இனப் பிரச்சினைக்கு மைத்திரி – ரணில் அரசின் தீர்வுத் திட்டம் என்ன?

செப்ரெம்பர் 25, 2015All community
மிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க அரசு என்ன வகையான தீர்வு காணப் போகின்றது, எப்பொழுது காணப் போகின்றது, என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களிலும், தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் எழுந்திருக்கின்றது.


அந்தக் கேள்வி எழுவதில் ஒரு நியாயப்பாடு இருக்கின்றது. அதாவது இவ்வருடம் ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, எவ்வித நிபந்தனையும் இல்லாமல் பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்திருந்தது. அவரும் வெற்றி பெற்றார்.

அதன் பின்னர் சில வைபவங்களில் பேசும் பொழுது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ‘ஜனாதிபதி மீது எமக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் எப்படியும் 2016இல் இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பார்’ எனப் பேசியிருந்தார்.

அதன் பின்னர் ஓகஸ்ட் 17ஆம் திகதி பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரும் பின்னரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமையில் அமையும் அரசாங்கத்தைத் தமது கூட்டமைப்பு ஆதரிக்கும் எனவும் திரு.சம்பந்தன் கூறியிருந்தார். அத்துடன், இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பதற்கு ஏதுவாக தம்மை ஏகப் பெரும்பான்மையாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யுமாறும் தமிழ் பேசும் பொதுமக்களிடம் கோரியிருந்தார். மக்களும் அவ்வாறே கூட்டமைப்பின் சார்பில் 16 உறுப்பினர்களைப் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்திருந்தனர். அதுமட்டுமல்லாது, ஜனநாயக விNhரதமாக என்றாலும், திரு.சம்பந்தன் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், ‘இனப்பிரச்சினைத் தீர்வு சம்பந்தமாக ஜனாதிபதியுடன் பேசியுள்ளீர்களா?’ என சில ஊடகவியலாளர்கள் சம்பந்தனிடம் கேட்டதிற்கு, ‘அது பற்றி இப்பொழுது சொல்ல மாட்டோம். தேர்தல் முடிந்த பின்னரே அதுபற்றிச் சொல்லுவோம்’ எனவும் பொடிவைத்துச் சொல்லியிருந்தார். அந்தப் பதிலின் அர்த்தம் என்னவெனில், ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு இனப் பிரச்சினைத் தீர்வு சம்பந்தமாக ஏதோ பாரதூரமாகப் பேசியிருப்பது போலவும், அவர்கள் கண்ட இணக்கப்பாடு குறித்து தேர்தலுக்கு முன்னர் தெரிவித்தால், மகிந்த ராஜபக்ச தலைமையிலான ‘சிங்களப் பேரினவாதிகள்’ அதை வைத்துப் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்று விடுவார்கள் என்ற காரணத்துக்காகவே தாங்கள் அதை வெளியிடவில்லை என்ற அர்த்தத்தைத் தமிழ் பேசும் மக்களுக்கு அளிப்பதுதான்.

உண்மையும் அதுதான். இம்முறை பொதுத் தேர்தலின் போது கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு முன்னால் சென்று சொல்வதற்கு எதுவும் இல்லாமல் இருந்தது. அதுமாத்திரமின்றி, கூட்டமைப்பு மீது முன்னெப்போதையும் இல்லாத அளவுக்கு மக்கள் நம்பிக்கையும் இழந்திருந்தனர். அது கூட்டமைப்புத் தலைமைக்கும் தெரிந்திருந்தது. கருத்துக் கணிப்புகளின்படி, யாழ்ப்பாண மாவட்டத்திற்கென உள்ள 7 உறுப்பினர்களில் கூட்டமைப்புக்கு ஆக 3 தான் கிடைக்கும் என்ற நிலையும் இருந்தது. ஆனால் தேர்தல் முடிவு அப்படி அமையவில்லை. அப்படியானால் இடையில் என்ன நடந்தது?

கூட்டமைப்பினர் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காகப் பொய்யான ஒரு கருத்தை உருவாக்கினார்கள். அதாவது, ‘ஜனாதிபதித் தேர்தலில் நாம் மைத்திரியை ஆதரித்ததால்தான் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அதுபோல, நாம் போட்டியிடாத வடக்கு கிழக்கிற்கு வெளியே ஐக்கிய தேசிய முன்னணியை ஆதரித்து வெற்றி பெற வைத்து, நாமும் அதிக உறுப்பினர்களைப் பாராளுமன்றம் அனுப்பினால் நிச்சயம் இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காணலாம்’ என்பதே கூட்டமைப்பின் இம்முறைத் தேர்தல் பிரச்சாரமாக இருந்தது.
அவர்களது பிரச்சாரம் ஓரளவு மக்களிடமும் எடுபட்டது. அதனால்தான் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்குக் கிடைக்க வேண்டிய 2 உறுப்பினர்களில் ஒன்று குறைந்தது. அதேபோல, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குக் கிடைக்க இருந்த ஒரு ஆசனமும் இல்லாமல் போனது.

சரி, இப்பொழுது கூட்டமைப்பு விரும்பியவர் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். அவர்களுக்குப் பிடித்தமான ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்துள்ளது. எனவே இப்பொழுது தன்னும் இனப் பிரச்சினைத் தீர்வு சம்பந்தமாக ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு என்ன பேசியது என்பதை சம்பந்தன் வெளிப்படுத்தலாம் தானே? ஏன் இன்னமும் மௌனம் காக்கிறார்.

முன்னைய மகிந்த அரசு இனப் பிரச்சினைக்குத் தீர்வாக மாகாணசபை முறைமையைத்தான் ஏற்றுச் செயல்பட்டது. ஆனால் அது உரிய தீர்வல்ல என்பதுதான் கூட்டமைப்பின் அப்போதைய நிலைப்பாடு. அதனால்தான் புலிகள் இருந்த காலத்தில் கூட்டமைப்பு மாகாணசபைத் தேர்தல்களில் பங்குபற்றவில்லை. புலிகள் அழிந்த பின்னர் கூட்டமைப்பு மாகாணசபைத் தேர்தலில் முதன்முறையாகப் பங்குபற்றியபோது, அதற்குச் சொன்ன காரணம், ‘இனப் பிரச்சினைக்கு மாகாணசபை முறைமை தீர்வல்ல என்ற போதிலும், துரோகிகள் மாகாணசபையைக் கைப்பற்றக்கூடாது என்பதற்காகவே போட்டியிடுகிறோம்’ என்பதாகும்.
எனவே, கூட்டமைப்பின் இனப் பிரச்சினைக்கான தீர்வு, அவர்களுடைய பழைய சமஸ்டிக் கொள்கைதான். (வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு என்ன நடந்தது என்பது அவர்களுக்கே மறந்துபோன விடயம்) அதைப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்புத் தலைவர்கள் சிலர் வலியுறுத்திக் கூறியுமுள்ளனர்.

ஆனால், இதுபற்றி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் பிரஸ்தாபித்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ‘எந்தக் காரணம் கொண்டும் தமிழ் மக்களுக்கு சமஸ்டி வழங்கப்படமாட்டாது. அதுபற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடாத்தப்படமாட்டாது’ எனத் தெட்டத் தெளிவாகக் கூறினார். அவரது இந்தக் கூற்றைத் தமிழ் மக்கள் சரியாகக் கவனத்தில் எடுத்திருந்தால், கூட்டமைப்புக்கோ, ஐக்கிய தேசிய முன்னணிக்கோ வாக்களித்திருக்கமாட்டார்கள்.
அதுமட்டுமின்றி, பாராளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் இராணுவ வைபவம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரி, ‘இலங்கைக்கு ஒற்றையாட்சி முறையே சிறந்தது. அப்பொழுதுதான் நாடு ஸ்திரமாகவும் ஐக்கியமாகவும் இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார். இதன்படி, ரணிலினதும், மைத்திரியினதும் கருத்துக்களை வைத்துப் பார்த்தால், தமிழ் பேசும் மக்களுக்கு இன்றைய அரசும் அதிகாரப் பகிர்வை வழங்கப் போவதில்லை என்ற உண்மை புலனாகும். அதாவது தமிழ் மக்கள் மீண்டுமொருமுறை ஏமாந்து போயிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இன்னும் சொல்லப் போனால், மகிந்த ஆட்சியில் இருந்திருந்தால், அவரை மிரட்டுவதற்காகத் தன்னும் இந்தியாவும், மேற்கு நாடுகளும் தமிழ் மக்களுக்கு ஏதாவது வழங்கும்படி அவரை நிர்ப்பந்தித்திருப்பார்கள். இப்பொழுது அவர்களுக்குத் தேவையானவர்கள் இலங்கையில் ஆட்சிக்கு வந்துவிட்டதால், அவர்கள் அந்த ஆட்சியுடன் நட்புறவை வலுப்படுத்தித் தங்கள் பூகோள நலன்களைப் பாதுகாத்துக் கொள்வார்களே தவிர, தமிழ் மக்களின் பிரச்சினையைக் கவனத்தில் எடுக்கமாட்டார்கள். அதன் ஒரு வெளிப்பாடுதான், மகிந்த ஆட்சியின்போது, இலங்கைக்கு எதிராக கடும் நிலைப்பாடு எடுத்து ஐ.நாவின் ஜெனிவா கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றிய அமெரிக்கா தனது போக்கைத் தளர்த்தியமை.
இந்தச் சூழ்நிலையில், தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன விதமான தீர்வை அரசிடமிருந்து பெறப் போகின்றது, எப்படிப் பெறப் போகின்றது என்பதைப் பகிரங்கப்படுத்த வேண்டும். இனியும் அது ‘இரகசியமான விடயம்’ எனக் கூட்டமைப்புத் தலைவர்கள் மக்களை ஏமாற்றி அவர்களை முட்டாள்களாக்கக்கூடாது.
மறுபக்கத்தில், தமிழ் மக்களின் பிரச்சினை சம்பந்தமாக ஜனாதிபதியிடமும், தற்போதைய பிரதமர் ரணிலிடமும் தேர்தலுக்கு முன்னர் பிரஸ்தாபித்தபோது, ‘தேர்தல் முடிந்த பின்னர் அது பற்றிக் கவனம் செலுத்தப்படும்’ எனக் கூறியிருந்தனர். இப்பொழுது உடனடியாக அவர்கள் அந்தக் கவனத்தைச் செலுத்த வேண்டும். இனியும் ஒத்திப்போட முடியாது. ஏனெனில் சுதந்திரத்துக்குப் பின்னர் கடந்த 67 வருடங்களாக இனப் பிரச்சினைதான் இலங்கையின் தலையாய பிரச்சினையாக, கோரமான உள்நாட்டு யுத்தம் வரை செல்லும் பிரச்சினையாக இருந்திருக்கிறது.

எனவே, இனப் பிரச்சினைக்கு மைத்திரி – ரணில் அரசு என்ன தீர்வைக் காணப் போகின்றது என்பதை அவர்களும் விரைவில் வெளிப்படுத்த வேண்டும். இல்லாவிடின் மீண்டும் இன அடிப்படையிலான மோதல்கள் நிச்சயம் நாட்டில் தலைதூக்கும்.
ஏனெனில், தமிழ் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்தது, மலையக இந்திய வம்சாவழி மக்களின் வாக்குரிமையையும் பிரஜாவுரிமையையும் பறித்தது, பண்டாரநாயக்க – செல்வநாயகம் உடன்படிக்கையையும் சந்திரிக அரசு கொண்டு வந்த தீர்வுத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவிடாமல் தடுத்தது, நாட்டில் தமிழ் மக்களுக்கெதிராக பல தடவைகள் மோசமான இன வன்செயல்களை முன்னின்று நடாத்தியது, இறுதியாக இனப் பிரச்சினையை யுத்தமாக மாற்றியது என, தொடர்ச்சியான பேரினவாத நடவடிக்கைகளை மேற்கொண்ட ஐக்கியக் கட்சிதான் இன்று அதிகாரத்தில் இருக்கின்றது. அதுமட்டுமல்ல, அந்த அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ‘சமஸ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை’ எனத் திட்டவட்டமாகச் சொல்லியும் விட்டார்.

இந்த நிலையில், மைத்திரி – ரணில் அரசு இனப் பிரச்சினைத் தீர்வுக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறது. அதை எப்பொழுது, என்ன வடிவத்தில் நிறைவேற்றப் போகின்றது? என்ற கேள்விகள் எழுவது இயல்பானது. அரச தரப்பும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மக்களை ஏமாற்றுவதற்கு தொடர்ந்தும்; ‘கண்ணா மூச்சி விளையாட்டு’ விளையாடாமல், தமது நிலைப்பாடுகளை காலம் தாழ்த்தது நாட்டு மக்களுக்கு வெளியிட வேண்டும். அதுவே இன்றைய உடனடித் தேவை.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...