“ஆரவாரமற்ற ஜெரமி கோபனின் “ஆங்கில வசந்தமும்” ஆர்ப்பாட்டங்களும்

 எஸ்.எம்.எம்.பஷீர்

 “நாங்கள் இங்கே வெறுமனே முதலாளித்துவுத்தை நிர்வகிப்பதற்காக இருக்கவில்லை, மாறாக  சமூகத்தை மாற்றுவதற்கும், அதன்  உயர்ந்த பெறுமானங்களை விவரிக்கவும் இருக்கிறோம் “
( கடின இடதுசாரி என அறியப்பட்ட  முன்னாள் மறைந்த தொழிற் கட்சி எம். பீ டோனி பெண் -தனது நாடாளுமன்ற இருத்தல் குறித்து குறிப்பிட்டது )



  படத்தில் ஜெரேமி கோபனுடன் கட்டுரையாளர்.

அண்மைக்கால உலக அரசியல் வரலாற்றில் மத்திய கிழக்கில் அரபு வசந்தம், மக்கள் எழுச்சியின் விளைவாய் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தியவையாகும். அவ்வரசியல் மாற்றங்கள் பற்றிய விமர்சனங்கள் ஒரு புறமிருக்க, ஐரோப்பாவில் ரொமானியாவில் (1989) ஏற்பட்ட மக்கள் எழுச்சியின் பின்னர் மத்திய கிழக்கில் இன் நூற்றாண்டில் ஏற்பட்ட அரபு வசந்தம் ஏற்படுத்திய மாற்றம் போலவே தீவிர இடதுசாரி அரசியல்வாதியான பிரித்தானிய தொழிற் கட்சியின் நீண்ட கால உறுப்பினரும் அக்கட்சியில் சுமார் 32 வருடங்களாக நாடாளுமன்ற  உறுப்பினராய் இருந்தவருமான ஜெரேமி கோபன் தொழிற் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு சுமார் 60 வீத வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.





தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி பெண்னைப்  போலவே   இடதுசாரி  அரசியல் கொள்கையில் ஜெரேமி கோபன் மிகவும் உறுதியாக விருந்தார். இவரின் வெற்றி முழு ஐரோப்பாவில்  உள்ள இடது சாரி அல்லது இடதுசாரி சார்பு அரசியல் கட்சிகளுக்கு ஒரு உற்சாகமளிக்கும் செய்தியாகவே உள்ளது. தொழிற் கட்சியில்  தன்னுடன் போட்டியிட்ட மூன்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பட்டதாரிகளான முன்னணி உறுப்பினர்களையும் (ஏவத் கோபர், லிஸ்  கெண்டல், அண்டி பெர்ன்ஹாம் ) பின்தள்ளி, அவர்களின் தனக்கு எதிரான பிரச்சாரங்களை முறியடித்து, வெற்றி ஈட்டி உள்ளார். தனது கட்சிக்கு உள்ளேயே, நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் 232 தொழிற் கட்சி உறுப்பினர்களில் வெறுமனே 20 பேரின் ஆதரவுடன் மிகப் பெரிய உட்கட்சி எதிர்ப்பை மிகத் துணிச்சலுடன் எதிர்கொண்டு கட்சித் தலைவர் தேர்தலில்  ஜெரமி பெற்ற வெற்றி மகத்தானது.


இவ்வருடம் மே மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து இதுவரை வெற்றிடமாக இருந்த எதிர்கட்சித் தலைவர் பதவியை ஜெரமி கோபன் இனிமேல் வகிக்கப் போகிறார். இவருக்கு  எதிராக செயற்பட்ட வலதுசாரி சர்வதேச உள்நாட்டு ஊடகங்கள், ஆட்சியில் உள்ள வலதுசாரி அரசாங்கம் உட்பட  உலகின் வலதுசாரி நாடுகள் பல இவரின் வெற்றி கண்டு அச்சமடைந்திருக்கிறார்கள்.   இந்த பாரிய எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து, தனது சொந்தக் கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் எதிர்த்து ஜெரமி வெற்றி பெற முக்கிய காரணம், சென்ற வருடம் தொழிற் கட்சித் தலைவர் தெரிவு சம்பந்தமாக கொண்டு வரப்பட்ட புதிய சட்டமுமாகும். அதன்படி  தொழிற் கட்சி அங்கத்தவர்கள் அல்லாதவர்களும் வாக்களிக்க விண்ணப்பிக்க தங்களை பதிவு செய்து கொள்ள முடியும், அதன் மூலம் வாக்களிக்கும்  உரிமையைப்  பெற முடியும் என்பதாகும். தொழிற் சங்கங்களின்    ஆதரவும், மாற்றம் வேண்டி நிற்கும் இளைஞர்கள்,  இன்றைய ஆட்சியாளர்கள் அரசியல் கட்சிகள் மீது, அவற்றின் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்திருக்கும், பொதுவாகவே, தேர்தல்களை புறக்கணிக்கும், அக்கரையற்றிருக்கும்    வாக்காளர்கள் என பலரின் கவனத்தை இடதுசாரி மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள் மூலம் ஜெரேமி ஈர்த்துக் கொண்டார்.
 
குறிப்பாக அவரின் வெளிநாட்டுக் கொள்கைகளும் அவரின் வெற்றிக்கு முக்கியமான காரணிகளாகும். ஜெரமியின்  வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான பகிரங்கமான வெளிப்பாடுகள் அவரின் இந்த வெற்றிக்கு   உதவியிருக்கிறது. 

அதிலும் ஜெரேமி குறிப்பாக “சட்டபூர்வமான யுத்தங்கள்” என்ற போர்வையில் கடந்த காலங்களில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் அதன் நேச அணிகளும் இராக், லிபியா ஆப்கானிஸ்தான் என தொடராக நடத்திய ஆக்கிரமிப்பு யுத்தங்களை எதிர்த்தவர், இப்பொழுது நிகழ்காலத்தில் நடைபெறும் சிரியா மீதான இராக் மீதான சகல வித தாக்குதல்களையும் கண்டிப்பவர், அதற்கெதிராக போராடி வருபவர். அதிலும் இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்கும் அடாவடிதனங்களுக்கும் எதிராக குரல் கொடுப்பவர், அவர்களின் தார்மீக போராட்டத்துக்கு ஆதரவை தொழிற் கட்சியின் தலைமையையும் மீறி துணிந்து முன் வைப்பவர். ஒருதலைப்பட்ச அணுவாயுத குறைப்பு பற்றிய தனது கொள்கையை வலியுறுத்துபவர். நேட்டோ (NETO) நாடுகளின் கூட்டமைப்பு இராணுவ விஸ்தரிப்பு நடவடிக்கைகளை இன்றைய சர்வதேச அரசியல் சூழலில் அவசியமற்றது என்று கருதுபவர்.

இவரின் யுத்த எதிர்ப்பு, உலக சமாதானம், உலக இடது சாரி இயக்கங்கள் மற்றும், அத்தகைய அரசுகளுடன் கருத்திணக்கம் கொள்பவை என்பன ஒரு நீண்ட வரலாற்றக் கொண்டவை. தென் ஆப்ரிக்காவின் நிறவெறி அரசுக் கெதிரான கொள்கைகளுடன் அவரை அடையாளம் காண முடியும்.


தொடரும்

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...