"உள்ளக விசாரணையும் சர்வதேச விசாரணையும்" - தாயகம்


Be careful what you wish for, you might just get it.
ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் வாக்கியம் இது. நீங்கள் காணும் கனவுகள் நனவாகும்போது, அவற்றோடு சேர்ந்து வரும் எதிர்மறையான விடயங்கள் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் பற்றிய எச்சரிக்கை அது. சினிமா நட்சத்திரங்கள் மேல் காதல் கொள்வோருக்கு, அவர்களின் திருமணங்களில் ஏற்படும் அவலங்கள் பற்றித் தெரிவதில்லை.
இன்றைக்கு தமிழ் அரசியல், ஊடக, இணைய, முகப்புத்தகப் பரப்பில், பரவலாக விவாதிக்கப்படுவது சர்வதேச விசாரணை, உள்ளக விசாரணை பற்றிய குடுமிப்பிடிச் சண்டை. இது போதாதென்று கையெழுத்து வேட்டை ஈழத்திலும், அதுதான் யாழ்ப்பாணத்திலும், ஆரம்பித்து விட்டது. இதற்கு முன்னால் மில்லியன் கையெழுத்து வைக்காவிட்டால், தமிழ் இரத்தம் ஓடாதவர்கள் என்றெல்லாம் புலன் பெயர்ந்த நாடுகளிலும் முகப்புத்தகத்திலும் நடந்தது. (அதற்கு என்ன நடந்தது என்ற தகவலே இல்லை!) நாடு கடந்த அரசாங்கமும் விசாரணைக்காகவென பல்வேறு ஆதாரங்களை முன்வைத்தது. அது என்னாச்சு என்றே தெரியாது.


இறுதி யுத்தத்தின் போது, அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது பற்றி எந்த அக்கறையும் கவனமும் இன்றி புலிகளை அழிக்கும் முயற்சியில் சர்வதேச ரீதியில் கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு யுத்த தர்மங்கள் மீறப்பட்டதும், போரின் முடிவில் சரணடைந்தும், பிடிபட்டும் இருந்த முன்னாள் போராளிகளும் கீழ் மட்டத் தலைவர்களும் நிராயுதபாணிகளான நிலையில் கொல்லப்பட்டதும் காணாமல் போனதும் யுத்தக் குற்றங்கள் என்ற அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்காது.
ஆனால் தமிழர்களுக்கு வழமை போல, ஏதோ ஒன்றை காரண காரியமின்றி விசுவசித்து, அது நிறைவேறும் என்று கனவு கண்டு, கனவு நனவாகும்போது வேறெதுவோ எல்லாம் நடந்து முடிந்திருக்கும். அந்த உண்மையை ஜீரணிக்க முடியாமல், தான் நம்ப விரும்பும் பொய்யையே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
ஒருபுறத்தில், யுத்தக் குற்றவிசாரணை என்று போய், சிங்கள தரப்பை ஆத்திரமூட்டி உள்ளதையும் கெடுக்காமல், இணக்க அரசியல் செய்து மக்களுக்கான தீர்வைப் பெறலாம் என்ற நம்பிக்கையில் சம்பந்தர்.
மறுபுறத்தில் தங்கள் தலைவர் பிரபாகரனைப் போட்டுத் தள்ளியதற்கான பழிவாங்கலாக மகிந்த தரப்பினர் கழுவேற்றப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்ட புலன் பெயர்ந்தவர்களும் அவர்களின் பினாமிகளான அரசியல்வாதிகளும். இதில் பிரபாகரனைப் போட்டுத் தள்ளியதால் வந்த கோபத்தை வெளிக்காட்ட முடியாது என்பதால் தான் ‘அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட போது’ என்று இவர்கள் தமிழ்ப்பட வெள்ளைச்சேலை கண்ணகி நாயகிகள் போல கண்ணீர் விட்டு நீதி கேட்கிறார்கள்.
உண்மையிலேயே இவர்கள் மக்கள் கொல்லப்படுவது பற்றிய அக்கறை கொண்டவர்களாக இருந்திருந்தால், மாவிலாறில் தொடங்கி கிழக்கில் மக்கள் மயானங்களில் உறங்கிய போது கொதித்தெழுந்திருக்க வேண்டும். தலைமைக்கு ஆபத்து என்றவுடன் தான் கறுப்புக் கொடி தூக்கியவர்கள் இவர்கள்.
சம்பந்தரின் இணக்க அரசியலை நியாயப்படுத்துவதோ, இனக்கொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து மகிந்த உட்பட்டோரை மீட்பதோ, உள்ளக விசாரணை தான் சரியான தீர்வு என்று வாதிடுவதோ, இங்கே நோக்கமில்லை. (அதைச் சொல்லிக் காட்டியே, சொல்கின்ற நியாயங்களை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பவர்கள் எக்கச்சக்கம் என்பதால்!)
ஆனால் இந்த சர்வதேச விசாரணை என்று அடம் பிடிப்பவர்கள் என்ன தர்க்கரீதியான நியாயங்களில் அதைக் கோருகிறார்கள் என்பது தான் நமக்கு எழுந்த சந்தேகம்.
1. நம்மவர்களுக்கு சகோதரனை விட, பிறத்தியாரில் நம்பிக்கை அதிகம். அதுவும் வெளிநாட்டார் வெள்ளையர் என்றால் நீதிமான்கள் என்ற நினைப்போ என்னவோ! சகோதரர்களை துரோகிகள் என்று கொல்லும் போது துள்ளிக் குதித்த சமூகம். சர்வதேச விசாரணை என்பது நீதியானதாகவும், பக்கச் சார்பற்றதாகவும் இருக்கும் என்ற உத்தரவாதத்தை இவர்களுக்கு வழங்குவது யார்? வழமை போல, புலன் பெயர்ந்த நாடுகளில் தங்களுக்கு இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் வாங்கு வங்கிகளுக்குப் பயந்து மேல்நாட்டு அரசுகளும் அரசியல்வாதிகளும் தங்களுக்கு நீதி வாங்கித் தருவதில் முண்டியடிப்பார்கள் என்ற எண்ணமாயிருக்கலாம்.
இதுவரை நாள் யுத்தக் குற்றங்களுக்காக சிறை சென்றவர்கள் எல்லாமே கிட்டத்தட்ட இவர்கள் எதிர்பார்க்கின்ற சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக அடிமைச் சாசனம் எழுதாதவர்கள் மட்டுமே! ஏற்கனவே பட்டியல்களில் இருந்தவர்கள் மன்னிப்புப் பெற்றதும், (கடாபி), ஏற்கனவே பங்காளியாக இருந்து பகையாளியானவர்களும் (சதாம், நொறியேகா) என சர்வதேச சமூகத்தின் நீதி ‘அந்த இந்த மாதிரித்’ தான்.
உள்ளக விசாரணைக்கு உள்ள நம்பகத்தன்மையை விட அதிகமானதாய் சர்வதேச விசாரணை இருக்கும் என்று நம்புகின்றவர் உண்மையிலேயே புலன் பெயர்ந்தவராகத் தான் இருக்க முடியும்.
அமெரிக்கா கப்பல் அனுப்பும், அதோட CNN காரனும் வருவான் என்று நம்பி, அந்த யுத்தத்திற்குள்ளும் மறக்காமல் தலைக்கும் மீசைக்கும் கறுப்புச் சாயம் பூசி, வெள்ளைக் கொடியோடு வந்தவர் மாதிரி…
2. கொஞ்சம் பொறுங்கோ! கொஞ்ச நாளைக்கு முன் தான், ‘தமிழ் மக்கள் இன அழிப்புச் செய்யப்பட்ட போது, சர்வதேசம் கண்ணை மூடிக் கொண்டிருந்தது’, ‘கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட போது ஆயுதம் வழங்கியது’, ’22, 37 நாடுகள் சேர்ந்து எங்கள் போராட்டத்தை அழித்து விட்டன’ என்று குற்றம் சாட்டிக் கொண்டிருந்தீர்கள். அதற்கு முன்னால், புலிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது, சமாதான ரீதியாக தீர்வு காணுங்கள் என்று சொன்ன போது, ‘எங்கட தலைவருக்கு எல்லாம் தெரியும், நீங்கள் உங்கட பாட்டைப் பார்த்துக் கொண்டிருங்கோ’ என்று திறந்த கடிதம் எல்லாம் எழுதினீர்கள்.
அதே சர்வதேசத்தையா விசாரணை செய்ய அழைக்கிறீர்கள்? அல்லது அவர்களை விட வேறு ஏதாவது சர்வதேசம் ஏதும் உண்டா?
3. சர்வதேசம் என்பது ஐ.நா சபை சார்ந்ததா? ஐரோப்பிய சமூகம் சார்ந்ததா? அமெரிக்கத் தலைமை சார்ந்ததா? அதில் யசூகி அகாசியின் ஜப்பான் அடக்கமா? எரிக் சொல்கெய்மின் நோர்வே உள்ளேயா? சீனா, ரஷ்யா.. அப்புறமாய் இந்தியா..?
எந்த சர்வதேசம்? அந்த சர்வதேசத்தில் இந்தியா அடங்கினால் என்ன பதில்?
இதெல்லாம் யோசித்துப் பார்த்ததுண்டா? சும்மா மொட்டையாக சர்வதேசம் என்றால், எது? ஐ.நா விசாரணை என்றால், பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகளின் கட்டுப்பாட்டில் அது இருப்பது பற்றி ஏதாவது தெரியுமா?
4. உங்களின் நம்பிக்கை நட்சத்திரங்களில் இன்று அமெரிக்கா முக்கியமானது. அதிலும் ஒபாமாவுக்கான தமிழர்கள் என்றெல்லாம் லெட்டர்ஹெட் அமைப்புகள் தொடங்கி இணையத்தை உலுக்கி, அவரின் வெற்றிக்கு நீங்கள் தான் காரணம் என்று முரசறையாத குறையாக துள்ளிக் குதித்தீர்கள்.
இதே அமெரிக்காவில் தான் மகிந்தவின் சகோதரர்கள் குடியுரிமையும் சொத்துக்களும் வைத்திருக்கிறார்கள். இதே அமெரிக்கா தான் சரத் பொன்சேகாவை அழைத்து மகிந்தவுக்கு எதிராக போட்டியிடுவதற்கு ஆசீர்வாதம் வழங்கியது. இன்றைக்கு அமெரிக்கா தலைமையிலான சர்வதேசத்தின் எதிரிகள் பட்டியலில் மகிந்த இல்லை. அமெரிக்காவில் பனி கொட்டினால், கொழும்பில் குளிர் ஜக்கட் போடக் கூடிய ரணில் தான் பிரதமர்.
சர்வதேசத்திற்கு தங்கள் திட்டத்திற்கு அமைவாக மகிந்த நடந்து கொள்ளாதது தான் பிரச்சனையே தவிர, தமிழர்களை அழித்தது காரணமல்ல!
வெளிநாட்டுச் செயலாளர் ஜோன் கெரி தொடக்கம் சமீபத்தில் வருகை தந்த அம்மையார் வரைக்கும், தமிழர்கள் பிரச்சனையை இலங்கை அரசுடன் பேசியே தீர்க்க வேண்டும், உள்ளக விசாரணைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என்ற அடிப்படையிலேயே கொள்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இதில் அமெரிக்கா உங்களுக்குச் சார்பாக நீதி பெற்றுத் தரும் என்று நீங்கள் நம்புவதற்கான மூலகாரணம் என்ன?
உங்களுக்கு மாமன், மச்சான் உறவு ஏதும்?
5. அது சரி, ஒரு மில்லியன் பேர் கையெழுத்து வைத்தால் சர்வதேச விசாரணை நடக்கும் என்று உங்களுக்கு எந்த அறிவுக் கொழுந்து சொன்னது? இந்தக் கையெழுத்து வேட்டைக்கு பணம் தேவை என்று வரும் வேடர்களிடம் எத்தனை இளிச்சவாயர்கள் பணம் கொடுத்திருப்பீர்கள்?
தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட கஜேந்திரகுமாருக்கு தோள் கொடுக்கும் பிரேமச்சந்திரன், தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் போயிருந்தாலும் பாராளுமன்றத்தில் சர்வதேச விசாரணைக்காய் குரல் கொடுத்திருப்பாரோ என்று கேட்டுச் சொல்ல முடியுமா?
அட, இதற்குள் சிவாஜிலிங்கம் வேறு ஐ.நாவுக்கு நேரே கடிதம் எழுதி விட்டாராம். பான் கி மூன் அதற்கு நடவடிக்கை எடுத்து விட்டுத் தான் மறுவேலை பார்ப்பாராம்.
இப்படியெல்லாம் உங்களைப் புல்லரிக்க வைக்கும் அரசியல் தான் அங்கே நடக்கும். சுரேஷ், கஜேந்திரகுமார் என்ன, எல்லாரின் கதையும் இது தான்.
ஏற்கனவே நீங்கள் துள்ளிக் குதித்த, உங்கள் முதலமைச்சர் கொடுத்த இன அழிப்பு தீர்மானக் கோப்புக்கு அமெரிக்காவில் என்ன நடந்தது என்பதைக் கேட்டுப் பார்க்கலாம்.
எப்படித் தான் ‘இப்பிடிக்கொத்த விளப்பமில்லாத கூட்டமாய்’ இருக்கிறீர்களோ?
6. சரி, சர்வதேச விசாரணையின் மூலம் அடைய முயற்சிக்கும் இறுதித் தீர்வு என்ன?
மகிந்தவை கழுவில் ஏற்றுதல்?
சீ..சீ.. சரத் பொன்சேகாவுக்கு தூசு பட விடமாட்டீர்கள். காரணம் அவர் ஜனாதிபதியாக வேண்டும் என்பதில் நீங்கள் காட்டிய அக்கறை! அப்பாடா, சொல்லி மாளாது.
யேசுவின் பக்கத்தில் சிலுவையில் அறைப்பட்டவர்கள் மாதிரி, கோத்தா வலப் பக்கம் என்றால், இடப்பக்கத்தில்…?
அல்லது, சர்வதேசம் இதை இனப்படுகொலை என்று அங்கீகரிக்க வேண்டும். அப்படி ஏதாவது?
ஆர்மீனியன் இனப்படுகொலையை அங்கீகரிக்கவே நூறு வருடம் எடுத்தது.
யூதர்களின் இன அழிப்பு முன்னுரிமை பெற்றதற்கு யூதர்களின் பொருளாதார வளர்ச்சிதான் காரணம் என்று வாதிடுவீர்களாயின், உங்களுக்கும் அதே அளவு வலிமை இருக்கிறது என்று நம்புவதற்கான அடிப்படைகள் என்ன? வீதியை மறித்து தமிழ் விழா நடத்தி கொத்து ரொட்டி அடிப்பதா? இதை விடப் பெரிதாக சீக்கியர்கள் கொண்டாடுகிறார்களே!
7. அன்று நீங்கள் புலிகளின் பின்னால் நடத்திய யுத்தக் கூச்சலுக்கும், இன்று நடத்தும் யுத்தவிசாரணைக் கூச்சலுக்கும் இடையில், அங்கே வாழும் மக்களின் நிலைமை பற்றி என்றாவது சிந்தித்ததுண்டா? அவர்களுக்கான தலைவிதியை அவர்களே நிர்ணயிக்கும் உரிமை அவர்களுக்கு வேண்டும் என்று என்றாவது சிந்தித்ததுண்டா?
அவர்களே உங்கள் முகத்தில் எம்.ஜி.ஆர் படப் போஸ்டருக்கு சிவாஜி ரசிகர்கள் அடித்த சாணி போல, பூசி அப்பி விட்டிருக்கிறார்கள் கடந்த தேர்தலில்.
சர்வதேச விசாரணை கேட்கும் கஜேந்திரகுமார், மாஜிப் புலிகளை எல்லாம் நிராகரித்து இன்றைக்கு சம்பந்தரைத் தலைவராக ஆணை வழங்கியிருக்கிறார்கள். அந்த ஆணையில் இணக்க அரசியல் மூலமாக தீர்வு வேண்டி நிற்பதாகத் தான் நாங்கள் நினைக்கிறோம்.
அதற்கு உங்களுக்கு மட்டுமே விளங்கும் வேறு கருத்து ஏதாவது இருக்குமோ?
8. இலங்கை அரசியலில் மகிந்தவினால் பழி வாங்கப்பட்டவர்கள் இன்றைக்கு ஆட்சியமைத்திருக்கிறார்கள். அவர்கள் கூட, மகிந்தவை யுத்தக் குற்றத்திற்காக என்ன, ஊழலுக்காகவே விசாரிக்க முடியவில்லை. ஏகோபித்த குரலில் உள்ளக விசாரணை என்பதையே வலியுறுத்துகிறார்கள். உள்ளக விசாரணை வெறும் கண் துடைப்பாகத் தான் இருந்து விட்டுப் போகும். அமெரிக்கா செய்வது போல, விசாரணை ஒன்றைச் செய்து கீழ் மட்டச் சிப்பாய்களைத் தண்டித்தாலும் உங்கள் கொலை வெறி அடங்காதே, மகிந்தவைக் கழுவில் ஏற்றும் வரைக்கும்!
எதிர்க்கட்சித் தலைவராக வந்தாலும் உங்களுக்கு இனத்துரோகம். பாராளுமன்றத்தில் கோஷம் எழுப்புகின்றவர்களுக்கு ஆதரவு தராமல், மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களே! எதிர்க்கட்சிச் சம்பந்தரும் சுமந்திரனும் சர்வதேச விசாரணையை நிராகரித்து விட்டார்கள்.
அமெரிக்காவே, வியட்னாமை விட்டு வெளியேறு என்று யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி பின் மதிலில் எழுதியது போல, யாழ்ப்பாணத்தில் இருந்து கூச்சல் போட்டால் உலகம் கேட்கத் தானே வேண்டும் என்ற நினைப்போ?
9. சரி, தப்பித் தவறி, உலகம் உங்களுக்கு நியாயம் இருப்பதாக நினைத்து விசாரணைக்கு வந்தாலும், அரசாங்க தரப்புச் செய்த யுத்தக் குற்றங்களை மட்டும் விசாரிக்கும் என்பதற்கான உத்தரவாதம் என்ன? வழமை போல, இரண்டு தரப்பும் செய்த யுத்தக் குற்றங்களை விசாரிக்கும். சரி, விசாரித்து விட்டு போகட்டுமே, புலிகள் இப்போது இல்லைத் தானே என்று நீங்களும் பொறுமை காக்கப் போவதில்லை. புலிகள் புனிதப் போராட்டம் நடத்தினார்கள் என்று இன்றைக்கும் நம்பும் நீங்கள் புலிகள் மேல் தூசு படுவதைக் கூட அனுமதிக்க மாட்டீர்கள்.
புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள் என்பதோ, தப்பியோடிய மக்களைச் சுட்டுக் கொன்றார்கள் என்றோ, தப்பியோடிய மக்களுடன் தற்கொலைக் குண்டுதாரிகளை அனுப்பிக் கொலை செய்தார்கள் என்றோ, கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்களை கண்காட்சிக்கு வைத்திருந்தார்கள் என்றோ விசாரணையில் தெரிய வந்தால், அவற்றை உண்மை என ஏற்றுக் கொள்ள நீங்கள் தயாரா?
வெறுமனே விசயம் விளங்காமல், அடி வயிற்றுக் கூச்சலில் யுத்தக் குற்ற விசாரணை என்பதோ, கூட்டமைப்பை விழுத்த எதிர்த்தரப்புக்கு பணத்தை அள்ளி இறைப்பதோ, காட்டிய இடத்தில் வோட்டுப் போடுவதோ, கையெழுத்து வைப்பதோ எங்களுக்கு எந்த விதமான தீர்வையும் பெற்றுத் தராது என்பதை நீங்கள் எந்தக் காலத்தில் உணர்ந்து கொள்ளப் போவது இல்லை.
பிள்ளையார் பிடிக்கக் குரங்கான கதையாகவோ, கிணறு வெட்டப் பூதம் வந்த கதையாகவோ, நீங்கள் யுத்தக் குற்றவிசாரணை என்று போக, புலிகளும் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று தமிழர்களே சாட்சி சொல்லப் போக…
இதெல்லாம் தேவையா?
எனவே,
Be careful what you wish for, you might just get it!
Nanri thayagam
Source: Ragavan Rajesh 
(https://www.facebook.com/profile.php?id=100009224193192)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...