சமூகப் படுகொலையும், காணாமல் போய் விட்ட அரசும்- நிசிம் மன்னதுக்காரன்

 முரட்டுத்தனத்திடம் மட்டுமே முறையிடுகின்ற நிலைமையில் இருக்கின்ற
மக்களுக்கு கிளர்ழ்ந்தெழுவது அல்லது அந்த முரட்டுத்தனத்திடம் முற்றிலுமாக
அடங்கிப் போய் விடுவது என்பதைத் தவிர வேறு என்ன வழி இருக்கும் என்ற
கேள்வியை ஃப்ரெட்ரிக் ஏங்கல்ஸ் எழுப்பியிருந்தார். மக்களை அழித்தொழிக்கின்ற தொனியையே தற்போது இந்தியாவில் நாம் காணும்
காட்சிகள் கொண்டிருக்கின்றன. மருத்துவ வசதிகள் கிடைக்காமல் ஓர் உயிரை இழக்கும் போது மருத்துவமனை ஊழியர்களைத் தாக்குகின்ற குடிமக்கள், நடைபாதையில் ஒட்சிசன் சிலிண்டருடன் சுவாசிக்கப் போராடிக் கொண்டிருக்கின்ற குடிமக்கள் என்று இப்போது இந்தியாவில் பல மட்டங்களில் ஒரு நெருக்கடி நிலவி வருகிறது.


இந்த நெருக்கடியை ‘அமைப்பின் சரிவு’ அல்லது ‘அரசின் தோல்வி’ என்பதாக
எடுத்துக் கொள்வதைக் காட்டிலும், தற்போதைய நெருக்கடிக்கு இந்த அரசு
பொறுப்பல்ல என்பதாக அரசு ஆதரவாளர்களிடையே இருக்கின்ற
உரையாடல்களே மிகவும் அதிர்ச்சியூட்டுபவையாக இருக்கின்றன.
அந்த உரையாடல்கள் இந்தியாவிற்கான மிக மோசமான நேரத்தையே
காட்டுகின்றன. இதுபோன்ற வாதங்கள் இந்திய ஜனநாயகத்தின் மீது மிகவும்
மோசமான விளைவுகளையே ஏற்படுத்தப் போகின்றன. தொழிலாளர்களின் வாழ்க்கைக்கான தேவைகளை நிறைவேற்றித் தராமல் அவர்களிடம் மிகக் கொடூரமான வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளை உருவாக்கி உடல்நலக்குறைவு மட்டுமல்லாது முன்கூட்டிய மரணங்களையும் அவர்கள் சந்திக்க வேண்டிய நிலைமையை ஆங்கிலேய ஆளும் வர்க்கமும், அரசும் உருவாக்கின என்ற கருத்தை ஏங்கல்ஸ் முன்வைத்தார்.   

 


அதுபோன்று நடத்தப்பட்ட சமூகப் படுகொலையானது தனிநபர் ஒருவர் செய்யும் கொலையைப் போன்றதே என்று ஏங்கல்ஸ் கூறினார். அதில் இருக்கின்ற ஒரே வித்தியாசம் என்னவென்றால் சமூகப் படுகொலையைச் செய்பவர் தன்னை மறைத்துக் கொள்வதால், கொலை செய்தவரைக் காண முடியாத எவரொருவருக்கும் அந்த மரணம் இயற்கையானது என்றே தோன்றுகிறது.


அரசு பொறுப்பேற்றுக் கொள்ள முன்வராத நிலையில் இப்போது நம்மைச் சுற்றிலும் அதைப் போன்றதொரு சமூகப் படுகொலை நிகழ்வதையே நாம் பார்த்து வருகின்றோம். இந்த தொற்றுநோய் தற்போதைய அலையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களை மட்டுமே வேட்டையாடவில்லை என்பதே, தொழிலாளர் வர்க்கம் தொற்றுநோய்களால் பேரழிவிற்குள்ளானதாக
1840களில் இருந்த ஏங்கல்ஸின் இங்கிலாந்துக்கும், இப்போதைய
இந்தியாவிற்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசமாக இருக்கிறது. இப்போது
அந்த சமூகப் படுகொலை கண்ணுக்குத் தெரியாததாக இருக்கப் போவதில்லை.  அரசின் நடவடிக்கைகள் அரசின் நடவடிக்கைகள் அரசின் நடவடிக்கைகள் இந்தியாவில் தொற்றுநோயின் முதல் அலையின் போது நிகழ்ந்த சமூகப் படுகொலைக்கான சிறந்த எடுத்துக்காட்டாக மாநிலங்களுக்கு இடையிலே ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றிருந்த இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயர நிலை இருந்தது. அது யாருடைய கண்ணுக்கும் தெரியாமல்தான் இருந்தது. அத்தகைய கடினமான பயணத்தை தொழிலாளர்கள் தாங்களாகவே முன்வந்து மேற்கொண்டிருந்ததால் அவர்களே அதற்குப் பொறுப்பாவார்கள் என்று வாதிட்ட உரையாடல்கள் மூலம் அந்தப் படுகொலை நியாயப்படுத்தப்பட்டது. இப்போதும் இந்த இரண்டாவது அலையை
உருவாக்கியதற்கும் மக்களே பொறுப்பாவார்கள் என்று கூறப்பட்டு
வருகின்றது. 

 

ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் ‘கோவிட்-19 வெற்றிகரமாகத்
தோற்கடிக்கப்பட்டது’ என்று பாரதிய ஜனதா கட்சி அதிகாரப்பூர்வமாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிக் கொண்டதன் மூலம் அந்த ‘வெற்றி’க்கான பொறுப்பு அவர்களால் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிடம் வழங்கப்பட்டதே தவிர மக்களிடம் அல்ல. தங்களுடைய தவறுகளுக்கான பொறுப்பை நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற முடியாத சாதாரண மக்களை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டவர்களாக
இருந்த எட்டு கட்டமாக மேற்கு வங்கத்தில் தேர்தலை நடத்திய இந்திய
தேர்தல் ஆணையம், கும்பமேளாவை நியாயப்படுத்திய உத்தரகண்ட் முதல்வர், கொரோனா வைரஸால் புதிதாக இரண்டு லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்பட்டிருந்த நாளில் மேற்கு வங்கத் தேர்தல் பேரணியில்
கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறித்து பெருமகிழ்ச்சியடைந்து போன பிரதமர் என்று அதிகாரத்திலிருப்பவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் அரசால் அனுமதிக்க முடியாத செயல்பாடுகளாகவே இருந்தன.
தன்னுடைய பொறுப்பை அரசு கை கழுவி விடுவதில் தானும் பங்கேற்றுக் கொள்வதன் மூலம் சமூகப் படுகொலைக்கான நிலைமைகளையே ஒருவர் வளர்த்தெடுக்க முயல்கிறார்.

 அதுபோன்றதொரு செயலின் ஒரு பகுதியாகவே ஹிந்துக்களைப் பொறுத்தவரையில் பிணங்களைத் தகனம் செய்வது புனிதமான காரியம் என்பதால் அதனை ஊடகங்களில் காட்ட முடியாது
என்று வைக்கப்படுகின்ற வாதம் இருக்கிறது. இறந்து போன ஹிந்துக்களின்
உடல்களைத் தகனம் செய்வது தொலைக்காட்சிகளில்
ஒளிபரப்பப்படுவதில்லை அல்லது பதிவு செய்யப்படுவதில்லை என்ற
வெளிப்படையான பொய் ஒருபுறமிருக்க, மிக எளிதாக நோயாளிகளுக்கு ஒட்சிசனை வழங்கி அதன் மூலம் எத்தனை இறப்புகளைத் தடுத்திருக்கலாம், தங்களது அன்புக்குரியவர்களை வாகன நிறுத்துமிடங்கள் அல்லது
நடைபாதைகளில் தகனம் செய்வதற்கான நிர்பந்தத்திற்கு மக்கள் ஏன் உள்ளாகிறார்கள் என்பது போன்ற மிக முக்கியமான கேள்விகளும் இங்கே இருந்து வருகின்றன. இங்கே நடப்பவற்றை உலகிற்கு எடுத்துக் காட்டுவதைக்
காட்டிலும் இதுபோன்று எழுப்பப்படுகின்ற கேள்விகள் கண்ணியமற்றவையா என்கிற கேள்வி பதிலுக்காகக் காத்து நிற்கிறது.


தொற்றுநோய் ஏற்படுத்தியிருக்கும் உண்மையான தாக்கத்தை மழுங்கடித்துச்
சொல்வது பெரிய பேரழிவுக்கான ஆபத்தான பாதைக்கே வழிவகுக்கும் என்று
தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். சீன அரசு ஆரம்ப கட்டத்திலேயே தொற்றுநோயை மறைக்காது இருந்திருந்தால், இப்போதுள்ள இந்த இடத்தில் உலகம் நிச்சயம் இருந்திருக்காது. அதனால்தான் உலக
ஊடகங்கள் அனைத்தும் இத்தாலி, ஈரான், அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு, பிரேசில், பெரு போன்று இறப்பு எண்ணிக்கை அதிகம் இருக்கின்ற இடங்களின் மீது தொடர்ந்து தங்களுடைய கவனத்தைச் செலுத்தி வருகின்றன. ஆனால்
இந்தியாவிலோ நிகழ்ந்திருக்கும் துயரம் என்பது தொலைக்காட்சியில் ஒளிபரப்பக் கூடாத கலாச்சார விதிவிலக்காகச் சித்தரிக்கப்படுகிறது.
 

மாறுபட்ட பாரம்பரிய ஆதிக்கம் (Patrimonialism ) 


ஆட்சியாளர் ஒருவர் பகுத்தறிவுசார் -சட்ட அதிகாரத்துவம் அல்லது தன்விருப்பற்ற விதிகளின் அடிப்படையில் உள்ள விதிகளுக்கு மாறாக, மிகப்
பழமையான மரபுகளின் புனிதத்தின் அடிப்படையிலான பாரம்பரிய
அதிகாரத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்வதை சமூகவியலாளர் மேக்ஸ் வெபர் பாரம்பரிய ஆதிக்கம் என்று விவரித்தார். அதன் தனித்துவமான போக்குகளை கடந்த ஏழு ஆண்டுகளில் இந்திய அரசு பெற்றிருக்கிறது. 

வழக்கமான மரபுவழி ஆதிக்கத்தைப் போல மிகவும் தனிப்பட்ட,
மையப்படுத்தப்பட்டதாக இருக்கின்ற பரம்பரை, உறவுமுறைகள் அல்லது
தனிப்பட்ட பற்றுறுதியை அடிப்படையாகக் கொண்டதாக இப்போதைய ஆட்சி
இருக்கவில்லை. அதற்கு மாறாக மதப் பெரும்பான்மை, தேசியவாத சித்தாந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்தல் வெற்றிகளால் சட்டப்பூர்வமாக்கப்பட்டதாக அது இருக்கிறது. பணமதிப்பு நீக்கத்தால்
கட்டவிழ்த்து விடப்பட்ட துயரத்தின் போது கடமை, தேசபக்தி போன்றவை
இங்கே முக்கியமாக சொல்லப்பட வேண்டிய வார்த்தைகளாக்கப்பட்டு இருந்தன. ‘மை-பாப் சர்க்கார்’ என்று தன்னை பெருமைப்படுத்திக் கொண்டுள்ள, மக்களுக்கு கருணை காட்டுவதாக தன்னைக் காட்டிக் கொள்கின்ற இந்த பாரம்பரிய ஆதிக்க அரசு ஆக்சிஜன்சிலிண்டர்களை வாங்கிக் கொள்வதன்மூலமாகவோ அல்லது ஆம்புலன்ஸ்களைஏற்பாடு செய்து கொள்வதன் மூலமாகவோதங்களைத் தாங்களே கவனித்துக்
கொள்ளுமாறு தன்னுடைய குடிமக்களை கேட்டுக் கொள்கின்ற வகையிலான
நிறுவனமாக ஒரே இரவிற்குள் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறது. வசதிகள்
உள்ளவர்களுக்கு மட்டுமே உயிர்வாழ வாய்ப்பு உள்ளது என்ற சமூக
டார்வினிசத்தை நோக்கியே அது சென்று முடிந்திருக்கிறது. ஒருபோதும் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்படவே இல்லை என்ற மத்திய சுகாதார
அமைச்சரின் கூற்றிலிருந்து தொடங்கி ஒட்சிஜன் வேண்டுமென்று கேட்பவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) தாக்கல் செய்கின்ற
உத்தரபிரதேச அரசு, இறந்தவர்களால் திரும்பி வர முடியாது என்ற ஹரியானா
முதல்வரின் கருத்து வரையிலும் பார்க்கும் போது, கணக்கில் வராதிருக்கின்ற
மரணங்கள் குறித்து இங்கே விவாதிப்பதில் எந்தவொரு பொருளும் இருக்கப்
போவதில்லை என்பது தெளிவாகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோய்க் காலத்தில் தன்னுடைய கருணையை  வெளிப்படுத்தியிருக்கும் அரசு குறித்து தோலுரித்துக் காட்டுபவையாகவே
இதுபோன்ற கருத்துகள் இருக்கின்றன. 

 

பொறுப்பேற்றுக் கொள்வதை உறுதி செய்வதே பாரம்பரிய ஆதிக்கத்தின் அடிப்படை சிக்கல்களில் ஒன்றாக இருக்கிறது என்று ஆய்வாளர்கள் அடையாளம் கண்டிருக்கின்றனர். தொற்றுநோய்க் காலத்தில் பாரம்பரிய ஆதிக்க நிலை காணாமல் போய் விடும் போது இந்த பொறுப்பேற்றுக் கொள்ளல் மிகவும் அப்பட்டமாகத் தேவைப்படுவதாக இருக்கின்றது. ஒருபுறத்தில் அரசின் ஆளுமை மற்றும் கருணையைவெளிப்படுத்தும் விதமாக ஆக்சிஜன்ஆலைகளுக்கான அனுமதி என்றுதாமதமான நடவடிக்கையை மேற்கொண்டபிரதமருக்கு அவரது அமைச்சரவையில் இருக்கின்ற அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில் இதுவரையிலும் கோவிட்-19 குறித்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக்கூட நடத்தவில்லை என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையுடன் ஜனநாயகத்தின் தலைவராக பிரதமர் இருந்து வருகிறார். குடிமக்களாக மாறுங்கள், பிரஜைகளாக அல்ல கோவிட்-19ஐக் கையாண்ட விதம் தொடர்பாக அண்மையில் ஸ்வீடன் பிரதமர் அரசியலமைப்புக் குழுவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்திய அரசிடம் இன்றைய நெருக்கடிக்கு வழிவகுத்த அரசு முடிவுகளின் காலவரிசை குறித்த ஆய்விற்கு உத்தரவாதம் அளிப்பதற்கான எந்த வழியும் இருக்கவில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்டிருக்கின்ற மரணங்கள் எந்தவிதத்திலும் இனப்படுகொலைக்குக் குறைவானவை அல்ல என்று கூறிய அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கடுமையான வார்த்தைகளைக் கொண்டே நாம் இப்போதைக்குத் திருப்தியடைய வேண்டியிருக்கும். 

தன்னிடையே நடந்த, தன்னை எந்த வகையிலும் பாதிக்காத சமூகப் படுகொலையைக் காண முடியாது  த்தியக்காரத்தனமான குருட்டுத்தனம் கொண்டு கண்ணை மூடிக் கொண்ட நிலையே வர்க்க முற்சாய்வு, முற்புனைவுக் கருத்துகளைக் கொண்டிருந்த ஆங்கிலேய ஆளும் வர்க்கத்திடம் இருந்தது என்று ஏங்கல்ஸ் கூறினார். தற்போதைய தொற்றுநோய் நிலைமையில் வேறுவிதமான முற்சாய்வு, முற்புனைவுக் கருத்துகள் கொண்டிருக்கும் இந்தியா தன்னுடைய பைத்தியக்காரத்தனமான
குருட்டுத்தனத்தின் மூலம் அதுபோன்றதொரு சமூகப் படுகொலையையே அனுமதித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் அனைவரும் இந்த பாரம்பரிய ஆதிக்க ஆட்சியின் கீழ் வெறும் பிரஜைகளாக மட்டுமே இருக்காமல் குடிமக்களாக மாறிட வேண்டும். அவ்வாறு மாறாவிட்டால் இந்திய ஜனநாயகத்திற்கான இருண்ட  எதிர்காலத்தை இந்த தொற்றுநோயின் பேரழிவு மேகங்கள் முன்குறித்துக் காட்டுபவையாகவே இருக்கப் போகின்றன. 


Source: vaanavil June 2021

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...