யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே... ம.அய்யம்பிள்ளை

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே
மக்கள் கருத்து -
- ம.அய்யம்பிள்ளை
முன்னர் ஆட்சியில் இருந்த (சந்திரிகா, ரணில், ஜே.ஆர், பிரேமதாஸ )அரசாங்கங்கள்  எல்லாம் வெளிநாடுகளிடம் கடன் வாங்கிப் போரைச் செய்தன. அந்தப் போரின்போது எங்களின் வீடுகளுக்கு குண்டுகள் போடப்பட்டன.  எங்கள் உறவுகள் கொன்று குவிக்கப்பட்டன. ஆனால், சரிபிழைகளுக்கு அப்பால் இந்த (மகிந்த ராஜபக்ஷ) அரசாங்கம் வெளிநாடுகளில் கடன்வாங்கி நாட்டைக் கட்டியெழுப்புகிறது. எங்களுடைய வீடுகள், பாடசாலைகள், மருத்துவமனைகள், குளங்கள், வீதிகள் போன்றவற்றைக் கட்டித்தந்திருக்கிறது. எங்களுக்கு மின்சாரத்தை வழங்கியிருக்கிறது. எங்களுக்கு மட்டுமில்லை. இலங்கை முழுவதிலும் உள்ள மக்களுக்கு மின்சாரத்தை வழங்கியிருக்கிறது. 

எல்லாவற்றையும் விட இயல்பு வாழ்க்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த இயல்புவாழ்க்கையை உருவாக்கிறதில நடந்த இழுபறிகளில்தானே புலிகளுக்கும் முன்னைய அரசாங்கங்களுக்கும் இடையில் பல பேச்சுவார்த்தைகள் முறிந்தன. பல போர்கள் உருவாகின.

புநகரிப்பாதையைத் திறக்கும்படி புலிகள் கோரினார்கள். ஆனால்  அப்படித் திறக்க முடியாது. அந்தப் பாதையின் ஊடாகப் பயணங்களை மேற்கொள்ள முடியாது என்று சந்திரிகா அரசாங்கம் சொன்னதால்தான் 1995 இல் பேச்சுவார்த்தை முறிந்து, போர் தொடங்கியது.

ஆனால், மகிந்த ராஜபக்ஷ அதே புநகரிப்பாதையை மிகப் பெரிய பாலமொன்றை நிர்மாணித்து, வீதிகளைப் புனரமைத்து திறந்து வைத்தார்.

முந்திய அரசாங்கங்கள் எல்லா ஊர்களில் இருந்தும் சனங்களை வெளியேற்றின. மகிந்த ராஜபக்ஷசின் அரசாங்கத்தில் மட்டுமே மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லக் கூடியதாக இருந்தது.

முந்திய அரசாங்கங்கள் எல்லா வீதிகளையும் தடை செய்தன. மகிந்த அரசாங்கம் எல்லா வீதிகளின் தடைகளையும் அகற்றியது.

போதும் போதும் நிறுத்துங்கள். இதென்ன மகிந்த புராணமா?

இல்லை. இது நாங்கள் கண்ட உண்மை.

முன்னர் படையினரைக் கண்டால் எங்கள் நெஞ்சு பதறும். அந்த நாட்களி்ல எங்களை ஒரு பார்வையாலேயே படையினர் மிரள வைப்பார்கள்.

ஆனால், இப்பொழுது நாங்கள் படையினரைப் பொருட்படுத்துவதே இல்லை. அவர்கள் தங்கள் பாட்டில். நாங்கள் எங்கள் பாட்டில். போக்குறைக்கு எங்கள் வீதிகளைக் கூட்டுகிறார்கள். சொப்பிங் பைகளைப் பொறுக்குகிறார்கள். ஐங்கரநேசன் பார்க்க வேண்டிய வேலையான மரங்கள் நடும் பணிகளைச் செய்கிறார்கள். (இதையெல்லாம் மாற்றி, மாற்றம் - கொண்டு வர வேண்டும்  என்று மைத்திரி சொல்கிறார்)

யாரும் எப்போதும் எங்கேயும் வரலாம். போகலாம். (முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒருவர் கொழும்புக்குப் போகவேணும் என்றால் அல்லது திருகோணமலைக்கோ வன்னிக்கோ போக வேணும் என்றால் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைப்போல, பாஸ்க்கு விண்ணப்பித்துவிட்டுக் காவல் இருந்து, விசாரணைகளுக்குப்போய், பாஸ் எடுத்து, கப்பலுக்குப் பதிந்து, கூடுதலாகக் காசைச் செலவழித்து, கப்பலேறி. கடலிலே வாந்தியெடுத்து , மயக்கம்போட்டு விழுந்து. திருகோணமலையில் இறங்கி, ஆயிரத்தெட்டுச் சோதனைகளுக்கும் கேள்விகளுக்கும் ஒப்புக்கொடுத்துத்தான் பயணத்தைச் செய்ய வேணு். இப்ப சொகுசு ரயிலில் சுகமான தூக்கத்தோடு உல்லாசப் பயணம் நடக்குது. இது மகிந்த அரசாங்கத்தின் நன்மைகளில் இல்லையா?

இப்படி ஒரு இயல்புவாழ்க்கை வந்ததுக்குப் பிறகுதானே அரசியல் பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் கதைக்கலாம். அதுக்கும் தீர்வைக் காணலாம்.

எல்லாவற்றையு் விட தினம் தினம் சாவு என்று சாவு மலிந்த காலத்தை முற்றுப் புள்ளிவைத்து இளைய தலைமுறையைக் காப்பாற்றியது இந்த மகிந்த அரசாங்கமே.


அப்படியென்றால் -

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறையி்ல் ஒருவரே தொடர்ந்தும் பதவியில் இருப்பது நியாயமா?

அவருடைய குடும்பமே எல்லா அதிகாரங்களையும் தங்களுடைய கைகளி்ல் வைத்துக்கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா?

ஒரு சாதாரண நிகழ்விலேயே படைப்புலனாய்வாளர்கள் வந்து நோட்டம் விட்டுக்கொண்டிருப்பது நியாயமா? அது ஜனநாயகத்துக்கு நல்லதா?

இன்னும் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்காமல் இழுத்தடிப்பது நியாயமா?

போர்க்குற்ற விசாரணைகளைச் செய்யாமல், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்காமல் இருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதா?

போர் முடிந்த பிறகும் ஏன் காணிகளைப் படையினர் அபகரித்துக்கொண்டிருக்கிறார்கள்?

இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவேன் என்று இப்பொழுது கூட ஏன் மகிந்த ராஜபக்ஷ பகிரங்கமாகச் சொல்லவில்லை?

குறிப்பு -

போரினால் அழிவடைந்த ஒரு நாட்டை கட்டியெழுப்புவதும் இன ரீதியாகப் பிளவுண்ட சமூகங்களை குறுகிய கால அவகாசத்தில் ஒருங்கிணைப்பதும் இலகுவான காரியம் அல்ல.

அப்படித்தான் போரிலே ஈடுபட்டு வெற்றியடைந்த ராணுவத்தின் உளவியலை படிப்படியாகத்தான் படிய வைக்க முடியும். இப்பொழுது படையினர் மக்களுக்கான பொதுப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவது இந்த அடிப்படையில்தான்.

 பலமான ஒரு ஆட்சியில் தாம் நினைப்பதையெல்லா்ம நடத்தி விட முடியாது. பெற்றுவிட முடியாது என்று வெளிச்சக்திகள் கருதுகின்றன. அதற்காகவே அவை பலவீனமான ஒரு ஆட்சியை மாற்றம் என்ற ஒரு விளம்பரத்தின் வழியாக மேற்கொள்ள முயற்சிக்கின்றன.

போரினால் மிகப் பாதிக்கப்பட்ட ஒரு தேசத்தை - அதன் பிரதேசங்களைக் கட்டியெழுப்புவது என்பது மூன்றாம் உலக - வளர்முக நாடு ஒன்றுக்கு எத்தனை சவாலான காரியம்!

அபிப்பிராயம் -

என்னவோ சொல்கிறீர்கள். எவ்வளவுதான் நல்லதும் நன்மையும் நடந்தாலும் சிலருடைய கண்களுக்கு எப்போதும் குறைகள் மடடுமே தெரியும். ஒரு பெரிய வெள்ளைத் துணியில் புள்ளியளவு உள்ள கறுப்புப்புள்ளி கண்ணைக் குத்தும். அதைப்போல.

சிலர் தங்களுடைய கைகளால் தங்கள் கண்ணையே குத்தப் போகிறோம் என்று அடம்பிடிக்கிறார்கள்.

சிலர் என்ன தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அப்படியான குணமுள்ளவர்கள்தான். இனியாவது இவர்கள் திருந்த மாட்டார்களா?
(2)
மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு முக்கியமான வாசகம் -
தெருக்கூட்டிக்கொண்டும் சமையல் செய்து கொண்டும் வீதி மற்றும் கட்டிட நிர்மாணப்பணிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற படையினர் மீண்டும் படை நடவடிக்கைகளில் ஈடுத்தப்படுவார்கள்
அப்படியென்றால் -

மீண்டும் படை நடவடிக்கைகளை படையினர் தொடங்கப்போகிறார்களா?

அப்படித் தொடங்கினால் அது யாரோடு?

அது யுத்தம்தானே?

அப்படியென்றால் மீண்டும் யுத்தமா?

இதற்காகத்தான் மைத்திரி தரப்பு சிறுபான்மைச் சமூகங்களோடு உடன்படிக்கைகள் எதையும் செய்யவில்லையா? சிறுபான்மைச் சமூகங்களுக்கு வாக்குறுதிகள் எதையும் வழங்காமல் தந்திரமாக தமிழ் முஸ்லிம் மலையக மக்களின் வாக்குகளை பறிக்கத்தந்திரம் செய்கின்றனவா?

இதற்குத் தமிழ் முஸ்லிம் மலையகத்தலைவர்கள் உடன்படுகிறார்களா?

அப்படியென்றால் எங்கள் கைகளால் எங்கள் கைகளைக் குத்தும்படி கேட்கிறார்களா?
குறிப்பு -
1. மகிந்த ராஜபக்ஸ தன்னுடைய ஆட்சிக்காலத்தில் விட்ட தவறுகளைச் சாட்டாகவும் சாதகமாகவும் வைத்துக்கொண்டு மைத்திரி அணி தமது கபட அரசியலை அரங்கேற்றத்துடிக்கிறது.

2. ஜனநாயக வெளி தேவையென்று கருகின்ற நாம் போரும் அச்சுறுத்தல்களும் உருவாகிய நிலையில் மீண்டும் ஒரு இருண்ட யுகத்தில் தள்ளப்படப்போகிறோமா?

3. சிறைக்கைதிகளின் விடுதலைக்குப் பதிலாக சிறைக் கூடங்கள் நிரம்பத்தான் போகின்றனவா?

4. கடந்த காலக் கசப்பான அனுபவங்கள் இப்படித்தான் முன்னெச்சரிக்கை செய்கின்றன.

5. மைத்திரி அணி சிறுபான்மைச் சமூகங்களைப் பொருட்படுத்தாமல் விட்டதில் ஏதோ கபடத்தனம் இருக்கிறது என்பதை சொல்லித்தான் விளங்க வேண்டும் என்றில்லை.
அபிப்பிராயம் -
மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் போராவது முடிவுக்கு வந்தது. மைத்திரி போரை ஆரம்பிக்கிற மாதிரியல்லவா சொல்கிறார்.

அப்படியென்றால்...?

source: http://www.thenee.com/html/070115.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...