ஐ நா மனித உரிமைக் காலக்கெடுவில் காணாமல் போன புலிகளின் காட்டுமிராண்டித்தனங்கள் : ஒரு நினைவுப் பகிரல்


எஸ்.எம்.எம்.பஷீர் 

"சில வேளைகளில்  ஒரு மனிதன் மாத்திரம் காணமல் போவது என்பது முழு உலகுமே குடியழிந்து போவது போலத் தோன்றும்"   அல் பொன்சே தே  லமர்டினே

இற்றைக்கு சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் , அன்றும் ஒரு ஹஜ்ஜுப் பெருநாள் தினம் (4 /07/1990) கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் எனும் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இருபத்தைந்து  வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவம் வெறும் சோக நிகழ்வாக , பழைய சம்பவமாக காலவோட்டத்தில் மறக்கப்பட்டு போனாலும் புலிப் பயங்கரவாதிகள் நடத்திய காட்டு தர்பார் , காட்டுமிராண்டிதனங்கள்  முடிவுக்கு வந்து சுமார் ஆறு ஆண்டுகளும் கழிந்து விட்ட சூழ் நிலையில் அதிலும் குறிப்பாக இன்று ஆயிரக்கணக்கில்  புலிகளின் பினாமிகளும் ஆதரவாளர்களும்   ஜெனீவாவின் முன்றலில் இலங்கை அரசுக் கெதிராக போர்க் கொடி தூக்கி , மகிந்தவையும் , அவரின் கீழ் செயற்பட்ட இராணுவத்தினரையும் "தூக்கி " துவம்சம் செய்து விடலாம் ;  "தமிழ் ஈழத்"  தனி நாட்டை பெற்றுவிடலாம் என்று மனப்பால் குடிக்கும் பின்புலத்தில் அந்த நாட்கள் போல அநேக நாட்கள் எனது நினைவைக் கிளறுகின்றன. 


காலக்கெடு விதிக்கப்பட்டு 2002 ஆம் ஆண்டு தொடங்கி 2011 வரைக்கும் யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்கள் , கைது செய்யப்பட்டு அல்லது சரணடைந்து கொல்லப்பட்ட  அல்லது காணாமல் போனோர் என பல்வேறுபட்ட மனித உரிமை மீறல்களை அறிக்கையிட்டுள்ள ஐ.நா . மனித உரிமை ஆணையகம் கடந்த மூன்று தசாப்தங்களாக புலிகளும் இலங்கை அரசும் செய்த மனித உரிமை மீறல்களையும் , அத்துடன் இந்திய சமாதானப் படை என்ற பெயரில் இந்திய ஆதிக்கப் படைகள் செய்த அநியாயங்கள் என ஒரு பரந்த விரிந்த  விசாரணைகளை புறந்தள்ளி  உள்ளது. நடைமுறையில் அப்படியான அறிக்கை  சாத்தியமில்லை என்று தோன்றினாலும் , யதார்த்தத்தில் கடந்த மூன்று தசாப்தங்களுக்குள் ஐ.நா. மனித உரிமை ஆணையகம் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. காணாமல் போனோர் தொடர்பாக சில விசாரணை- விஜயங்களையும் இலங்கைக்கு மேற் கொண்டுள்ளது, அறிக்கைகளையும்    வெளியிட்டுள்ளது.

மனித உரிமைகள் எனும் அறிக்கைத் தளத்தை தாண்டி யுத்தக் குற்றங்கள் சர்வதேச  விசாரணைகளை பரிந்துரைக்கும் நிலையில் ஒரு கலப்பு நீதிமன்ற பிரேரணை முன் வைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது கொசோவோ போன்ற நாடுகளில் நிறுவப்பட்ட ஒரு கலப்பு மன்று எப்படி கொசோவாவை தனி நாடக்கியதோ அதேபோல  இலங்கையில் ஒரு கலப்பு நீதிமன்று நிறுவப்பட்டால் தமிழ் ஈழம் கிடைத்து விடலாம் என்று புலிகள் புலியை வெளிப்படையாக இல்லாவிடினும் மானசீகமாக விசுவாசிக்கும் பலரும் தமிழ் தேசிய இனவாதிகளும்  நம்புகிறார்கள். அதிலும் தீவிரமாக நம்புபவர்களில் உதரணத்துக்கு வட  மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் , ராயப்பு ஜோசப்    ஆகியோர்.

காலக்கெடு விதித்து மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்ற விசாரணைகள்  மேற்கொள்ளப்பட்டாலும் ஐ.நா  மனித உரிமை ஆணையாளர்  சைட் அல் ஹுசைன் தனது இலங்கை மீதான அறிக்கையினை  ஒன்பது வருடங்களுக்குள் நடந்த மனித உரிமை மீறல்கள் என்று குறிப்பிட்டாலும் உள்நாட்டு யுத்தமும் மனித உரிமை மீறல்களும் சுமார் 26 வருடங்கள் நடந்ததை சுட்டிக் காட்டி உள்ளார். அந்த 26 வருடங்களுக்குள் முஸ்லிம்கள்  மீது புலிகள் நடத்திய நூற்றுக்கணக்கான மிலேச்சத் தாக்குதல்கள் கொடூரங்கள் என்பவற்றின் சிறிய உதாரண சம்பவமாகவே  இந்த சம்பவத்தையும் நினைவு கூற வேண்டி உள்ளது.   

U.L.Dawood
1990 ஆம் ஆண்டு ஹஜ் பெருநாள் உதயமாக முந்திய இரவில் ( 3 ஜூலை 1990 ) ஏறாவூரின் முதல் பட்டதாரியும், அலிகார் மத்திய மகாவித்தியாலயத்தின் அதிபரும் சமூக சேவையாளரும் , இலக்கியவாதியுமான ஆசிரியருமான  உமறு லெப்பை தாவூத் உட்பட ஏறாவூரின் முஸ்லிம் திருமண சட்ட நீதிபதியான எம்.எல். ஏ . கபூர் காஜியார் , அவரின் மாமனார் அலி முஹம்மது ஹாஜியார் ஆகியோர் புலிகளால் இரவோடு இரவாக மின்சாரம் தடைப்பட்டிருந்த அந்த இரவுகளின் ஒன்றான அன்று தங்களின் வீடுகளில்  இருந்து கடத்தப்பட்டார்கள். அதிலும் தாவூத் அதிபர் , சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு கச்சேரியில் கலந்து கொண்டு சமூகம் சார்ந்த விடயங்களில் கேள்வி எழுப்பியவர் என்பதற்காக  சிலரால் புலிகளுக்கு அடையாளம்  காட்டப்பட்டவர். மற்ற இருவரும் இராணுவம் ஊர் புகுந்த பொழுது புலிகள் பற்றி விமர்சனம் செய்தவர்கள் , இராணுவம் ஊரை வீட்டு நகர்ந்து சென்ற பின்னர் , அவர்களின் செயலுக்காக தண்டிக்கப்பட்டவர்கள். ஹஜ் பெருநாளில் "குர்பானி "எனும்  மிருகங்களை அறுத்து பலியிடுவதுபோல் இவர்கள் மூவரும் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். இருளில்  அலிகார் மகா வித்தியாலயத்தின் பின்பக்க வீதியூடாக  இவர்களைக் கடத்திக் கொண்டு சென்றவர்கள்  விசாரித்துக்கொண்டு சென்றதாகவும் , வெட்டிப்போடப் போவதாக சொன்னதாகவும் வீதியோரத்தில் இருளில் கலந்து நின்ற ஒருவர் தெரிவித்தார். பின்னர்தான் கடத்தப்பட்டவர்கள் யார் , கடத்தியவர்கள் என்பன பற்றிய செய்திகள் அடுத்த நாள் காலையில் கதிரவனுடன் போட்டிபோட்டு வெளிச்சத்துக்கு வந்தது. ஆனால் ஊரே இருண்டு போனதாக அங்குள்ள மக்கள் உணர்ந்தார்கள்.


யு.எல் தாவூத் கடத்தப்பட்ட பின்னர் ஆத்திரமுற்ற அவரின் இரண்டு புதல்வர்கள் இராணுவத்தில் இணைந்து புலிகளுக் கெதிராக சகல போர்முனைகளிலும் பங்காற்றினர்.  யு.எல் தாவூத்தின் மனைவி ஜனாபா செய்தூன் தாவூத் எமது காணாமல் போனோர் விபரத் தேடலின் பொழுது  , நா காணாமல் போனோர் தேடுதல் படிவத்தில் சகல விபரங்களையும் உள்ளடக்கி கையொப்பமிட்டார் . அவரும்  2006 ஆம் ஆண்டு காலமானார். அவரின் கையொப்பத்துடன் வழங்கிய படிவத்தின் இரண்டு பக்கங்களை இங்கு பதித்துள்ளேன். புலிகளால் பாதிக்கப்பட்டு  இதுவரை நீதி கிடைக்காத நூற்றுக்கணக்கானோரின்  நினைவுகள் எம்மைச் சுற்றிவர  ஐ நா. மனித உரிமை ஆணையக முன்றலில் அட்டைப்படம் காட்டி  நியாயம் கோரும் புலிகளின் நிர்த்தாட்சன்யமின்மை  கண்டு நெஞ்சு கொதிக்கிறது.   (24/09/2015)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...