பிறரோடும் இணங்கி வாழ்தல்!

கிழக்கு மாகாண சபைக்கு யார் முதலமைச்சராவது என்பதில் இன்னும் இழுபறி தொடர்கிறது. ‘தமிழ் பேசும் மக்கள்’ என்று அலங்காரத்திற்குச் சொல்லிக் கொள்கிறோமே தவிர, ஒரே மொழியைப் பேசிக் கொள்வோரிடம் கூட இணக்கத்தைக் காணமுடியாதவர்களாக இருக்கிறோம்.

தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதா முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வருவதா என்பதில் தமக்குள் இணக்கம் காண முடியாத இந்தத் ‘தமிழ் பேசும் தலைவர்கள்’ சிங்களத் தலைமையிடம் தனித்தனியாகச் சென்று தமக்கு நியாயத்தைச் சொல்லும்படி கோரி நிற்கிறார்கள்.
இந்த நாட்டில் பேரினவாதம் மட்டுமில்லை. எல்லாச் சமூகங்களிடமும் இனவாதம் கொழுந்து விட்டெரிவதன் அடையாளம்தான் இது. இந்தச் சூழலை இங்கு வளர்த்தெடுத்துக் கொண்டிருப்பதற்கு இந்தச் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் தான் பொறுப்புச் சொல்ல வேண்டும்.
பிட்டும் தேங்காய்ப் பூவுமாக வாழ்ந்திருக்கிறோம் என்று சொல்லிக்கொண்ட, தமிழ்த் தலைவர்களே தங்களுடைய தலைவர்களும் என்று எண்ணியிருந்த முஸ்லிம் மக்கள் இன்று தமிழ்ச் சமூகத்தையோ தமிழ்த் தலைவர்களையோ நம்பத் தயாரில்லை. இதற்கு பெரும்பான்மைத் தமிழ் மக்களைப் பரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தலைமைதான் பதில் கூறக் கடமைப்பட்டவர்கள். அவர்களோ தங்கள் தலைமைத்துவத்தின் வங்குரோத்தை மறைக்க, தமிழ் மக்களின் மனங்களைத் திரிக்க, முஸ்லிம்கள் மீதான துவேசத்தை மேலும் உமிழ்கிறார்கள்.
எப்போதுமே மற்றவர்களை விரோதிகளாக்கி, அவர்களிடமே பழியைப் போட்டு தங்களின் தலைமைத்துவத் தோல்வியை மறைத்துக் கொள்கிறார்கள் தமிழ்த் தலைவர்கள் எனப்படுவோர். சிங்களவர்கள் சரியில்லாததால்தான் சிங்களவர்களுடன் இணக்கம் காண முடியவில்லை@ முஸலிம்கள் சரியில்லாததால்தான் முஸ்லிம்களுடனும் இணக்கம் ஏற்பட முடியாமலிருக்கிறது என்பதற்கான காரணங்களைக் கதைகளையே தயாரித்துக் கொள்கிறார்கள்.
இப்படியே உலக சமூகங்கள் எல்லாம் நம்மை நம்ப முடியாதவர்கள் என்று கைகழுவுவதற்கான, உலகப் போக்குகளைப் புரிந்து கொள்ளாத, விட்டுக்கொடுப்புகளற்ற, ஒரு மண்டூகச் சமூகமாகக் காட்டியே இவர்கள் நம்மீது தோல்விகளைச் சுமத்தி வருகிறார்கள்.
இத்தனை காலமாகியும் தீர்வு ஏன் வரவில்லை, மற்றோர்க்கு இணையாக தமிழ்ச் சமூகம் ஏன் வேகமாக முன்னேற முடியவில்லை, நண்பர்களாக இருந்தவர்களும் ஏன் நம்மை விட்டு ஒதுங்குகிறார்கள் என்ற கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். பதிலாக, அவர்கள் ஒருத்தரும் சரியில்லை என்ற காரணங்களும் குற்றச்சாட்டுகளுமே இவர்களிடம் இருந்து வரும்.
மற்ற எவருடனும் இணக்கம் கொள்ள முடியாத, பல்லினத் தன்மையை மதித்து வாழமுடியாத, இன்றைய உலகப் போக்கை அறிந்து அரசியல் முன்னேற்றமடையாத சமூகமாக நம்மைத் தேயவிட்டுக்கொண்டிருப்பது இந்தத் தலைமைத்துவம்தான். மற்றவர்களை மறுக்கும் அல்லது மற்றையோர் பற்றிக் கவனத்தில் கொள்ளாத ஒரு தேசியத்தையே நாம் தொடர்ந்து பேசிவருகிறோம்.
மற்றொரு அடையாள மனிதர்களோடு நாம் இணைய முடியாதவர்களல்ல நாம் வாழ்வது என்பது மற்றவர்களோடு வாழ்வதுதான். மற்றவர்களைச் சகித்துக் கொள்ளல் என்பதே நமக்குத் தேவைப்படுகிற மிக முக்கியமான மனத்தயாரிப்பு.
நமது இருப்பும் வாழ்வும் மகிழ்ச்சியும் மற்றவர்களின் இருப்பையும் மகிழ்வையும் ஏற்றுக்கொள்வதிலும், பகைக்குத் தள்ளும் வார்த்தைகளின்றி நம்மை அவர்கள் ஏற்றுக்கொள்ள வைப்பதிலும்தான் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

emurasu.com/editorial
மூலம் : http://salasalappu.com/?p=90385

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...