டிங்கிரி டிங்காலே மீனாட்சி... டிங்கிரி டிங்காலே... உலகம்போற போக்கப்பாரு தங்கமச்சில்லாலே...."
தந்தை வந்தார் - தளபதி வந்தார் - தேசியத்தலைவர் வந்தார் - இவர்கள் வழியில் அய்யா வந்துள்ளார்.
- அவதானி
" சிங்கத்தமிழர் நாமென்றால் சிங்கக்கொடியும் நமதன்றோ..." என்ற பாணியி
ல் யாழ்ப்பாணத்தில் பொது மேடையில் ரணில் விக்கிரமசிங்காவுடன் இணைந்து சிங்கக்கொடியை தூக்கி அசைத்த இராஜவரோதயம் சம்பந்தன் அய்யா அவர்கள் எட்டாவது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவராகியிருக்கிறார். ரணில் விக்கிரமசிங்கா பிரதமராகியிருக்கிறார்.

ஈழத்தமிழர்களுக்கு முன்னர் தந்தையும் (செல்வநாயகம்) பின்னர் தளபதியும் (அமிர்தலிங்கம்) அதன் பின்னர் தேசியத்தலைவரும் (வேலுப்பிள்ளை பிரபாகரன்) கிடைத்தது போன்று தற்பொழுது தமிழர்களுக்கு ஒரு அய்யா வந்துள்ளார்.
சம்பந்தன் அவர்கள் இலங்கை அரசியலில் ஒரு பழுத்த மூத்த அரசியல்வாதி. இதுவரையில் ஒருதடவைதான் அவர் தேர்தலில் தோற்றவர். மூவினமக்களும் செறிந்துவாழும் ஈழத்தமிழரின் தலைப்பட்டினம் என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட திருகோணமலையிலிருந்து மீண்டும் பாராளுமன்றம் வந்தவர். பாராளுமன்ற ஜனநாயகம் நன்கு தெரிந்தவர்.
அய்யாவின் வயது எண்பதையும் கடந்துவிட்டது. இலங்கைப்பாராளுமன்றில் வயதால் மூத்த தலைவர்களில் இவரும் ஒருவர்.
தேர்தல் நடந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகவும் யார் எதிர்க்கட்சித்தலைவர்...? என்ற இழுபறி நீடித்து, இறுதியில் அது தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கே கிடைத்துவிட்டது. தேர்தலுக்கு முன்னரும் தேர்தல் முடிந்து அடுத்து சில நாட்களும் எதிர்பார்க்காத முடிவு இது.
1977 இல் ஐக்கிய தேசியக்கட்சியிடம் படுதோல்வியடைந்த ஸ்ரீலங்கா சுதந்தரக்கட்சியும் இடதுசாரி ஐக்கிய முன்னணியும் ( என்.எம். பீட்டர், விக்கிரமசிங்கா, வாசுதேவா உட்பட அனைத்து இடதுசாரிகளும் தோல்வியைத் தழுவினர்) பலவீனமடைந்திருந்த நிலையில் தமிழர் விடுதலைக்கூட்டணி அவ்வேளையில் வடக்கில் 14 ஆசனங்களையும் கிழக்கில் நான்கு ஆசனங்களையும் பெற்றது.
இக்கூட்டணியில் அங்கம் வகித்த தேவநாயகம் கல்குடாவிலும் தொண்டமான் நுவரெலியா - மஸ்கெலியா இரட்டை அங்கத்தவர் தொகுதியிலும் வெற்றிபெற்றனர். 1977 ஜூலை 22 ஆம் திகதி பலம் மிக்க எதிர்க்கட்சியே இல்லாத சூழ்நிலையில் ஐ.தே.க தலைவர் ஜே.ஆர் . ஜயவர்தனா பிரதமரானார்.
அவ்வேளையில் ஸ்ரீமா தலைமையிலான சுதந்திரக்கட்சிக்கு எட்டு ஆசனங்கள்தான் கிடைத்தன.
தமிழரசுக்கட்சி, தமிழ்க்காங்கிரஸ் மற்றும் இவர்கள் அமைத்த கூட்டணியில் அங்கம்வகித்த தொண்டமானும் தேவநாயகமும் வலதுசாரிப்போக்கு சிந்தனையுள்ளவர்களே. அவ்வேளையில் இடதுசாரிகளும் கூட்டு முன்னணி அரசிலிருந்து ( பாராளுமன்றில் என்.எம்.பெரோவால் சாத்தான் என்று வர்ணிக்கப்பட்ட பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவின் புண்ணியத்தில்) வெளியேறியிருந்தமையினால் அந்தத்தேர்தலில் எப்படியும் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெறும் என்றே தமிழர் விடுதலைக்கூட்டணித்தலைவர்கள் சிந்தித்தார்கள்.
முன்னேற்பாடாக அந்தத்தேர்தலுக்கு முன்னரே கொழும்பில் தொண்டமான் இல்லத்தில் அமிர்தலிங்கம், மு. சிவசிதம்பரம் ( இவர் 1965 இல் ஐ.தே.க. அரசில் துணை சபாநாயகராக இருந்தவர்) கதிரவேற்பிள்ளை ஆகியோரும் ஜே.ஆர். தலைமையில் பொல்காவலை எம்.பி. எம்.டி. பண்டா (முன்னாள் உணவு அமைச்சர்) மூத்த பத்திரிகையாளர் எஸ்மண்ட் விக்கிரமசிங்கா ஆகியோரும் கூடி எதிர்காலத்திட்டம் பற்றி மந்திராலோசனை நடத்தினார்கள்.
இதில் எஸ்மண்ட் விக்கிரமசிங்கா தற்போதைய ஐ.தே. தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிர
மசிங்காவின் தந்தையார். அத்துடன் ஜே.ஆரின் நெருங்கிய உறவினர்.

அந்தத்தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பே ஏப்ரில் மாதம் தந்தை செல்வா மறைந்தமையினால் தந்தைக்குப்பின்னர் தனயனாக ஒரு தளபதியாக வந்தார் அமிர்தலிங்கம்.
அவ்வேளையில் ஐ.தே.க.வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களின் கல்வி, அரசவேலை வாய்ப்பு, குடியேற்றக்கொள்கை, ஆட்சி நிருவாகத்தில் தமிழின் உரிமை முதலான முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கும் வண்ணம் அந்த சந்திப்பில் இந்த வலதுசாரித்தலைவர்களுடன் இணக்கம் காணப்பட்டது.
சுருக்கமாகச்சொன்னால் அன்று தமிழர் விடுதலைக்கூட்டணிக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையே நடந்த இரகசிய உடன்படிக்கைதான் அது. அந்தவகையில் நாம் தொண்டமானைத்தான் மெச்சவேண்டும். அவருடைய இல்லத்தில் சந்தித்த தலைவர்களிடம் அத்தகைய இணக்கப்பாட்டைக்கொண்டு வருவதற்கு அன்று அவரிடம் சாணக்கியம் குடியிருந்தது.
ஆனால், எவருமே எதிர்பாரதநிலையில் தேர்தல் முடிவுகள் வந்தன. அமிர்தலிங்கமே எதிர்பாராத நிலையில் அன்று அவருக்கு எதிர்க்கட்சித் தலைமை கிடைத்தது.
ஆனால், எவருமே எதிர்பாரதநிலையில் தேர்தல் முடிவுகள் வந்தன. அமிர்தலிங்கமே எதிர்பாராத நிலையில் அன்று அவருக்கு எதிர்க்கட்சித் தலைமை கிடைத்தது.
தந்தை செல்வாவின் சுதந்திரன் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் எஸ்.டி. சிவநாயகம் அங்கு நடந்த ஒரு காசோலை மோசடி தொடர்பாக வெளியேறியதும் அவருக்கு தமிழரசுக்கட்சியின் மீது ஏமாற்றமும் கோபமும் இருந்தது.
அவரது நண்பர் மட்டக்களப்பு எம்.பி. இராஜதுரை. நீண்டகாலமாகவே அமிர்தலிங்கத்திற்கும் இராஜதுரைக்கும் இடையே நிழல் யுத்தம் நிகழ்ந்துவந்தது. அமிருக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவி கிடைத்ததும், வட்டுக்கோட்டைத்தீர்மானத்தில் தமிழ் ஈழம் கேட்ட அமிர் தற்பொழுது கொழும்பில் வீடும் காரும் ஏற்பாரா...? என்ற கேள்வியை தலைப்பாக பதிவுசெய்து ஒரு செய்தியை சிவநாயகத்தின் தினபதி வெளியிட்டது.
அந்தத்தலைப்பில் - இடது வலது புறமாக ஒரு வீட்டின் படத்தையும் காரின் படத்தையும் பிரசுரித்தது.
அத்துடன் தொடர்ச்சியாக தமிழர் விடுதலைக் கூட்டணியை விமர்சித்தே வந்தது சிவநாயகத்தின் தினபதியும் சிந்தாமணியும். இதனால் ஆத்திரமுற்ற கோவை மகேசன் சுதந்திரனில் அவரை சவநாயகம் என்றும் தொடர்ச்சியாக வர்ணித்து எழுதிவரலானார்.
அமிர் எதிர்க்கட்சித்தலைவரானார். அவரது கூட்டணியில் அங்கம் வகித்த தொண்டமான் கி
ரமிய அபிவிருத்தி தோட்ட தொழில் துறை அமைச்சரானார். தேவநாயகம் நீதி அமைச்சரானார். இந்நிலையில் மட்டக்களப்பில் என்றைக்குமே தோல்வி காணாத முடிசூடா மன்னர் தொடர்ந்தும் எம்.பி. ஆக இருப்பதா...?

கூட்டணியில் ஓரம்கட்டப்பட்டதுடன் அவரை எதிர்த்து காசி. ஆனந்தனை களம் இறக்கிய அமிர்தலிங்கத்திற்கு கிடைத்துள்ள எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கு நிகராக ஏதும் வேண்டாமா...? என்ற சிவநாயகத்தின் கனவு பலித்தது. அவரது நண்பர் இராஜதுரைக்காகவே ஒரு அமைச்சு உருவானது. பிரதேச அபிவிருத்தி இந்து கலாசார அமைச்சு.
எதிர்க்கட்சித்தலைவர் பதவி பாராளுமன்றத்தில் மிகவும் முக்கியமானது. பிரதமருக்குரிய பெரும்பாலான சலுகைகளை வசதிகளைக்கொண்டது. அந்தப்பதவிக்கு வருபவருக்கு பிரதமருக்கு நிகரான பாதுகாப்பு வசதிகளும் வழங்கப்படும்.
வெளிநாட்டு ஜனாதிபதிகள், பிரதமர்கள் இலங்கை பாராளுமன்றிற்கு வந்து உரையாற்றும் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித்தலைவரின் வரவேற்பு உரைக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும்.
அத்தகைய ஒரு பெருமைக்குரிய பொறுப்புவாய்ந்த இப்பதவி 38 வருடங்களின் பின்னர் சம்பந்தன் அய்யாவுக்கு கிடைத்துள்ளது.
" இனி என்ன நடக்கும்...? "
இந்தக்கேள்விதான் ஊடகங்களில் தொடரும். தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் நடக்கும் பிறந்தநாள் ஒன்றுகூடல் கொண்டாட்டங்களில் வைன், பியர் கிளாஸ்களுடன் பட்டிமன்றம் நடக்கும்.
இலங்கையில் சிங்கள மக்கள் பெரும்பான்மையினர் என்பதனாலும் பௌத்த மத பீடத்தின் ஆசியைப்பெற்றே பிரதமர், ஜனாதிபதி உட்பட பல சிங்களத்தலைவர்கள் தமது கடமைகளை தொடருவதனாலும் பிக்குகளின் ஆதிக்கம் இலங்கை அரசில் நீடித்திருப்பதனாலும் பேரினவாதம் என்பது எப்பொழுதும் நீறுபூத்த நெருப்பாகவும் தேர்தல் காலங்களிலும் அரசியல் ஆதாயம் கருதி அவ்வப்போதும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
சட்டமா அதிபராக (சிவா பசுபதி) தமிழர் இருந்தார், பொலிஸ் மா அதிபராக (உருத்திரா ராஜசிங்கம்) தமிழர் இருந்தார் எதிர்க்கட்சித்தலைவராக ( அமிர்) தமிழர் இருக்கிறார். உங்களுக்கு என்னதான் பிரச்சினை என்று வெளிநாட்டினர் குறிப்பாக தமிழ்நாட்டினர் கேட்ட ஒரு காலம் இருந்தது.
ஆனால், அந்தத் தமிழர்கள் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில்தான் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் ஆரம்பமாகின. நீண்ட பட்டியல் இருக்கிறது.
அன்று அமிர் எதிர்க்கட்சித்தலைவரானதும்கூட அவரே எதிர்பார்க்காத ஒரு நிகழ்வுதான். ஐ.தே.க.வுக்கு அடுத்ததாக அதிக ஆசனங்களைப்பெற்றிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு அந்தப்பதவியை ஏற்பதில் ஒருமித்த கருத்து இருக்கவில்லை. இந்நிலையில் வவுனியாவில் நடந்த உயர்மட்டச்சந்திப்பில் கலந்துகொண்ட தொண்டமானையே அந்தப்பதவியை ஏற்குமாறு இதர கூட்டணித்தலைவர்கள் கேட்டனர்.
அதுவரையில் ஐ.தே.க. வின் ஆட்சிக்காலத்தில் நியமன எம். பி. ஆக வரும் தொண்டமான், மலையக மக்களுக்கு அந்தப்பதவியில் அமர்ந்து எதனையும் செய்யமுடியாது என்று மறுத்ததன் பயன் அமிருக்கு அந்தப்பதவி கிடைத்தது.
(அவ்வாறு அமிருக்கு விட்டுக்கொடுத்த தொண்டமான்தான் 1983 கலவர காலத்தில் அமிர் தம்பதியரை இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் விமானம் ஏற்றி இந்தியாவுக்கு அனுப்பினார். இவ்வாறு 1983 இல் சிங்களத் தீவிரவாதிகளிடமிருந்து அமிரைக்காப்பாற்றிய தொண்டமானால் 1989 இல் தமிழ் தீவிரவாதிகளிடமிருந்து அமிரை காப்பாற்ற முடியாமல்போனது விதியின் சதி என்போமா...? )
இப்படி அன்று தமிழர் விடுதலைக்கூட்டணிக்குள் இருந்த பேச்சுவார்த்தை ஜனநாயகம் இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருக்கிறதா...? என்பதை இதன் தவைர்களின் மனச்சாட்சிக்கு விட்டுவிடுவோம்.
ஜே.ஆர். காலத்தில் பேருவளை தொகுதியில் ஐ.தே.க.வில் தெரிவான பாக்கீர் மாக்கார் சபாநாயகரானார். அதனையும் பேரினவாதிகளினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதுபற்றிய வாதப்பிரதிவாதம் பாரளுமன்றில் எழுந்தபொழுது, தமிழ்த்தலைவர்கள் இந்தியாவையே சுட்டிக்காண்பித்தார்கள். அங்கு ஜாகிர் ஹ_சேய்ன் ஜனாதிபதியாகியிருப்பதாக சொன்னார்கள்.
ஆனால், பாக்கீர் மாக்கார் அந்த சபாநாயகர் பதவியில் நீடித்திருக்கவில்லை. அவருக்கு அதிகாரங்கள் எதுவுமற்ற ஆசனம் சூடாக்கும் ஒரு அமைச்சுப்பதவிதான் பின்னர் வழங்கப்பட்டது. எனினும் அவர் புறக்கோட்டையில் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி என்ற அமைப்பினை தமது கட்டிடத்திலிருந்துகொண்டு வழிநடத்தி தமது சமூகத்திற்கு சேவையாற்றினார்.
அமிர் எதிர்க்கட்சித்தலைவரானதை இனவாதம் கக்கிக்கொண்டிருந்த களனி தொகுதியில் வென்றிருந்த சிறில்மத்தியூ முதலான சிலர் விரும்பவில்லை.
இத்தனைக்கும் அமிர் சிறந்த பாராளுமன்ற ஜனநாயக வாதியாகவே தமது கடமைகளை தொடர்ந்தார். அவருடைய பாராளுமன்ற உரையினை களரியிலிருந்து செவிமடுத்த (இராஜாங்க அமைச்சர் ஆனந்த திஸ்ஸ டீ அல்விஸின் பாரியார்) திருமதி அல்விஸ் பாராட்டுக்கடிதம் எழுதி அனுப்பினார்.
பின்னர் நிகழ்ந்த ஒரு விவாதத்தில் அமிர்தலிங்கத்தை கோல்பேஸ் திடலில் கழுவில் ஏற்றுவோம் என்றெல்லாம் பாராளுமன்றில் இனவாதிகள் கத்தினார்கள். அந்த விவாதம் மோசமாக நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்த பிரேமதாஸ கிராமோதய விழாவுக்கு சென்றுவிட்டார். பிரதமர் ஜே.ஆரும் தெரிந்துகொண்டே அன்று பாராளுமன்றில் பிரசன்னமாகவில்லை. அமிருக்காக குரல் கொடுத்து பேசியவர்கள் அமைச்சர்கள் தொண்டமானும் எம்.எச். மொகமத்தும் மாத்திரமே.
அமிர்தலிங்கம் பாராளுமன்றில் எதிர்க்கட்சித்தலைவராக இருந்துகொண்டு சிங்கள ஊடகவியலாளர்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்தவர்.
ஒரு சமயம் லேக்ஹவுஸ் பத்திரிகை ஒன்றில் வெளியான ஒரு தவாறன செய்தியினால் பிரதம ஆசிரியரை அரசு, பாராளுமன்றத்துக்கு அழைத்து கண்டித்ததை அவர் கடுமையாக ஆட்சேபித்து பேசினார்.
இன்று அவருக்குப்பின்னர் நீண்ட காலத்தின் பின்னர் அந்தப்பதவிக்கு வந்துள்ள சம்பந்தன் அவர்களும் இலங்கையின் மூவின மக்களின் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் குரல்கொடுப்பேன் என்று சொல்லியிருப்பதை இனவாதம் கக்கும் ஊடகங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
அதேவேளையில் அன்று அமிர் எதிர்க்கட்சித்தலைவரானபொழுது அதனை ஒரு வெற்றிவி
ழாவாக வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் கொண்டாடிய அவரது ஆதரவாளர்கள் மேடையில் கக்கிய உணர்ச்சி பொங்கும் விஷம் இறுதியில், எங்கே ஒரு வாய்ப்புவரும் என்று காத்துக்கிடந்து ஆயுதங்களும் எரிபொருளும் தூக்கிய தீயசக்திகள் செய்த நாசங்களையும் அதன் வரலாற்றையும் இன்றைய தமிழ்த்தேசிய வாதிகள் தெரிந்துவைத்திருக்கவேண்டும்.

1977 ஆகஸ்ட் மாதம் ஜே.ஆர். பிரதமராக இருந்துகொண்டு அப்பொழுது நிகழ்ந்த அந்தக்கலவரத்துக்கும் தமிழ்த்தலைவர்களை குறிப்பாக அமிர்தலிங்கத்தையே சாடினார்.
இராமகிருஷ்ண மிஷன் கூட்டத்தில் அமிர் ஆதரவாளர்கள், " தமிழ் ஈழம் அமைப்போம் - அதில் திருகோணமலையை தலைநகராக்குவோம் " என்றெல்லாம் பேசினார்கள்.
சும்மா கிடந்த வாய்க்கு அவல் கிடைத்தது போல் ஜே.ஆருக்கு. அவர் மென்று பார்த்து துப்புவதற்கு விஷம் கிடைத்தது.
" எதிர்க்கட்சித்தலைவருக்கு ஒன்று சொல்வேன் " என்று எதிர்க்கட்சி வரிசையைப்பார்த்து அவர் சொன்ன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த - காலத்தாலும் மறக்கமுடியாத வார்த்தைகள்தான்
" If you want to fight let there be fight, If you want peace let there be peace. " அத்துடன் அவர் நிற்கவில்லை. " அந்த வார்த்தைகளை நான் சொல்லவில்லை. தமக்கு ஆளும் அதிகாரம் தந்த மக்கள் சொல்கிறார்கள் " என்று அந்த வாதத்தையும் அப்பாவி சிங்கள மக்கள் மீது சுமத்தினார். இது எப்படி இருந்ததென்றால் அன்று முதல் எமது தமிழ்தலைவர்கள் சொல்வார்களே..." தமிழ் மக்கள் எமக்கு ஒரு ஆணையை தந்துள்ளார்கள் " என்று. அப்படித்தான் சிங்களத்தலைவர்களுக்கும் சிங்கள மக்கள் ஆணையை தருகிறார்கள் போலும்.
எத்தனை காலம்தான் இந்த ஆணைகள் பற்றி மூன்று தரப்பு தலைவர்களும் சொல்லிச் சொல்லியே மூவின மக்களின் தலையில் மிளகாய் அரைப்பார்களோ...? தெரியவில்லை.
இலங்கையின் வராலாற்றில் தமிழர் ஒருவர் 38 ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்க்கட்சித்தலைவராக வந்தபொழுது நிகழ்ந்த இரத்தினச் சுருக்கமான வரலாறு இதுதான்.
இறுதியுத்தம் நடந்து ஆறு ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் போர்க்குற்றத்திற்கு சர்வதேச விசாரணை என்ற அழுத்தம் கொண்டுவந்த அமெரிக்கா தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் உள்நாட்டுப்பொறி முறையில் நடக்கும் விசாரணைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கும் என்ற தீர்மானம் எடுத்துள்ள நிலையில் சம்பந்தன் எதிர்க்கட்சித்தலைவராகியிருக்கிறார்.
அமெரிக்காவின் தேவை கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஓரளவு முடிந்தது. தற்பொழுது பாராளுமன்றத்தேர்தலும் முடிந்ததும் முற்றாக ஓதுங்கிக்கொள்ள முடிவுசெய்கிறது. இந்த சுண்டக்காய் நாட்டுக்குள் அதற்கு தேவை ஏற்படுவது பூகோள அரசியல் சார்ந்த விடயம்.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் மகிந்த பிரதமராவாரா...? எதிர்க்கட்சித்தலைவராவார...? என்ற கவலை ரணிலை விட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கும் சந்திரிக்கா குமாரணதுங்கவுக்குமே அதிகம் இருந்தது.
தேர்தல் நெருங்கும் வேளையில் ஜனாதிபதி எழுதிய கடிதமும் மகிந்தரின் வாக்குவங்கிய
ை சரித்திருக்கிறது. அடுத்து எதிர்க்கட்சி ஆசனம் அவரை அண்டிவிடக்கூடாது என்ற கவலையும் ஜனாதிபதிக்கு இருந்தது. தேசிய அரசாங்கம் அமைத்து அந்தக்கவலையையும் போக்கிக்கொண்டார்.

பிரதமரான ரணிலிடம் பழிவாங்கும் குணம் இல்லை என்று மகிந்தர் தமது தோல்வியை ஒப்புக்கொண்டு சான்றிதழ் வழங்கினார்.
தேர்தலுக்கு முன்னர் கடிதங்கள் பரிமாரி சண்டைஇட்ட மைத்திரியும் மகிந்தவும், பொலன்னறுவையில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வருடாந்த மாநாட்டில் அருகருகே அமர்ந்து கைகளை தழுவி சிரித்துக்கொண்டனர். இக்காட்சியை காணச்சகிக்காத சந்திரிக்கா அம்மாநாட்டில் கலந்துகொள்ளாமல் வெளிநாடு சென்றுவிட்டார்.
அவருக்கும் அமெரிக்காவைப்போன்று ஒரு கவலை தீர்ந்துவிட்டது.
எதிர்க்கட்சி தலைமைப்பதவி தமது அணியின் பக்கம் கிட்டாத கோபத்தில் விமல் வீரவன்சவும் வாசுதேவ நாணயக்காரவும் உதய கம்மன் பிலவும் இனி பாராளுமன்றத்தில் உரத்துப்பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களை சமாளிப்பதற்கு ரணில் வார்த்தைகளை தேடிக்கொண்டிருப்பார்.
மகிந்தர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்.
வெளியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள்ளிருந்தே சம்பந்தனுக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் சுமந்திரனுக்கும் தலையிடி கொடுத்துக்கொண்டிருப்பார்.
பத்திரிகைகள் தேர்தலுக்கு முன்னர் முழுப்பக்க விளம்பரங்கள் மூலம் பொருளீட்டியது போன்று இனிமேல் அறிக்கைப்போர்களுக்கு களம் அமைத்துக்கொடுக்கும்.
அவற்றுக்கு அமெரிக்காவின் சடுதியான தீர்மானமும் சம்பந்தனின் பதவியும் சிறிதுகாலத்திற்கு உதவியாக இருக்கும்.
காணமல் போனவர்களின் உறவுகள் தொடர்ந்தும் கண்ணீருடன் அலைந்துகொண்டிருக்கும்.
உலகம் போற போக்கப்பாரு தங்கமச்சில்லாலே என்று தேர்தலில் வாக்களித்த மக்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
இந்தக்காட்சிகளை காணாமல் தேசியத் தலைவர் போய்ச்சேர்ந்துவிட்டார். அவரது மரணம் பற்றிய பட்டிமன்றமும் தொடங்கியிருக்கிறது.
Source: http://www.thenee.com/html/050915-1.html
No comments:
Post a Comment