ஆரவாரமற்ற ஜெரமி கோபனின் "ஆங்கில வசந்தமும்" ஆர்ப்பாட்டங்களும் (2)


- எஸ்.எம்.எம்.பஷீர்
ஜெரேமி கோபன் இங்கிலாந்து  தொழிற்  கட்சியின் சுக்கானைக் கையில் எடுத்துள்ளார் , அவருக்கு முன்னாள் இருந்த சவால்களில் மிக முக்கியமானது கட்சிக்குள் இருந்த தனக்கு ஆதரவானவர்களை , அதிலும் குறிப்பாக தனக்கு எதிராக உள்ளவர்களையும் உள்வாங்கிக் கொண்டு  தொழிற் கட்சியை 2020 நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு இட்டுச் செல்வது. இந்த பயணம் ஒரு கடல் பயணம் போல தோன்றுகிறது , ஒரு படகின் மாலுமி , அதன் சுக்கானைக் கொண்டு, படகினை (தொழிற் கட்சியினை ) , அதன் ஸ்தாபக இலக்கை (கரையை) நோக்கி கொண்டு சேர்ப்பது என்பது ஒரு பாரிய சவாலாகும். தொழிற் கட்சித் தேர்தகளில் மையவாதிகளாக மாற்ற முற்றிருந்த தொழிற் கட்சி ஜாம்பவான்களான முன்னாள் தொழிற் கட்சி பிரதமர்கள் ( டோனி பிளேயர் , கோர்டன் பிரவுன் ) முன்னாள் தொழிற் கட்சித் தலைவர்கள் ( டேவிட் மில்லிபண்ட்  ,   லோர்ட் . நீல் கின்னேக் )  போன்றோரின் எதிர்வினைக் கருத்துக்களையெல்லாம்   மக்கள் தூக்கி எறிந்து விட்டு  ஜெரமியை  தொழிற் கட்சித் தலைவராக்கி  , அதனால் எதிர்க் கட்சித் தலைவராக்கி பிரித்தானிய நாடாளுமன்றத்தை ஒரு புதிய திசையை நோக்கி நகர்த்தி உள்ளனர்.

படம்: ஜெரேமி கோபனுடன் கட்டுரையாளர் 


பிரித்தானிய பொருளாதாரம் குறித்த கொள்கை நிலைப்பாடுகள் மிக முக்கியமான சவாலாக ஜெரமிக்கு முன்னிருந்தன. அந்த வகையில் தாராளவாதத்துக்கும் நவீன தாராள வாதத்துக்கும் இடையே சிக்கிப் போயிருக்கும் தொழிற் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்க வேண்டிய தேவையை உணர்ந்தே , தொழிற் கட்சித் தலைவருக்கான  தேர்தலின் முன்னரே பிரித்தானியாவின் பிரபல பொருளியலாளர் ரிச்சர்ட் மேர்பி (Richard Murphy)  என்பவர் ,  ஜெரமி கோபனின் இடது சார்ந்த சமூக ஜனநாயக அடிப்படையில் பிரித்தானிய பொருளாதாரத்தை எப்படி அணுக முடியும்  என்பது பற்றி "கோபனின் பொருளாதாரம்  " (Corbyenomics) என்று குறிப்பிடுமளவு ஜெரமியின் பொருளாதாரம் குறித்த ஜெரமி கோபனின் கொள்கைகளை பற்றி சில நூல்களையும் எழுதி உள்ளார்.

தனது பொருளாதாரக் கொள்கைகளை செயற்படுத்துவதில் ரிச்சர்ட் மேர்பியின் கருத்துக்கள் , அணுகு முறைகள் என்பன ஜெரமிக்கு உந்துகோலாக  இருந்துள்ளன. ஜெரமியின் பொருளாதாரக் கொள்கைகள் ரிச்சர்ட் மேர்பியின் ஆய்வுகளுக்கும் அனுசரணை அளித்திருந்தன என்பதும் ரிச்சர்ட் கூட செயற்பாட்டில் ஒரு மக்கள் நலன் சார்ந்த பொருளாதார செயற்பாட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது . பெரும்  நிறுவனங்களிலுள்ள இயக்குனர்களின் கூட்ட ஆலோசனை அறைக்குள் முடங்கிப்  போயிருக்கும் இலாபமீட்டலை மட்டும் கருத்தில் கொண்ட  அதிகாரத்தையும் , பேங்க் ஒப் இங்கிலாந்தின்  (Bank of England) ஏகபோக பொருளாதார திட்டமிடல் அதிகாரத்தையும் மீட்டெடுக்கும்  விதம் பற்றியும் ,  வரி அதிகரிப்பு செய்யும் சாத்தியங்கள்  பற்றியும் ,  வரி ஏய்ப்பாளர்களை தடுப்பது, வசூலிக்கப்படாத வரிகளை அறவிடுதல் பற்றிய சாத்தியங்கள் என்பன பற்றிய ரிச்சர்ட் மேர்பியின் கொள்கைகள் ஜெரமியின் பொருளாதார இலக்குகளுக்குள் அடங்குகின்றன. 

புகையிரத  போக்குவரத்தினை தேசியமயமாக்குவது  , மின்சாரம் , வாயு உட்பட்ட சக்தி வழங்கும் தனியார் சேவையை தேசியமயமாக்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் சமூக சேவைகளில் வருமான இலக்குகளை மட்டுமே அடிப்படையாக் கொண்ட தனியார் பொருளாதார இலாபமீட்டலை கட்டுப்படுத்துவதில்  ஒருபுறம்  செயற்படும் வேளையில் சமூக நல , கல்வி சேவைகளில் உழைக்கும் மக்களின் , உதவிகளில் தங்கி இருக்கும் மக்களின் நலன்களை உறுதி செய்தல்  என்பனவும் ஜெரமியின் பொருளாதார கொள்கைகள் குறித்த பிரகடணங்களாகும் .  

பிரித்தானியாவில் தொழிற் கட்சியின் பொருளாதாரக் கொள்கைளில் அதிலும் குறிப்பாக பொருளாதார நிபுணர் எனப்பட்ட முன்னாள் தொழிற் கட்சி பிரதமரும் சான்சலருமான   கோர்டன் பிரவுன் காலத்துடன் முடிவுக்கு வந்த  தொழிற் கட்சி  தனது பொருளாதாரக் கொள்கையினாலும் தோல்விக்கு வந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. "புதிய தொழிற் கட்சி " (New Labour) என்று  வலதுசாரி பொருளாதாரக் கொள்கைகளையும்  அதிகமாக உள்வாங்கி "பிளயரின் தொழிற் கட்சியாக" (“ Blairite “)  மாறி தடம் தவறிய கட்சியினை மீண்டும் தடமேற்றும் , அதிலும் இடதுசாரி கொள்கை வீச்சுடன் எடுத்துச் செல்லும் பணி என்பது இலகுவானதொன்றல்ல. ஆனாலும் ஜெரமி தனக்கு அனுசரணையாக , தன்னுடன் நீண்ட காலம் கொள்கை ரீதியில் ஒத்துழைத்த  ஜான் மக்டோனாட்ல்ஸ் (John McDonalds) என்பரை  நிதி பொருளாதாரத்துக்கு பொறுப்பான நிழல் அமைச்சராக   ( shadow chancellor ) நியமித்துள்ளார்.  இவர் ஜெரமியைப் போலவே தீவிரமான பிரித்தானிய வெளிநாட்டு யுத்த ஆக்கிரமிப்பு யுத்த நடவடிக்கைகளை மிகவும் காரசாரமாக  கண்டித்து வருபவர்.

ஆனால் இரண்டு வாரங்கள் முடிவதற்குள் ஜெரமியும் அவரின் சகாக்களும்  உள்ளேயும் வெளியேயும் பலவித சவால்களை விமர்சனங்களை முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் . ஒரு புறம் ஜெரமியும் அவரின் ஒரு சில தீவிர இடதுசாரி நண்பர் குழுவும்  , மறுபுறத்தில் தொழிற் கட்சியும் இன்னும் ஐந்தாண்டுகளில் எப்படி ஜெரமியின் தலைமையில் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்பதும் , ஜெரமி தனது தலைமத்துவ வெற்றியை எப்படி அரசின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் வெற்றியாக தனதும் தனது சகாக்களின் கனவுகளுக்கும் , அவர்களின் கனவுகளை தங்களின் நம்பிக்கைகளாக வரித்துக் கொண்ட வாக்காளர்களுக்கும் வழங்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
( முற்றும் )

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...