ஜனாதிபதி தேர்தலில் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும்? -வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)

இலங்கையில் மீண்டுமொரு ஜனாதிபதி தேர்தலை மக்கள் எதிர்நோக்கியுளPrasident election 2015்ளனர். இந்தமுறை ஜனாதிபதி தேர்தல் சற்று வித்தியாசமான முறையில் நடைபெறுகின்றது. அதற்கு காரணம் கடந்த 20 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஏகாதிபத்திய எதிர்ப்பு – தேசபக்த அரசாங்கத்தை எப்படியும் ஆட்சியிலிருந்து அகற்றிவிட வேண்டும் என்ற நோக்கம்தான். இந்த ஆட்சி மாற்ற அவாவில் பல்வேறு சக்திகள் ஒன்றிணைந்திருக்கின்றன. அவைகளாவன: தமது பூகோள ரீதியிலான ஆதிக்கத்துக்கு மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருப்பதால் அதை எப்படியும் அகற்றிவிட வேண்டும் என முனைந்து நிற்கும் சர்வதேச வல்லாதிக்க சக்திகள். நீண்ட காலமாக ஆட்சி அதிகார சுவையை அனுபவிக்க முடியாமல் ஏங்கித் தவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி. சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முந்தைய அதிகாரத்தை இழந்துவிட்ட அல்லது புதிதாக அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்து தோல்வியுற்ற சக்திகள். ‘புலம் பெயர் தமிழர்கள்’ என்ற போர்வையில் செயற்படுகின்ற பாசிச புலிகளின் ஆதரவாளர்கள். இலங்கையில் இருந்து செயற்படுகின்ற தமிழ் - முஸ்லீம் இனவாத சக்திகள். இவை தவிர ஒரு சிறு எண்ணிக்கையிலான ‘இடதுசாரி’ சந்தர்ப்பவாதிகளும், பதவி வேட்டைக்காரர்களும். இந்த சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பொது எதிரணி என்ற பெயரில், ஆனால் இலங்கையின் படுபிற்போக்கான, ஏகாதிபத்திய சார்பான, இனவெறி கொண்ட ஐ.தே.கவின் தலைமையில் ஒன்றுபட்டுள்ளன. இந்தப் பொது எதிராணி என்ற ஐ.தே.க அணி “100 நாட்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம்”, “நல்லாட்சியை வழங்குவோம்” போன்ற நிறைவேற்ற முடியாத பொய் வாக்குறுதிகளை மக்கள் முன் அவிழ்த்துக் கொட்டி வாக்கு பிச்சை கேட்கின்றனர். (இதேபோலத்தான் 1977இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் ஆட்சிபீடம் ஏறிய ஐ.தே.க சொன்னது. ஆனால் பின்னர் 17 வருடங்களாக எத்தகைய நரக ஆட்சியை மக்களுக்கு வழங்கியது என்பதை மக்கள் மறந்திருக்க முடியாது) இதில் முக்கியமான விடயம் என்னவெனில், அவர்கள் கூறுவது போல அவர்களிடம் பொது எதிரணி என்ற ஒன்றும் கிடையாது என்பதே. காலம் காலமாக ஐ.தே.கவுக்கு ஆதரவளித்து வந்த பிற்போக்கு இனவாத சக்திகளே வௌ;வேறு பெயர்களில் பொது எதிரணி என்ற மகுடத்தின் கீழ் ஒன்று சேர்ந்துள்ளன. ஆனால் ஒரு விடயம் தெளிவானது. அதாவது ஐ.தே.கவுக்கு இனிமேல் இலங்கையில் அரசியல் எதிர்காலம் இல்லை என்பதே அது. அதுவும் குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க அக்கட்சியின் தலைவராக இருக்கும் வரை அக்கட்சி ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி, எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்பது இருபதுக்கும் மேற்பட்ட தடவைகள் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் சர்வதேச பிற்போக்கு சக்திகள் 2010 ஜனாதிபதி தேர்தலில் தமது உத்தியை மாற்ற வேண்டி வந்தது. அத்தேர்தலில் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றியின் பங்காளி எனக் கருதப்பட்ட முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகவை மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டிக்கு நிறுத்திப் பார்த்தார்கள். அவர் அதற்கு முந்திய தேர்தலில் ரணில் எடுத்த வாக்குகளுக்கு அண்மித்ததாக கூட வாக்குகளை பெறவில்லை. எனவேதான் இம்முறை ஆளும் சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை உடைத்தெடுத்து அவரை ஒரு ‘யூதாஸ்’ ஆக மாற்றி களமிறக்கியுள்ளனர். அத்துடன் தனது குடும்ப வாரிசை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவர துடிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவையும் தம்முடன் இணைத்து கொண்டுள்ளனர். இதுதவிர ஆளும் கட்சியிலிருந்து எதிரணிக்கு தாவியவர்கள் என இவர்கள் ஊடகங்களில் பிரச்சாரம் செய்யும் முஸ்லீம் காங்கிரஸ் உட்பட தனிப்பட்ட நபர்கள் அனைவருமே அனைவருமே முன்னர் ஐ.தே.கவிலிருந்து பதவிக்காக ஆளும் கட்சிக்கு தாவியவர்கள்தான். தமிழ் தேசிய கூட்டமைப்பும் பாரம்பரியமாக ஐ.தே.கவின் அரசியல் சகபாடிதான். இவை தவிர சிறீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியமான தலைமைத்துவ உறுப்பினர்களோ, அக்கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களோ அல்லது அதன் கிராமப்புற வெகுஜன அடித்தளமோ எந்த மாற்றத்துக்கும் உட்படாமல் ஆளும் கட்சியுடனேயே தொடர்ந்தும் தங்கியுள்ளன. எனவே இத்தேர்தலில் வெற்றி யாருக்கு என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்ட விடயம். அதுமாத்திரமின்றி, தற்போதைய அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை செய்யவிடாமல் தடுத்துக் கொண்டிருந்த ஜாதிக ஹெல உறுமய இப்பொழுது மைத்திரிபாலவின் கடிவாளத்தை இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அக்கட்சியின் செயலாளர் சம்பிக்க ரணவாக்க அண்மையில் தாம் ஆட்சிக்கு வந்தால் மாகாணசபைகளுக்கு எவ்வித அதிகாரங்களும் வழங்கப்பட மாட்டாது எனவும், மகிந்த ராஜபக்ச தவறவிட்ட எஞ்சிய புலிகளையும் தேடிப்பிடித்து அழிப்போம் எனவும் பகிரங்கமாக பிரகடனம் செய்துள்ளார். இதன் மூலம் எதிரணி தற்செயலாக வெற்றிபெற்றால் தேசிய இனப்பிரச்சனையில் எந்தத் திசையில் - அதாவது ஐ.தே.கவின் 17 வருட தமிழ் இன அழிப்புத் திசையில் பயணிக்கும் என்பதும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் இன்னொரு சிங்களப் பேரினவாதியாகிய சரத் பொன்சேகவும், இடதுசாரி போர்வையில் இருந்துகொண்டு தமிழ் மக்களுக்கான தீர்வுகளை தொடர்ச்சியாக எதிர்த்து வரும் ஜே.வி.பி என்பனவும் கூட மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் கூடாரத்துக்குள் இணைந்து கொண்டுள்ளனர். தற்போது பதவியில் உள்ள மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை முற்றுமுழுதான ஒரு முற்போக்கான அரசாங்கம் என்று சொல்லிவிட முடியாது என்பது உண்மையே. ஆனால் இன்று தம்மை எதிரணி என்று கூறிக்கொள்ளும் ஐ.தே.க தலைமையிலான அணியினருடன் ஒப்பிடுகையில் இன்றைய அரசு படமடங்கு முற்போக்கானது என்பதிலும் சந்தேகமில்லை. அதற்குக் காரணங்கள் பலவுண்டு. முதலாவதாக ஏகாதிபத்திய சார்பு வலதுசாரி ஐ.தே.கவுக்கு எதிராக உருவாகிய சிறீ.ல.சு.கட்சியே தற்போதைய அரசாங்கத்தின் முதுகெலும்பாக உள்ளது. அக்கட்சியுடன் 1964 முதல் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டுத் தொடர்கிறது. சிறீ.ல.சு. கட்சி தனியாகவும், இடதுசாரிக் கட்சிகளுடன் சேர்ந்தும் பல ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளையும், முற்போக்கு நடவடிக்கைகளையும், மக்கள் சார்பு நடவடிக்கைகளையும் எடுத்த வரலாறு அந்த அணிக்கு உண்டு. இடையிடையே இந்தக் கூட்டணியுடன் ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்ற பேரினவாதக் கட்சிகள்; பதவி நோக்கம் காரணமாக இணைந்திருந்தாலும், அந்த அரசின் ஓரளவு முற்போக்கான கொள்கைகள் காரணமாக இடையிலேயே விலகிச் சென்றுள்ளன. இது ஒன்றே அந்த அரசின் மக்கள் சார்பு கொள்கைகளுக்கு போதுமான சான்றிதழாகும். இதுதவிர, இலங்கையில் நிலவிய பிரிவினைவாத, பாசிச, பயங்கரவாத புலிகள் இயக்கத்தை முற்றுமுழுதாகத் தோற்கடித்து நாட்டின் தேசிய சுதந்திரத்தையும், இறைமையையும், ஜனநாயகத்தையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியது இன்றைய அரசாங்கமே. தமிழ் மக்கள் எதிர்நோக்கிய யுத்த அழிவுகள், இடப்பெயர்வுகள் என்பனவற்றுக்கு முடிவுகட்டி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக நிறைவேற்றி வைத்ததும் இன்றைய அரசாங்கமே. அத்துடன் தமிழ் மக்களுக்கு 13ஆவது திருத்தத்தின் வழங்கப்பட்ட அதிகாரப் பகிர்வுக்கான நிர்வாக அலகுகளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளுக்கு தேர்தலை நடாத்தியதும் இன்றைய அரசே. மறுபக்கத்தில் சர்வதேச ஏகாதிபத்திய சக்திகள் இலங்கை அரசாங்கத்தை நிலைகுலைய வைக்கவும், அதன் பொருளாதார வளர்ச்சியை முறியடிக்கவும் பல்வேறு சூழ்ச்சிகள், நெருக்கடிகளைக் கையாண்ட போதிலும் தேசப்பற்றுடனும், துணிகரமாகவும் இன்றைய அரசாங்கம் நின்று பிடித்து அவற்றைத் தடுத்து வந்துள்ளது. எனவே இன்றைய அரசுடன் ஒப்பிடுகையில் எதிரணி என்று சொல்லப்படும் கோஸ்டிகளுக்கு அவ்விதமான எவ்வித முற்போக்கு, தேசப்பற்று தன்மைகளும் கிடையாது. ஒருவேளை மைத்திரிபால சிறிசேனவும், சந்திரிகவும் சிறீ.ல.சு.கட்சியின் இப்போதைய தலைமையின் மீது அதிருப்தி கொண்டு பிரிந்து சென்று உண்மையான முற்போக்கு சக்திகளின் அணியாக இத்தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அதைப்பற்றி யோசிப்பதற்கு மக்களுக்கு ஒரு சிறு காரணமாவது இருந்திருக்கும். ஆனால் அவர்கள் ஐ.தே.கவுடனும் பேரினவாத சக்திகளுடனம் சேர்ந்ததின் மூலம் அந்தத் தகுதியை இழந்துவிட்டார்கள். இந்த கணிப்பீடே எதிரணியுடன் சேர்ந்த ஏனைய சக்திகளுக்கும் பொருந்தும். இந்த நிலைமையில் இன்றைய அரசை விட மேலும் முற்போக்கான, ஏகாதிபத்திய எதிர்ப்பான, மக்கள் சார்பான அணி ஒன்று தோன்றும் வரை இந்தத் தேர்தலில் மட்டுமின்றி, எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய தேர்தல்களிலும் இந்த அரசை வழிநடாத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பையே மக்கள் ஆதரிக்து வாக்களிக்க வேண்டும் என்பதே சரியான முடிவாக இருக்கும். http://www.thenee.com/html/040115-7.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...