவனமாக செயற்பட்ட  வவுனியா வளாகம் வடமாகாணத்தின் இரண்டாவது பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்டுள்ள மை   வடமாகாண மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி தரும் விடயமாகும்.

அரசாங்கம் இதன் மூலம் ஒரு முக்கியமான செய்தியை வடமாகாண மக்களுக்கு தெரிவிக்கின்றது. கல்வி, கலாசாரம், சுகாதாரம், அரசியல் துறைகளில் நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகள் தமிழ் மக்களுக்கும் வழங்கப்படுகிறது என்பதே அந்த செய்தி. அத்துடன் அது தொடர்பான நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சருக்கும் நன்றி கூறுவது பொருத்தமாகும்.

கேள்வி: வட மாகாணத்தில் பல்கலைக் கழகங்களின் செயற்பாடுகள் தமிழ் மக்களின் முன்னேற்றத்தில் எவ்வாறான பங்களிப்புக்களைச் செய்ய முடியும் ?

பதில்:  உண்மையில் பல்கலைக்கழகங்கள் மக்களுக்கு, மக்களின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பை செய்ய முடியும். பட்டதாரிகளை  உருவாக்கும் வெறுமனே தொழிற்சாலையாக பல்கலைக்கழகங்கள் இருந்தால் அதில் என்ன பயன்? அந்த வகையில் வடமாகாணத்தின் பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்திற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கும் பெரும் பங்களிப்புகளை செய்ய முடியும் என்பதே  எனது கருத்து.

நாட்டில் பதினேழு அல்லது பதினெட்டு பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன. அதில் ஒரு பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் இருந்துவிடக்கூடாது. மாறாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு மேலாக பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதி மக்களுக்கு அதன்மூலம் நன்மைகள் கிடைக்க வேண்டும்.

அரச பல்கலைக்கழகங்கள் மூலம் உருவாக்கப்படும் பட்டதாரிகளின் முன்னேற்றம் மிக மந்தமாகவே உள்ளது. அதுவும் கலைத்துறை பட்டதாரிகளைப்  பொறுத்தவரையில் பத்து வருடங்கள் கடந்தும் ஒரு சிறந்த தொழிலை பெற்றுக்கொள்ள முடியாத நிலையே தற்போது காணப்படுகிறது. விளிம்பு நிலையில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்கு பல்கலைக்கழ கங்கள் வழிவகுக்க வேண்டும்.

நான் வடமாகாண ஆளுநராக பதவி வகித்த காலத்தில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு விடுதி வசதிகள் அவசியம் இல்லை என தெரிவித்திருந்தேன். அதற்குப் பல காரணங்கள் உள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள் சமூகத்திலிருந்து விலகி தனியான கலாசாரத்தை தமக்கென்று வகுத்துக் கொள்வதற்கு அவை வழி சமைக்கின்றன.

அவ்வாறு விடுதிகள் கட்டப்படும் பணத்தை பல்கலைக்கழகங்களுக்கு அருகிலுள்ள மக்களுக்கு வட்டியில்லா கடனாக பெற்றுக் கொடுத்தால் அவர்கள் தமக்கான வாழ்வாதாரமாக சில அறைகளை நிர்மாணித்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு வாடகைக்கு வழங்க முடியும். அது அந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் உறுதுணையாக அமையும் அதேவேளை சமூக, கலாசார  சந்திப்புக்கும் அது வழிவகுக்கும். குறிப்பாக தென் பகுதி மாணவர்கள் அவ்வாறான அறைகளில் தங்கும்போது அங்கு புரிந்துணர்வும் இன நல்லிணக்கமும்  வலுப்பெறுவதற்கு வாய்ப்புண்டு.

கேள்வி: வட மாகாணத்தில் நடைபெற்றுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்: வடமாகாண அரசியல்வாதிகள் தமிழ் மக்களை வறுமையில் வைத்துக்கொண்டு அரசியல் நடத்த முயற்சிக்கின்றார்கள். அபிவிருத்தி மூலமான மக்கள் முன்னேற்றத்தில் அவர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது.

நான் வட மாகாண ஆளுநராக பதவி வகித்த காலத்தில் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு, வேலை வாய்ப்புகள், ரயில் போக்குவரத்து போன்ற துறைகளில் பெரும் சேவைகளை ஆற்ற முடிந்துள்ளது.

பலாலி விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டு சென்னைக்கான விமானப் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு எம்மால் வழிவகுக்க முடிந்தது.

கொரோனாவைக் காரணங்காட்டி கடந்த சில வருடங்களாக வடக்கில் எந்தவித அபிவிருத்தி திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

நான் வடமராட்சி குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான  நடவடிக்கைகளை மேற்கொண்டேன். மழைநீர் சேகரிக்கப்பட்டு அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருந்தது அதன்மூலம் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் வழங்குவது எமது திட்டமாக இருந்தது. அந்தத் திட்டம் இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

வடமாகாண அரசியல்வாதிகளுக்கு அதில் எந்தவித அக்கறையும் கிடையாது. தற்போது நாட்டில் நிலவும் உணவு நெருக்கடிக்கு விவசாயமே சிறந்த பதிலாக அமையக்கூடிய நிலையில் வடக்கு விவசாயிகளுக்கு நீரைப் பெற்றுக் கொடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அங்குள்ள  அரசியல்வாதிகள் சிந்திப்பதில்லை. மஞ்சள் முதல் அரிசி வரை அனைத்து பயிர்ச்செய்கைகளையும் வடமாகாண விவசாயிகளால் மிகவும் திறமையாக முன்னெடுக்க முடியும். அதற்கான வாய்ப்புக்களை அங்கு உள்ள அரசியல்வாதிகள்  அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

கேள்வி: நீங்கள் வட மாகாண ஆளுநராக பதவி வகித்த காலத்தில் பருத்தித்துறை மீன்பிடி துறைமுகம் அமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தீர்கள் என அறிய முடிகிறது அதன் தற்போதைய நிலை என்ன?

பதில்: மீனவ துறைமுகங்கள் மூலம் தென் பகுதி உட்பட மீனவர்கள் பெரும் நன்மைகளை பெற்று வருகின்றனர். வடபகுதி மீனவர்களுக்கு அதற்கான குறைபாடு காணப்படுகிறது.

பருத்தித்துறையில் மீனவர் துறைமுகம் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் 400 மில்லியன் ரூபா செலவில் அந்த திட்டத்தை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது.

மன்னாரிலும் பருத்தித்துறையிலும் மீன்பிடித் துறைமுகங்களை அமைப்பதற்கு நான் முயற்சி எடுத்தேன். மன்னாரிலிருந்து தொண்டமானாறு வரை கிழக்கில் ஒலுவில் வரைக்குமான மீன்பிடித் தொழிலை முன்னேற்றுவதற்கு அதன்மூலம் வழி வகுக்க முடியும்.

தற்போது அந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதற்கான எந்த செயற்பாடுகளையும் வடக்கு அரசியல்வாதிகள் மேற்கொள்ளவில்லை தமிழ் அரசியல்வாதிகளின் குறுகிய மனப்பான்மையுடனாள நோக்கங்கள் இதனூடாக வெளிப்படுகின்றன.

யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் நிறைவடைகின்றன யுத்தம் நடைபெற்ற சுமார் முப்பது வருடங்கள் அதற்கு முந்தைய 30 வருடங்கள் என பார்க்கும்போது வடமாகாணம் சுமார் 60 வருடங்கள் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.

கல்வி, விவசாயம், மீன்பிடி, விளையாட்டுத்துறை என பல்வேறு துறைகளில் தமிழ் மக்கள் சுதந்திரமாக செயற்படும் நிலை அரசியல்வாதிகளால் இல்லாமலாக்கப்பட்டிருக்கிறது. அதற்கு வடமாகாண அரசியல்வாதிகளே பொறுப்புக்கூற வேண்டும்.

நேர்காணல்: லோரன்ஸ் செல்வநாயகம்
தினகரன்
2021.07.04

Source: chakkaram.com

 

No comments:

Post a Comment

Modi government seeking to tighten India's repressive film censorship regime- By Yuan Darwin

 India’s Hindu supremacist Bharatiya Janata Party (BJP) government is seeking to tighten the country’s already intrusive and pervasive film ...