"நாசமறுவான் எப்போ சாவான்?" - எஸ்.எம்.எம். பஷீர்



மாற்றங்களுக்கு ஏதேனும் உண்மையான பெறுமதி இருக்க வேண்டுமானால், அவை நிலைத்திருப்பதாகவும் இசைவுள்ளதாகவும் இருக்க வேண்டும்
   

                                                                                    டோனி ராபின்சன்  




சுமார் ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு முன்பு இலண்டனில் உள்ள ஒரு நிலக்கீழ் சுரங்க இரயில் ஒன்றில் பயணித்த பொழுது அந்த பாதை மூடப்பட்டு இடையில் உள்ள ஒரு இறங்கு நிலையத்தில் இருந்து வெளியே வந்த பொழுது புலியில் இருந்து , சிறைவாசம் சென்று  பின்னர் புலம் பெயர்ந்த எனக்குத் தெரிந்த பெண்ணொருவர் அதே இறங்கு நிலையத்தில் இருந்து மாற்று வாகன பயணத்துக்காக என்னைப் போலவே வெளியில் வந்தார். அன்று கடும் குளிர் காலம், உடலை விறைக்க வைக்கும் குளிர் , வெளியிலே பேரூந்துக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை , மீண்டும் இலங்கை சென்று எப்போ வாழ்வேனோ என்றோ அல்லது இப்படியான குளிர் காலத்திலாவது  இலங்கைக்கு செல்வேனோ என்ற ஆதங்கமோ என்னவோ பிரபாகரனை "நாசமறுவான் எப்போ சாவான்" , என்று வைதார் அவர்.!

சரி அந்த நாள் இறுதியில் வந்தே விட்டது. மகிந்தவின் யுத்த வெற்றி அந்த பெண் வைத அல்லது சாபமிட்ட  மனிதனை நாசமாக்கி விட்டது. ! இலங்கைக்கு வந்தார் அவர், இலங்கையின் வெட்ப தட்பங்களை மீண்டும் சுகித்தார். இலங்கையிலும் புலத்திலும் அவர் மீண்டும் அரசியல் பேசினார், சிங்கள பேரினவாதம் குறித்து ஆங்காங்கே பல புலம் பெயர் சபைகளில், மனித உரிமை அவைகளில்  ஆர்ப்பரித்தார், தனது "நாசமறுவானை" கொன்றதாக கூறிய அரச முப்படைகளின் தலைவர்  மகிந்தவை எதிர்த்தார். பின்னர் , தமிழ் மக்களின் எதிரி என்று தமிழர்கள்  தினமும் குறிப்பாக வடக்கில் சாபம் செய்த, தமிழ் மக்களுக்கு சொல்லொண்ணாத் துயரங்களைத் தோற்றுவித்த பொன்சேக்காவை  சென்ற ஜனாதிபதித் தேர்தலில் மாற்றம் வேண்டி ஆதரித்தார். அவர் மட்டுமா ஆதரித்தார் பிரபாகரனை போற்றிய பலரும்  கூடத்தானே ஆதரித்தார்கள்.!

சரி அது போகட்டும் என்றால் சில வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் எகிப்தில் புரட்சி ஏற்பட்டு அங்குள்ள முஸ்லிம்களும் கிறித்தவர்களும் கைகோர்த்தது போல் இலங்கையிலும் "அரபு வசந்தம் " வரும் என்றார்; மாற்றம் வேண்டி நிற்கும் சிங்களவர்களுடன் தமிழர்களும் முஸ்லிம்களும் சேர்ந்து மக்கள் புரட்சி இலங்கையிலும் வெடிக்கும் என்றார். எகிப்து வசந்தம் நிலையற்றது அவரின் பார்வை முற்றிலும் பிழை என்றேன் நான் , எகிப்து அதனை கடுகதியாகவே நிரூபித்தது. மாற்றங்களே அங்கு மாறிப் போவிட்டது , மக்களும் அங்கும் மாறி போய்விட்டார்கள்.! 

இப்பொழுது என்ன இலங்கையில் நடக்கிறது என்பதில் மீண்டும் அவர் மூக்கை நுழைத்துக் கொண்டு மைத்ரி வெல்ல செயலாற்றுகிறார். அவரின் கனவான , அவரையொத்த பல மஹிந்த எதிர்ப்பாளர்களின் கனவான மஹிந்தைக்கு எதிரான  "சிங்கள தமிழ் முஸ்லிம் ஒற்றுமை" இன்று   இலங்கையில் ஏற்பட்டுள்ளது என்று மிகவும் சந்தோசமாக காணப்படுகிறார் அவர் என்று கேள்வி !

ஆனால் யுத்த முடிவுறு காலத்தில் முப்படைகளின் தலைவனாக செயற்பட்டவன் நானே என்கிறார் மைத்ரி , புலிகள் ஐந்து தடவை என்னைக் கொல்ல  முயன்றார்கள் தப்பி விட்டேன் என்கிறார் மைத்ரி, தனது மாவட்டத்திலே உள்ள அழிஞ்சிப் பொத்தானையில் , அஹமட்புரத்தில், அக்பர்புரத்தில்  முஸ்லிம்கள் கொல்லப்பட்ட பொழுது , அல்லது மத்துகமவில் , கள்ளருவவில் தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுது மூச்சே திறக்காத , அவர்களுக்கு ஆறுதல் கூறாத மைத்ரி இப்பொழுது தமிழர்களின் முஸ்லிம்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிவிட்டார் ! தேசிய ரீதியில் அழுத்தகம வேருவளை அட்டூழியங்களுக்கு  மூச்சே விடாத மைத்ரி , அந்த சம்பவங்களுக்கு சரி கற்பித்த சம்பிக்கவுடன்  ( பெரிய தடியைகொண்டு பௌத்த பிக்குவுக்கு அடித்தவர்கள் முஸ்லிம்களே என்றும்; 15ம் திகதி ஜூன் மதம் 2013 ஆண்டு , 3000 ஆயுதம் தரித்த முஸ்லிம் காடையர்கள் சிங்கள மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள் என்றும் அளுத்கம வன்முறைக்கு பகிரங்கமாக நியாயம் கற்பித்தவர் சம்பிக்க ரணவக்க) தோளோடு தோள் சேர்ந்துள்ளார்.

சரி  கிடக்கட்டும் சற்று சந்திரிக்கா என்ன செய்தார் என்று பார்த்தால் , 24/10/2000 ஆண்டில் புலிகள் என்ற சந்தேகத்தில் பிந்துருன்வேலவில் கைது செய்து வைத்திருந்த தமிழர்களை , சிங்களக் காடையர்கள் திரண்டு சென்று கொல்ல (கொல்லப்பட்டவர்கள் 26 பேர்) பாதுகாப்பு முப்படைத் தளபதி என்ற வகையில் வழி சமைத்தார். மாவனெல்லையில் முஸ்லிம்களின் 127 கடைகளையும் 37 வீடுகளையும் 156 வாகனங்களையும் சிங்களக் காடையர்கள் / இனவாதிகள் தீயிட்டு கொளுத்த , இருவரைக் கொல்ல பாதுக்கப்பு படைகளின் தளபதியாக இருந்தார். அது மட்டுமல்ல கலகேதரவில் பல கோடி பெறுமதியான முஸ்லிம்களின் வீடுகள் கடைகள் ஆலைகள் , தோட்டங்கள் எரிக்கப்பட்ட பொழுதும் அவரே பாதுகாப்புக்கு பொறுப்பான ஜனாதிபதியாக இருந்தார். அதுபோலவே உக்குரஸ்ஸபிட்டிய  , மடவள , அக்குரண ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் மீதும் அவர்களின் சொத்துக்கள் மீதும் தாக்குதல்கள் நடத்திய பொழுதும், சந்திரிக்கா அம்மையார்தான் ஜனாதிபதியாக இருந்தார் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்தார். அந்த சம்பவங்களுக்கு எல்லாம் பரிகாரமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்வியே இல்லாமல் மாற்றம் வேண்டி அவர் முன் மொழிந்தவருக்கு பின்னால் முஸ்லிம்கள் அணி வகுத்துள்ளார்கள்! . ரவூப் ஹக்கீம் அந்த ஆட்சியில் அமர்ந்திருந்த  பொழுது , கலகெதர சம்பவங்கள் நடந்த பொழுது ஸ்தலத்திலேயே   இருந்தார் , பொலிசார் அவரின் கட்டளைக்கு செவி சாய்க்கவில்லை என்று புலம்பினார் ! இந்த லட்சணத்தில் சந்திரிக்கா பிரேரித்த மைத்ரீயை எப்படி அவர் பின் தொடர்வார்.  ?  

முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் மஹிந்த வெல்ல வேண்டும் என்று பிரார்த்தனை புரிகிறார், அவரைப் பொருத்தவரை "மாற்றத்தை"  அவர்  வெளிப்படையாக எதிர்க்கிறார். எனவே மஹிந்த வெல்லும் பொழுது அவர் தனது பிரார்த்தனை பலம் வாய்ந்தது மாற்றத்துக்கு எதிரானது என்பதை முன் கூட்டியே சொல்லி வைத்துள்ளார். எப்படியோ யாரின் பிரார்த்தனை பலிக்கப் போகிறது என்பது நெருங்கி வருகிறது!

மாறுவதும் மாற்றுவதும் ஒருவேளை நல்லதாக இருக்குமோ என்னவோ நாசமுறாமல் இருந்தால் சரி !  

பிற குறிப்பு: இக்கட்டுரைத் தலைப்பு என்னுடைய கூற்றே அல்ல என்பதும் ஒரு தமிழ் பெண் மணியின் கூற்றே  என்பதையும் வாசகர்களுக்கு நினைவூட்டுகிறேன்.


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...