இலங்கைப் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்றும்,
அதில்
வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் இடம்பெற வேண்டும்
என்றும் ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் தனது அறிக்கையில்
பரிந்துரைத்துள்ளது.

இலங்கையின்
தற்போதைய குற்ற வழக்கு விசாரணை நடைமுறைகள் போதுமான வலு பெற்றிருக்கவில்லை
என்பதால் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்' என்று இந்தப் பரிந்துரை
குறிப்பிட்டுள்ளது. இந்த சிறப்பு நீதிமன்றம் பன்னாட்டு நீதிபதிகள்,
உள்நாட்டு நீதிபதிகளைக் கொண்டதாக இருக்கும் என்று தெளிவாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்
பரிந்துரைக்குத் தொடக்க நிலையிலேயே இலங்கை அரசு எதிர்ப்புத்
தெரிவித்துள்ளது. "ஐ.நா. நீதிமன்றம், சர்வதேச நீதிபதிகள் இதையெல்லாம்
இலங்கை விரும்பவில்லை. இருப்பினும், சர்வதேச வல்லுநர்களின் சட்ட உதவிகளைப்
பெறுவதில் தடையில்லை என்று கூறியுள்ளது.
இந்தப்
பரிந்துரையில் மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றச்சாட்டுகள் இலங்கை
அரசின் மீது மட்டுமல்ல, விடுதலைப் புலிகளின் மீதும் முன்வைக்கப்பட்டுள்ளது.
ராணுவத்தின் பாலியல் வன்கொடுமை, கொடூர விசாரணை, அரசியல் கொலை ஆகியன இலங்கை
அரசு மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள். முள்ளிவாய்க்கால் இறுதிப்
போரில் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தியதாகவும், சிறுவர்களைப் போரில் ஈடுபட
வைத்தார்கள் என்றும் விடுதலைப் புலிகள் மீது இந்த அறிக்கை குற்றம்
சாட்டுகிறது.
அதாவது,
போர்க் குற்றங்களை இரு தரப்பும் செய்துள்ளன என்பதுதான் இந்த அறிக்கையின்
நிலைப்பாடு. தற்போது இந்த சிறப்பு நீதிமன்ற விசாரணை எதில்போய் முடியும்
என்றால், போர்க் குற்றங்களை யார் அதிகம் செய்தார்கள்? யாருடைய
நடவடிக்கையால் அதிகம் பேர் பலியானார்கள்? என்று விசாரிப்பதாக முடியும்.
சிறப்பு நீதிமன்றத்தின் தண்டனையும் இரு தரப்பினர் மீதும்தான் இருக்கும்.
அப்படியானால்
இந்த விசாரணையின் முடிவில் தண்டிக்கப்படக்கூடிய நபர்கள் நிச்சயமாக
சிங்களர்களாக மட்டுமே இருப்பார்கள். ஏனென்றால், விடுதலைப் புலிகளின் மீதான
போர்க் குற்றங்களை சிறப்பு நீதிமன்றம் ஏற்றாலும் அதற்கான தண்டனையைப் பெற
அந்த அமைப்பின் தலைவர்கள் யாரும் இலங்கையில் உயிருடன் இல்லை. ஆகவே, தற்போது
தண்டனை பெறக்கூடிய நபர்கள் அனைவரும் சிங்களர்களாகவே இருப்பார்கள். இதனை
இலங்கை அரசு விரும்பாது.
போர்க்
குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என்று அதிபர் தேர்தலுக்கு
முன்புவரை சிறீசேனா வாக்கு கொடுத்திருந்தாலும்கூட அவரும் விரும்பமாட்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் விரும்பமாட்டார். இலங்கையின் பெரும்பான்மை
சமூகமான சிங்களரும், சிங்கள ராணுவமும் எதிர்க்கும். ஆகவே, இந்த சிறப்பு
நீதிமன்றத்தை இலங்கை அரசு அனுமதிக்காது.
மேலும்,
இந்த விசாரணை வரம்பு மூன்று காலகட்டங்களுக்குள் அமைந்துவிடுகிறது. 2002-ம்
ஆண்டு இலங்கை அரசும் விடுதலைப் புலிகளுக்குமான போர்நிறுத்த ஒப்பந்தமும்
அதன் பிறகான அத்துமீறலும். பிறகு, 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப் போர்
அத்துமீறல்கள். மூன்றாவதாக, இறுதிப் போருக்குப் பிறகு ""பட்டறிவு,
மறுவாழ்வு ஆணையத்தின்'' (எல்எல்ஆர்சி) நடவடிக்கைகள். இந்த மூன்றாவது
பகுதியானது ஐ.நா. வழங்கிய உதவிகளை பாதிக்கப்பட்டோரிடம் கொண்டு
சேர்க்காததும் மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றமாகும் என்பதால்
சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டிலும் இலங்கை சமாளித்துக் கொண்டாலும்,
முகாம்களில் உதவிகளை விநியோகிக்கத் தவறிய குற்றச்சாட்டில் தப்பிக்கவே
முடியாது. ஆகவே, சிறப்பு நீதிமன்றத்தை நிச்சயமாக எதிர்ப்பார்கள்.
செப்டம்பர்
30-ஆம் தேதி நடைபெறும் ஐ.நா. உறுப்பு நாடுகள் கூட்டத்தில் இந்தப்
பரிந்துரையும், அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து தரப்போவதாக சொல்லப்படும்
தீர்மானமும் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்படவுள்ளது. இந்தப் பரிந்துரை
என்னவாகும் என்பது அப்போதுதான் முழுமையாகத் தெரியவரும்.
இந்தச்
சிறப்பு நீதிமன்றத்தின் தன்மை எதுவாக இருப்பினும், இலங்கை அரசு தரும்
தரவுகளை மட்டுமே ஏற்றுச் செயல்படும் என்றால் அதனால் நீதி கிடைக்காது. ஐ.நா.
மனித உரிமைக் குழு தற்போது பரிந்துரைக்கும் சிறப்பு நீதிமன்றம் என்பது,
இலங்கை அரசு விருப்பப்படி மாற்றியமைக்கப்படும் என்றால் அது வெறும்
பாதிநீதி; அது வலி நிவாரணி; நோய்க்கான மருந்து அல்ல.
இந்த
விவகாரத்தில் இந்திய அரசு, ஐ.நா. கருத்துக்கு மாறாக எந்தக் கருத்தையும்
தெரிவிக்காது. சர்வதேச விசாரணைக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று
தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும்கூட,
இலங்கையைப் பற்றி என்ன பேசுவதாக இருந்தாலும் இந்தியா காஷ்மீரத்தைக்
கருத்தில் கொள்ளாமல் பேச இயலாது. இந்தியாவுக்கு இலங்கையுடனான வர்த்தக
உறவுதான் முக்கியமே தவிர, போர்க் குற்றங்கள் அல்ல என்பது வெளிப்படை.
அண்மையில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா வந்தபோதே அது
தெளிவாக வெளிப்பட்டது. ஆகவே, செப்டம்பர் 30}ஆம் தேதி இலங்கைக்கு ஆதரவோ
எதிர்ப்போ எதையும் இந்தியா தெரிவிக்காது.
நீண்டநாள்
காத்திருப்புக்குப் பிறகு வெளியாகி இருக்கும் ஐ.நா. சபையின் மனித உரிமை
ஆணையத்தின் அறிக்கை சலசலப்பை ஏற்படுத்தத்தான் பயன்படுமே தவிர, இதனால்
பெரிதாக எதுவும் நடந்துவிடாது. ராஜபட்சவைப் போர்க் குற்றவாளியாக்கி சர்வதேச
நீதிமன்றத்தில் இந்த அறிக்கையோ, விசாரணையோ நிறுத்திவிடப் போவதில்லை!
Source: http://www.thenee.com/html/170915-5.html
No comments:
Post a Comment