விவசாயிகள் போராட்டம்: அடிக்கடி எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு வேளாண் நிபுணர் தேவிந்தர் சர்மா அளிக்கும் பதில்கள்


தேவிந்தர் சர்மா (Devinder Sharma)

ந்திய மக்களிடம் மூன்று புதிய வேளாண் சட்டங்களின் நன்மைகளை கொண்டு செல்கின்ற வகையிலே மத்திய அரசும், ஊடகங்களுக்குள் இருக்கின்ற அதன் ஆதரவாளர்களும் கூடுதலாகப் பணியாற்றி வந்தாலும், டெல்லி எல்லைகளில் போராட்டம் செய்து வருகின்ற விவசாயிகள் அந்த மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்படும் வரை தாங்கள் பின்வாங்கப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கின்றனர்.  

தவறான தகவல்கள், உண்மைகளுக்கு மத்தியில் சிக்கியுள்ள சராசரி நகர்ப்புற இந்தியர்கள் இப்போது ஐம்பது நாட்களையும் தாண்டியுள்ள விவசாயிகள் போராட்டத்தின் சிறப்புகள், குறைபாடுகள் குறித்து சற்றே குழப்பத்திலேயே இருந்து வருகின்றனர். தங்கள் வழியிலே செல்ல வேண்டும் என்பதில் தீர்மானத்துடன் இருந்து டெல்லி எல்லைகளிலே முகாமிட்டுள்ள விவசாயிகள் எதற்காகப் போராடி வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதை, தங்களுடைய கிராமப்புற சகாக்களைக் காட்டிலும் மிகவும் மாறுபட்ட உலகத்திலே வாழ்ந்து வருகின்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் கடினமாகவே உணர்கிறார்கள் என்பது குறித்து கடந்த ஏழு வாரங்களில் அதிக அளவிலே தெளிவு ஏற்பட்டிருக்கிறது. போராட்டங்களின் ‘பின்னணிக் கதை’ அவர்களுக்குத் தெரியாததே அதற்கான  முக்கிய காரணமாக இருக்கிறது.   

  

அந்த குழப்பங்கள் சிலவற்றிலிருந்து அவர்கள் விடுபடுவதற்காக விவசாயிகளின் போராட்டத்தின் மீது மிகப் பரவலாக வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் நான் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக இந்திய விவசாயிகளின் வருமான சமத்துவம் குறித்து பிரச்சாரம் செய்து வருகின்ற பத்திரிகையாளர், எழுத்தாளர், உணவு மற்றும் வர்த்தகக் கொள்கை நிபுணரான தேவிந்தர் சர்மாவுடன் பேசினேன். விவசாயிகளின் போராட்டங்கள் விவாதத்திற்கு வரும் போதெல்லாம் எழுப்பப்படுகின்ற முக்கியமான ஐந்து கேள்விகளுக்கான பதில்களை அவரிடம் கேட்டுப் பெற்றேன்.   

விவசாயிகள் ஏன் மத்திய அரசிடம் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்?  

அந்த மூன்று புதிய வேளாண் சட்டங்கள் விவசாய சமூகத்தைக் கிளர்ந்தெழுந்த வைத்ததால்தான் விவசாயிகள் புதுதில்லி எல்லையிலே கூடியிருக்கின்றனர் என்றே பலரும் நினைக்கிறார்கள். நான் பல்லாண்டுகளாக விவசாயிகளிடம் அதிகரித்து வந்த கோபம் இறுதியாக இப்போது வடிகாலைக் கண்டடைந்திருக்கிறது என்றே அதைக் காண்கிறேன். கடந்த முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் அநீதி, சமத்துவமின்மையை எதிர்கொண்டு வந்திருக்கும் விவசாயம் எவ்வாறு தன்னுடைய உரிமைகளை இழந்திருக்கிறது என்பதை மூன்று ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.  

கடந்த 1980களின் நடுப்பகுதியிலிருந்து 2000களின் நடுப்பகுதி வரையிலான இருபது ஆண்டுகளாக விவசாயத்தின் உற்பத்தி விலை அல்லது பண்ணை விலை உலகம் முழுவதும் மாற்றம் எதுவுமின்றி நிலையாக இருந்து வந்திருப்பதை ஐக்கிய நாடுகளின் வர்த்தகம், மேம்பாடு தொடர்பான மாநாடு (UNCTAD) நடத்திய ஆய்வு நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 1980களில் இருந்த அளவிற்கே 2000களிலும் விவசாயிகளின் வருமானம் (பணவீக்கத்தைச் சரிசெய்த பிறகு) இருந்திருக்கிறது. பணக்கார நாடுகள் விவசாய சமூகங்களுக்கு நேரடி வருமான ஆதரவையும், வேறு பல சலுகைகளையும் வழங்கியதன் மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைத்தன. அவ்வாறு வளரும் நாடுகளால் செய்ய முடியவில்லை என்பதால் அந்த நாடுகளில் உள்ள விவசாயிகள் அதன் விளைவுகளைத் தொடர்ந்து மௌனமாக அனுபவித்து வந்திருக்கிறார்கள்.  

2008ஆம் ஆண்டில் புதுதில்லி சிந்தனைக் குழுவுடன் இணைந்து பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) நடத்திய ஆய்வு ஒன்றில் 2010 மற்றும் 2016-17க்கு இடையில், இந்திய விவசாயிகள் தங்களுடைய பண்ணை வருமானத்தில் ரூ.45 லட்சம் கோடியை இழந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது! இந்த நெருக்கடியைக் காட்டிலும், அதைச் சுற்றி எந்தவொரு விவாதமும் இல்லாததே கவலையளிப்பதாக இருக்கிறது. மேலும் அந்த இழப்பு மதிப்பீடு ஒரு சில பயிர்களுக்கு மட்டுமானதே என்பதால் விவசாயிகள் சந்தித்த இழப்பின் ஒட்டுமொத்த அளவு இன்னும் அதிக அளவிலேயே இருந்திருக்க வேண்டும். அவர்களுடைய சரியான வருமானம் மறுக்கப்பட்டதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.2.64 லட்சம் கோடி அளவிற்கு விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதே அந்த ஆய்வு முடிவின் பொருள்.    

பொருளாதாரக் கணக்கெடுப்பின் மூலம் 2016ஆம் ஆண்டில் வெளியான மற்றொரு அறிக்கை, நாட்டில் பாதி அளவிற்கு இருக்கின்ற பதினேழு மாநிலங்களில், விவசாயக் குடும்பத்தின் சராசரி வருமானம் ரூ.20,000, அதாவது மாதம் ரூ.1,700 ரூபாய்க்கும் குறைவாக இருப்பதாகக் குறிப்பிடுகிறது. அந்த அளவிற்கான வருமானத்தைக் கொண்டு என்னால் ஒரு மாட்டைக் கூட வளர்க்க முடியாது! இந்தியாவில் பாதி இடங்களில் விவசாய சமூகம் எவ்வாறு பிழைத்து வருகிறது என்பதை நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக உள்ளது. கடந்த காலங்களில் இருந்தே விவசாயம் மிகவும் மோசமான நெருக்கடியைக் கடந்து வந்திருப்பதால், இப்போது இந்த குளிர்காலத்தில் புதுதில்லியின் எல்லைகளிலே விவசாயிகள் கூடியிருப்பது அவர்கள் இறுதிக் கட்டத்திற்கு வந்தடைந்திருப்பதையே காட்டுகிறது. கல்வியாளர்கள், மேல்தட்டு வர்க்கத்தினர், பொருளாதார வல்லுநர்கள் என்று அனைவரும் விவசாயிகள் தங்களுக்கான சரியான தொகையை பெறுவதற்கு உதவத் தவறியிருக்கின்றனர். எனவேதான் விவசாயிகள் தாங்கள் பிழைத்திருப்பதற்குத் தேவையானவற்றை தாங்களாகவே செய்து கொள்வது என்று இப்போது முடிவெடுத்திருக்கின்றனர். இந்த வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதால், தங்களிடம் மிஞ்சியிருப்பவற்றையும் இழந்து விடுவோம் என்ற அச்சம் அவர்களிடம் இப்போது வந்திருக்கிறது. அதுவே இதுபோன்ற எதிர்ப்புக்கு அவர்களைத் தள்ளியுள்ளது. உலகில் வேறெங்குமே பார்த்ததில்லை எனும் அளவிற்கு விவசாயிகளின் இந்த போராட்டம் என்னைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமான போராட்டமாக இருக்கிறது. 

இந்தப் போராட்டம் பணக்கார பஞ்சாபி விவசாயிகளின் போரட்டமாக  மட்டுமே இருக்கிறது அல்லவா?

அந்த அளவிற்கு பணக்காரர்களாக பஞ்சாப் விவசாயிகள் இருந்திருப்பார்கள் என்றால், நாட்டின் பிற பகுதிகள் பின்பற்ற வேண்டிய முன்மாதிரியாகவே அவர்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் லூதியானா பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம், பாட்டியாலா பஞ்சாபி பல்கலைக்கழகம், அமிர்தசரஸ் குருநானக் தேவ் பல்கலைக்கழகம் என்று அனைத்து பொதுத்துறை பல்கலைக்கழகங்களும் இணைந்து நடத்திய ஆய்வில் 2000க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் 16,600 விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. அதேபோன்று பஞ்சாப் விவசாயக் குடும்பங்கள் மொத்தத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனுடன் உள்ளன!  

உண்மையில் போராடும் விவசாயிகள் பணக்காரர்கள் என்றால், அவர்கள் ஏன் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலே தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? பஞ்சாபி செய்தித்தாள் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பாருங்கள். தினமும் கிட்டத்தட்ட ஒன்று அல்லது இரண்டு தற்கொலைகள் அதில் வெளியாகி இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் பஞ்சாபில் உள்ள மூன்று விவசாயிகளில் ஒருவர் வறுமைக் கோட்டுக்குக் கீழேதான் இருக்கிறார். 

இங்கே நான்கு சதவிகித விவசாயிகளுக்கு மட்டுமே பத்து ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நான்கு சதவிகித விவசாயிகளுக்கு மட்டுமே பத்து ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கும்போது நாம் எந்த வகையான பணக்கார விவசாயிகளைப் பற்றி ​​பேசிக் கொண்டிருக்கிறோம்? இந்தியாவில் உள்ள 86% விவசாயிகள் ஐந்து ஏக்கருக்கும் குறைவான நிலங்களையே கொண்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் 6 முதல் 10 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சராசரி அல்லது நடுத்தர விவசாயிகள் ஆகும்.  

குறைந்தபட்ச ஆதார விலையைப் பெற்று பணக்காரர்களாக இருந்து வருகின்ற விவசாயிகளால்தான் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகச் சொல்வது உண்மையில் நகைப்புக்குரியது. பஞ்சாபில் சுமார் 70% சிறு விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலையின் பலனைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். சிறு விவசாயிகள் என்பவர்கள் ஐந்து ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்கள். அவர்கள் தான் குறைந்தபட்ச ஆதார விலையின் மூலம் பெருமளவில் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் போராட்டம் எதிர்க்கட்சிகளால் தூண்டப்பட்டது என்று சொல்பவர்கள் தயவுசெய்து குளிர்காலத்தில் உங்கள் வீட்டிற்கு வெளியே ஓரிரவு சென்று வெளியே எப்படி இருக்கின்றது என்று பாருங்கள். பணம் கொடுத்தால் யாரும் இதைச் செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. டெல்லிக்கு வெளியே சாலையில் தள்ளுவண்டி ஒன்றில் அல்லது கூடாரத்தில் ஓரிரவை கழித்த பிறகு, உங்களுக்கு பணம் வழங்கப்பட்டாலும் ஒரு மாத காலத்திற்கும் மேலாக அதை நீங்கள் செய்வீர்களா என்பதைச் சொல்லுங்கள். விவசாய சமூகத்தை இழிவுபடுத்துவதை நிறுத்த வேண்டிய நேரம் இது என்றே நான் நினைக்கிறேன். போராடி வருகின்ற விவசாயிகளை நாம் மதித்து அவர்களுக்கு மரியாதை தர வேண்டும். அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அவர்களுக்கு உதவ நம்மால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்க முயல வேண்டும்.

இந்த சட்டங்களுக்கு ஆதரவாக பெரும்பாலான விவசாய சங்கங்கள் இருக்கின்றனவே?

பெரும்பான்மையான விவசாயிகள் உண்மையிலேயே இந்தச் சட்டங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றால், போராட்டக் களத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை இந்த அளவிற்கு அதிகமாக இருக்குமா? இப்போது குறிப்பிடத்தக்க வகையில் பல உழவர் சங்கங்கள் ஒரே மேடையில் ஒன்றிணைந்திருக்கின்றன. இருபதாண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளுடன் பணிபுரிந்தவன் என்ற முறையில், பல்வேறு உழவர் சங்கங்கள் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வது எவ்வளவு கடினம் என்பதை நான் அறிவேன். அவ்வாறு இருந்த போதிலும், பஞ்சாபில் இருந்து 32 தொழிற்சங்கத் தலைவர்கள், ஹரியானா, ராஜஸ்தான், மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் பலர் இங்கே கூடியுள்ளனர். நிலைமை இப்போது மிகவும் மோசமாக உள்ளது என்பதையே தங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, தாங்கள் உயிர் வாழ்வதற்காக இவ்வாறு அவர்கள் அனைவரும் இவ்வாறு ஒன்றிணைந்திருப்பது காட்டுகிறது. 

xxx என்ற உழவர் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு அதுபோன்ற வருகைச் சீட்டை வைத்திருக்கும் குழுக்களுக்கு இந்தச் சட்டங்கள் நல்லவை என்று சொல்வது ஒன்றும் மிகவும் கடினமான வேலை அல்ல. இதற்கு முன்னரும் இதுபோன்று நடந்திருப்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். இப்போதும் அது நடந்து வருவதைக் காண்கின்றோம். ஆனாலும் உண்மையான வலுவான எதிர்ப்பில் இவ்வளவு அதிகமாக எண்ணிக்கையில் விவசாயிகள் ஒன்று கூடியுள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.   

அவர்கள் கூறுவதைப் போல விவசாய மக்களில் ஒருபகுதியினரே மகிழ்ச்சியின்றி இருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் ஏன் மகிழ்ச்சியற்று இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அவர்களுடைய துன்பத்தையும், அவர்களின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியமல்லவா?

பெருநிறுவனங்கள் விவசாயத்தில் இறங்குவதில் என்ன தவறு இருக்கிறது?

அன்றொரு நாள் வணிக சேனல் ஒன்று என்னிடம் நேர்காணலை நடத்தியது. நிகழ்ச்சியை நடத்தியவர் என்னிடம் ‘சந்தைகள் இந்த வேளாண் சட்டங்கள் குறித்து மிகவும் உற்சாகத்துடன் இருக்கும் போது, விவசாயிகள் மட்டும் ஏன் மகிழ்ச்சியின்றி இருக்கிறார்கள்?’ என்று கேட்டார்.    

‘நீங்களே உங்கள் கேள்விக்கு பதிலையும் அளித்து விட்டீர்கள். சந்தைக்கு ஆதரவாக இந்த சட்டங்கள் இருப்பதாலேயே, சந்தைகள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கின்றன. இந்த சட்டங்கள் தங்களுக்குச் சாதகமாக இருக்கவில்லை என்று உணர்கின்ற விவசாயிகள் தெருக்களில் இறங்கிப் போராடி வருகிறார்கள்’ என்று நான் பதிலளித்தேன்.  

உலகம் பெருநிறுவன விவசாயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் நீங்கள் என்ன நினைக்க வேண்டும் என்று பெருநிறுவனங்கள் விரும்புகின்றனவோ அதற்கு மாறாக விவசாயத்தில் பெருநிறுவனங்களின் ஈடுபாடு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்திடவில்லை. எடுத்துக்காட்டாக இந்த சட்டங்களை நாம் கடன் வாங்கிய இடமான அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவில் அறுபது முதல் எழுபதாண்டுகளுக்கு மேலாக திறந்த சந்தைகளும், விவசாயத்தில் தடையற்ற வர்த்தகமும் இருந்து வருகின்ற போதிலும், விவசாய வருமானம் வீழ்ச்சியே அடைந்திருக்கிறது. உண்மையில், 2020ஆம் ஆண்டில் 42500 கோடி டாலருக்கும் அதிகமான திவால்நிலையால் அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

உண்மையில் அங்கே சீர்திருத்தங்கள் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும் என்றால், விவசாயிகள் ஏன் திவால்நிலையை எதிர்கொள்ள வேண்டும்? அமெரிக்காவும் மிக மோசமான விவசாய நெருக்கடியையே கடந்து சென்று கொண்டிருக்கிறது என்பது பெரும்பாலான இந்தியர்களுக்குத் தெரியாது. கிராமப்புற அமெரிக்காவில் தற்கொலை விகிதம் நகர்ப்புற அமெரிக்காவில் இருப்பதை விட 45% அதிகமாக உள்ளது.  

பல ஆண்டுகளாகவே அமெரிக்காவில் உள்ள சிறிய விவசாயப் பண்ணைகள் காணாமல் போய் வருகின்றன. அமெரிக்க மக்கள் தொகையில் 1.5% பேர் மட்டுமே விவசாயத்தில் இப்போது ஈடுபட்டுள்ளனர். இருந்த போதிலும், உலகின் மிகப்பெரிய விவசாய உற்பத்தியாளராகவே அமெரிக்கா தொடர்ந்து கொண்டிருக்கிறது. (அமெரிக்க விவசாயத்தைப் பற்றி பேசும்போது, ​​நாம் நிச்சயமாக மிகப் பெரிய இயந்திரங்கள், பெருநிறுவனங்கள், பெருவணிகம், பெரிய அளவிலான விவசாயத்தைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் இந்தியாவில் விவசாயத்தைப் பற்றி பேசுகின்ற போது, கோடிக்கணக்கான சிறு விவசாயிகள், குறு விவசாயிகள் பற்றியே நாம் பேசுகிறோம்).  

குறைந்தபட்ச ஆதார விலையோ, வேளாண் விளைபொருட்கள் விற்பனை ஒழுங்குமுறைக் கூடங்களோ அமெரிக்காவில் இல்லை. அங்கே வால்மார்ட் போன்ற மிகப்பெரிய சில்லறை விற்பனையாளர்களுக்கு இருப்பு வரம்புகள் எதுவும் கிடையாது. விவசாயிகளிடம் ஒப்பந்த வேளாண்மையும் உள்ளது. பொருட்கள் வர்த்தகமும் அவர்கள் செய்கிறார்கள். இவையனைத்தையும் மீறி அமெரிக்க விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மானியமாக 62,000 டாலர் வழங்கப்பட்டு வருகிறது. உண்மையிலேயே திறந்த சந்தைகள் திறமையுடன் இருக்கின்றன என்றால், இவ்வாறு வழங்கபப்டுகின்ற மானியங்கள் இவ்வளவு பணத்தை ஏன் அரசாங்கம் விவசாயத் துறைக்கென்று செலவிட வேண்டும் என்ற கேள்வியையே எழுப்புகின்றன.    

உலகின் பணக்கார வர்த்தக முகாமான ஓஇசிடி நாடுகள் நேரடியான வருமான ஆதரவு அல்லது மானியங்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான டாலர்களை விவசாயத்திற்காக செலவிட்டு வருகின்றன. ஐரோப்பா சுமார் 10000 கோடி டாலர் விவசாய மானியங்களை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது, அதில் பாதி அளவு பணம் விவசாயிகளுக்கு நேரடி வருமான உதவியாகச் செல்கிறது. ஆக விவசாயத் துறைக்கு அரசாங்கங்கள் அளித்து வருகின்ற கூட்டாட்சி உதவியே வேளாண்மை அல்லது வேளாண் ஏற்றுமதியில் ‘சந்தை செயல்திறன்’ என்று நாம் காண்பதாக உண்மையில் இருக்கிறது.     

வளமான வளர்ந்த நாடுகளில் விவசாயம் நீடித்து, உயிர்ப்புடன் இருப்பதற்கான சாத்தியம் அங்கே சந்தைகள் திறமையானவையாக இருப்பதால் அல்ல, மாறாக அரசாங்கம் மானிய உதவியை ஆண்டுதோறும் வழங்கி வருவதாலேயே என்பதில் நாம் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.  

இப்போது சீனாவும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை வீழ்த்தி, உலகின் மிகப்பெரிய விவசாய மானியங்களை வழங்குகின்ற நாடாக உருவெடுத்துள்ளது. சீன அரசாங்கம் 2016ஆம் ஆண்டில் விவசாயத் துறைக்கு 21200 கோடி டாலர் மதிப்புள்ள மானிய உதவியை வழங்கியிருந்தது. கோதுமை விவசாயிகளின் வருவாயில் 38%, அதே போன்று நெல் விவசாயிகளின் வருவாயில் 32% அளவு மானியங்கள் மூலமாகவே கிடைக்கின்றன. விவசாயிகளுக்கு அதிக அளவிலே வருமானம் அதிக மகசூல் மூலமாக அல்லாமல், மானியங்கள் மூலமாகவே கிடைக்கிறது.  

அடுத்து தொழில்நுட்பம் குறித்த பிரச்சனையும் இருக்கிறது. ‘தொழில்நுட்பம் வரும்போது, ​​உற்பத்தித்திறன் அதிகரிக்கும், வருமானம் அதிகரிக்கும்’ என்பது போன்று சொல்லப்படும் அனைத்தையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். 1970களில் இருந்து பல சிறிய பால் பண்ணைகள் அமெரிக்காவில் இருந்து வந்தன. அந்த பால் பண்ணைகள் தொழில்நுட்பம் மிக்கவை. அங்கே இருந்த கால்நடைகள் அதிக பால் தருபவை. அமெரிக்க பால் பண்ணைகள் உண்மையில் நாம் பின்பற்றுவதற்கான முன்மாதிரியாகவே இருந்தன. ஆனால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு விவசாயி ஒருவரின் தற்கொலை பற்றி நியூயார்க் டைம்ஸில் அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்றைப் படித்தேன். பால் விலையில் ஏற்பட்ட சந்தை வீழ்ச்சியால் மிகவும் வேதனை அடைந்த அந்த விவசாயி, தான் வைத்திருந்த 51 மாடுகள் ஒவ்வொன்றையும் முதலில் சுட்டுக் கொன்று விட்டு, பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.  

இதன் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால், அமெரிக்காவில் பல ஆண்டுகளாகவே விவசாயிகளிடம் துன்பம் நிலவி வருகிறது என்றாலும், அதைப் பற்றி நமக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதே.  அமெரிக்காவில் என்ன நடந்திருக்கிறது என்பதை உற்று நோக்கினால், 1970களில் இருந்து 93% பால் பண்ணைகள் மூடப்பட்டுள்ளதும், ஆனால் அங்கே பால் உற்பத்தி அதிகரித்துள்ளதும் தெரிய வரும். பெருநிறுவனங்கள் விவசாயத்தில் இறங்கி மிகவும் பெரிய பால் பண்ணைகளை அமைத்ததால், பால் விலை சரிந்து 93% பால் பண்ணைகள் மூடப்பட்டன என்று தெரிய வருகிறது.  

விவசாய வெற்றிக்கான அளவுகோலாக உண்மையில் தொழில்நுட்பமும் உற்பத்தித்திறனும் இருந்திருக்கும் என்றால், பெரும்பாலான பால் பண்ணைகள் மூடப்பட்டதற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. விவசாயிகள் பெற்ற சந்தை விலைகள் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்ததன் காரணமாகவே அவை மூடப்பட்டன. தங்களுடைய உற்பத்திச் செலவுகளைக்கூட ஈடுகட்ட முடியவில்லை என்ற நிலை வந்த போதே அவர்கள் பால் பண்ணைகளை விட்டுவிட்டார்கள்.

இது நமக்கு ஓர் எச்சரிக்கையாகவே இருக்கிறது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்ற விஷயங்கள் உண்மையில் அவ்வாறு இருக்கவில்லை என்பதைக் காட்டுகின்ற பல எடுத்துக்காட்டுகளில் இதுவும் ஒன்றாகும். நேரடி வருமான ஆதரவே விவசாயிகளுக்குத் தேவையான ஒன்றாகும். ஐரோப்பாவில் நேரடி வருமான ஆதரவுக்காக 50% மானியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா ஒரு வருடத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் சராசரியாக 62,000 டாலர்களை மானியமாக வழங்கி வருகிறது.  

எனவே இது சந்தைகள் விவசாயத்தைத் தக்க வைத்துக் கொள்வது இல்லை என்பதையே நமக்கு எடுத்துக் காட்டுகிறது என்றே நான் நினைக்கிறேன். இன்று விவசாயத்தில் எஞ்சியிருப்பவர்களை அரசாங்கம் தருகின்ற மானியங்களே உண்மையில் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. 

முன்னோக்கி செல்ல வேண்டிய பாதையாக நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்? நாம் விவசாயத்தை எவ்வாறு காப்பாற்றி புதுப்பித்துக் கொள்வது?

இது நமது வரலாற்றில் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும். உண்மையில் விவசாயிகள் நடத்துகின்ற இந்தப் போராட்டம் விவசாயத் துறையில் செய்ய வேண்டிய திருத்தங்களைப் பற்றி நம் அனைவரையும் உட்கார்ந்து சிந்திக்க வைக்க வேண்டும்.  

முதலாவதாக, உங்களைப் போன்று எனக்கும் ஒருவித உறுதியான வருமானம் தேவை. தன்னுடைய விளைபொருட்களுக்கான உறுதியான விலை ஒவ்வொரு விவசாயிக்கும் இருக்க வேண்டும். அந்த குறைந்தபட்ச விலையாவது அறுவடைக்குப் பிறகு மண்டிக்குச் செல்லும்போது ​​ தனக்குக் கிடைக்கும் என்ற உறுதியுடன் அவர் இருக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் என்ற ஒன்று தொழிலாளர்களுக்கு இருக்க முடியும் என்றால், விவசாயிகளுக்கு மட்டும் ஏன் குறைந்தபட்ச விலை இருக்க முடியாது என்பது எனக்குப் புரியவே இல்லை.  

இதை உறுதிப்படுத்துவதற்கு எனக்குத் தெரிந்த ஒரே வழி குறைந்தபட்ச ஆதார விலை மட்டும்தான்.  உண்மையில் அது இந்தியாவின் பலம். நமது கொள்கை வகுப்பாளர்கள் பசுமைப் புரட்சியின் போது ஒரு குறிப்பிடத்தக்க காரியத்தைச் செய்தார்கள் – குறைந்தபட்ச ஆதரவு விலையை அப்போது அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். அது இன்று பல சோதனைகளையும் கடந்து நின்றிருக்கிறது. மண்டிகளில் பிரச்சனைகள் உள்ளன என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். நாம் அவற்றின் கட்டமைப்பைச் சீர்திருத்த வேண்டுமே தவிர, அவற்றை முழுவதுமாக மூடி விடக்கூடாது. முழுமையாக மண்டிகளே இல்லை என்றாக்குவது குளியல் நீருடன் சேர்த்து குழந்தையையும் வெளியே எறிவதைப் போன்றதாகவே இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்ச ஆதார விலையை 23 பயிர்களுக்கு அறிவிப்பதை அரசாங்கம் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்பதை நான் பரிந்துரைக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசாங்கம் அறிவிக்கிறது என்றாலும் கோதுமை, நெல் ஆகியவை  மட்டுமே பெரும்பாலும் வாங்கப்படுகின்றன (தேவைப்படும் போது ஓரளவிற்கு பருத்தி, பருப்பு வகைகளும் வாங்கப்படுகின்றன என்றாலும், பெரும்பாலும் கோதுமை, நெல்லுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது). அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை விரிவுபடுத்தப்பட வேண்டும்.

2020 அக்டோபர், நவம்பர் என்று இரண்டு மாதங்களில் எத்தனை வெவ்வேறு பயிர்கள் விற்கப்பட்டுள்ளன, அவற்றிற்கான விற்பனை விலை குறித்த விவரங்கள் அரசாங்க இணையதளத்தை அடிப்படையாகக் கொண்டு தி வயரில் வெளியான பகுப்பாய்வில் தரப்பட்டிருக்கின்றன. கோதுமை, நெல்லுக்கு மட்டுமல்லாமல், அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை விவசாயிகள் பெற்றிருந்தால், அந்த இரண்டு மாதங்களில் அவர்கள் ரூ.1900 கோடி அளவிற்கு கூடுதலாகச் சம்பாதித்திருப்பார்கள்! இதுவொன்றும் சிறிய தொகை அல்ல என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பாதி நாட்டில் சராசரி வருமானம் ஆண்டுக்கு ரூ.20,000 மட்டுமே என்று இருக்கின்ற நிலையில், இதன் மூலம் விவசாயிகள் பெற்றிருக்கக்கூடிய பொருளாதார நன்மையை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.

இந்த 23 பயிர்களே இந்தியாவில் மொத்த பயிர் பரப்பளவில் 80% என்ற அளவிற்கு இருப்பதால், குறைந்தபட்ச ஆதார விலை திறம்படச் செயல்படுத்தப்பட்டால் அல்லது சட்டப்பூர்வமாக்கப்பட்டால் விவசாயம் செய்பவர்களில் பெரும் பகுதியினர் பயனடைவார்கள். அதுவே விவசாயிகளைப் பொறுத்தவரை உண்மையான சுதந்திரமாக இருக்கும். பஞ்சாப் அல்லது பீகார் என்று எங்கே விற்றாலும், அதே விலை – குறைந்தபட்ச ஆதார விலை நிச்சயமாக கிடைக்கும் என்பது தங்களுக்குத் தெரிய வேண்டும் என்ற சுதந்திரத்தைத்தான் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு பெருநிறுவனங்களால் அதிக விலை கொடுக்க முடியும் என்று இப்போது கூறுகிறார்கள்! ஆனால் இந்த அதிக விலை என்பது எதை விட அதிக விலை? எங்களிடம் இருக்கின்ற  ஒரே அளவுகோல் குறைந்தபட்ச ஆதார விலை. பெருநிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் அனைவரும் ‘அதிக விலை’ கொடுக்கத் தயாராக இருப்பார்கள் என்றால், இந்த குறைந்தபட்ச ஆதார விலையை விவசாயிகளுக்கு உறுதிப்படுத்தித் தருவதில் அவர்களுக்கு என்ன சிக்கல் இருக்கிறது? அவர்கள் சொல்வது உண்மையென்றால்,  ‘எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விவசாயிகளுக்கு நாங்கள் அதிக விலையே கொடுக்கப் போகிறோம் என்பதால், குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வ உரிமையாக்கிடுவோம்’ என்று பெருநிறுவனங்கள் அறிவித்து விவசாயிகளுடன் இணைந்து நிற்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை என்பதே பெருநிறுவனங்கள் நேர்மையாக இல்லை என்பதைக் காட்டுகிறது. தங்களால் அதிக விலை கொடுக்க முடியாது என்பதை அவர்கள் நன்கு அறிந்தே இருக்கிறார்கள்.

நாடுமுழுவதும் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்கும் நான்காவது சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தால், இந்த வேளாண் சீர்திருத்தங்கள் அனைத்தும் செயலிழந்து போய் விடும் என்று தொலைக்காட்சியில் தோன்றுகின்ற ‘பெருநிறுவன ஆர்வலர்கள்’ பலரும் கூறி வருகின்றனர்! – அதாவது விவசாயிகளுக்கு அதிக விலை கொடுக்கப் போவதில்லை என்பதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்!

இரண்டாவதாக, குறைந்தபட்ச ஆதார விலையைத் தருவது சில சவால்களை முன்வைக்கிறது. நாட்டில் வேளாண் விளைபொருட்கள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களால் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் சுமார் 7000 மண்டிகள் உள்ளன. ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் என்ற கணக்கில் உண்மையில் நமது நாட்டில் சுமார் 42,000 மண்டிகள் நமக்குத் தேவைப்படுகின்றன. அதுவே நாம் உருவாக்கிட வேண்டிய உள்கட்டமைப்பாக இருக்கிறது. அவ்வாறு உருவாக்குவதன் மூலம் விவசாயிகளால் தங்கள் விளைபொருட்களை மிக எளிதாக விற்க முடியும். மண்டிகளின் நல்ல வலையமைப்பு இருந்தால், குறைந்தபட்ச ஆதார விலையைத் தருவதற்கான வழிமுறை எளிதாகி விடும்.  

அமெரிக்காவில், பல்லாண்டுகள் தடையற்ற சந்தைக்குப் பிறகு, ஒவ்வொரு உணவு டாலரிலும் விவசாயியின் பங்கு 8 செண்டுகள் என்ற அளவில் இருப்பதாக அமெரிக்க வேளாண்மைத் துறை கூறுகிறது. இதன் பொருள் நுகர்வோர் உணவு வாங்குவதற்கு ஒரு டாலர் செலவிடுகிறார் என்றால், அதில்  விவசாயிகளுக்கு கிடைக்கும் பங்கு 8% என்ற அளவில் மட்டுமே இருக்கிறது. இது மிகத் தெளிவாகவே அமெரிக்க விவசாயிகள் இன்றைக்கு ஏன் நெருக்கடியில் இருக்கிறார்கள் என்பதை நமக்குக் காட்டுகிறது.   

இப்போது அதையே இந்தியாவில் உள்ள அமுல் பால் கூட்டுறவு நிறுவனத்துடன் ஒப்பிடுங்கள். ரூ.100க்கு அமுல் பாலை வாங்கும் போது, ​​அதில் எழுபது ரூபாய் விவசாயிகளுக்குச் செல்கிறது என்று அமுல் பால் கூட்டுறவு நிர்வாக இயக்குனர் பதிவு செய்துள்ளார். ஆக இங்கே விவசாயிகளின் பங்கு 70%! எனவே அமுலிடமிருந்து பாடம் கற்றுக் கொண்டு, லாபத்தில் பெரும் பங்கை விவசாயிகள் பெறுவதை உறுதிசெய்கின்ற வகையில் காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள் போன்றவற்றிலும் அதேபோன்ற மாதிரியை நாம் ஏன் பின்பற்றக் கூடாது?

நம்மிடம் உள்ள மாதிரிகள் குறித்து நாம் ஏன் வெட்கப்பட வேண்டும்? நமக்கான மாதிரிகளை நமது சொந்த பலங்களிலிருந்தே உருவாக்குவோம். பெருநிறுவனங்கள் சுரண்டுவதற்காக விவசாயத்தைத் திறந்து விடுவதற்குப் பதிலாக, நாட்டில் இருக்கின்ற கூட்டுறவு வலையமைப்பை விரிவுபடுத்துவோம். காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் எவ்வாறு அதனை விரிவுபடுத்துவது என்று நாம் பரிசோதித்துப் பார்க்கலாம்.  

இறுதியாக ஒரு விஷயம் – விவசாயத்தை சமுதாயத்தின் சுமையாகவே நம்மிடம் இருந்து வருகின்ற பொருளாதார வடிவமைப்பு கருதுகிறது. விவசாயத்திலிருந்து மக்களை அகற்றி அவர்களை நகர்ப்புறங்களுக்கு நகர்த்தாவிட்டால், பொருளாதார வளர்ச்சி என்பது நமக்கு இருக்காது என்பதே அவர்களுடைய வாதம். இது மாற வேண்டும். பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களில், மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கிடையிலும் எட்டு கோடி மக்கள் புலம் பெயர்ந்து சென்றதைப் பார்த்தோம். நகர்ப்புறங்களில் இருந்து மக்களை வெளியேற்றுகின்ற இந்த மாதிரி குறைபாடுள்ள பொருளாதார மாதிரி  என்பதையே அது நமக்குச் சொல்லியது. அந்த மாதிரியை மாற்றியமைக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். வேளாண்மையை நமது பொருளாதார வளர்ச்சிக்கான சக்தியாக மாற்றுவதற்கான சாத்தியமே இன்று நமக்குத் தேவைப்படுகிறது. 

பேட்டி: ரோஹித் குமார்
மூலம்: Farmers’ Protest: Agriculture Expert Devinder Sharma Answers Frequently Asked Questions
தமிழில்: குரு

 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...