Sunday, 27 September 2015

இன மீளிணக்கமா மீண்டெழும் இனவாதமா ?எஸ்.எம்.எம்.பஷீர்

"இன்றுள்ள பிரதான கேள்வி என்னவென்றால் : நாட்டில் உள்ள எந்த அரசியல்,  சமூக சக்திகள் இலங்கையின் தேசிய அக்கறையின் பக்கம் உள்ளனர்;  அவர்கள் அதற்காக ஆதரவு வழங்க தயாராக இருக்கிறார்களா ?"
                                                                                                     
                                                                              தமரா குணநாயகம்


இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள்  பேரவையில் இறுதியாக எதிர்வரும் 30ஆம் திகதி  சமர்ப்பிக்கப்பட்ட  வரைவுத்  தீர்மானங்களில் பிரேரிக்கப்பட்ட கலப்பு நீதிமன்றம் தொடர்பில் இறுதித் தீர்மானத்தில் மாற்றங்களைச் செய்யும் செல்வாக்கு செலுத்தும் அமெரிக்க அரசுடன் இலங்கை அரசு சமரசம்  செய்து உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றினை நடைமுறைப்படுத்த முயற்சித்துள்ளது , ஆனாலும் வெளிநாட்டு தலையீடு வேறு வடிவத்தில் இப்பொழுது வருகிறது. ஆனால் அமெரிக்கா உள்நாட்டு பொறிமுறையானது குறித்து இலங்கை அரசிடம் ஏமாந்து விடக் கூடாது என்று முன்னாள் மத போதகர் தரத்தில் பயிற்சி பெற்றவரும் சட்டத்தரணியும் , தமிழ்  நாடாளுமன்ற உறுப்பினருமான  ஏப்ரஹாம் சுமந்திரன் அமெரிக்காவிடமும் பிரித்தானியாவிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். வரைவுத் தீர்மானமே இறுதித் தீர்மானமாக இருக்க வேண்டும் என்றும் அப்படி இல்லாவிட்டால் , தமிழ்  கூட்டமைப்பு விசாரணை செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காது என்றும்  எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.


ஆனால் உள்நாட்டு வெளிநாட்டு கலப்பு நீதிமன்ற விசாரணை என்பது  கைவிடப்பட்டுள்ளது. அதேவேளை  அத்தகையான தீர்மானமும் கூட தேசிய அக்கறையுள்ள சக்திகளால் ஏற்றுக்  கொள்ளக் கூடிய ஒன்றாக இல்லை என்பது வெளிப்படையான உண்மை. ஆனால் அத்தகைய சக்திகளை வேறு விதமாக மீளினக்கத்துக்கு எதிரான , இனவாத சக்திகள் என்று அடையாளப்படுத்தும் அரசியல் கட்சிகளின் வெளிநாட்டு உள்நாட்டு தொண்டர் நிறுவனங்களின் கைங்கரியத்துக்கு மத்தியில் உள்ள மிக முக்கியமான கேள்வி இலங்கையில் மீளிணக்கம் என்பது சுய அதிகார நலன்களை அடிப்படையாகக் கொண்ட மேற்குலக நாடுகளை  உள்நாட்டு இறைமையின் மீது தலையிட அனுமதிப்பதும் ; யுத்தக் குற்ற விசாரணை என்ற போர்வையில் நீதி வழங்கும் இறைமை அதிகாரத்தை  அவர்களுக்கு பகிர்ந்தளிப்பதுமாகும் என்று கருதப்படுகிறது.   யுத்தக் குற்ற விசாரணையையை நடத்துவது மட்டுமல்ல பல சர்வதேச சட்டங்களை இலங்கை அரசு தனது உள்நாட்டு சட்டத்தில் உறுதி செய்யவேண்டும் என்பதும்   வரைவுத் தீர்மானத்தில் உள்ளது. அவை எதிர்காலம் குறித்தவை , நாடாளுமன்ற சட்டவாக்க அதிகாரத்திற்குட்பட்டவை. !  ஆனால் இலங்கைக்கு எதிராக மனித உரிமைப் பேரவையில் தீர்மானங்களை அடுத்தடுத்து கொண்டுவந்த அமெரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டங்களை (ரோம் சட்டங்களை ) உறுதி செய்யவில்லை என்ற முரண்நகையை இங்கு உற்று நோக்க வேண்டும். அமெரிக்காவின் செல்லபிள்ளையான யுத்தக் குற்றங்கள் புரிந்துள்ளது என்று நிரூபிக்கப்பட்ட இஸ்ரவேல் கூட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டங்களை (ரோம் சட்டங்களை-Rome Statute  ) உறுதி செய்யவில்லை.


ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட  வரைவுத் தீர்மானத்தை , அதன் வரைவு வடிவிலே  அமெரிக்கா ஏகாதிபத்திய விசுவாசிகளான  தமிழ் தேசியக் கூட்டமைப்பு , குறிப்பாக வட மாகாண முதலமைச்சர் , வட மாகாண எதிர்கட்சித் தலைவர்  , முஸ்லிம்  காங்கிரஸ்  என்பன  வரவேற்று ஆதரித்துள்ளனர். அதேவேளை இலங்கை சமசமாஜக் கட்சி  பொதுச் செயலாளர் திஸ்ஸ வித்தாரண "தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் வெளி தலையீடுகளை அனுமதிக்காத வகையில் இலங்கையர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமென"  கூறியுள்ளார். மேலும் அவரின் சாட்சிகள் பாதுகாப்பு பற்றிய விமர்சனங்கள் ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் அடிப்படை விசாரணை முறைமையை கேள்விக்கு உட்படுத்தி உள்ளார். மிக நுணுக்கமாக நோக்குமிடத்து சாட்சியங்கள் பற்றிய அணுகுமுறை பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறது.இலங்கையில் OHCHR நடத்தும் நுண்ணாய்வு ஆய்வுக்குரிய விதிமுறைகள் சாட்சி திரட்டலில்  குற்றவியல் செயற்பாடுகளின் உண்மைகளையும் அவர் ஏற்பட்ட சந்தர்ப்பங்களையும் உறுதிப்படுத்தி அவற்றுக்கான பொறுப்புக் கூறல் என்பது குற்றவியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டினை அனுசரிப்பதாக இல்லை .

"ஐக்கிய நாடுகளின் உண்மைகளைக் கண்டறிய  நியமிக்கப்பட்ட  அமைப்புக்களின் நடை முறைகளிற்கு முரண்பாடற்ற வகையில் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்ற வகையில் " நியாயப்படுத்தக் கூடிய வகையில் நம்பக் கூடியது " என்ற தரத்தினைக் கொண்ட   ஆதாரங்களாக  இருக்க வேண்டும் என்பதே   "குற்றவியல் தகவல்களின் சாயல் இருப்பின் அவை நியாயப்படுத்தக் கூடிய வகையிலான நம்பக்கூடிய ஆதாரங்கள் எனக் கருதலாம்"  என்று ஐ.நா ஆவணம் குறிப்பிடுகிறது. இங்கு குற்றங்கள் என்பவை குறித்த குற்றவியல் அடிப்படைக் கோட்பாடான " நியாயமான சந்தேகங்களுக்கு  அப்பால் குற்றங்கள்" நிரூபிக்கப்படல்  வேண்டும் என்பது எந்த விசாரணைகளையும் சவாலுக்கு உட்படுத்தும் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. கென்யாவின் இன்றைய ஜனாதிபதி கென்யாட்டா மீதான சர்வதேச  குற்றவியல் நீதிமன்ற வழக்கில் மேலெழுந்த ஒரு சட்டச் சவாலாகும். அவரின் விடுதலையும் அப்படியே தீர்மானிக்கப்பட்டது.        


வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராஜாவும்  முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு சற்றும்  சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்துள்ளார். உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை இல்லை என்றும்  சர்வதேச நீதிபதிகள், வழக்குத் தொடடுப்பவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய ஒரு கலப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்துவதற்கு  தமிழ் தலைமைகள்  அழுத்தம் கொடுக்க வேண்டும். என்று கோரி உள்ளார். இவர்  சிங்கள அரசு செய்த இனவழிப்புடன் தமிழ் பெண்களை கருத்தரிப்பதை தடுத்து ஈ.பீ தீ யும் இன அழிப்புக்  குற்றம் புரிந்தவர்கள் என்று வட மாகாண சபையில் விக்னேஸ்வரன்  தீர்மானம் கொண்டு வந்த பொழுது அதனை எவ்வித திருத்தமுமின்றி ஆமோதித்தவர். மேலும் இப்போதைய ஐ .நா விசாரணைகளும் ஈ.பீ தீ யினரையும் தமிழர்களுக் கெதிராக மனித உரிமை மீறலுக்கு துணைபோன துணைப்படையினர் என்று சுட்டிக் காட்டியிருக்கின்றனர். இவர்கள்  இலங்கை அரசுடன் சேர்ந்து கொண்டு செய்ததாக சொல்லப்படும் மனித உரிமை மீறல்களுக்கு வெளிநாட்டு விசாரணையில்தான் தமிழருக்கு நீதி கிடைக்கும் என்று  விளக்கம் கூறுவது வேடிக்கையானது.  விவஸ்தையற்றது. 

2002 தொடக்கம் 2011 வரையான காலப் பகுதியில் புலிகளால் முஸ்லிம்களுக்கு இழக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தவிதமான சமர்ப்பனங்களையும்  ஐ. நா நா. மனித உரிமை ஆணையகத்துக்கு மேற்கொண்டதாக தெரியவில்லை. ஆனால்  பொதுவாக பௌத்த இனவாதிகள்  முஸ்லிம்கள் மீது தெற்கில் மேற்கொண்ட செயற்பாடுகளை முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கையிட்டது என்பதும் , அந்த அறிக்கையில் பொத்துவில் பிரதேசத்தில் உள்ள  சியாரத்தைக் கொண்ட பள்ளிவாசல் ஒன்றை முஸ்லிம் தீவிரவாதிகள் உடைத்ததாகவும் அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். புலிகள் நடத்திய மூதூர் சுற்றி வளைப்பும் , அதனைத் தொடர்ந்து கடத்திக் கொல்லப்பட்ட முஸ்லிம்களும் அதையொத்த வாழைச் சேனை  சம்பவங்களும் ஐ.ந அறிக்கையில் காணப்படவில்லை. அதிலும் புலிகளின் மூதூர் சுற்றிவளைப்பு மட்டும் ஒரு சிறிய   சாதாரண சம்பவமாக ஐ.நா  அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக , முஸ்லிம் காங்கிரஸ் கற்றறிந்த ஆணைக் குழுவிற்கு சென்று சாட்சியமளிக்கவில்லை. கற்றறிந்த ஆணைகுழு விதித்திருந்த  காலக்கெடுவிற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு  நிகழ்ந்த  அநீதிகளை ஆணைக் குழு கவனத்தில் கொள்ளவில்லை என்பதால் தாங்கள் அந்த விசாரணையில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஒரு  சால்ஜாப்பை முஸ்லிம் காங்கிரஸ் முன் வைத்தனர். ஆனால் இப்பொழுது ஐ.நா வரைவுத் தீர்மானத்தை பாராட்டி  மிகுந்த "கரிசனையுடன் " அறிக்கை விடுத்துள்ளனர். 

27/09/2015No comments:

Post a Comment

For the first time, three Hindus win from unreserved constituencies in Pakistan elections-Newsinasia

Karachi, July 28 (Geo TV): For the first time in Pakistan’s history, three minority candidates were elected on general seats in the Nat...