சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை வலதுசாரிகளின் பிடியில் சிக்கியுள்ளது! – அரசியல் நிருபர்



லங்கையில் இவ்வருடம் ஜனவரி 08ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஆரம்பித்த அரசியல் சதி சூழ்ச்சி நடவடிக்கைகள், அண்மையில் ஓகஸ்ட் 17ம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் அரங்கேற்றப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளில் கடந்த காலங்கள் போல ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க) பெரும் பங்கு எதனையும் வகிக்கவில்லை. அந்தக் கட்சிக்கு பதிலாக பண்டாரநாயக்க – சிறீமாவோ தம்பதிகளின் புதல்வியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக குமாரதுங்கவே நாடகத்தின் பிரதான கதாபாத்திரமாக இருந்து விடயங்களை நடாத்தி முடித்துள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே இலங்கை அரசியல் வரலாறு காணாத துரோக செயல்பாடுகள் நிகழ்த்தப்பட்டு வந்துள்ளன. உண்மையில் கழுத்தறுப்புகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும், கட்சி தாவல்களுக்கும் பெயர்போன இந்திய அரசியல்வாதிகளே மூக்கில் விரலை வைத்து அதிசயப்படும் அளவுக்கு, இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் சந்திரிகாவினதும் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.


இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என்ற தேவை மூன்று தரப்புகளுக்கு இருந்தது. அதில் ஒரு தரப்பு சர்வதேச – பிராந்திய வல்லாதிக்க சக்திகள் (மேற்கு மற்றும் இந்தியா);. இரண்டாவது தரப்பு சர்வதேச வல்லாதிக்க சக்திகளுக்கு காலம்காலமாக உள்நாட்டு தரகர்களாக செயற்பட்டு வந்த தரகு முதலாளித்துவ பிற்போக்கு ஐ.தே.க. மூன்றாவது தரப்பு மகிந்த ராஜபக்ச ‘குடும்பத்திடமிருந்து’ சிறீலங்கா சுதந்திர கட்சியினதும் (சிறீ.ல.சு.க), நாட்டினதும் அதிகாரத்தை மீண்டும் தனது பண்டாரநாயக்க குடும்பத்தின் கைகளுக்கு எடுக்க வேண்டும் என அவா கொண்டிருந்த சந்திரிக.
இதை சற்று விரிவாக பார்க்கலாம்.
மேற்கத்தைய வல்லாதிக்க சக்திகளுக்கு இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் அவசியமாக இருந்தது. காரணம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இடதுசாரிகளும் உள்ளடங்கியிருந்த அரசு, அடிப்படையில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை கொண்டிருந்தது. அதேவேளையில், சீனா, ரஸ்யா, ஈரான், வியட்நாம், கியூபா, வெனிசூலா என மேற்கத்தைய எதிர்ப்பு நாடுகளுடன் அது நெருக்கமான நட்புறவையும் வளர்த்து வந்தது. அதுமட்டுமின்றி, சர்வதேச வல்லாதிக்க சக்திகளினால் பாலூட்டி வளர்க்கப்பட்டு வந்த பாசிச புலிகள் இயக்கத்தையும் அது ஈவு இரக்கமில்லாமல் நிர்மூலம் செய்தது.
மகிந்த அரசின் இந்த நடவடிக்கைகள் உலக ஏகாதிபத்திய சக்திகளின் சீனாவை சுற்றி வளைத்து ஆசியாவை ஆதிக்கம் செய்யும் திட்டத்துக்கு பாதகமாக இருந்தன. அதனால் அவர்கள் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகிறது, ஊடக சுதந்திரம் நசுக்கப்படுகிறது, குடும்ப ஆட்சி நடைபெறுகிறது, ஊழல் மற்றும் அதிகாரத் துஸ்பிரயோகம் கொடிகட்டிப் பறக்கிறது, போர்க் குற்றம் இழைக்கப்பட்டுள்ளது என முன்னைய ஆட்சியின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தின.
அந்த சக்திகளின் குற்றச்சாட்டுகளை காலம் காலமாக ஏகாதிபத்தியத்துக்கு சேவகம் செய்து வரும் ஐ.தே.கவும் கிளிப்பிள்ளை போலத் திருப்பிச் சொன்னது. இருந்தாலும் முன்னைய காலங்கள் போல ஐ.தே.கவால் இலங்கை மக்களுக்கு ஒரு மாற்றுத் தலைமையைக் கொடுக்க முடியவில்லை. அதற்குக் காரணம், ஐ.தே.க. விதேசிய சார்பு கட்சி, புலிகளுடன் தொடர்புள்ள கட்சி, சரியான தலைமைத்துவம் இல்லாத, உள் முரண்பாடுகளால் சிதைந்து போன ஒரு கட்சி, என்ற பிம்பம் நாட்டு மக்களிடையே ஏற்பட்டிருந்தது. அதனால் அது அடுத்து அடுத்து பல தேர்தல்களில் தோல்வி அடைந்து வந்தது. அந்தக் கட்சிக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்ற அளவுக்கு சிதைந்து போயிருந்தது.
ஒரு மாற்று ஏற்பாடாக, 2005இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது இந்த தேச விரோத சக்திகள் புலிகளுக்கு எதிரான போரின் ஒரு வெற்றிப் பங்காளியான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகவை மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நிறுத்திப் பார்த்தன. ஆனால் அவரால் அவர்களுடைய நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.
இந்தச் சூழ்நிலையில்தான், அவர்கள் புதிய வியூகம் ஒன்றை முற்போக்கு சக்திகளுக்கு எதிராக வகுத்தனர். அதாவது வழமை போல ஐ.N.த.கவை மட்டும் நம்பியிருக்காது, சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள ஒரு பிரிவை (வலதுசாரி அணியினர்) உடைத்து எடுப்பதுடன், ஜே.வி.பி, ஜாதிக ஹெல உருமய போன்ற அரசுக்கெதிரான சக்திகளையும், மகிந்த அரசில் அதிருப்தி கொண்டிருந்த சிறுபான்மை இனக் கட்சிகளையும், அரச சார்பற்ற நிறுவனங்களையும் ஓரணியில் திரட்டுவதன் மூலம், முற்போக்கு சக்திகள் சார்பான ஜனாதிபதி வேட்பாளரைத் தோற்கடிப்பதே அத்திட்டம்.
இந்த இடத்தில்தான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக குமாரதுங்கவின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 2005இல் தவிர்க்க முடியாத சூழலில் (குடும்ப அரசியல் வாரிசு இல்லாத நிலைமையில்) சந்திரிக சிறீ.ல.சு.கவின் தலைமையை மகிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. (அச்சொட்டாக இவ்வகையான ஒரு சூழலில்தான் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஐ.தே.கவின் தலைமைப் பதவியை ஆர்.பிரேமதாசவிடம் ஒப்படைத்தார் என்பதும் நினைவு கூரத்தக்கது).
கட்சித் தலைமையை மகிந்தவிடம் ஒப்படைத்த சந்திரிக சும்மா இருக்கவில்லை. அவர் அடுத்த 9 வருடங்களாக இலங்கையில் இருந்ததை விட உலகம் சுற்றியதுதான் அதிகம். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிளின்டனின் பெயரில் செயற்படும் ~கிளின்டன் நிறுவனம்| என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்த சந்திரிக, அதன் கூட்டங்களுக்கு அடிக்கடி வெளிநாடு போய் வந்தார். அதுபோல வேறு சில சர்வதேசக் கூட்டங்களுக்கும் போய் வந்தார். அவரது பிள்ளைகள் இருவரும் லண்டனில் வசிப்பதால், அங்கும் அடிக்கடி சென்று தங்கினார். (சந்திரிகவுக்கு சொந்தமாக லண்டனில் ஒரு வீடு உண்டு என்ற கதையும் உண்டு) இந்தக் காலகட்டத்தில்தான், சந்திரிகவை சூத்திரதாரியாக வைத்து இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சர்வதேச சக்திகள் திட்டமிட்டன என நம்பப்படுகிறது. (அவர்களது இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அனுகூலமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நடவடிக்கைகளும் அமைந்துவிட்டன என்பது இன்னொரு விடயம்)
சந்திரிகவே தனது அரசிலும், மகிந்தவின் அரசிலும் சிரேஸ்ட அமைச்சராகவும், சிறீ.ல.சு.கவின் பொதுச் செயலாளராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேனவை உடைத்தெடுத்து எதிரணியின் பொது ஜனாதிபதி வேட்பாளராகக் கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தவர். இப்படியான ஒரு விடயத்தை ரணிலால் சாதித்திருக்கவே முடியாது. இந்த சூழ்ச்சித் திட்டத்தின் மூலமே அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.
ஆனால் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த மகிந்தவுக்கும். மைத்திரிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறுமனே நான்கரை இலட்சம்தான். (இப்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் அந்த வித்தியாசம் 3 இலட்சம் வாக்குகளாகக் குறைவடைந்து இருக்கிறது) மைத்திரி மேலதிகமாகப் பெற்ற வாக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பாலும், ஜே.வி.பியினாலும், முஸ்லீம் காங்கிரசாலும் கிடைக்கப் பெற்றவை. எனவே நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால், அந்த வாக்குகள் பிரிந்துவிடும் சூழலில் ஐ.தே.க வெற்றி பெற முடியாது என்ற நிலை தெளிவாக இருந்தது.
அத்துடன், ஜனாதிபதி மைத்திரி சட்டவிரோதமான முறையில் அமைத்த ரணில் தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணையும் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் ஒரு சூழல் உருவாகி இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் எதிரணியினர் தேர்தலுக்குத் தயாராக முடியாத முறையில் நாடாளுமன்றம் அவசரம் அவசரமாகக் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டது. இந்த உண்மையை தேர்தல் அறிவித்த பின்னர் மைத்திரிபால நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, மகிந்த தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்று கண்ட மைத்திரியும் சந்திரிகவும், மகிந்தவுக்கு வேட்பு மனு அளிக்க முடியாது எனப் பிடிவாதம் செய்தனர். ஆனால் சிறீ.ல.சு.கவிலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் மகிந்தவுக்கு பெரும்பான்மை ஆதரவு இருந்ததால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது. எனவே அவர்கள் இருவரும் தேர்தலில் தமது சொந்தக் கட்சியைத் தோற்கடிப்பதற்காக வேறு வகையான, கீழ்த்தரமான நடவடிக்கைகளில் இறங்கினர்.
மைத்திரி கட்சியின் தலைவராக இருந்துகொண்டு, தேர்தலில் தான் நடுநிலைமை வகிக்கப் போவதாகச் சொன்னார். இதே அடிப்படைத் தவறு. பின்னர் தான் சொன்ன மாதிரியும் கூட நடந்து கொள்ளவில்லை. மகிந்த ஒருபோதும் வெற்றி பெற மாட்டார் என ஒரு அறிக்கை வெளியிட்டு பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தினார். அப்படி இருந்தும் மகிந்த தலைமையிலான அணி வெற்றி பெறுவது உறுதி என்று கண்ட பின்னர், ~மகிந்த அணி வென்றாலும், மகி;ந்தவைப் பிரதமராக்க மாட்டேன்| என இன்னொரு அறிக்கை வெளியிட்டு மேலும் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றார்.
மறுபக்கத்தில், தனது தந்தையும் தாயுமான பண்டாரநாயக்கவுக்கும் அவரது மனைவி சிறீமாவோவுக்கும் அபகீர்த்தியும், துரோகமும் ஏற்படுத்தும் வகையில், சிறீ.ல.சு.கவின் கை சின்னத்துக்கோ, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும், வேறு எந்த மிருகத்துக்கென்றாலும் (அதாவது ஐ.தே.க சின்னமான யானைக்கு) வாக்களிக்குமாறும் சந்திரிக பகிரங்கமாக நாட்டு மக்களுக்கு அறைகூவல் விட்டார். சந்திரிகவின் இப்படியான கேடுகெட்ட துரோகம் இதற்கு முன்னர் இலங்கையில் எந்த ஒரு தலைவராலும் நிகழ்த்தப்படவில்லை.
மைத்திரியும் சந்திரிகவும் இந்த நடவடிக்கைகளுடன் மட்டும் திருப்தி அடைந்துவிடவில்லை. மைத்திரி கட்சித் தலைவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்சியினதும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் செயலாளர்களை அடாவடித்தனமாகப் பதவி நீக்கம் செய்தார். கட்சியின் செயற்குழு, மத்திய குழுவிலிருந்தும் கூட பலரை நீக்கினார். அதுவும் தேர்தல் முடிந்து, நீதிமன்றங்கள் மாதக் கடைசி வரை இயங்க முடியாத, சூழ்நிலையில், தனது தீர்மானத்தை எவரும் நீதிமன்றப் படி ஏறி ஆட்சேபிக்காத வகையில் இந்த நடவடிக்கைகளை சூழ்ச்சிகரமாக மேற்கொண்டார்.
அதுமாத்திரமல்ல, தேர்தலுக்கு முன்னர் செயலாளரினால் தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டிருந்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயரையும் மாற்றி அமைத்து, தேர்தலில் தோல்வியடைந்த தனக்குத் தேவையானவர்களைக் கூட புதிதாக நியமனம் செய்துள்ளார். தூக்கி வீசப்பட்டவர்களில் சிறீமாவோ காலத்திலிருந்து சுதந்திரக் கட்சி அரசில் கூட்டிணைந்திருந்த இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்களும் அடக்கம். அதன் மூலம் 52 வருடங்களாக இடதுசாரிகளுடன் சிறீ.ல.சு.கவுடன் இடதுசாரி கட்சிகளுக்கு இருந்த தொடர்பை சந்திரிக – மைத்திரி குழு உடைத்தெறிந்துள்ளது.
நாட்டில் நல்லாட்சியைக் கொண்டு வரப்போவதாகச் சொன்ன மைத்திரியும் சந்திரிகவும், தமது சொந்தக் கட்சிக்குள்ளேயே சர்வாதிகாரத்தை நிலைநாட்ட ஆரம்பித்துவிட்டனர்.
எனவே நாடு எவ்வழி செல்லப் போகின்றது என்பதைச் சுலபமாகப் புரிந்து கொள்ளலாம். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் 1977இல் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டுதான் ஆட்சிக்கு வந்தார். ஆனால் முதலில் அவர் செய்தது,; தனது ஐ.தே.கவில் சர்வாதிகாரத்தைத்தான் நிலைநாட்டியதுதான். அதன் பின்னர் நாடு எந்தப் பாதையில் பயணித்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
பண்டாரநாயக்கவின் காலத்திலும், மனைவி சிறீமாவோ காலத்திலும், மகிந்தவின் காலத்திலும் சிறீ.ல.சு.கவை அழிப்பதற்கு ஐ.தே.கவும், அதன் சர்வதேச எஜமானர்களும் பல பகிரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இருந்தும் அவர்கள் தமது நோக்கத்தை இறுதியில் பண்டாரநாயக்க தம்பதிகளின் மகள் சந்திரிக மூலம் நிறைவேற்றி விட்டார்கள். ஆம், சிறீலங்கா சுதந்திரக் கட்சி(தலைமை)யை ஒரு வலதுசாரிக் கட்சி(தலைமை)யாக மாற்றி விட்டார்கள்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான நோக்கங்களையும், பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கு இன்றைய தேவை ஒரு புதிய தலைமையாகும்.

source: Vaanavil 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...